ஆகாய நதிகள் பாகம்-3

376

ஆகாய நதிகள்

தெருமுனை தாண்டித் திரும்பியதும் படித்துறை கண்ணில் பட்டது.நேராகச் சென்று படித்துறையில் விடுவிடுவென இறங்கி, ஓடிக் கொண்டிருந்த நீரை இரண்டு கைகளாலும் அள்ளி முகத்தில் அறைந்து கொண்டான். வேட்டி முழுதாக அவிழ்ந்து விடும் போலிருந்தது. அப்போது தான் சற்றே சுய பிரக்ஞைக்கு வந்தவன் வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டான். மேலும் மேலும் நீரை எடுத்து முகத்தில் அறைந்து கொண்டான். (அத்தியாயம் 2 மேலும் படிக்க…)

அத்தியாயம் –3

அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை பாகீரதி. இரண்டு வாரங்கள் முன்பு கூட இன்லண்ட் லெட்டரில் எழுத இடமில்லாமல் நுணுக்கி நுணுக்கி ஒட்டும் இடத்திலெல்லாம் எழுதியிருந்தான். மணிக்கு எப்போதும் சொல்வதற்கு விஷயங்கள் ஜாஸ்தி. அன்னம்மாள் கூடச் சமாளித்துக் கொண்டாள் என்று அப்பா சொல்லித் தெரிந்து கொண்டாள் பாகி.

மணி தான் இவள் இல்லாமல் ரொம்பவும் தளர்ந்து போய் விட்டானாம். வயது வேறு அது மாதிரியான வயது. விடலைப் பையன். இவளில்லாமல் போனதும் கொஞ்சம் கை வாகு கிடைக்காமல் திண்டாடியிருப்பான். பிறகு எப்படியும் சமாளித்துக் கொண்டு விடுவான் என்று நினைத்திருந்தாள்.

இப்படி திடுதிப்பென்று போய் விடுவான் என்று நினைக்கவே இல்லை. பாகீரதிக்கு அர்த்தமே இல்லாமல் குற்ற உணர்வு மனதை பிராண்டிக் கொண்டிருந்தது. தான் அங்கே இருந்திருந்தால் அவன் உயிரை இழுத்துப் பிடித்துக் காப்பாற்றியிருக்கலாமோ?. அந்த லெட்டர் கிடைத்ததும் கிளம்பி போயிருந்தால், இப்போது தந்தியை கண்டதும் விழுந்தடித்துக் கொண்டு ஓடும் நிலமை வந்திருக்காதோ.?

ஆனால் அந்த லெட்டரிலும் அவன் ஒன்றும் பெரிதாய் எழுதவில்லையே? கொஞ்சம் போல் உடம்பு சுகமில்லை என்றும் கொஞ்சம் ஜலதோஷமாய் இருக்கிறதென்றும் தானே எழுதியிருந்தான்.

அதில் எழுதியிருந்தவைகளை நினைத்துப் பார்த்ததும் திடீரென்று காரணமே இல்லாமல் சின்ன புன்னகை ஒன்று அரும்பியது பாகீரதியிடம். அவன் எப்போதுமே பாகீரதியை அக்கா என்று திருத்தமாய் அழைக்கவே மாட்டான், “க்க்கா” என்று அழுத்தம் திருத்தமாய் காக்கை கத்தும் தொனியில் தான் அழைப்பான். லெட்டரிலும் அப்படியே ஆரம்பித்திருந்தான். க்க்கா என்று.

உடம்பு சுகமின்மையைப் பற்றிச் சொல்லி விட்டு,  “அன்னம்மாள் தான் கஞ்சியும் கஷாய்யமுமாய் போட்டுக் குடுத்து பார்த்துக்கறா. அவோ போடற கஷாயத்தைக் கூட மருந்து மாதிரிக்கி நெனச்சிண்டு குடிச்சுட முடியறது. அந்தக் கஞ்சியத் தான் வாயில வெக்க விளங்கலை. மகராசி எப்படித் தான் இது மாதிரிக்கி கஞ்சி போடறாளோ” என்று எழுதியிருந்தான். அதன் பின் அன்னம்மாளை நான்கைந்து வார்த்தைகள் திட்டியிருந்தான். அதை நினைத்து வறண்ட சிரிப்பொன்று சிரித்துக் கொண்டாள்.

