ஆகாய நதிகள் பாகம்-6

160

ஆகாய நதிகள்

பாகீரதி இந்த வீட்டுக்கு வந்த புதிதில் சுந்தரம் ரொம்பச் சின்னக் குழந்தை. அலை அலையாய் முடி புரளும். சுருள் சுருளாய்ப் பார்ப்பதற்கே அவ்வளவு அழகாய் இருக்கும். சுந்தரத்துக்கு அலங்காரம் செய்து விடுவது பாகீரதிக்கு அவ்வளவு பிடிக்கும். எண்ணெய் முழுக்காடி சீயக்காய் தேய்த்துக் குளிப்பாட்டிச் சாம்பிராணிப் புகை போட்டு அவன் முடியை அவ்வளவு அழகாய்ப் பார்த்துக் கொள்வாள் பாகீரதி. இன்னொரு காரணம் சுந்தரத்தைப் பார்க்கும் போதெல்லாம் பாகீரதிக்கு மணியின் ஞாபகம் வரும்.

அத்தியாயம் – 6

இந்தப் பழக்கம் எப்போது ஆரம்பித்ததென்று கங்காவுக்கே தெரியவில்லை. மதிய நேரமானால் கொஞ்ச நேரம் வாசலுக்கு வந்து பளீர் வெயில் முகத்தில் படும்படி நின்று கொண்டிருப்பது. அவளுக்கு அவ்வளவு உற்சாகமாக இருக்கும் காரணமேயில்லாமல். ஒற்றைக் காக்கை கரைவதும், எங்கோ தூரத்தில் செல்லும் லாரியின் ஒலிப்பான் சத்தமும், எந்த வீட்டிலிருந்தென்று தெரியாமல் காற்றில் மிதந்து குழைந்து வரும் வத்தக் குழம்பின் மணமும் வெயிலுடன் சேர்ந்து அவள் மேல் ஊறும் தற்காலிகத் தனிமையும் அவளை உற்சாகமூட்டும் காரணிகள்.

சில சமயங்களில் இவள் வாசலில் நிற்பதைப் பார்த்து விட்டு யாரேனும் பேசப் பிடித்துக் கொண்டால் பொம்மை பிடுங்கப்பட்ட குழந்தை போல் தனிமை பிடுங்கப்பட்ட கங்காவின் முகம் சுண்டிப் போய் விடும்.

வியர்ப்பதைப் பற்றிக் கவலைப் பட மாட்டாள். அது மாதிரி வெயிலில் நின்று விட்டுத் திரும்ப வீட்டுக்குள் போகும் போதெல்லாம் அவள் முகம் புடம் போட்ட தங்கம் போல் ஜ்வலிப்பாக இருக்கும்.

அன்றும் அப்படித் தான் நின்று கொண்டிருந்தாள். என்ன, வழக்கமான நேரத்தை விட சற்றே தாமதமாகி விட்டிருந்தது. சைக்கிள் மணிச் சத்தம் கேட்டது. தபால்காரர் வருவது தெருத் திருப்பத்திலேயே தெரிந்தது. நேராக இவள் வீட்டு வாசலில் தான் நின்றார். “வியர்த்து வழியும் புன்னகயுடன் சைக்கிளை விட்டு இறங்கியவர், “கொஞ்சம் தண்ணி குடும்மா” என்றார்.

கங்கா புன்னகையை பதிலுக்குத் தந்து விட்டு உள்ளே சென்று செம்பில் நீர் நிறைத்து எடுத்து வந்து தந்தாள். அதை மூச்சு விடாமல் தொண்டையில் சரித்துக் கொண்டவர் ஆசுவாசமாகத் திண்ணையில் அமர்ந்தார். முகத்தைத் துடைத்துக் கொண்டார். பக்கத்திலிருந்த தபால் கட்டிலிருந்து மேலாக இருந்த தபால் ஒன்றை உருவினார்.

“பெரியவன் பேருக்குத் தான்மா வந்திருக்கு. அரசாங்கக் கடுதாசி மாதிரி தான் இருக்கு. நல்ல சேதியாத் தான் இருக்கும். நல்ல விசயமா இருந்தா கண்டிப்பா சொல்லுங்க” என்றவர் கங்காவின் கையில் அந்தக் கடிதத்தைத் தந்து விட்டு, “ நான் வரேம்மா” என்று சொல்லி விட்டுத் திண்ணையிலிருந்து இறங்கி சைக்கிளைத் தள்ளிக் கொண்டு எதிர்ப்பக்கத் திருப்பத்தில் சென்று மறைந்தார்.

அந்தக் கடிதத்தையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு உள்ளே நுழைந்து கதவைச் சாத்தப் போன கங்கா சற்றே நின்றாள். கதவைத் திறந்து வைத்தாள். வெயில் கதவுச் சதுரத்தின் வழியே வீட்டுக்குள் ஊர்ந்து நுழைந்து நிறைவதைப் பார்த்து விட்டுத் திருப்தியுடன் புன்னகைத்துக் கொண்டாள்.

“எல்லாம் நல்ல சேதியாத் தான் இருக்கும்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு அந்தக் கடித உறையை சாமி அலமாரியில் கொண்டு வைத்தாள்.கண்கள் மூடி நின்றாள்.

—–

ராஜேந்திரன் உள்ளே நுழையும் சத்தம் கேட்டதுமே கங்கா பரபரப்பானாள். அவன் கண் பார்வையில் படுமிட்த்தில் வந்து நின்றாள். அவன் கை கால் முகம் கழுவி விட்டு வரும் வரை பரபரப்பை அடக்கிக் கொண்டிருந்தாள். ராஜேந்திரனும் இதை கவனிக்கத் தவறவில்லை. சற்றே ஆச்சரியமாய் இருந்தது. அம்மா சாதாரணமாய் இப்படிச் செய்பவளில்லை. அவள் நடையில் இருந்த மிக மெல்லிய துள்ளல் அவனுக்கு உற்சாகமூட்டுவதாய் இருந்தது.

