ஆகாய நதிகள் பாகம்-5

293

ஆகாய நதிகள்

இரவு என்ன நேரம் என்று தெரியவில்லை. புடவையை சரி செய்து கொண்டு எழுந்தாள். கொல்லைப் புறம் போக நடந்தவள் சுப்ரமணியைக் கவனித்தாள். ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். சற்று நேரம் நின்று அவனையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். பின் மெல்ல டேப்ரெக்கார்டர் ஸ்விட்ச்சை அணைத்தாள். மெல்ல நடந்து கொல்லைப் புறக் கதவைத் திறக்கும் முன் முதுகுக்குப் பின் சத்தம் கேட்டது.(அத்தியாயம் 4 மேலும் படிக்க…)

அத்தியாயம் – 5

வாசலில் அமர்ந்து தெரு முனையைப் பார்த்தபடி இருந்தாள் பாகீரதி. வரப் போகும் சிக்கலுக்குத் தன்னை எப்படித் தயார் செய்து கொள்வது என்று யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அலமுவின் குணத்துக்கு இது நடக்குமென்று பாகீரதி எதிர்பார்த்தது தான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை. ராமனின் குணத்துக்கு அவன் சென்றிருக்கும் இடத்தில் என்ன நடந்திருக்கக் கூடுமென்றும் ஒருவாறு யூகித்து வைத்திருந்தாள்.

பாகீரதிக்குத் தன்னை நினைத்தே ஆச்சரியமாய் இருந்தது. கரியண்டாவின் மீது சாய்ந்து கொண்டு முகம் முழுவதும் கரி அப்ப அப்ப விசித்து அழுதது தான் தானா என்று அவளுக்கு இப்போது தோன்றியது. இந்தக் குடும்பத்துக்குள் தான் எவ்வளவு கச்சிதமாகப் பொருந்தி விட்டோம் அல்லது பொருத்தப்பட்டு விட்டோம் என்பதை யோசித்துப் பார்த்தால் ஏனென்று புலப்படவில்லை.

ராமனின் கூடப் பிறந்தவர்கள் ஒன்பது பேர். அதில் கடைசி இரண்டு பேர் கிட்டத் தட்ட கைக் குழந்தைகள் பாகீரதி இந்த வீட்டுக்குள் வரும் போது. அலமு ராமனுக்கு அடுத்தவள். பெண் குழந்தைகளில் மூத்தவள். சிறு வயசிலிருந்தே தனி ரகம். செல்லம் அதிகம். அதிகச் செல்லம் கொடுத்தால் என்னென்ன குணங்கள் வியாபிக்குமோ அதுவும் அதிகம்.

தெரு முனையில் அவர்கள் வருவது இங்கிருந்தே தெரிந்தது. லேசான கூன் இட்ட தளர்ந்தாற் போலிருக்கும் ஆணுருவம். கம்பீரமாய் அவ்வளவு தூரத்திலிருந்து பார்த்தாலும் எனக்கென்ன என்னும் தோரணை தெறிக்கும் நடை கொண்ட பெண்ணுருவம். ராமனும் அலமுவும் தான்.

இருளும் ஒளியும் குழைந்த பொழுதின் வெளிச்சம் அவர்கள் இருவரின் உடலின் எல்லைக் கோடுகள் மீதும் படர்ந்து நிழலோவியம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

வந்து விட்டார்கள். ராமன் முகத்தைப் பார்த்து சுலபமாய் அனுமானிக்க முடிந்தது இவள் நினைத்தது தான் நடந்திருக்குமென்று. இவள், வா என்று அழைத்ததை அலமு சட்டையே செய்யவில்லை. சுவாதீனமாய் வீட்டுக்குள் நுழைந்து தன்னைப் பொருத்திக் கொள்ளத் துவங்கினாள். குணம் அப்படி.

நேரே அறைக்குள் வந்த ராமன் சட்டையைக் கழற்றி விட்டு ஈசி சேரில் சாய்ந்து கொண்டான். அவனுக்கு அவ்வளவு சுத்தம் போதாது. வெளியிலிருந்து வந்தால் கை கால் முகம்  கழுவிக் கொள்ள வேண்டும் என்கிற அடிப்படை சுத்தங்களெல்லாம் அவன் பழகினாற் போலவே தெரியவில்லை. கல்யாணமாகி வந்த புதிதில் பாகீரதிக்கு இது மிகவும் குறையாக இருந்தது. பின் மற்ற எத்தனையோ விஷயங்கள் போல் இதுவும் பழகி விட்டது.

