அகம் பாப்கார்ன் – ஹே ராம்-1

653

ஹேராம் படத்தில் ஒரு வசனம் வரும் “இவர் சொன்ன எல்லா கதையுமே First person singular தான் தெரியுமோ? ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தான்னு சொல்ல மாட்டார். நான் இருந்த ஊர்ல ஒரு ராஜா இருந்தான்னு சொல்வார்”.

ஒரு 5 நிமிட ஓப்பனிங் பாடலில் சொல்ல வேண்டிய விஷயத்தை ஒன்றிரண்டு வார்த்தைகளில் சாகேத் ராம் கேரக்டர் குறித்த கருத்தினை சொல்லி விடுகிறார். பெரும்பாலும் டிஸ்கஷனில் “அத அப்படியே டயலாக்ல சொல்லிட்டு போயிடலாங்க… பட்ஜெட் இல்ல” என்று வசனங்களை ஒரு காட்சிக்கு மாற்றாக தான் பார்ப்பார்கள். ஆனால் கமல் படத்தில் வசனங்கள் அவ்வாறு இருக்காது. அது கதையை நகர்த்திச் செல்லும் ஒரு காரணியாக இருக்கும்.

கமல்ஹாசன் எடுக்கும் திரைப்படங்கள் சில வருடங்கள் கழித்து தான் புரியும் என்று அவர் மீது எப்போதும் ஒரு பகடியான விமர்சனம் உண்டு. அதற்கு காரணம் அவர் ரசிகர்களின் ரசிப்புத்தன்மையின் மீதுள்ள அபாரமான நம்பிக்கை. ஒரு ரசிகனை தன்னுடைய வாக்கு வங்கியாக நினைக்கும் நடிகர்களுக்கிடையே தன் ரசிகனை நேசிக்கும் ஒரு கலைஞனால் மட்டுமே இப்படியான படைப்புகளை தர முடியும். ஹேராம் அப்படியான ஒரு படைப்பு.

அப்படியென்ன ஹேராமில் இருக்கிறது? சினிமா என்பது திரைமொழி. அதனை வசவசவென வெறும் வசனங்களால் மட்டுமே நிரப்பி முந்தைய தலைமுறை இயக்குனர்கள் வெற்றி கண்டு விட்டனர். கமலுக்கு அந்த format மீது அதிருப்தி இருந்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் தான் மணிரத்னம் வந்தார். தமிழ் சினிமாவில் இன்றுவரை ஒரு trend setting biopic film என்றால் அது நாயகன் தான். It was a director’s film completely. நாயகன் மக்களிடம் பெற்ற அங்கீகாரமும் வரவேற்பும் தான் கமலை அடுத்தடுத்த சோதனை முயற்சிகளில் ஈடுபட உந்தியிருக்கலாம்.

அது முதல் அவர் தான் பயின்ற திரைக்கதை நுணுக்கங்கள் அனைத்தையும் ஒருசேரப் பயன்படுத்தியது ஹேராம் திரைப்படத்தில் தான்.

ஒரு காட்சியானது பார்வையாளனுக்கு புரிந்து அதனுள் ஈர்க்கப்பட்டு அவன் அதை ரசிப்பது தான் திரைக்கதையின் வெற்றி. அது ஹேராமில் மிகச் சரியாக கையாளப்பட்டது. சப் டைட்டில் வராத காலங்களில் வெளியான ஆங்கில திரைப்படங்களை பார்த்து தானாக ஒரு கதையை கற்பனை செய்து கொண்டவர்கள் எல்லாம் ஹேராம் படம் புரியவில்லை என்று சொன்னது தான் ஆகச் சிறந்த நகைச்சுவை. அவ்வளவு தான் அன்றிருந்த ரசனை முதிர்ச்சி. கமல் சறுக்கியது இங்கே தான். இன்று இணையத்தில் Pianist, Schindlers list, Saving Private Ryan படத்தைப் பற்றி பேசும் விமர்சகர்கள்/ஆர்வலர்கள் ஹேராமை கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஏன்? இந்த படங்களுக்கு ஹேராம் எந்த வகையில் குறைந்தது?

