ஆகாய நதிகள் பாகம்-1

539

ஆகாய நதிகள்

அத்தியாயம் – 1

நன்னா ஆச்சு போ.. பொண் கொழந்தை இத்தனை நாழி இழுத்துப் போத்திண்டு தூங்கியாறது. கேக்க ஆளில்லே இந்த ஆத்துல.ஏய் பொண்ணு… டீ பாகீ… ஏந்திருடி… நாழியாச்சு. ஏந்திருடின்னா?… யாரோ புஜத்தைப் பிடித்து உலுக்கியது தெரிந்தது. அருகில் கேட்ட பேச்சுக் குரல் மெல்லத் தேய்ந்து மறைந்தது. நன்றாகப் பழகிய குரல். ராஜம் அத்தையுடைய குரல்.

“காலையில் எழும் போதே இது மாதிரி அடியே என்று சத்தம் கேட்டால் எரிச்சலாக வரும் பாகீரதிக்கு. அன்றும் வந்தது. இந்த ராஜம் அத்தையிடம் தான் தலை பின்னிக்கொள்ளப் போக வேண்டும். நினைத்தாலே கஷ்டமாக இருந்தது. நறுக்நறுக் என்று தலையில் குட்டுவாள். அத்தையை சபித்துக் கொண்டே படுக்கையிலிருந்து எழுந்திருக்க மனமில்லாமல் கண்களை மட்டும் லேசாகத் திறந்து பார்த்தாள்.

ஜன்னல் வழி உள் நுழைந்து கொண்டிருந்த சூரியக் கதிர்கள் ஒரு குழல் போல் மெல்ல நீண்டு இவள் வயிற்றுக்கு மேலாகப் படர்ந்து இவளைக் கடந்து சென்று முற்றத்தில் வழிந்து கொண்டிருந்தது. மெல்ல இரு கைகளின் ஆட்காட்டி விரல்களையும் உயர்த்தி, இடுங்கிக் கிடந்த கண்கள் வழியே வெயிற்கோட்டில் அலைந்து கொண்டிருந்த தூசுப் புகையைக் கலைத்தாள். கலைத்த சுவடின்றி மீண்டும் சேர்ந்து கொண்டது தூசு. தினமும் இந்த விளையாட்டை எழுந்தவுடன் விளையாடுவது பாகீரதிக்கு மிகப் பிடிக்கும். சலிப்பதேயில்லை.

கண்களின் இடுக்கம் மறைந்து மூளை சமநிலைக்கு வரும் வரையில் கைகளால் காற்றில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். விழிப்பு வர வர சுற்றி வர நடக்கும் சங்கதிகள் கவனத்துக்கு வரத் துவங்கின.

வெளியே பாத்திரங்களை உருட்டும் சத்தமும் பேச்சரவமுமாய் பரபரப்பு.. என்னவோ கலவையாய் சமையல் மணம். பாயசத்தின் வாசனை தனியாகத் தெரிந்தது. லட்டு பிடிக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்பாவிடம் சொல்லியிருந்தாள். போய்ப் பார்க்க வேண்டும். அவளுக்கு விருப்பமான வாசனை. விழிப்பு முழுவதுமாய் வந்திருந்தாலும் கண்கள் எரிந்தன. இரவில் ரொம்பத் தாமதமாய் தூங்கியதால் வந்தது. பறந்து பங்கரையாய் கிடந்த முன் முடிகளை இரு கைகளாலும் ஒதுக்கிக் கொண்டு எழுந்தாள்.

அப்பாவை எங்கே காணவில்லை? அப்பாவுக்கு முடி கலைந்திருந்தால் பிடிக்காது. அவரிடம் பேச்சு வாங்காமலிருப்பதற்காகவே பழகிக்கொண்ட பழக்கம் இது. படுக்கையிலிருந்து எழும் போதே கை தானாய் கோதி விட்டுக் கொள்ளும்.

மெல்ல எழுந்து முற்றத்துக்கு வந்தவள் மேல் மோதுவது போல் வந்து மறித்தார் வெத்தலைப் பெட்டி மாமா. அவருக்கு எப்படி அந்தப் பெயர் வந்ததென்று அவளுக்குத் தெரியாது. வெற்றிலைப் பெட்டியுடன் அவரை அவள் பார்த்ததுமில்லை. ஆனால் அவரை அவளுக்குப் பிடிக்காது. தொட்டுத் தொட்டு வழிந்துப் பேசுவார். வழி மறித்தவரை நிமிர்ந்து பார்த்தாள்.

சிரித்துக் கொண்டே கன்னத்தை வழித்தார் அழுந்த. “ என்னடி கல்யாணப் பொண்ணே, சந்தோஷம் தானே?” என்றப்படியே முதுகில் தடவி, ”போ போ சீக்கிரம் தயாராகிக்கோ. நேரமாறது பார்” என்றப்படி இன்னும் கொஞ்சம் அழுத்தமாகத் தடவி விட்டு நகர்ந்தார். பாகீரதிக்கு அவர் தொட்டது எரிச்சலாக இருந்தது. அதை விட எரிச்சல் இந்தக் கல்யாண விஷயம். இரண்டு நாட்களுக்கு முன் தான் அப்பா சொன்னார். பையன் யார்?என்ன?என்றெல்லாம் தெரியாது. இன்னும் பார்க்கவில்லை. நிச்சயமும் இல்லை. நேரடியாகக் கல்யாணம் தான்.

