ஆகாய நதிகள் – 2

410

ஆகாய நதிகள்

கல்யாணம் என்ற யோசனையே இல்லாததால் வரப் போகிறவன் எப்படி இருக்க வேண்டுமென்றெல்லாம் ஒரு எண்ணமும் இல்லை அவளுக்கு. திடுதிப்பென்று இரண்டு நாட்கள் முன் அப்பா இது போலச் சொன்னதும், தனக்கு எந்த மாதிரி ஆண் மகனைப் பிடிக்கும் என்று மனசுக்குள் வரித்துக் கொள்ள முயன்றாள். ஏகக் குழப்பங்கள். எதுவும் தெளிவாயில்லை. அந்த முயற்சியைக் கை விட்டு விட்டாள். அப்பா நேற்றிரவு சொன்னது ஞாபகம் வந்தது. மாப்பிள்ளைப் பையன் வந்து விட்டானாம். பக்கத்தில் காலியாக இருக்கும் சேஷகோபாலன் மாமாவின் வீட்டில் தான் அவர்களைத் தங்க வைத்திருக்கிறதாம். அவன் எப்படி இருப்பான்? (அத்தியாயம் 1 மேலும் படிக்க)

அத்தியாயம் –2

முதுகுப் பக்கம் புரண்டு கிடந்த தாலியை எடுத்து முன்புறம் போட்டுக் கொண்டு கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டு கடிகாரத்தை உற்றுப் பார்த்தாள் கங்கா. விடிவதற்கு நேரமிருந்தது. கட்டில் மேல் சந்திரன் வாய் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தான். எழுந்து முற்றம் கடந்து பின் கட்டுக்குச் சென்றாள். ராஜேந்திரன் பல் துலக்கிக் கொண்டிருந்தான்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பி விடுவான். அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது கங்காவுக்கு. தினமும் நடப்பது தான். வயிற்றில் ஏதோ சுரந்து அடைத்துக் கொண்டது. உருவத்தில் தன்னைக் கொண்டு விட்டானே என்று வருத்தமாக இருந்தது கங்காவுக்கு. இந்த முன் பல் எடுப்பு வேறு. இதைப் பற்றி அவன் கல்லூரி முடிக்கும் வரையிலும் பெரிதாய் கவலைப்பட்டுக் கொண்டதில்லை.

இப்போது இரண்டு வருஷங்களாகத் தான். பெருங்கவலை ஒன்று வந்தால் வால் பிடித்துக் கொண்டு இதர புதுக்கவலைகள் சேர்ந்து கொண்டு இம்சிப்பது மனித இயல்பு. இரண்டு வருஷங்களுக்கும் முன்னால் உலகமே தெரியாமல் சந்தோஷமாய் சுற்றித் திரிந்து விட்டு இப்போது இத்தனை சங்கடங்களை சுமப்பது எப்படி கை வருகிறது இது மாதிரிப் பிள்ளைகளுக்கு என்று நெஞ்சு ஆரத்துப் போனது கங்காவுக்கு.

பேச்சுக்கூட இப்போதெல்லாம் வெகுவாகக் குறைந்து விட்டது ராஜேந்திரனுக்கு. டீ காபி குடிப்பதையும் நிறுத்தி விட்டான். முகம் கழுவிக் கொண்டு திரும்பியவன் இவள் நிற்பதைப் பார்த்தான். ஒரே வார்த்தை. “ நான் கிளம்பறேம்மா”. சொல்லி விட்டு நகர்ந்து விட்டான். எந்தச் சலனமும் இல்லை.

அவன் எங்கே போகிறான் என்று கங்காவுக்குத் தெரியும். அங்கேயாவது அவன் நிம்மதியாக இருக்கட்டும். பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது அவளிடமிருந்து.

——-

“வாப்பா ராஜேந்திரா” அவனைக் கண்டதும் முகம் மலர்ந்து வரவேற்றார் அவர். தூசு தட்டியைக் கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு மெஷினாகக் கவரை நீக்கி தூசு தட்டிச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். பதிலுக்கு சிக்கனப் புன்னகை ஒன்றை உதிர்த்த ராஜேந்திரன், “ குட்மார்னிங் சார்” என்றபடி சுவாதீனமாக அவரிடமிருந்து அந்தத் தூசு தட்டியை வாங்கிக் கொண்டான். “இதெல்லாம் நீ எதுக்குப்பா… டெய்லியும் சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறியே” என்றவரிடம், தினமும் சொல்வது போலவே “ பரவால்ல சார்” என்றபடி துடைக்கத் துவங்கினான்.

