500கோடியும் 1500கோடியும்

76

2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. இன்னம் ஒரு சில நாட்களில் கூட்டணிகளின் இறுதி வடிவமும் , வேட்பாளர்களின் பெயர் பட்டியலும் வெளியாகிவிடும். செய்தி நிறுவனங்களோடு போட்டிப் போட்டுக் கொண்டு இந்தத் தடவை சமுகவலைத் தளங்கள் என்று சொல்லப்படுகின்ற பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற ஊடகங்களின் பயனாளர்களும், விவாத களங்களில் சூடு பறத்துகிறார்கள்.

முன்பெல்லாம், அரசியல் கட்சிகள் செய்தி ஊடகங்களை விலைக்கு வாங்கி, தங்களுக்குச் சாதகமாகச் செய்திகளைப் பறிமாறிக் கொண்டது போல் இப்போதெல்லாம் நிச்சயம் செய்யமுடியாது!. அதே சமயம் அதிக அளவில் வதந்திகளும், யூகங்களும் , அரசியல் கட்சிகளின் மீதானக் குற்றச்சாட்டுகளாக, உலாவருவதையும், யாராலும் தடுக்க முடிவதில்லை என்பதும் நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

சமீபத்தில் ஒரு செய்தித் தாளில் வந்த நம்பகத் தன்மையில்லாத செய்தி ஒன்றை வைத்துக் கொண்டு மநகூ ஒருங்கிணைப்பாளர். திரு. வைகோ அவர்கள் ‘தேமுதிக வின் வருகைக்காக 500 கோடி ரூபாய்க் கொடுத்து, 80 சீட்டுகள் கொடுக்கவும் திமுகப் பேரம் பேசியதாகவும் அது உண்மைதானென்றும்’ குற்றச் சாட்டைச் செய்தியாளர்களிடம் முன் வைத்தார்!

தேமுதிக-வின் மகளிரணித் தலைவியும் விஜயகாந்த் அவர்களின் மனைவியுமாகிய திருமதி. பிரேமலதா அவர்கள் இந்தக் குற்றச் சாட்டை உடனடியாக மறுத்தார் என்பதும் செய்தி.

மநகூ வில் உள்ள மற்ற கூட்டணிக் கட்சிகாரர்களுக்கும் இது சற்றுச் சங்கடத்தை தான் கொடுத்ததென்று சொல்லவேண்டும்! கூட்டணியில் உள்ள ஒரு கட்சியும், இந்தக் குற்றச்சாட்டிற்குள் உள்ளே வருவது பெரும் தர்மச் சங்கடம் தான்.

திமுகவும் இந்தக் குற்றச் சாட்டின் மீதான அவதூறிலிருந்து வெளிவரத் திரு வைகோ அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு வாரக் காலத்திற்குள் சரியான விளக்கம் அளிக்காவிட்டால் வழக்குத் தொடர இருப்பதாகவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது!

இது சம்பந்தமான ஒரு நேர்க்காணல் நிகழ்ச்சி நடத்திய தொலைக்காட்சிச் சேனல் ஒன்றில் வைகோ அவர்களிடம் கேள்விக் கேட்ட நெறியாளர், “அதிமுக வின் “B” டீமாகச் செயல்படும் வைகோ அவர்கள் அதிமுகவிடமிருந்து 1500 கோடி வாங்கியதாக…” என்று கேள்வியை முடிக்கும் முன்பாகவே அந்த நிகழ்விலிருந்து எந்த வித பதிலும் சொல்லாமலேயே வெளியேறி விட்டார் திரு வைகோ அவர்கள்.

அந்தச் சேனலை புறக்கணித்தது அவரைப் பொருத்தவரை நியாயமாக கூட இருக்கலாம். ஆனால், ஒரு கட்சியின் மீது குற்றச்சாட்டை வைத்தவர் ஒன்றும் சாதாரண நபர் இல்லை. ஒரு கட்சியின் தலைவர்! அதே சமயம் ஒரு கூட்டணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். அவரிடம் ஒரு நெறியாளர் பரவலாகச் சமுக வலைத்தளங்களில் உலா வரும் ஒரு கேள்வியை முன் வைப்பதில் எந்தத் தவறும் இருக்கவே முடியாது.

திரு. வைகோ அவர்கள் வைத்த குற்றச்சாட்டு உண்மையென்றால் அதனைப் பொது மன்றத்தில் நிருபிக்க வேண்டியது அவருக்குத் தார்மீகக் கடமையாகும். அவர் இதனை நிருபித்தாலே திமுகவின் உண்மையான முகத்தை வெளிக் கொண்டு வந்து வெற்றி வாய்ப்பை எளிதில் அடையலாம்.

ஒரு பத்திரிக்கை செய்தியை வைத்து தான் சொன்னேன் என்றால் அது அவருக்கு நிச்சயமாக அழகே கிடையாது. இப்போது பத்திரிக்கைகளில் வரும் கட்டுரைகள் எல்லாமே கட்டுரையாளர்களின் எமோஷனில் எழுதப்படுபவைகள் தான். அதில் நடு நிலைமைகளை நிச்சயம் யாரும் எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு கட்டுரையாளரும், ஒவ்வொரு நெறியாளரும் சார்பு மன நிலையில் இருப்பதைத் தவறென்றும் சொல்லி விட முடியாது. அவர்களும் ஒரு சார்பு நிலை வாக்காளர்கள் தான். உறுப்பினர்களாக இல்லாத, ஒரு கட்சியின் தொண்டர்கள் தான்.அவர்களின் மனம் தான் அதில் நிச்சயம் பிரதிபலிக்கும்.

இதனை வைகோ போன்ற ஒரு தேர்ந்த அரசியல்வாதி அறியாமல் இருக்க முடியாது. இந்த வழக்கைத் தான் சந்திக்க இருப்பதாகத் திரு வைகோ சொல்லியுள்ளார். இது அவரின் மனத் தைரியத்தைக் காட்டவில்லை. மாறாக, இப்போதைய நீதி மன்றங்களின் தாமதத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகவே தெரிகிறது.

இது போன்ற எந்த ஒரு வழக்குகளும் நீதி மன்றங்களில் உடனே தீர்க்கப்படுவதில்லை. இவைகளை சமுகத்தின் முக்கியப் பிரச்சனைகளாகக் கோர்ட்டுகளும் கருதுவதே கிடையாது. கால நீட்டிப்பில் தேங்கியுள்ள இது போன்ற வழக்குகள் இன்னமும் ஏராளம்!

தேர்தல் ஆணையமும் இது போன்ற புகார்களை உடனுக்குடன் விசாரிப்பதில்லை என்பதும் நிதர்சனமான உண்மையாகும் . வழக்கு மன்றங்களும், தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளின் மீதும் அரசியல்வாதிகளின் மீதும் சரிவர நடவடிக்கை எடுக்காத வரை எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் உண்மை தன்மை கிடையாது என்பது தான் உண்மையாகும்.

இவைகளும் அரசியல் வாதிகளுக்குத் துணைப் போகின்றனவோ என்ற சந்தேகம் மக்களிடம் வருவது மட்டும் இயல்பான ஒன்றாக மாறிவிடும்.

முகமது பாட்ஷா