சின்ன வயசில் இருந்தே அப்பா ட்ரான்ஸ்பர் ஆன ரெஜிமென்டுகளுக்கெல்லாம் மாறி மாறி போய்க் கொண்டிருப்பதால் இட மாற்றம் இருக்கப் போகிறதென்பது அவளுக்கு பெரிய வித்தியாசமாகத் தெரியவில்லை. ஆனாலும் எதற்காக முகம் தெரியாத யாரோ ஒருத்தனுடன் போக வேண்டும் என்பது தான், கேள்வியாய் அரித்துக் கொண்டே இருந்தது. கோபமாக வந்தது. அப்பாவிடமும் கேட்டாயிற்று. “சிரித்தப்படியே தலையைத் தடவிக் கொடுத்தவர் “ போ கொழந்தே. போய் சாப்பிடு” என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

அன்னம்மாள் வேறு “ டீ பாகீ.. என்னை விட்டுட்டு போய்டுவியாடீ?” என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தாள். அதில் இருந்தது வருத்தமா? வெறும் பரபரப்பா? தெரியவில்லை. மணி என்னடாவென்றால் “அக்கா எங்களையெல்லாம் மறந்துடாதே” என்கிறான் சிரித்துக் கொண்டே. அண்ணா எதுவுமே பேசவில்லை. அவனுக்கு இதில் பங்குண்டா இஷ்டமுண்டா ஒன்றும் தெரியவில்லை.

பின் கட்டுக்குப் போனாள். யார் யாரோ வந்துக் கொண்டும் போய்க் கொண்டும் இருந்தார்கள். நிறைய பேரை அவளுக்குத் தெரியவில்லை. சில பேரை எங்கேயோ பார்த்த மாதிரி ஞாபகம். பல் துலக்கி விட்டு முகம் கழுவிக் கொண்டாள்.

மேல் சட்டையின் கைப்பகுதியில் ஈர முகத்தைத் துடைத்தவாறே சற்றே நகர்ந்து வந்து  துளசிச் செடியின் அருகே முகத்தைக் கொண்டு போய், கண்களை இறுக மூடிக் கொண்டு மூச்சை ஆழமாய் உள்ளிழுத்தாள். அப்பா பார்த்தால் அவ்வளவு தான். குளிக்காமல் துளசிச் செடியின் அருகே வந்தது தெரிந்தாலே ருத்திர தாண்டவம் தான். இருந்தாலும் அவர் செய்யாதே என்று சொல்வதைத் திருட்டுத்தனமாய் செய்வதில் என்னமோ ஒரு சுகம்.

மனசு நாலா பக்கங்களிலும் அலைப் பாய்ந்து கொண்டிருந்தது. ஒரு பக்கம் அடுக்களையிலிருந்தும் பின் கட்டிலில் இருந்தும் வந்துக் கொண்டிருந்த சமையல் மணம். என்னென்ன பதார்த்தங்களென்று பார்ப்பதற்கு ஆவல் முட்டியது. இன்னொரு பக்கம் அந்தப் பையனைப் பற்றிய கவலை. ஊர் சத்தியமங்கலமாமே? ஆள் எப்படி இருப்பானோ?.

கல்யாணம் என்ற யோசனையே இல்லாததால் வரப் போகிறவன் எப்படி இருக்க வேண்டுமென்றெல்லாம் ஒரு எண்ணமும் இல்லை அவளுக்கு. திடுதிப்பென்று இரண்டு நாட்கள் முன் அப்பா இது போலச் சொன்னதும், தனக்கு எந்த மாதிரி ஆண் மகனைப் பிடிக்கும் என்று மனசுக்குள் வரித்துக் கொள்ள முயன்றாள். ஏகக் குழப்பங்கள். எதுவும் தெளிவாயில்லை. அந்த முயற்சியைக் கை விட்டு விட்டாள். அப்பா நேற்றிரவு சொன்னது ஞாபகம் வந்தது. மாப்பிள்ளைப் பையன் வந்து விட்டானாம். பக்கத்தில் காலியாக இருக்கும் சேஷகோபாலன் மாமாவின் வீட்டில் தான் அவர்களைத் தங்க வைத்திருக்கிறதாம். அவன் எப்படி இருப்பான்?

இந்த அண்ணா, கடங்காரன் வேறு நேற்றிலிருந்து காணவில்லை. அப்பாவோடு அலைந்து கொண்டிருக்கிறான் போல. இந்தக் கல்யாணம் பற்றி அண்ணாவுடன் மனசு விட்டுப் பேச முடியவில்லை. சந்தேகங்களைக் கேட்க முடியவில்லை. பயங்களைத் தெளிய முடியவில்லை என்று பாகீக்கு ஒரே வருத்தம். அது இப்போது கோபமாக மாறி விட்டிருந்தது.