கேட்க வேண்டிய கடமைக்கு, “என்னாச்சு?” என்றாள். சிறிது நேரம் பதிலில்லை. இவளும் திரும்பக் கேட்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து, “ஒண்ணும் சரிப்படல” என்று மொட்டையாய் பதில் வந்தது. “அவர் என்ன சொன்னார்?” என்றாள் தொடர்ந்து. அதற்கே சிடுசிடுத்தான். “ அந்தாள் மனுஷனா? பேர் மட்டும் கனபாடிகள். ஆம்படையாள எப்படி நடத்தணும்னு அவன் படிச்ச வேதம் கத்துக் குடுக்கலையான்னு கேட்டேன்” என்றவன் சடக்கென்று எழுந்தான்.

ஒரு தூணுக்கும் இன்னொரு தூணுக்கும் இடையே கட்டப்பட்டுத் தொய்ந்து போயிருந்த கொடியில் தொங்கிக் கொண்டிருந்த சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டே, “ இனிமே அலமு இங்க தான் இருப்பள். அந்த மாதிரி ஆளோட வாழணும்னு அவஸ்யம் ஒண்ணுமில்லே.” என்றவன் வாசல் படியிறங்கி செருப்பை அணிந்து கொண்டு “ போயிட்டு வந்துடறேன்” என்று கிளம்பினான்.

எங்கே என்று சொல்லவில்லை. இவளுக்குத் தெரியும். கிளப்புக்குத் தான் போகிறான். சீட்டாட்ட கிளப். பள்ளிக்கூட வாத்தியார்கள் என்றால் பாகீரதியின் மனசில் சிறு வயசில் வரைந்து வைத்திருந்த கற்பனைச் சித்திரங்கள் முற்றிலும் வேறாக இருந்தன. ராமன் அவள் சித்திரங்களைப் போலெல்லாம் இல்லை. முதலில் பள்ளிக்கூட வாத்தியார்கள் சீட்டாடுவார்கள் என்பதே பாகீரதிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

பின் அதுவும் பழகிப் போய் விட்டது. ஒரு மாதிரி அதிர்ச்சிகளையும் ஏமாற்றங்களையுமே எதிர்கொள்ளப் பழகி விட்டிருந்தாள் அந்த வீட்டின் அத்தனை வருட வாசத்தில். நினைவுகளில் ஆழ்ந்தவளை “ மன்னி… கோதுமை ரவை எங்கே வெச்சிருக்கே?” என்ற அலமுவின் அதிகாரக் குரல் கலைத்தது.

உள்ளே சென்றவளை சமையலறையில் அலமுவின் பாத்திர உருட்டல் சத்தம் எதிர்கொண்டது.”என்ன வேணும் அலமு? சொல்லேன் நான் பண்ணித் தரேன்” என்றபடி சமையலறையில் நுழைந்த பாகீரதியைத் தன் துளைக்கும் பார்வையால் தடுத்து நிறுத்தினாள் அலமு.

“உன் மடி ஆச்சாரம் நேக்கு போதாது மன்னி. எனக்கு நானே பண்ணிக்கறேன். நீ சித்த நேரம் வெளிய இருந்தா போறும்” என்றாள். அந்தக் குரலில் ஏன் அவ்வளவு வன்மம் என்று பாகீரதிக்கு ஆச்சரியமாய் இருந்தது.மனசின் ஓரத்தில் லேசாக இனம் புரியாத பயமும் கவலையும் படர்ந்தது.

————-

கிணற்றங்கரையில் சிரிப்புச் சத்தம் கேட்டது. சுந்தரம் தான். ராமனின் கடைசித் தம்பி. வீட்டுக்குள்ளே வரும் போதே குடுமியை இழுத்து முடிந்து கொண்டு “ மன்னீ… அலமுக்கா வந்திருக்காளாமே? எங்கே?” என்றபடி கேட்டுக் கொண்டே வந்தான். கண்களில் அவ்வளவு பளபளப்பு. அலமுக்கா என்றால் உயிர் அவனுக்கு.

அலமுவுக்கும் அவன் என்றால் அலாதி. அலமு சிரிப்பது ரொம்ப அபூர்வம். சுந்தரம் இருக்கும் போது மட்டுமே அது போலான காட்சிகள் சாத்தியம். பாகீரதி ரேழியின் வழியே பின் கட்டிலிருந்த சுந்தரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பார்க்கப் பார்க்கக் கண்களில் வாத்சல்யம் பொங்கியது.

