தீக்குச்சி கனவு

91

நேற்று முன் இரவு  தோட்டத்தில் புள்ளிமான்களுடன் துள்ளி விளையாடியக் களைப்பில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த மீனா குமாரியை தோழி எழுப்பினாள்.

இளவரசியாரே ??இளவரசியாரே.??

தங்கள் நித்திரையைக் கலைத்ததற்கு என்னை மன்னியுங்கள்.  அரசவை கூடி வெகு நேரமாகிவிட்டது. மன்னர் தங்களைத் தயார் செய்து அழைத்து வரச் சொன்னார்.
உறக்கமும் கனவும் களைந்த மீனா குமாரியின் வட்ட முகத்தில் வெட்கம் குடிக்கொண்டது.

அன்று சுயம்வரம் என்பதால்,  தலைநகரமே திருவிழாக் கோலம் பூண்டது.
அண்டை நாட்டு  இளவரசர்கள்  சுயம்வரம் நிகழ்வுக்கு  நேற்று முன் வந்து  தங்கியிருந்தனர்.

மன்னரின் ஒரே பெண் என்பதால்  இத்திருமணத்தை உலகமே மெச்சும் அளவிற்குத் திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தார்.

சுயம்வரம் நிகழ்விற்கு வருபவர்களுக்கும், ஊர் மக்களுக்கும் அறுசுவையுடன் கூடிய விருந்து தயாரித்து வந்தனர்.
பல வகையான உணவு பதார்த்தங்கள்.,
இதுவரைக் கண்டிராத,கேட்டிராத உணவு வகைககளை உண்டு வந்தனர்.

மன்னரும்,மக்களும், இளவரசர்களும் காத்திருந்தனர். மணப்பெண் இளவரசியான, “மீனாகுமாரிக்காக”.

பன்னீர் வாசனையும்,  ரோஜா இதழ்களும் மிதக்கும் தண்ணீரில்,  மீனாகுமாரி நீந்தினாள். சில ரோஜா இதழ்கள் மீனாகுமாரியின் பொன்னிற மேனியில்,ஆசையாய் விளையாடி ஒட்டிக்கொண்டது.

 வட்டமிட்ட தோழிகள் அவள் மீது இரு கைகளால் தண்ணீரை அள்ளி ஊற்றினர்.
இன்று தனக்கானவனை தேர்வு செய்யும் நிகழ்வு அதை நினைக்கையில் அவள் இதயம் சிலிர்த்தது.

சிற்பக் கலையில் சிறந்து விளங்கிய பல்லவநாட்டு இளவரசர். கட்டிடக் கலையில் உலகையே  வியக்க வைத்த தஞ்சை இளவரசர்.

வீரத்திலும்,  விவேகத்திலும் வியக்க வைத்த பாண்டிய நாட்டு இளவரசர் .
மற்றும் சிறு குறு இளவரசர்கள் வந்திருப்பதாய் தோழி ஒருத்தி மீனாவின் காதோரம் கிசு கிசுத்தாள்.

செந்நிறப் பாட்டாடை உடுத்தி, வைரம்,  வைடூரியம்,அணிகலன்கள் அணிந்து, கார்மேகம் போன்ற கூந்தலில் மலர் சூடி , திருமகள் போன்ற அழகினை உடைய மீனாகுமாரி, தன் வலது இடது புறத்திலும் தோழிகள்  படைச் சூழ., மாலை நேர சூரியகாந்திப் பூவைப்போல தலைக் குனிந்து  சுயம்வரம் நிகழ்வுக்குள் நுழைந்தவளை (அம்மா எழுப்பினாள். )

ஏய் மீனா ????
எழுந்திரிடீ நேரம் என்ன ஆகுது???
கனவுலகத்தில் மீனா குமாரியாக வாழ்ந்த மீனாவை தூக்கத்திலிருந்து எழுப்பினாள்.
புகைந்த அடுப்பை ஊதியவாறு மீனாவின் அம்மா.

தன் கனவுகளிலிருந்து இருண்ட வஞ்சிக்கப்பட்ட தன் நிஜ வாழ்க்கைக்குத் திரும்பினாள்.

முகம் கை கால்களை அலம்பிவிட்டு. உடைந்த ரசம்போன கண்ணாடியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில் வைத்தாள் மீனா.

ஏண்டி மீனா? சாயங்காலம் மாப்பிளை வீட்டுக்காரங்க வராங்க. இன்னைக்கு ஒரு நாள் லீவு கேளு உங்க முதாலாளிகிட்ட.
தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு புறப்பட்டவளை வழி மறித்தாள் அம்மா.

ஆமா,  மாசம் முப்பது நாளும் மாப்பிள்ளை என்னைப் பார்க்க வருவாங்க.  முப்பது நாளும் லீவு போட்டு நான் காத்துக் கிடக்கனும் போம்மா ஆசை, கனவு, எதிர்பார்ப்பு எல்லாம் வீணாகிப் போச்சும்மா.

இனிமே என்னத்த நா வாழப் போறேன். முக்கால்வாசி காலம் ஓடிப் போச்சும்மா மீதி காலத்த உன் கூடவே ஓட்டிவிடுறேன்.

கூறிவிட்டு வாசலில் நின்ற தீப்பெட்டித் தொழிற்சாலையின் வேனில் ஏறிப் போனவளை. கலங்கியக் கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஒரு ஏழை முதிர்க்கன்னியின் அம்மா