எல்லாம் எழுதி முடித்துக் கடைசியில் “ ஆயிரம் கொறை சொன்னாலும் அன்னம்மாளை நோக்கு தெரியாதாக்கா? நீ இல்லாத கொறையே தெரியாதைக்கி அவ தான் என்ன அம்மாவாட்டம் பாத்துண்டு இருக்கா” என்று எழுதியிருந்தான்.

“இன்னும் கொஞ்சம் பாத்துண்டு இருந்திருக்கலாமேடீ அன்னம்மா” என்று மனசுக்குள் மருகினாள். வற்றிப் போயிருந்த கண்ணீர் மீண்டும் துளிர்த்தது.

ஆயிற்று. தந்தியைப் பார்த்ததும் அடித்துப் பிடித்து ரயிலைப் பிடித்துப் போய்ப் பார்த்து எடுத்து எரித்துப் பிடி சாம்பலை அள்ளிக் கொண்டும் வந்தாயிற்று. எப்படி மணி இல்லாமல் போய் விட்டான். அதற்குள் என்று இன்னமும் பாகீரதி நம்பாமல் தனக்குள் கேட்டுக் கொண்டிருந்தாள்.

தனக்கு மேல் இருந்த மூன்று பேரில் மணிக்கு ஸ்ரீகண்டனையும் அன்னம்மாளையும் விட பாகீரதியிடம் தான் ஒட்டுதல் ஜாஸ்தி. ஸ்ரீகண்டன் எல்லாரையும் விடவே கொஞ்சம் பெரியவன் என்பதால் எப்போதும் ஒரு மரியாதை கலந்த விலக்கம் உண்டு அவனிடம். அன்னம்மாள் சக வயசு என்பதால் அவளைப் பெரும்பாலும் ஒரு தோழியாய் மட்டுமே பார்த்தான்.

பாகீரதி மட்டுமே அவனுக்கு அம்மாவின் இடத்தை நிரப்ப வந்தவளாய்த் தோன்றினாள். எப்போதும் பாகீரதியின் தாவணியைப் பிடித்துக் கொண்டு சுற்றுவான்.அப்பா ரெஜிமெண்டுக்குக் கிளம்பிப் போன பின் வீட்டுக்கு எதிரே இருக்கும் ராணுவ மைதானத்தில் நடக்கும் பரேடுகளை கண் சிமிட்டாமல் வேடிக்கை பார்ப்பது இருவருக்கும் வழக்கம்.

ஹரித்துவாரில் ஒரு முறை இழுத்துச் செல்லும் ஆற்றில் மணி காணாமல் போய் தான் கதறி அழுதது ஞாபகம் வந்தது பாகீரதிக்கு. அப்புறம் அவன் யார் உதவியாலோ கரையேறிப் பிழைத்து வந்ததும் அவன் கன்னங்களில் பளார் பளாரென்று மாறி மாறி அறைந்து விட்டு அவன் மேலேயே சாய்ந்து கொண்டு அழுததும் நினைவு வந்தது.

அவனைப் பற்றிய நினைவுகளெல்லாம் மாறி மாறி அலைக்கழித்து அழுகையும் சிரிப்புமாய் ஒரு மாதிரியான அவஸ்தையான கலவை உணர்வுக்கு ஆட்பட்டுக் கொண்டிருந்தாள்.

ஸ்ரீகண்டன் அண்ணா சுரங்கத்தில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்த போது சொன்னார். “ மணி நீ டிகிரி மட்டும் முடிச்சுடுடா. நான் அழச்சுண்டு போய்டறன். அங்கே நல்ல வேலை பாத்துக்கலாம். சம்பளமும் நன்னா வரும்” என்றார்.

மென்மையாகத் தலையசைத்து மறுத்தவன், கண்கள் விரியச் சொன்னான்.” நான் கப்பல்ல வேலைக்குப் போகப் போறேண்ணா. நிறைய நாடு பாக்கணும். லோகம் பூரா சுத்தணும்”.