அவனைப் பரிவாகப் பார்த்தார் அவர். எவ்வளவு நல்ல பையன். இவனுக்கும் ஒரு நல்ல நேரம் வர மாட்டேனென்கிறது. வீட்டில் பாவம் இவன் படும் அவஸ்தைகளை என்று நினைத்துக் கொண்டிருந்தவரை “ குட்மார்னிங் சார்” என்ற குரல் கலைத்தது. ஆறரை மணி பேட்ச் மாணவர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். சற்றைக்கெல்லாம் எல்லா மெஷின்களும் நிரம்பி விட்டன. தட தட வென தட்டச்சும் ஒலி அந்த அறையெங்கும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ராஜேந்திரன் சலிக்காமல் இங்கும் அங்கும் ஓடி ஓடி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

அவன் இல்லையென்றால் ரொம்ப கஷ்டமாகப் போயிருக்கும் என்று நினைத்துக் கொண்டார் அவர். அப்படி இப்படியென்று பண்ணிரெண்டு மணிக்குக் கொஞ்சம் கூட்டம் குறைந்தது. அவர் “ராஜேந்திரா.. நீ வீட்டுக்குப் போயிட்டு வந்துடேம்ப்பா” என்றார். வறண்ட சிரிப்பொன்றை பதிலாக உதிர்த்தவன், கிளம்பினான். மெல்ல அவன் தோளில் கை போட்டு நிறுத்தியவர், “ இந்தாப்பா.. இதை வாங்கிண்டு போ” என்று அவன் கையில் எதையோ வைத்து அழுத்தினார்.

சில ரூபாய்த் தாள்கள். ஒரு நொடி புருவம் சுருக்கி அதைப் பார்த்தவன் பின் மீண்டும் புன்னகைத்தான். “ வேண்டாம் சார்” என்றபடி அவர் கையிலேயே அதைத் திரும்ப வைத்து அழுத்தினான். அவர் முகம் சுருங்கியது.

“நான் உனக்கு சம்பளம்னு எதுவுமே குடுக்கறதில்ல. ஆனா நீ இல்லன்னா இங்க ரொம்ப கஷ்டப்படுவேன். ஏதோ இன்னிக்கு குடுக்கணும்னு தோணித்து. வாங்கிக்கோப்பா” என்றவரை மென்மையாக மறுத்து, “ ஏதோ என் ஆத்மதிருப்திக்கு நான் கத்துண்டத பசங்களுக்கு கத்துக் குடுக்கறேன். ஒரு நல்ல வேலை கிடைக்கற வரைக்கும். அதுக்கு எனக்கு காசு வேண்டாம் சார். நான் வரேன்” என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டான்.

வீட்டுக்குப் போனவன் வாசல் வழி செல்லாமல் நேரே பின் கட்டுக்குப் போய் அங்கிருந்த துண்டை எடுத்துக் கொண்டு பின் வாசல் வழியாகவே ஆற்றங்கரைக்குக் கிளம்பினான். இதைப் பார்த்துக் கொண்டே இருந்த கங்காவுக்கு அடிவயிறு பதறியது. பெற்ற பிள்ளை காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் வைராக்கியத்துக்கு இப்படி வயிற்றைக் காய போட்டால் அம்மாவுக்கு அங்கலாய்ப்பாக இருக்காதா என்ன.?

ஆற்றங்கரைக்குப் போனவன் ஒரு மணி நேரமாகியும் காணவில்லையே என்று கங்கா கவலைப்படத் துவங்கும் போதே வீட்டுக்குள் நுழைந்தான் ராஜேந்திரன். சற்றே பரபரப்பானாள் கங்கா. அவன் தட்டை எடுத்து அலம்பி வைத்தாள். எல்லா பதார்த்தங்களையும் எப்போதும் போல எடுத்துப் பரப்பி வைத்தாள்.

