ஆனந்த யாழை

234

அக்கா, நானும் வரட்டுமா? மயிலிறகு எடுக்க

யாழிசைதேவியின் ஆள்காட்டி விரலைப் பிடித்தபடி பள்ளியை நோக்கி நடக்கும் பாரதி கேட்டான்.

வேண்டாம் தம்பி, அது ரொம்பத் தூரம். நான் மட்டும் போய் வரேன்.
பள்ளிக்கூடம் போ என்றாள். யாழிசை.

இருவரும்  பேசிக்கொண்டே பள்ளி வாசலில் வந்து நின்றனர். அங்கு நின்ற வடமாநில இளைஞனை கைக்காட்டி,

அக்கா ? ஐஸ் வாங்கி தா, என்றான்.பாரதி

கையில் காசு இல்லாதிருந்தது. யாழிசை தம்பியை ஐஸ் காரனிடம் அழைத்துச் சென்று அண்ணா?  உண்டியல் காசு வீட்ல வச்சுட்டு வந்திருக்கேன் நீங்க வரும்போது தரேன்.ஐஸ் குடுங்க அண்ணா, கைகளை நீட்டிய யாழிசையின் கைகளில்,  இரண்டு குச்சி ஐஸை கொடுத்தான். அவள் அதை சந்தோஷமாக வாங்கித் தம்பியிடம் கொடுத்தாள்.

அக்காக்கள் கடவுளால் மீட்டப்பட்ட ஆனந்த யாழையின் பாசராகம்.

உன் தம்பிக்கு  நீ இருக்க மாதிரி , எனக்கும் ஒரு அக்கா இருக்கா. உன்னைப் பார்க்கும் போது , என் அக்கா  ஞாபகம் வருது பாப்பா.

ஐஸ்காரர் , ஹிந்தியில் சொல்வது புரியாமல் வேறு பக்கங்களில் பார்த்துக் கொண்டே நடையைக் கட்டினாள் , யாழிசை. .

அக்கா மயிலிறகு வேணும்?  கதைகளின் இடையே கேட்ட தம்பிக்கு,  மயிலிறகு தூரமா போனாதான் கிடைக்கும் தம்பி.!

அப்பாவை ஒருநாள் எடுத்து வரச் சொல்றேன் . . கதையைத் தொடர்ந்தவளை,  மீண்டும் வழி மறித்தான் பாரதி.

அக்கா எனக்கு நாளைக்கே வேணும் கொண்டு வரியா??

சரி தூங்கு கொண்டு வரேன். என்றாள்.

யாழிசை தான் மூத்தப் பெண் . அப்பா பழனியப்பன், அம்மா  வள்ளி. இருவரும் கூலி வேலைக்குப் போவார்கள்.  பாரதி பிறந்து ஆறு மாதக் குழந்தையாய் இருக்கும் போது யாழிசையின் கைகளில் கொடுத்து விட்டுப் போனார்கள்.

” யாழிசைக்குப் படிப்பு நான்காம் வகுப்போடு முடிவுக்கு வந்தது.”

பசும்பாலை நன்றாகக் காய்ச்சி குண்டானில் மூடி வைத்தார்கள்.
அப்பாவுடைய அரசாங்க வேட்டியை எட்டாகக் கிழித்து, அப்பப்போ துணி மாத்தனும். அழுதா , குண்டானில் உள்ள பாலைக் கொடுக்கனும். இதுதான் , யாழிசைக்குக் கொடுக்கப்பட்ட வேலை. ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைக் குழந்தையாய்க் கவனித்தது.

நாள் முழுவதும் தம்பிக்காகவே வாழ்ந்தாள்,தம்பியைப் பார்த்துக் கொள்ளத்தான் நாம் பிறந்ததாய் நினைத்துக் கொண்டாள்.

பாரதியை அம்மா புடவையில் கட்டியத் தொட்டிலில் கிடத்தினாள். வீறிட்டு அழுவான். யாழிசை தூக்கி மடியில் வைத்துத் தாலாட்டுப் பாடுவாள்.

உடனே  குழந்தை அழுவதை நிறுத்துவான். குழந்தைக்கு அக்கா யாழிசையின்  பாசமும், வாசமும் பழகிப் போய் விட்டது.

தம்பியைத் தூங்க வைக்க ஏதாவது ஒரு பாடலை தான் அறியாத மழலை மொழியில் பாடுவாள்.
பின்னாளில் அந்தக் கிராமத்தில் பொங்கல் விழா போட்டியின் போது பாடல் பாடி பரிசு பெறும் அளவுக்குக் கற்றுக் கொண்டாள்.

