ஆகாய நதிகள் பாகம்-4

266

ஆகாய நதிகள்

பாகீரதி மட்டுமே அவனுக்கு அம்மாவின் இடத்தை நிரப்ப வந்தவளாய்த் தோன்றினாள். எப்போதும் பாகீரதியின் தாவணியைப் பிடித்துக் கொண்டு சுற்றுவான்.அப்பா ரெஜிமெண்டுக்குக் கிளம்பிப் போன பின் வீட்டுக்கு எதிரே இருக்கும் ராணுவ மைதானத்தில் நடக்கும் பரேடுகளை கண் சிமிட்டாமல் வேடிக்கை பார்ப்பது இருவருக்கும் வழக்கம்.(அத்தியாயம் 3 மேலும் படிக்க…)

அத்தியாயம் – 4

வாசலில் இரும்புக் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. சுப்பிரமணி தான் வந்திருக்க வேண்டும். எழுந்திருக்காமல் செவிகளை மட்டும் அறைக்கு வெளியே வைத்திருந்தாள் கங்கா. கதவு திரும்ப மூடப்படும் சப்தம், சைக்கிள் ஸ்டாண்டு போட்டு நிறுத்தும் சப்தம் எல்லாம் தெளிவாகக் கேட்டது. என்னவோ கவலையாய் இருந்தது.

இவனுக்கு மூத்தவன் கணிதம் படித்தான். இவன் கணிதம் ஒத்து வராதென்று படிக்க முடியாதென்று சொல்லி விட்டு பி.காம் சேர்ந்து விட்டான். பி.காம் முடித்ததும் தெரிந்தவர் வாங்கிக் கொடுக்கிறேன் என்று சொன்ன நல்ல வேலையை வேண்டாமென்று சொன்ன போது கொஞ்சம் வருத்தம் தான் கங்காவுக்கு.

ஆனால் அவன் சி.ஏ படிக்கப் போகிறேன் என்று சொன்னதும் அவளுக்கு அவ்வளவு சந்தோஷம். பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டே இருந்தாள். எங்க வீட்லயும் ஒரு ஆடிட்டர் என்று.

கொஞ்ச நாட்களில் ஆடிட்டர் ஒருவரிடம் ஆர்டிக்கிள்ஸ் சேர்கிறேனென்று சொன்னவனை மனசார அனுப்பி வைத்தாள். சேர்ந்த புதிதில் நன்றாகத் தான் இருந்தான். பிறகு ஆடிட்டருக்கு இவனை மிகவும் பிடித்துப் போகவே, இவனை நிறைய இடங்களுக்கு அனுப்பத் துவங்கினார். கையில் லேசுபாசாக காசு புரள ஆரம்பித்ததுமே படிப்பது குறைந்து போனது.

அதிலும் கடந்து ஆறு மாசங்களாக சுத்தமாகப் படிப்பு நின்றுப் போய் விட்டிருந்தது. வெளியூர் செல்லாமல் இருந்தாலும் வீட்டுக்கு தாமதமாக வரத் துவங்கினான். வார இறுதிகளில் சினிமா கட்டாயம் என்றானது. வீட்டில் தேநீர் குடிப்பதை நிறுத்தி விட்டான். தெருக் கடைகளில் நண்பர்களுடன் மட்டுமே.

அவன் சம்பாத்தியம் கங்காவுக்கு சந்தோஷம் தரவில்லை. பயத்தைத் தோற்றுவித்தது. இப்படியே தேங்கி விடுவானோ? பணம் இது போன்ற வேலைகளை நிச்சயம் செய்யும். ஏற்கனவே ராஜேந்திரன் வீடு தங்குவதில்லை. டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யுட்டே கதி என்று கிடக்கிறான். அதை விட்டால் ஆற்றங்கரை.

இப்போது இவனும் இப்படி. ஆனால் சந்திரன் இது எதைப் பற்றியும் கவலைப் படுவதாகவே தெரியவில்லை. மாதம் வீட்டுச் செலவுக்குக் கூட அவனாய் பார்த்து ஏதோ ஒரு தொகையை மாச ஆரம்பத்தில் வீசி விட்டுச் செல்வதோடு சரி.

அதன் பின் ஒரு முறை கூட பணம் போதுமா? வேறு ஏதேனும் மேற்படிச் செலவுகள் இருக்கின்றனவா? பிள்ளைகள் பள்ளிக் கல்லூரிக் கட்டணம் கட்ட என்ன செய்கிறாள்? என்று எதுவுமே கேட்டுக் கொண்டதில்லை. ஒரு வகையில் அவனைச் சொல்லிக்  குற்றமில்லை என்று நினைத்துக் கொண்டாள் கங்கா.

ஆரம்பத்திலேயே அவன் இப்படித் தான் என்று தெரிந்ததுமே கங்காவே பொறுப்புகளை ஏற்றுக் கொண்டாள். அல்லது அவள் மேல் ஏற்றி வைக்கப்பட்டதைக் கேள்வி கேட்காமல் ஒப்புக் கொண்டாள்.