பின் கட்டில் பாத்திரம் உருளும் சப்தம் கேட்டவள் நிகழுக்கு வந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு முகத்தையும் ஒரு முறை அழுந்தத் துடைத்துக் கொண்டு எழுந்து கொண்டாள். வேலைகள் காத்திருந்தன. அயற்சியாக இருந்தது.

பின்கட்டுக்குச் சென்றவள் தேய்த்துக் கழுவி வைத்திருந்த பாத்திரங்களிடமிருந்து பூனையை மென்மையாக விரட்டி விட்டு அதற்கென்று வைத்திருந்த கொப்பரையில் சமையலறைக்குள் சென்று பாலை எடுத்து வந்து ஊற்றினாள். சற்று நேரம் அமர்ந்து பூனையையே பார்த்துக் கொண்டிருந்தவள் மெல்ல எழுந்து வேலைகளை ஒவ்வொன்றாகக் கவனிக்க ஆரம்பித்தாள்.

மனம் ஒரு பக்கம் இழுத்துக் கொண்டே இருந்தது. யார் தோளிலாவது சாய்ந்து கொண்டால் தேவலை போல் இருந்தது. ராமன் வருவதற்கு இன்னும் நேரமிருந்தது. சுவற்றில் சரிந்து அமர்ந்தாள். ஒரு மாதிரி மயக்கமாய் இருந்தது. கண்கள் தானாக மூடிக் கொண்டன. வாசல் வழியே வெளிச்சம் உள் வரை நீண்டு ஒரு கதவகலத்துக்கு ஒரு சிறு சதுரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

வெயிலுக்கென்று ஒரு மணம் இருக்கிறதா என்ன? என்று திடீரென்று பாகீரதிக்கு சந்தேகம் வந்தது. சில ப்ரத்யேக வாசனைகளை அவள் வெயில் ஊறும் மதியப் பொழுதுகளின் தனிமைகளில் மட்டுமே உணர்ந்திருக்கிறாள். அது எந்த மனிதர்களுடைய வாசனையும் இல்லை. வேறு புத்திக்கெட்டிய எந்த வாசனையும் இல்லை. அது தனி. அது என்ன என்பதை அறிந்து கொள்ள பாகீரதி முயற்சித்ததும் இல்லை.

வாசலில் நிழலாடியது. கண்கள் மூடியிருந்த போதும் ஏதோ உருவம் தெரிந்தது, வெயிற்சதுரத்தை சிதைத்துக் கொண்டு அந்த உருவம் உள்ளே நுழைந்தது. மணி போலவே இருந்தது அந்த உருவம். ஆனால் மணி இல்லாத மாதிரியும் இருந்தது. வாசலில் இருந்து உள் கட்டுக்கு வர யுகம் யுகமாய் நேரம் எடுத்துக் கொள்வது போல் தோன்றியது.

அருகில் வந்து குனிவது தெரிந்தது பாகீரதிக்கு. கண்களைத் திறக்க முடியவில்லை. மூடியிருந்தும் கண்கள் எரிந்தன. மெல்ல சிரமப்பட்டு கண்களைத் திறக்க முயற்சிக்கும் போதே “ டீ…. பாகீ… அடியே…” என்று குரல் சுவாதீனத்தைக் கலைத்துப் போட்டது.

“என்ன இது? மணி இப்படியெல்லாம் கூப்பிட மாட்டானே? க்க்கா என்றூ அழகாகத் தானே அழைப்பான்?” நினைவு முழுசாக நிகழுலகத்துக்கு வர நிரம்பவும் சிரமப்பட்டது. அந்த உருவம் சட்டென்று தோளைப் பிடித்து உலுக்கவும் எல்லாம் தெளிந்தது பாகிக்கு.

ராமன் தான். கூப்பிட்டும் எழுந்திருக்காததில் எரிச்சலடைந்திருந்தான். பதறிக் கொண்டு எழுந்தாள். புடவையை சரி செய்து கொண்டு வேகமாய்ச் சமையலறைக்குள் நுழைந்து தயிரைக் கொஞ்சமாய் எடுத்துக் கடைய ஆரம்பித்தாள்.