அவளே ஒரு கற்பனையானக் கதைகளை உருவாக்கித் தன் தம்பிக்குச் சொல்வாள்.
கதையில் ராஜாவாய் தன் தம்பியை கற்பனை செய்துக் கொள்வாள்.

தம்பி அக்கா விரலைக் கடி. ,தனது ஆள்காட்டி விரலை பாரதியின் வாயில் வைப்பாள் .
கடித்தால் வலிக்கும் என்று தெரியாதக்  குழந்தை பாரதி,  கடிப்பான்.

அவளுக்கும் வலிக்கும். கடித்த வலியை விட தம்பிக்கு பல் முளைத்தது தான் யாழிசைக்கு சந்தோஷமா இருக்கும்.
தன் தம்பியை நடுவில் அமரவைத்து தோழிகளுடன் விளையாடி மகிழ்வாள்.

இப்படி பாசமான அக்காவைத் தன் தாயென்று நம்பி வளர்ந்தான்,  பாரதி.

இரவு சொன்ன கற்பனைக் கதையில் மயிலிறகில் ஆடை  அணிந்த ராஜா வந்தார்., ,
அதிலிருந்து மயிலிறகு வேணும்!! என்று அடம் பிடித்தத் தம்பியைப் பள்ளியில் இறக்கி விட்டு. அக்கா மயிலிறகு எடுக்கப் போவதை அம்மா, அப்பாவிடம் சொல்லக் கூடாதுன்னு தம்பியிடம் சொல்லிவிட்டு ,  மயிலிறகு எடுக்கப் புறப்பட்டாள் ,  யாழிசைதேவி.

அந்தப் பசுமையானக் கிராமத்தில்,  மயில்கள் அவ்வப்போது தெண்படுவதுண்டு.

ஆனால் மயிலிறகு ,அங்கு மயில் கூட்டம்  தங்கும் இடத்தில் தான் உதிர்ந்துக் கிடக்கும் என்று தோழிகள் சொன்னார்கள்.

மழை மேகம் திறண்டு நின்றது. லேசாகத் தூரியத் தூரலை பெருட்படுத்தாமல், ஊர் மேற்கில் நீண்டு செல்லும் அந்தச் சாலையில் வேகமாக நடந்து சென்றாள்.

பக்கத்து ஊர்த் திருவிழாவிற்கு அம்மா இவ்வழியாகத் தான் பொடிநடையாக ஒருமுறை அழைத்துப்  போனாள்.
அதற்குப் பிறகு இந்த வழியாக இப்போது தான் பயணிக்கிறாள்,  யாழிசை..

வயல்வெளியைக் கடந்து தென்னந்தோப்பு,வாழைத்தோட்டம்  பெரும் காட்டு ஆற்றைக் கடந்து ஆட்கள் ஆரவாரமில்லாத புதர் மண்டிய கோயில் பகுதிக்கு வந்துச் சேர்ந்தாள்.

ஓங்கி வளர்ந்த அந்த முட்புதருக்கு நடுவில்  விழுதுகளைத் தன் உடலில் சுற்றிய ஆலமரம் ஒன்று அகோரமாய்க் காட்சியளித்தது.

ஆலமரத்துக்கு அடியில் கருஞ்செங்கற்களால் ஆன  சிறு கோவில் கவனிப்பாரற்று இருந்தது.

சமீபத்தில் யாரோ பூஜை செய்திருப்பார்கள் போல. !
பூக்கள் உதிர்ந்த மாலை,  தரையில் குங்குமமும், விபூதியும் சிந்தியிருந்தது.

பன்னிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் திருவிழா நடக்குமாம்.

நம்ம சாதிக்காரங்க , அந்தக் கோயில் பக்கத்துலப் போனால்,  இரத்தம் கக்கிச் சாவாங்கனு யாழிசை கேள்விபட்டது! நினைவுக்கு வந்ததும் பயம் தொற்றிக் கொண்டது.

கிளிகள்,சிட்டு குருவிகள், குயில் இவைகளின் சத்தங்களுக்கிடையில்,  விசித்திர பறவைகளின் சத்தங்கள்!!
யாழிசைக்குப் பயத்தை அதிகப்படுத்தியது.

இப்போது தூரல் நின்றாலும், குளிர்ந்தக் காற்று அவள் தேகத்தை நடுங்க வைத்தது.
அவள் மயில்களின் காலடித்  தடத்தை நோக்கி நடந்தாள்.

ஒரு கைப்பிடி அளவு மயிலிறகு சேகரித்திருந்தாள் யாழிசை.
அப்போது தான் அவள் முகத்தில் பயம் போய் சந்தோஷம் தெண்பட்டது.