வந்து தட்டின் முன் அமர்ந்தவன் எல்லாவற்றையும் வழக்கம் போல் ஒதுக்கி விட்டு ரசம் மட்டும் விட்டுக் கொண்டான். கங்காவுக்குத் தொண்டை அடைத்தது. என்னவோ தயக்கமாக சோற்றை அளைந்து கொண்டிருந்தான். வாசலில் சத்தம் கேட்டது. யாரென்று எட்டிப் பார்த்த கங்கா அதிர்ந்தாள். சந்திரன் தான் வந்து கொண்டிருந்தான். வழக்கமான நேரத்தை விட அரை மணி நேரம் முன்னதாகவே வந்து விட்டானே?

திரும்பி ராஜேந்திரனைப் பார்த்தாள்.சந்திரன் வந்ததை அவன் அறியவில்லை. என்ன செய்வது என்று கங்கா திகைக்கும் போதே சந்திரன் உள்ளே வந்து விட்டான். ராஜேந்திரன் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து எதுவும் பேசாமல் உள்ளே சென்றான். அது கங்காவுக்கு இன்னும் பயமூட்டியது. அவன் வாயைத் திறக்காதிருக்க ஏதேதோ தெய்வங்களை வேண்டினாள்.

“பேஷ்…கொட்டிக்க உக்காந்தாச்சா..” என்ற சந்திரனின் ஸ்லேட்டுக் கீறல் குரலில் அவளது எல்லாப் பிரார்ததனைகளும் தவிடு பொடியாகிப் போனது. சோற்றை அளைந்து கொண்டிருந்த ராஜேந்திரனின் கை சட்டென்று நின்றது. கங்கா கைகளை இறுக்க மூடிக் கொண்டாள். காதுகளை அது மாதிரி மூட முடியவில்லை. சம்பந்தமே இல்லாமல் உச்சி மதியத்தில் பின் கட்டில் குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கும் குரல் காதில் விழுந்து உடம்பு சிலிர்த்தது.

“அவ பொண் கொழந்தை. அவ கூட காலாகாலத்துல படிப்ப முடிச்சுப்டு தனக்குன்னு ஒரு வழியப் பாத்துண்டுட்டா. இங்க என்னடான்னா…”

அந்தப் பெண் குழந்தை விசாலம் தான். கங்காவின் மூத்த பெண். ராஜேந்திரனின் அக்கா.அவளுக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்திருக்கிறது. சந்திரனுக்கு அவள் தன்னைப் போலவே ஆசிரியை ஆகி விட்டதில் ரொம்பவும் பெருமிதம்.

“அந்த டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட் கிருஷ்ணமூர்த்தி பாத்த வேலைக்கு ஏதோ பணம் குடுத்தானாமே? சார்வாள் அதை வாண்டாம்னு சொல்லியுட்டு வந்துட்டாராம்.பெரிய கர்ண மகாபிரபு. வேலைக்குப் போகத் தான் துப்பில்லே. கிடைக்கிற காசை வேண்டாம்னுட்டு வருவாராம். இன்னும் நன்னா உக்காத்தி வெச்சுண்டு சிசுருஷை பண்ணு உம் புள்ளையாண்டானுக்கு. இந்தப் பொழப்புக்கு பேசாம காவேரில…” என்று சொல்லி விட்டு முடிக்காமல் , “ டீ கங்கா… ஸ்கூல்ல ஒரு மீட்டிங். வந்து எனக்கு சோத்தைப் போடு. சாப்டுட்டு கிளம்பணும். நாழியாறது” என்றான். குரலில் அவ்வளவு குரோதம்.

கங்கா என்ன செய்வதென்று தெரியாமல் எழுந்தாள். சந்திரன் சமையற்கட்டில் தான் அமர்ந்து சாப்பிடுவான். ராஜேந்திரன் தட்டைப் பார்த்தான்.போட்ட சோறு மிச்சமிருந்தது. அவனுக்கு வீணாக்குவது பிடிக்காது. ஆனால் அந்த வார்த்தைகளைக் கேட்ட பின் ஒரு கவளம் கூட கை வைக்க மனசு இடம் தரவில்லை.

மெல்லச் சோற்றைப் பிசைந்து எடுத்தான். கண்களில் நீர் மறைத்தது. சோற்றை வாய்க்குள் அடைத்தான் . தொண்டைக்குள் இறங்கவில்லை. விக்கிக் கொள்ளும் போல் இருந்தது. அடைத்தது. மிகுந்த சிரமப்பட்டு விழுங்கினான். முச்சந்தியில் ஆடை களைந்து வெயிலில் நிற்பது போல் உடல் கூசியது.