ராமன் காபியோ தேநீரோ அருந்துவதில்லை. எப்போதும் மோர் அல்லது பால் மட்டுமே. இப்போது அவன் வெளியில் கிளம்பி விடுவான். திருமணமாகி இத்தனை மாசங்களில் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் எங்கே போகிறான் என்று ஒரு முறை கூட சொன்னதே இல்லை. இவளுக்கும் கேட்க தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது.

மோரை எடுத்துக் கொண்டு கூடத்துக்கு விரைந்தாள். அதற்குள் வேறு ஒரு வெள்ளைச் சட்டைக்கு மாறியிருந்தான். மோரை வாங்கி மடக் மடக்கென்று குடித்து விட்டு வாயைத் துடைத்துக் கொண்டு “ வரேன்” என்ற ஒற்றை வார்த்தையில் வெளியேறினான்.

அவன் போவதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளுக்குள் என்னவோ உடைவது போலிருந்தது. தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள். “ சரி. இரவு வரட்டும். அவன் தோளில் கொஞ்ச நேரம் சாய்ந்து கொண்டிருந்தாலே போதும். நிம்மதி வரும்” என்று நினைத்துக் கொண்டவள் அந்த நினைப்பின் உந்துதலிலேயே வேலைகளைக் கவனிக்கத் துவங்கினாள்.

இரவு ராமன் திரும்பி வந்து இவள் சமையலறை வேலைகளை முடிக்கும் முன்னரே சாதம் பரிமாறச் சொல்லிக் கேட்டு சாப்பிட்டு விட்டு அறைக்குள் போய்ப் படுத்து விட்டான். அவன் தோளில் சாய்ந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே பாகீரதியின்அப்போதைக்கான  வாழ்நாள் லட்சியமாக இருந்தது. அவனிடம் தனக்கான தேறுதல் இருக்கிறதென்று திடமாக நம்பினாள்.

வேலைகளை முடித்து விட்டு அறைக்குள் புகுந்தவள், வழக்கம் போல் எதுவும் பேசாமல் கட்டிலின் அருகே பாயை விரித்துப் படுத்துக் கொண்டாள். அவளாக வலியப் போய் அவன் தோளில் சாய்ந்து கொள்வதெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை அவளால்.

உள்ளே மனசு பொங்கிக் கொண்டிருந்தது. ஒரே ஒரு சின்ன ஸ்பரிசம் கிடைத்தால் கூட மொத்தமாக உடைந்து விடும் நிலையில் இருந்தாள் பாகி. கட்டில் மேல் படுத்திருந்த ராமனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு படுத்துக் கொண்டாள். அடக்கி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து விசும்பலாய் வெளிப்பட்டது.

அவள் உடல் குலுங்கத் துவங்கியது. தோளின் மேல் ஆதுரமாய் ஒரு கையின் அழுத்தத்தை எதிர்பார்த்தவளை சற்றே துணுக்குறச் செய்தது, “ப்ச்” என்ற ராமனின் சலிப்புக் குரல்.

“ மனுஷனை நிம்மதியா தூங்க விடறயா. ஆஞ்சு போஞ்சு ஆத்துக்கு வந்தாக்க இங்க வந்தும் ஒப்பாரியைக் கேக்கணுமா. போனவன் அல்பாயுசில போய்ட்டன். இன்னும் எத்தன நாளைக்குத் தான் அழுதுண்டே இருக்கப் போறயோ தெரியலை. மனசத் தேத்திண்டு கண்ண மூடிண்டு பேசாம தூங்கு” என்று ஈரம் முற்றிலுமாய் உறிஞ்சப்பட்ட ஒரு வறண்ட தொனியில் சொல்லி விட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டான் ராமன்.

பாகீரதியின் கண்ணீர் நின்றிருந்தது. அதிர்ச்சி மட்டும் மிச்சமிருந்தது. கண்ணோரங்களில் கண்ணீரின் உப்புத் தடம் கோடுகளாய்க் காய்ந்திருந்தது.

-ஹரீஷ் கணபதி