யாரும் எனக்கு எதுவும் சொல்ல வேண்டாம். நானே பார்த்துக் கொள்கிறேன் என்று மனசுக்குள் வீம்பாக சொல்லிக் கொண்டாள்.

சுற்றும் முற்றும் பார்த்தவள் மெல்ல நடந்து அந்த, சின்ன சந்து வழியாக பக்கத்து வீட்டுப் பின்கட்டை அடைந்தாள். பின் பக்க ஜன்னல் வழி நோட்டம் விட்டாள். குறுக்கும் நெடுக்குமாய் ஆட்கள் நடமாட்டம். சூரிய வெளிச்சத்திலிருந்து நிழலுக்குச் சட்டென வந்ததால் தெரிவதெல்லாம் மசமசவென்றிருந்தது. வீட்டுக்குள் வெளிச்சம் வேறு குறைவாக இருந்தது. கண்களை இடுக்கிக் கொண்டாள்.

மெல்ல அந்த அரை வெளிச்சத்துக்குக் கண்கள் பழகி, ஜன்னல் கம்பிகளினூடே கண்கள் அலைப்பாய்ந்து கொண்டிருக்கையில் உள்ளறையிலிருந்து முற்றத்துக்கு ஒருவன் வந்தான். சின்னப் பையன். சிவப்பாக இருந்தான். சிரித்தான். சிரிக்கும் போது பற்கள் வரிசை வெகு அழகாக இருந்தது. அவன் குடுமி கூட அழகாயிருப்பதாய்பட்டது பாகீரதிக்கு. தன் கூந்தலை விட அவன் முடி அழகோ என்று கூடச் சந்தேகம் வந்தது. வயிறு தட்டையாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேல் இவன் தானா? என்று நினைக்கும் போது ஏதோ ஒரு இனம் புரியாத நிம்மதி. மனசுக்கு அணுக்கமாக இருந்தது.

அவனைப் பார்த்துக் கொண்டிருந்த போதே இன்னொருத்தன் உள்ளிருந்து வந்தான். முதலில் பார்த்தவனின் வயசே தான் இருக்கும் இவனுக்கும். வெட வெடவெனக் கறுத்து ஒல்லியாக இருந்தான். எந்த வசீகரமும் இல்லை. முதலில் பார்த்தவனின் அருகில் நிற்கும் போது மிக மிகச் சாதாரணமாய் இருந்தான்… அவனை யாரோ பிடித்து இழுத்துக் கிண்டல் செய்தார்கள். அழகன் பக்கத்தில் நின்று பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். இவனை எதற்குக் கிண்டல் செய்கிறார்கள்? என்ன சொல்லிக் கிண்டல் செய்கிறார்கள்? அவன் வெட்கப்பட்டு சிரித்தான். மாப்ளே என்று அவனைப் பார்த்து யாரோ அழைத்துக் கெக்கலித்தது சன்னமாய்க் காதில் விழுந்தது. கடைசியில் இவன் தானா?

உள்ளுக்குள் என்னவோ மளுக்கென்று உடைந்தது பாகீரதிக்கு. இத்தனை நாட்களாய் சரியாய் பிடிபடாமல் இருந்த ஆதர்ச ஆணின் உருவம் சட்டென பிடிபட்டுக் கண்ணெதிரே வந்து மனசைக் குளிர்வித்து, அடுத்த கணமே அது பொய்யாய் போய் விட்டதை பாகீரதியால் இன்னமும் நம்ப முடியவில்லை.

மெதுவாய்த் திரும்பி நடந்தாள். பின் கட்டைத் தாண்டியதும் உக்கிராண அறைக்குள் சட்டென்று நுழைந்து கொண்டாள். ஒரே தூசி.  அந்த உக்கிராண அறையின் மணம் எப்போதுமே அவளுக்குப் பிடித்ததில்லை. ஒவ்வாததாகவே இருந்திருக்கிறது. அவன் மணமும் இப்படித் தானே இருக்கும் என்று தோன்றியது. அவன் உருவத்தைப் பார்த்து அவளாகவே அவனுக்கு ஒரு வாசனையைக் கற்பனை பண்ணிக் கொண்டிருந்தாள். அசூயையாக இருந்தது.

எப்போதோ கண்ணை மூடி விட்ட அம்மாவின் மேல் காரணமே இல்லாமல் கோபம் வந்தது. அது அப்பாவின் மேல் திரும்பியது. இதையெல்லாம் மனசு விட்டுப் பேச சமயம் பார்த்து இல்லாது போய் விட்ட அண்ணன் மேல் கோபம் வந்தது. எந்தக் கோபத்தையும் யார் மேலும் காண்பிக்க இயலாத நிலையில் தன் மீதே கோபம் வந்தது. கவிழ்த்துப் போடப்பட்டிருந்த கரி படிந்து போயிருந்த அண்டாவின் மேல் சரிந்து அமர்ந்து கொண்டாள்.

முழங்கையில் அப்பிய கரியைத் துடைக்கக் கூட யோசிக்காமல் சத்தம் வராமல் கண்களைக் கசக்கிக் கொண்டு மூக்கைச் சிந்திக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

-ஹரீஷ் கணபதி