எப்படி முடித்தோமென்று தெரியாமல் தட்டில் இருந்த சோற்றை விழுங்கியிருந்தான். எழுந்து வேட்டியைச் சரியாக முடிந்து கொள்ளாமல் கூட வெளியேறினான். எச்சில் கையைக் கழுவவில்லை. வேட்டி தழைந்து சாலையில் படர்ந்தபடி நடந்தான்.

தெருமுனை தாண்டித் திரும்பியதும் படித்துறை கண்ணில் பட்டது.நேராகச் சென்று படித்துறையில் விடுவிடுவென இறங்கி, ஓடிக் கொண்டிருந்த நீரை இரண்டு கைகளாலும் அள்ளி முகத்தில் அறைந்து கொண்டான். வேட்டி முழுதாக அவிழ்ந்து விடும் போலிருந்தது. அப்போது தான் சற்றே சுய பிரக்ஞைக்கு வந்தவன் வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டான். மேலும் மேலும் நீரை எடுத்து முகத்தில் அறைந்து கொண்டான்.

தளர்ந்து போய்ப் படித்துறையில் அமர்ந்தான்.மதிய நேரத்து வெயில் பிரதிபலிக்க காவேரி குதூகலமாக ஓடிக் கொண்டிருந்தது. எதிர்க்கரை ஆல நிழலில் சில எருமைகள் அமர்ந்து அசை போட்டுக் கொண்டிருந்தன. மரத்தின் மேடையில் சிலர் படுத்திருந்தனர்.

இந்தப் பக்கம் கன்ணுக்கெட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை. இவனும் காவிரியும் மட்டும் தனித்திருந்தனர். அவளுக்கு எல்லாம் தெரியும். இவன் துக்கம் சந்தோஷம் சஞ்சலம் சபலம் எல்லாவற்றையும் முதற்கண் பார்த்தவள் அவள் தான். அமைதியாக இருந்தார்கள் இருவரும். சற்று தூரத்தில் தெரியும் சிறு பாறையைப் பார்த்தான்.

தானும் தம்பிகள் கிருஷ்ணனும் சுப்பனும் நீந்திக் களித்துக் கொண்டாடிய கணங்கள் நினைவில் படம் போல் ஓடியது. விசாலம் அக்கா கரையில் அமர்ந்து கொண்டு மூன்று பேருக்கும் போட்டி வைப்பாள். யார் அந்த சிறு பாறையை முதலில் நீந்திப் போய்த் தொட்டு விட்டுத் திரும்பி வருவதென.யார் ஜெயித்தாலும் அக்கா கைத்தட்டி ஆரவாரம் செய்வாள்.

கண்கள் கனத்தன. ஆனால் அழுகை வரவில்லை. கண்கள் வறண்டு போய் விட்டிருந்தன. பழைய நாட்களை நினைக்க நினைக்க மனம் அவ்வளவு ஆயாசமாய் இருந்தது.

சிறு பாறையைக் கடந்து சற்று தூரத்தில் பார்த்தான். ஒரு பெரிய சுழல். காவேரி சுழித்து ஓடிக் கொண்டிருந்தாள். நீச்சல் கற்றுத் தருகையில் பாலகிருஷ்ணன் அண்ணன் சொன்னது ஞாபகம் வந்தது. “ எப்போவும் அந்த வாக்குல மட்டும் போவக் கூடாது தெரிஞ்சுகிட்டயா. அங்க போனீயின்னா அவ்வளவு தான் உள்ள இழுத்துப் போட்டுக்குவா.பெரிய சொழலு அது. எப்பேர்ப்பட்ட நீச்சல்ல கொம்பனா இருந்தாலும் ஜம்பம் சாயாது பாத்துக்க”.

சற்று நேரம் அமைதியாக அதையே பார்த்துக் கொண்டிருந்தவன் மனசில் அந்த எண்ணம் உதித்தது. அந்தச் சுழல் நம்மை ஏற்றுக் கொள்ளுமா?

நொடிக்கு நொடி அந்த எண்ணம் வேகமாக வளர்ந்து கிளை பரப்பத் துவங்கியது. ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுந்து நின்றான். அந்தச் சுழலைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தான்.