ஏதேதோ எண்ணங்களில் உழன்று கொண்டிருந்தவளை அந்த மெல்லிய பாட்டுச் சத்தம் கலைத்தது. சுப்பிரமணி தான். இத்தனை நேரத்துக்கு மேல் வந்துமா? அவன் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் அவனுக்கென்று ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கி வைத்திருக்கிறான்.

ஏகப்பட்ட கேசட்டுகளைப் பதிந்து வேறு வைத்திருக்கிறான். தினமும் இரவு அவன் தூங்கும் போது பாட்டுக் கேட்க வேண்டும். பாட்டுக் கேட்கிறானோ இல்லையோ, அவன் தூங்கும் போது தலைமாட்டில் பாட்டு ஓடிக் கொண்டிருக்க வேண்டும். என்ன பாட்டு என்பது தெளிவாகக் கேட்கவில்லை.

ஆனால் சற்று நேரம் அதையே கவனித்துக் கொண்டிருந்த கங்காவுக்கு அந்த லயம் அமைதியூட்டியது. மனம் சமனப்பட்டது. கண்கள் லேசாகச் செருகத் துவங்கின. எப்போது தூங்கினோம் என்று அறியாமலே தூங்கிப் போனாள். திடுக்கென்று விழிப்பு வந்த போதும் பாட்டு ஓடிக் கொண்டே இருந்தது.

இரவு என்ன நேரம் என்று தெரியவில்லை. புடவையை சரி செய்து கொண்டு எழுந்தாள். கொல்லைப் புறம் போக நடந்தவள் சுப்ரமணியைக் கவனித்தாள். ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். சற்று நேரம் நின்று அவனையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். பின் மெல்ல டேப்ரெக்கார்டர் ஸ்விட்ச்சை அணைத்தாள். மெல்ல நடந்து கொல்லைப் புறக் கதவைத் திறக்கும் முன் முதுகுக்குப் பின் சத்தம் கேட்டது.

திரும்பிப் பார்த்தாள். சுப்ரமணி தான். வேக வேகமாக எழுந்து கொண்டிருந்தான். அந்த இருட்டிலும் அவன் கோபமாக இருப்பது நன்றாகத் தெரிந்தது. எழுந்தவன் தூக்கக் கலக்கத்துடனே தடவித் தேடி டேப் ரெக்கார்டரின் ஸ்விட்சை மறுபடியும் போட்டு விட்டுப் படுத்துக் கொண்டான். பாடல் விடுபட்ட இடத்திலிருந்து தொடரத் துவங்கியது.

ஒரு புறம் கோபமாகவும் இன்னொரு புறம் சிரிப்பாகவும் வந்தது கங்காவுக்கு. அவன் சிறுபிள்ளைத் தனத்தை நினைத்துச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அதே சமயம் இவ்வளாவு பிடிவாதத்தை நினைத்து சற்றே கவலை படர்ந்தது. பின் கட்டுக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள்.

—–

மங்களம் மாமி வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தாள் கங்கா. மங்களம் மாமியிடம் மட்டுமே கங்கா கொஞ்சமேனும் மனம் விட்டுப் பேசித் தன் கவலைகளை பயங்களைப் பகிர்ந்து கொள்வதுண்டு. மங்களம் இவளை விட ஏழெட்டு வயது பெரியவள். இரண்டு வீடுகள் தள்ளி இருப்பவள்.

அன்று மேகமூட்டமாய் இருந்தது. தெருவில் வெயில் விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்க்கும் போது குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாட்டுப் போல் தோற்றமளித்தது அவளுக்கு. வெயில் போகும் வழியில் நிழல் நகர்வதையும் பின் திடீரென்று காணாமல் போய் மீண்டும் திடீரென்று முளைப்பதையும் அங்கிருந்த ஜன்னல் கதவு, திண்ணை, தூண்கள் எல்லாவற்றீன் மீதும் வெயிலின் நிழல் படர்ந்து பரவுவதையும் , தலை சாய்த்து குழந்தை போல் ரசித்துக் கொண்டிருந்தாள் கங்கா.

தோளில் கை பட, மீண்டு வந்தவள், திரும்பிப் பார்த்தாள். மங்களம் மாமி தான் நின்று கொண்டிருந்தாள். “என்ன ?” என்பது போல் பார்த்தாள் மங்களம் மாமி. “இவள் சிரித்துக் கொண்டே “ என்னவோ கேக்கணும்னுட்டு வந்தேன் மாமீ. மறந்து போய்டுத்து” என்று அவஸ்தையாகச் சிரித்தாள். வெயிலின் விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தவள், கேட்க வந்த விஷயத்தை மறந்து விட்டிருந்தாள்.