தம்பியை நினைத்துக் கொண்டு  வீடு நோக்கி நடக்கத் துவங்கினாள். ஏதோ ஒரு பாடலை முனுமுனுத்தப்படி மயிலிறகை காற்றில் வீசியபடி தனிமையில்  அந்த ஒத்தையடிப் பாதையில் நடந்தாள். . .

இளநீரில் சாராயம் கலந்துக் குடிக்கிறது,  நல்லாத்தான் இருக்கு பங்காளி.
போதை மசமசனு நாள் பூராவும் மண்டையில நிக்குது. சாயங்காலமா நாலு பாக்கெட் சாராயம் வாங்கிட்டு இங்க வந்துரு பங்காளி,  அரைப் போதையில்  குடித்து கொண்டிருந்த இருவரிடம் கூறினான் மோகன்.

யாருப்பா அது…….??

வெளியோரம் போய்க்கொண்டிருந்த யாழிசையைப் பார்த்துக் கத்தினான்.

அவள் நடையை வேகப்படுத்தினாள். யாரும் இல்லாத அந்த இடத்தில் அவர்களுக்கு நின்று பதில் சொல்லத் தோனவில்லை யாழிசைக்கு..

பழனியப்பன் மகளா நீ.?  உங்க அப்பன் எங்கத் தோப்புல தான் வேலைப் பாக்குறான். இரு அவங்கிட்ட சொல்லிடுறேன். என்று  ஒருவன் குரல் கொடுத்ததும் ,அவள் அப்பாவிடம் சொன்னால்,  அப்பா அடிப்பாரே என்று அவள் நின்று திரும்பிப் பார்த்தாள். நடக்கப் போகும் விபரீதம் புரியாதவளாய்.

மயிலிறகை இருகப் பிடித்தபடி அவர்கள் அருகில் வந்தாள்.

என்ன?  மயிலிறகு எடுக்க வந்தியா.?  ஒருவன் பல்லை இளித்துக் கொண்டு அவளை மேலும் கீழும் பார்த்தான். பதின்மூன்று வயதுச் சிறுமி. அவளது அங்கங்கள் இப்போதுதான் பெண்ணாய் உருபெறத் துவங்கியது. இளநீரை வாங்கிக் குடிக்கப் போன ஒருவன் அவளைத் தவறாகத்  தீண்டினான்.  யாழிசைக்கு உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததுப் போல் ஆனது. இளநீரைத்  தரையில் போட்டுவிட்டு,  ஓட்டம் பிடித்தவளை மூவரும் துரத்தி ஓடினார்கள்.

சிறிது தூரம் ஓடியவள் வெட்டிக் கிடந்த தெண்ணை மட்டைகளில் கால் தடுக்கி தரையில் விழுந்தாள். மூச்சிரைக்க ஓடிவந்தவர்கள் அவளைச் சூழ்ந்துக் கொண்டனர்.

ஆட்கள் ஆரவாரம் இல்லாத அந்த இடத்தில் யாழிசையின் காப்பாத்துங்க காப்பாத்துங்க கூக்குரல் மட்டும் விண்ணைப் பிளந்தது. தண்ணீர் இரைக்கும் அந்த மோட்டார் கொட்டகையில்.  கசங்கியக் காகிதம் போல் மயங்கிக் கிடந்தாள் யாழிசை.

மூவரும் காமம் தீர்த்தப் பின் மெல்லப் போதை தெளிந்தது.

பங்காளி என்னடா ????? இப்படியாச்சே

இப்போ என்னடா பன்றது.??

தலையைச் சொரிந்தான் ஒருவன்.
எனக்கு பயமா இருக்குடா என்றான் இனனொருவன்.

யாழிசையின் உடலில் உயிர் சோதித்தான் ஒருவன்.
அவர்களுக்கு விபரீதம் புரிந்தது.

பயம் தொற்றிக் கொண்டது. மூவருக்கும் இருபத்தாறு வயதுக்குள் தான் இருக்கும்.

ஏய் உயிர் இருக்குடா. !!!!!!!

இவளை இப்படியே விட்டால்,  நம்மளக் காட்டி கொடுத்துடுவாள்.
என்ன பண்ணலாம் ?

அடுத்த கொடூரத்துக்கு வித்திட்டான் ஒருவன்.

நாம அவசரபட்டால் மாட்டிக்குவோம் அண்ணன் குருவை கூப்பிடுவோம்.

அவன் வந்தால்,  ஏதாவது ஐடியா கொடுப்பான். மோகனின் அண்ணன் குரு கட்சிக்கரை வேட்டி வெள்ளைச் சட்டை சகிதம் பதட்டப்படாமல் புல்லட்டில் வந்து இறங்கினான்.