1946 ஆம் ஆண்டு நடந்த இந்து முஸ்லீம் கலவரத்தை வெளிப்படையாக காட்டியதோடு மட்டுமல்லாமல் அதன் பிண்ணனியில் இருந்த இந்துத்வா அரசியலை தைரியமாக போட்டுடைத்தது. அப்போது மத்திய சர்க்காரில் இருந்தது பாரதிய ஜனதா கட்சி.

சரி இனி ஹேராம் பற்றி பார்ப்போம்.

ரகுபதி ராகவ ராஜா ராம் என்று கமலின் உரத்த குரலோடு தொடங்குகிறது படம். அதுவரை நாம் ரகுபதி ராகவ ராஜா ராமை நாம் கேட்ட வடிவம் வேறு. அதிலிருந்தே படத்தின் Mood setting தொடங்குகிறது. அடர்ந்த இருட்டில் தொடங்கும் படம் மெல்லிய வெளிச்சத்திற்கு வருகிறது. அப்போது டாக்டருக்கும் பேரன் ராமுக்குமான உரையாடலில் சாகேத் ராம் குறித்த பல விஷயங்கள் சொல்லப்படுகிறது.

உதாரணமாக,  “எங்க தாத்தாவுக்கு வெளிச்சமே பிடிக்காது”

“ மகாத்மா தூங்கும் போது கூட லைட் போட்டு தான் தூங்குவார்”. இந்த வசனத்திலேயே அந்த கதாபாத்திரத்தின் முரணை புரிய வைக்கிறார்.

இறக்கும் தருவாயில் உள்ள ஒரு மனிதனின் முகத்தின் மீது ஒரு மண்டை ஓடு juxtapose செய்யப்பட்டு கருப்பு வெள்ளையில் இருந்து வண்ணத்திற்கு மாறி மெல்லக் கதை 1946க்கு செல்கிறது. மொஹஞ்சதாரோ ஹரப்பா நாகரீகத்தின் மிச்சங்களை அகழ்வாராய்ந்து கொண்டிருக்கிறார்கள் அம்ஜத்தும் (ஷாரூக் கான்) ராமும் (கமல்ஹாசன்). அந்த காட்சியின் தொடக்கம் முதல் இறுதி வரை அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடலை கவனித்தோமேயானால் பிரிவினைக்கு முன்பிருந்த மக்களின் மனநிலை எளிதாகப் புரியும். இப்படியும் இருந்திருக்கலாமோ என்று தோன்றும்.

அவர்களுடைய அதிகாரி வீலர் ராமிடம் உடனே இந்த இடத்தை விட்டு நாம் செல்ல வேண்டும். இனக்கலவரம் வலுப்பெற வாய்ப்பிருக்கிறது என்று கூறுவார். அப்போது அம்ஜத் கோபமடைந்து, “Christ பொறக்கறதுக்கு பல ஆயிரம் வருஷம் முன்னால sewage system வேணும்னு நெனச்ச civilization. குழந்தைங்க விளையாட பொம்மைங்க வேணும்னு நெனச்ச civilization. நம்மள மாதிரி பெரியவங்க விளையாட ஆளுக்கொரு சாமி வேணும்னு நெனச்ச civilization இல்ல”. இதிலிருந்து நம் மீது என்ன மாதிரியான கலாச்சார வன்முறை நடந்திருக்கிறது என்பதை உணரலாம். இதை நாங்கள் பாடப் புத்தகத்திலேயே படித்திருக்கிறோம். இதை கமல் சொல்ல வேண்டுமா? என்றால் எதையும் ஒரு கதாப்பாத்திரம் மூலமாக சரியான நேரத்தில் சரியான விஷயத்தை சொன்னால் அது மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் அதிர்வுகள் வேறு. இது தான் கமலின் பலம்.

பெரிய பெரிய விஷயங்களை கூட எளிமையாக புரியவைத்து விட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடுவார்.

அதனால் இந்த படத்தில் வசனம் மட்டும் தானா என்று யோசிக்க வேண்டாம்… வசனமே இல்லாமல் காட்சிக் குறியீடுகள் மூலம் பல விஷயங்களை இந்த படத்தில் உணர்த்தியிருப்பார். அதை அடுத்த வார தொடர்களில் பார்ப்போம்.

பாலாஜி பாலசுப்பிரமணியன்