மங்களம் மென்மையாகச் சிரித்தாள். “ சரி விடு. தூத்தம் கொண்டு வரட்டுமா?” என்று திரும்பியவளை, “ வெங்கிட்டு இல்லையா மாமி?” என்ற கங்காவின் குரல் தடுத்தது. ஆச்சரியமாய்த் திரும்பிப் பார்த்தவள், “ வெங்கிட்டு கோயம்புத்தூர் போயிருக்காண்டி. சி.ஏ பரீட்சை எழுத. நோக்குத் தெரியாதா? சுப்பு போகலியா? நான் மிந்தா நேத்தே கேக்கணுனு நெனச்சுண்டு இருந்தேன். செத்த இரு. போய் தூத்தம் எடுத்துண்டு வரேன்” என்று உள்ளே போய் விட்டாள்.

கங்காவுக்கு அந்த அதிர்ச்சியை எப்படி ஜீரணிப்பது என்று தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் அதை எப்படி எதிர்கொள்வதென்றே தெரியவில்லை. சுப்ரமணி கோயம்புத்தூர் போகவில்லை. நண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றிருக்கிறான். அதிர்ச்சியில் கண்களில் கண்ணீர் கூட வறண்டு நின்று விட்டது.

என் பிள்ளை ஆடிட்டருக்குப் படிக்கப் போறான் என்று யாரிடமெல்லாம் சொன்னாளோ அவர்கள் முகமெல்லாம் ஞாபகத்தில் வந்து போனது. வயிற்றுக்குள் அமிலப் பந்து போல் ஏதோ ஒன்று உருண்டது. கோபமா ஆற்றாமையா இயலாமையா எதுவென்று இனம் பிரிக்க முடியாமல் மனம் அல்லாடியது.

வெயில் அதுபாட்டுக்குத் தன் விளையாட்டை ஆடிக் கொண்டிருந்தது.இப்போது ஏனோ அதைப் பார்க்க கங்காவுக்குக் கோபமும் எரிச்சலும் பற்றிக் கொண்டு வந்தது.

வெளியில் வந்த மங்களம் கங்காவைக் காணாமல் தேடிவிட்டுச் சலித்துப் போய் உள்ளே போய் விட்டாள்.

இரவு சுப்ரமணி வருவதற்காகக் காத்திருந்தாள். வழக்கம் போல் தாமதம். எல்லாக் கோபத்தையும் அடக்கிக் கொண்டு முடிந்த வரை அவனோடு சாந்தமை உரையாட வேண்டும் என்று சங்கல்பம் பண்ணிக் கொண்டாள்.

உள்ளே வந்தவனை “ சுப்பு ஒரு நிமிஷம் நில்லுடா” என்ற கங்காவின் குரல் தடுத்தது. இத்தனை நேரத்துக்கு மேல் அம்மா விழித்திருப்பதே ஆச்சரியமாய் இருந்தது சுப்புவுக்கு.

வழக்கமாகவே அவன் ஓரிரு வார்த்தைகளில் மட்டுமே பேசிப் பழக்கப்பட்டவன் என்பதால் எதுவும் பேசாமல் நின்றான். அருகே வந்தவள் , “ ஏண்டா. ஸி ஏ பரீட்சை நடந்துண்டு இருக்காமே? ஏண்டா நீ போகலே? என்னண்ட ஒரு வார்த்தை கூட சொல்லலியே பரீட்சை ஆரம்பமாயிடுத்துன்னு?” என்று குரலில் ஆற்றாமை தொனிக்கக் கேட்டாள்.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நெளிந்தான் சுப்பு. இயலாமையை மறைக்க சட்டென்று விறைத்துக் கொண்டான். “ ப்ச். போகலம்மா அவ்ளோ தான்” என்றபடி நகர்ந்தவனை உறுதியாகத் தடுத்துப் பிடித்தது கங்காவின் கை. “ அதான் ஏன் போகலன்னு கேட்டேன்” என்றாள்.

நகர்வதை நிறுத்தி நின்றவன் கங்காவின் கண்களை உற்றுப் பார்த்தான். அவன் புஜத்தைப் பற்றியிருந்த கங்காவின் கையை உறுதியாக விலக்கிக் கொண்டே “ ம்மா… எனக்கு என்னவோ இனிமே ஸி ஏ சக்சஸ்புல்லா படிச்சு முடிக்க முடியும்ணு தோணல. எழுத இன்டரஸ்ட் இல்ல. இதப் பத்தி ஆடிட்டர் கிட்டயும் பேசியிருக்கேன். வேற வழி தான் பாக்கணும் “ என்றவன் இவள் பதிலக்குக் காத்திராமல் பின் கட்டுக் கதவைத் திறந்து கொண்டு இருட்டில் சென்று மறைந்தான்.

கங்கா அவன் சென்று மறைந்த இருளையே பார்த்துக் கொண்டிருந்தாள். நிலவின் வெளிச்சம் கதவுச் சதுரம் வழியே வந்து இவள் காலடியில் விளையாடிக் கொண்டிருந்தது.

-ஹரீஷ் கணபதி