அவள் எதிரில் வந்து நின்று “என்னம்மா” என்றான் புன்னகையுடன்.

இதற்காகவே காத்திருந்தவள், சட்டென்று ஓடிப் போய் சாமி அலமாரியில் இருந்த கடிதத்தை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள். அவன் புருவம் நெளித்து என்ன என்பது போல் அவளைப் பார்த்து விட்டு உறையைப் பிரிக்கத் துவங்கினான். கங்காவுக்கு உள்ளங்கைகள் வியர்த்து விட்டிருந்தன.

உறையைப் பிரித்துப் படித்தவன், மெல்லப் புன்னகைத்தான். அவன் வாயிலிருந்து வரப் போகும் வார்த்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கங்கா.

“அம்மா”

“சொல்லுப்பா”

“நாலு மாசம் முன்ன பேங்க் பரீட்சை எழுதியிருந்தேனே?”

“ஆமாம்ப்பா”

“போன மாசம் கூட இன்டர்வியூவுக்கு போயிருந்தேனே”

“ஞாபகம் இருக்கு சொல்லுப்பா”

“நேக்கு வேலை கிடைச்சுடுத்தும்மா”

அதை அவ்வளவு மென்மையாக்ச் சொன்னான். அந்த ஒலி அப்படியே காதில் பதிந்து போய் விட்டது.

என்ன பேசுவதென்று தெரியவில்லை. மெல்ல அவன் கன்னத்தைத் தொட்டாள். “உன் முயற்சி வீண் போகலைப்பா. பகவான் அனுக்கிரகம் பண்ணியுட்டார்.” என்றாள். கண்கள் மின்னின.

“வால்பாறைக்கும் மேல நடுவட்டத்துல போஸ்டிங் போட்டிருக்காம்மா. பதினஞ்சு நாள்ல ஜாயின் பண்ணிக்கணும்” என்றான்.

“பேஷா போயிட்டு வாப்பா. நன்னா போயிட்டு வா” என்றாள். பேசப் பேசவே குரல் தழுதழுத்தது.

——–

திண்ணையில் யோசனையாய் அமர்ந்திருந்தான் ராஜேந்திரன். கையில் புதிதாய் அன்று தபால்காரர் தந்து விட்டுப் போன கடிதம். கங்கா அவனுக்குத் தேவையானவைகளைப் பார்த்துப் பார்த்து பேக் செய்து கொண்டிருந்தாள். வியர்வையைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தவள் திண்ணையில் அமர்ந்திருந்த ராஜேந்திரனைப் பார்த்தாள்.

“என்னப்பா யோசனையா உக்காந்துண்டு இருக்கே?” என்றாள்.

பெருமூச்சொன்றை விடுவித்த ராஜேந்திரன், “ இதனாலதாம்மா” என்று கையில் இருக்கும் கடிதத்தைக் காட்டினான். புருவம் சுருக்கினாள் கங்கா. ராஜேந்திரன் தொடர்ந்தான். “ பேங்கு பரீட்சை எழுதினப்பவே இன்னொரு கவர்மென்ட் பரீட்சையும் எழுதியிருந்தேனோல்யோ? அதுல இப்போ வேலை கிடைச்சிருக்கும்மா. ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல கிடைச்சிருக்கு. அதான் என்ன பண்றதுன்னு கொழப்பமா இருக்கு” என்றான்.

சற்று நேரம் அமைதி நிலவியது. பின் கங்கா பேசினாள். “ ராஜேந்திரா..நான் ரொம்ப்ப் படிச்சவளில்லே. இருந்தாலும் நீ தப்பா நெனக்கலேன்னா என் மனசுல படற விஷயத்த நோக்கு சொல்றேன்” என்றாள்.

“சொல்லும்மா” என்றான் யோசனையுடன்.

“ரெவின்யூ டிபார்ட்மென்ட் நல்ல உத்யோகம் தான். நான் இல்லேங்கலே. இருந்தாலும் நாம எவ்வளவு தான் நல்லவாளா இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாவோ, இல்ல யாரொட தூண்டுதல் அல்லது வற்புறுத்தல் காரணமாவோ கை நீட்ட வேண்டிய சூழ்நிலை வரலாம். நான் கண்டிப்பா வரும்னு சொல்லல. அந்த மாதிரி சூழ்நிலை வரலாம்னு தான் சொல்றேன்.

தெரியாம கூட யாரோ ஒருத்தரோட பாவத்த நாம சம்பாதிச்சுண்டுடக் கூடாதுப்பா. அதனால…. நீ பேங்கு வேலைக்கே போறது உசிதம்னு நேக்கு படறது” என்று சொல்லி விட்டு அவன் கண்களை உற்றுப் பார்த்தாள்.

சில நிமிடங்கள் யோசனையில் ஆழ்ந்தவன், பின் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். “சரிம்மா. நீ சொல்றாப்ல நான் பேங்கு வேலையிலேயே ஜாயின் பண்ணிடறேன். நீ போய் பை தயார் பண்ணும்மா” என்றான்.

மனம் நிறைந்தவளாக அவனைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு நடையில் சிறு துள்ளலுடன் வீட்டுக்குள் நுழைந்தாள் கங்கா. கதவுச் சதுரம் வழி மங்கிய வெயில் அவள் தோளில் ஏறி விளையாடிக் கொண்டே அதுவும் வீட்டுக்குள் நுழைந்தது.