ஏன்டா தேர்தல் நேரத்தில இப்படியெல்லாம் . ???

அவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பைக் குருவிடம் கொடுத்து விட்டு,அவர்கள் பயந்தபடி சாதுவாய்  தென்னை மரத்தில் கை வைத்துக்கொண்டு  நின்றிருந்தனர்.
குரு , கைபேசியை எடுத்து அவனது உறவுக்கார காவலர் ஒருவருக்கு தொடர்பு கொண்டான்.

நம்ம பசங்க தான்.  கொஞ்சம் அவசர பட்டாங்க. என்று தொடங்கி

அந்தப் பொண்ணு வேற……. என்று தொடர்ந்து.

உயிர் இருக்கு  இன்னும் சாகல………..

சரி …..சரி……அப்படியே பன்றேன்.

காவலரிடம் பேசி முடித்தவனை மூவரும் புரியாதவர்களாய்ப் பார்த்தார்கள்.

யாழிசை மெதுவாகக் கால்களை அசைத்தாள்.
அவள் இமைக்குள் கண்கள் உருண்டது.

இமைகளைத் திறக்க முயற்சித்தவளின் அருகில் சுவரில் மாட்டியிருந்த மண்வெட்டியோடு நெருங்கினான் கரைவேட்டிக் கட்டிய குரு தினமும் மாலை பள்ளி வாசல் வந்து அழைத்துப் போகும் அக்கா,  இன்று வரவில்லையே?

வீட்டில் மயிலிறகோடு காத்திருப்பாள் போல.. நினைத்துக்கொண்டு , ஆவலாய் வீடு நோக்கி நடந்தான் பாரதி.

அம்மாவும் அப்பாவும் அப்போது தான் யாழிசையைத் தேடியக் களைப்பில் அமர்ந்திருந்தனர்.

எங்க போயிருப்பாள்??

வந்துடுவாள். . கவலைப்படாதீங்க.

ஆறுதல் சொல்லியபடி ஊர்க்காரர்கள் சிலர் வாசலில் நின்றிருந்தனர்.

பாரதி காலையில ,உன்னைப் பள்ளிக்கூடத்துல விட்டு வந்ததிலிருந்து, அக்காவைக் காணும்.

எங்கப் போரேனு உங்கிட்டச் சொன்னாளா ??

ஆவலாய் வந்தவனிடம் அவசரமாய் வழிமறித்துக் கேட்டார் அப்பா.

மேலும், கீழும் முழித்தான் பாரதி.

இல்லப்பா எங்கிட்ட ஒன்னும் சொல்லலப்பா.  அவன் பேசுவது பொய் என்று பாரதியின் கண்கள் காட்டிக் கொடுத்தது.

எல்லாத்தையும் அக்காவிடமிருந்து கற்றான் ஆனால், பொய்ச் சொல்ல அவள் கற்றுத்தரவில்லை.

உண்மையைச் சொல்றியா? இல்லையா?. அப்பா மிரட்டினார்.

அக்கா…….அக்கா எனக்கு மயிலிறகு எடுக்கப் போனாங்க  காலையில.

அப்பாவின் மிரட்டலில் கண்கள் கழங்கிப் போய்ச் சொன்னான்.. . . .

அப்பா, அக்காவ அடிக்கப் போறாரு. அக்கா என்ன மன்னிச்சிடு. மனதில் நினைத்தான் பாரதி.

காலையில போன எம்புள்ளைக்கு என்னாச்சி தெறியலையே. அவ்வளவு தூரம் எம் புள்ள தனியாப் போயிருக்கு.

அப்பா வேட்டிய மடிச்சிக் கட்டிக்கிட்டுத் தெருவில் இறங்கி ஓடினார். அவரை தொடர்ந்து , வள்ளியும், ஊர்க்காரர்கள் சிலரும் ஓட,  பாரதியும் பின் தொடர்ந்து ஓடினான்.

மயிலிறகு கிடைக்கும் இடம்,  தென்னந்தோப்பு, வாழை தோட்டம், ஒத்தையடிப் பாதை, என எல்லா இடத்திலும் யாழிசையைத் தேடிக் களைத்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அக்கா இனிமே மயிலிறகு கேட்க மாட்டேன். நீ திரும்பி வந்துருக்கா. என்று நினைத்து கொண்டு வந்தவனுக்கு,  காட்டாற்று கரையோரம் ஏதோ தெண்பட்டது.