பாகீரதி இந்த வீட்டுக்கு வந்த புதிதில் சுந்தரம் ரொம்பச் சின்னக் குழந்தை. அலை அலையாய் முடி புரளும். சுருள் சுருளாய்ப் பார்ப்பதற்கே அவ்வளவு அழகாய் இருக்கும். சுந்தரத்துக்கு அலங்காரம் செய்து விடுவது பாகீரதிக்கு அவ்வளவு பிடிக்கும். எண்ணெய் முழுக்காடி சீயக்காய் தேய்த்துக் குளிப்பாட்டிச் சாம்பிராணிப் புகை போட்டு அவன் முடியை அவ்வளவு அழகாய்ப் பார்த்துக் கொள்வாள் பாகீரதி. இன்னொரு காரணம் சுந்தரத்தைப் பார்க்கும் போதெல்லாம் பாகீரதிக்கு மணியின் ஞாபகம் வரும்.

இப்போது கொஞ்சம் பெரியவனாகி விட்டதால் இதையெல்லாம் தானே செய்து கொள்ளத் துவங்கி விட்டான். இவளிடம் ஒரு மரியாதையான விலகலையும் அவனே அமைத்துக் கொண்டு விட்டான். அவன் குழந்தை இல்லை என்பதை மூளை ஏற்றுக் கொண்டாலும் மனசு அவ்வப்போது தடுக்கியது. இன்னும் அவன் முடியை எப்போது பார்த்தாலும் அவ்வளவு ஆசையோடு பார்ப்பாள். இப்போது என்னென்னவோ வாசனைத் தைலங்களைத் தடவிக் கொள்ளத் துவங்கியிருக்கிறான்.முடி கெட்டுப் போய் விடுமே என்று கவலையாய் இருந்தது பாகீரதிக்கு.

நினைவுகளிலிருந்து மீண்டவள், பின் கட்டைப் பார்த்தாள். இன்னும் அவர்களிருவரும் அங்கே தான் இருந்தார்கள். காற்றில் பறந்த முடியை நாசூக்காக சுந்தரம் ஒதுக்கிக் கொள்வது கொள்ளை அழகாக இருந்தது. அலமுவின் வருகையால் ஏற்பட்ட சஞ்சலங்கள் மறந்து ஆதுரமாய் சுந்தரத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் பாகீரதி.

——–

வேலைகள் முடிக்க முடிக்கத் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது போலிருந்தது பாகீரதிக்கு. ஆயாசமாய் இருந்தது. அலுத்துச் சலித்து அறைக்குள் போனால் ராமன் காத்திருப்பானே என்கிற கவலை வேறு சேர்ந்து கொண்டது. உடல் கெஞ்சியது ஓய்வுக்கு. இருந்தாலும் ராமனுடனான அந்நியோன்யத் தருணங்களை இழக்க விரும்பவில்லை.

அது அரிதினும் அரிதான விஷயம். அவன் பரிவாக நடந்து கொள்வது பெரும்பாலும் படுக்கையறையில் மட்டுமே. சின்னச் சின்னத் தொடுதல்களில் மட்டுமே அவன் வாத்சல்யத்தைக் காட்டத் தெரிந்தவன் அல்லது காட்ட விரும்புகிறவன். அது மாதிரி சமயங்களில் அவன் மாற வேண்டும் என்று தான் நினைக்கும் விஷயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துச் சொல்லி அவன் மனசை மாற்ற முடியும் என்று திடமாக நம்பிக் கொண்டிருந்தாள் பாகி. மனசளவில் தயாராகிக் கொண்டாள். வேலைகளை ஒரு மாதிரி ஏறக் கட்டி விட்டு கைகளைக் கழுவிக் கொண்டாள்.

புடவை ரொம்பவும் வியர்வை வாசனை வருகிறதா என்று முகர்ந்து பார்த்துக் கொண்டாள். என்ன தான் சுத்தம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ராமன் கவனக் குறைவானவன் என்றாலும் பாகீரதி அவ்வாறு இருப்பதை அவன் என்றைக்கும் விரும்பியதில்லை.

முகத்தின் வியர்வையைத் துடைத்துக் கொண்டு அடுக்களையிலிருந்து அறை நோக்கி நகர்ந்தாள். வீடு முழுவதும் இருள் போர்த்தியிருந்தது. முற்றத்தில் விழுந்து கொண்டிருந்த அரை குறை நிலா வெளிச்சம் ஏதேதோ புதிர்க் கோடுகளைப் போட்டுக் கொண்டிருந்தது.

சட்டென்று எந்தத் திசையிலிருந்து என்று அனுமானிக்க முடியாமல் அந்தக் குரல் கேட்டது. “ மன்னி இங்க வாயேன்”. அறைக் கதவைத் திறக்கப் போனவள் அப்படியே நின்றாள். அலமுவின் குரல் தான். ஒரு நொடி யோசித்தவள், கேட்டும் கேளாதது போல் அறைக்குள் நுழையப் போனாள். மீண்டும் குரல். “மன்னீ. உன்னத் தான். இங்க வாயேன்”.