அவன் நின்று வெறிக்கப் பார்த்தான், அவனைப் பார்த்த ஊர்க்காரர்களும், அம்மா, அப்பா அனைவரும் அவன் பார்க்கும் திசை நோக்கிப் பார்த்தனர்.

அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துப் போய் நின்றனர்.

ஆடைகள் கிழிந்துத் தலையில் பலத்தக் காயம் பட்டு இரத்தம் வடிய, இறந்த நிலையில் கரையோரம் கிடந்த யாழிசையைப் பார்த்ததும்.

“என் தங்க மகளே உனக்கு என்னடி ஆச்சு” ???!

நெஞ்சில் அடித்துக் கொண்டு தரையில் மயங்கிச் சரிந்தாள் , யாழிசையின் அம்மா.

“அப்பா முட்புதருக்குள் குதித்து யாழிசையின் உடலை மடியில் கிடத்திச் சத்தம் போட்டு அழுதார்.”

உடல் முழுவதும்  காயம் , தலையில் பலத்த காயம், வழிந்த இரத்தம் இன்னும் காயவில்லை.

  ‘அவள் கைககளில் கொத்தாய் மயிலிறகை கெட்டியாகப் பிடித்திருந்தாள்.’
இது நம்ம அக்கா இல்ல. அப்பா மாரில் அடித்துக் கொண்டு அழுதான் .

தம்பி உன்னோட அக்காவப் பாருடா. எந்த பாவிப் பய எம்புள்ளைய இந்தக் கதி பண்ணிணானோ.??

அடித்து அழும் அப்பா அருகில் வந்து கண்கள் கலங்கத்  தனது தேவதையான அக்காவின் அருகில் அமர்ந்தான் பாரதி. யாழிசையின் கைப்பிடிக்குள் இருந்த மயிலிறகு கொத்தாய் பாரதியின் மடியில் விழுந்தது.

“அப்போது தான் யாழிசையின் உயிர் உடலை விட்டு பிரிந்தது போல″…..

“அக்கா இல்லாத விடியல்”,   இரவு முழுவதும் அக்கா? அக்கா ? என்று ஏங்கி அழுது மேலத்திண்ணையோரம் சுருண்டுக் கிடந்த பாரதி, ஏதோ கூக்குரல் கேட்டுக். கண்விழித்து  எழுந்தான்.

நேத்து யாழிசையைக் கொலை செய்த, மகாபாதகன் மாட்டிக் கொண்டானாம். போலிஸ் பிடிச்சிட்டாங்களாம் . கத்திக் கொண்டே ஒருவன் ஓடினான்.

எம்புள்ளைய இந்தக் கதிக்கு ஆளாக்குன அந்த  சனியன் கெடச்சிட்டானா?   அவனை என் கையால அடிச்சிக் கொல்லனும் , வாசலில் கிடந்த தொடப்பத்தை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடச் சாலையை நோக்கி ஓடினாள் யாழிசையின் அம்மா., .

பள்ளிக்கூட வாசலில் ஒரே கூட்டமாகக் கூடி நின்றனர். ஐஸ் பெட்டியுடன் சைக்கிள் தரையில் விழுந்து, ஐஸ் விற்கும் அந்த வடமாநில இளைஞனைக் கட்சி வேட்டிக் கட்டியிருந்த குரு கயிரைக் கொண்டு கைககளை பின்புறம் கட்ட,  குருவின் உறவினர் போலிஸ்காரன் சண்முகம்  அவனது சட்டையைப் பிடித்துப் போலிஸ் வேனில் ஏற்ற முயற்சித்துக் கொண்டிருந்தான்.

சந்தேகத்துக்கு இடமான வகையில்  சுற்றிக் கொண்டிருந்த வடமாநில இளைஞனைப்  பிடித்து விசாரித்ததில்,  தான் தான் யாழிசையைக் கற்பழித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். காவல் துறை சொன்னதை நம்பி கூட்டத்தை விலக்கி வந்த யாழிசையின் அம்மா தன் ஆத்திரம் தீர அந்த வடமாநில இளைஞனைத் துடைப்பத்தால் அடித்தாள்.

அம்மா எனக்கு ஒன்றும் தெரியாது. என்னை அடிக்காதீங்க. இந்தப் போலிஸ்காரங்க என்னை மாட்டி விட்டாங்க என்று இந்தியில் கத்தினான் முகம் முழுவதும் இரத்தம் வலிந்தபடி.

அவன் கத்துவதை யாரும் காதில் வாங்க வில்லை.  ஏன் என்றால் அங்கு யாருக்குமே பாழாய்ப்போன ஹிந்தி தெறியாது.

– எம்.கலைக் கூத்தாடி