எச்சில் விழுங்கிக் கொண்டு சற்றே எட்டிப் பார்த்த எரிச்சலை அடக்கிக் கொண்டு இருளில் தெரியப் போவதில்லையென்றாலும் வலிய ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு அலமுவை நோக்கி நடந்தாள். இவள் அருகே வருவது தெரிந்ததும் சுவரோரமாக இருளில் படுத்திருந்த அலமு திடுப்பென்று எழுந்து அமர்ந்து கொண்டாள்.

அருகே இவள் போய் நின்றதும் என்ன என்று கூட கேட்க அவகாசம் தராமல், “மன்னீ… நீ இன்னிக்கு என்னோட படுத்துக்கறயா. உன்னண்ட நெறய சங்கதி பேசணும்” என்றாள். அவள் கண்கள் இருளில் ஒளிர்ந்திடும் ஒரு குரோதப் பூனையின் கண்கள் போல் பளிச் பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்தன.

பாகீரதி அவஸ்தையாய்த் திரும்பி அறைக் கதவைப் பார்த்தாள். ராமன் காத்துக் கொண்டிருப்பானே? “ வா மன்னீ “ என்று விடாப்பிடியாகக் கையைப் பிடித்து இழுத்து அருகே படுக்க வைத்துக் கொண்டு விட்டாள் அலமு. அப்போது தான் கவனித்தாள். இவள் தரையில் படுக்கவில்லை.. ஜமுக்காளம் ஏற்கனவே விரித்திருந்தது. அப்படியெனில் என்னை இங்கே படுக்க வைக்க வேண்டுமென்று முன்னமே யோசித்து வைத்திருந்தாளா அலமு?

பாகீரதிக்கு இருப்புக் கொள்ளவில்லை. அறைக் கதவைப் பார்க்கத் திராணியில்லாமல் அலமுவின் பக்கம் திரும்பிக் கொண்டு அறைக் கதவுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் தான். கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். மூடிய கண்களை மீறியும் பாதித் திறந்த கதவின் வழி அறை விளக்கின் ஒளி நீண்டு வந்து தொடுவது தெரிந்தது. காலடிச் சத்தம் கேட்டது. ராமன் வருகிறான். அருகில் வந்து விட்டான்.

“என்னடி இங்க படுத்துண்டு இருக்கே?”

சடக்கென்று விசை இயக்கினாற் போல எழுந்தாள். அவன் கண்களைப் பார்க்க முடியாமல் தவிர்த்தவள், தரையைப் பார்த்தபடியே “ இல்லண்ணா… அலமு தான்… “ என்று முடிப்பதற்குள் சீறினான். “என்னடி … கெஞ்சுவேன்னு நெனச்சியா… நீ உன் வேலையக் காட்டறதுக்கோசரம் என்னத்துக்கு அவ பேரை இழுக்கறே? ஆம்பளடி நா. தனியாப் படுக்க முடியாதா? கவனிச்சுக்கறேண்டி உன்ன” என்று அடிக்குரலில் கிசுகிசுப்பாய் அவளுக்கு மட்டும் கேட்கும் படி, ஆனால் குரல் முழுக்க வழிய வழிய நிரப்பிக் கொண்ட வன்மத்துடன் சொல்லி விட்டு விருட்டென்று நடந்து சென்று அறைக்குள் புகுந்து கதவைத் தாழிட்டுக் கொண்டான். பெருமூச்செறிந்தாள் பாகீரதி. இன்னும் என்னென்ன அனுபவிக்க வேண்டுமோ என்று நினைக்கும் போதே மலைப்பாக இருந்தது. ஏதேதோ யோசனையுடன் மெல்ல அமர்ந்து பின் கையூன்றிப் படுத்துக் கொண்டாள்.

இந்த அலமு என்னவோ பேச வேண்டும் என்று சொன்னாளே என்று சட்டென்று நினைவு வந்தவளாய் அவளைத் தொடப் போனவளைத் தடுத்து நிறுத்தியது அலமுவின் மெலிதான குறட்டைச் சத்தம். அவள் எப்போதோ தூங்கி விட்டிருந்தாள்.

சிறிது நேரம் ஆற்றாமையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்த பாகீரதி எழுந்திருக்க முயன்று சற்றே உடம்பை அசைத்தாள். அலமுவின் கை தீர்க்கமாக பாகீரதியின் மேல் விழுந்து அழுத்தியது. அது தூக்கத்தில் போட்ட கையைப் போல இருக்கவில்லை.