அகம் பாப்கார்ன் – ஹே ராம்-2

354
Hey-Ram-Movie-Review

வரலாறு சில நேரங்களில் நேரடியாக சொல்லப்பட்டால் நமக்கு சுவாரசியம் இருப்பதில்லை. அதில் சில புனைவு கலந்து சொல்லப்படும் போது அது நமக்கு புரிகிறது. உதாரணத்திற்கு Saving Private Ryan. இரண்டாம் உலகப் போரின் நிகழ்வுகளை அழகாக ஒரு கிளைக்கதையுடன் சொல்லிய படம். Normandy Invasion குறித்து அதற்கு பிறகு நிறைய பேர் அறிந்து கொண்டார்கள். அது போல தான் ஹேராமிலும் கமல்ஹாசன் உண்மைக்கு மிக அருகில் செல்வது போன்ற திரைக்கதை அமைத்திருப்பார்.

மொஹஞ்ஜதாரோவிலிருந்து புறப்பட்ட ராமும் அம்ஜத்தும் கராச்சி வந்தடைகிறார்கள். அன்று மாலை Archaeological Society of Indiaவின் Recreational Clubல் நடக்கும் விருந்தில் அனைவரும் பங்கேற்கின்றனர். அம்ஜத் தன் மனைவி குழந்தைகளுடன் காரில் வருகிறான்.  அவர்களை இறக்கி விட்ட அம்ஜத்தின் தந்தை அவர்களை சீக்கிரம் வீடு திரும்புமாறு சொல்லிவிட்டுச் செல்கிறார். பிரிவினையால் பெரியதொரு மதக்கலவரத்தினை எதிர்பார்த்து பயந்து தான் வீலர் அவர்களை மொஹஞ்ஜதாரோவிலிருந்து வெளியேறச் சொன்னார். ஆனால் அந்த பயத்தின் சுவடு அங்கு எங்குமே தென்படவில்லை. மது, இசை என அந்த சூழலே வேறு மாதிரி இருக்கும். எதையும் பொருட்படுத்தாமல் ஆங்கிலேயர்கள் எத்தகைய வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அந்த காட்சி துல்லியமாகக் காட்டும். பிரிவினை குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கருத்து இருப்பதை அங்கு வீலர் – அம்ஜத் – ராம் இடையிலேயான உரையாடலில் தெரிந்து கொள்ளலாம்.

amjath ram wheeler convo

“To India… “  என வீலரும் அம்ஜத்தும் சொல்லும்போது “அது சரி இப்படி To India ன்னு கிளாஸ மோதிண்டா போதுமா? எந்த இந்தியா முழுசா? பாதியா?” என ராம் கேட்க வீலர் ராமிடம் பிரிவினை குறித்த கருத்து கேட்க “I want a single country” என்று பதிலளிக்கிறார். அம்ஜத் பாகிஸ்தான் கேட்பதாக சொல்ல அம்ஜத் அவசரமாக “ No way sir.. they want  to impose sharia and அதுக்கப்புறம் நான் குடிக்க முடியாது.. No large Pakistan… large rum is OK for me” என்று பதிலளிக்கிறான்.

இவர்கள் உரையாடலின் இடையே இவர்களின் சிந்தி நண்பர் லால்வானி தன் குடும்பத்தோடு வருகிறார். அம்ஜத்தும் லால்வானியும் ஒருவரையொருவர் கிண்டலடித்துப் பேசிக் கொள்வதிலிருந்து அவர்களிடையே உள்ள நெருக்கம் தெரிகிறது. ராம் தான் கல்கத்தா செல்லவிருப்பதாக சொல்ல அப்போது அம்ஜத்தின் மனைவி நஃபீசா ராக்கி கட்ட அவளும் கல்கத்தா வர வேண்டுமோ? என்று கேட்கிறாள். இதன் மூலம் அம்ஜத் ராம் இடையே நட்பு என்பதை தாண்டி அண்ணன் தம்பி உறவு இருப்பது தெரிகிறது. இதில் ராம் என்பது இந்து சமுதாயத்தின் பிரிதிநிதியாகவும் அம்ஜத்தை முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாகவும் பார்க்கலாம். அப்போது அவர்களிடையே communal harmony நிலவியிருக்க வேண்டும். அது எவ்வாறு பல்வேறு கட்டங்களில் சிதைகிறது என்பது படத்தின் பிற பகுதிகளில் பார்ப்போம். அப்போது அங்கு தள்ளாடியபடி வரும் ஆங்கிலேய அதிகாரி Bright “ I always wonder how Amjad and Lalwani can speak in a Dravidian language” என்று கேட்க அதற்கு அம்ஜத் “Same Alma Mater” என்பார். அதற்கு இவர்கள் அனைவரும் மதராஸில் ஒன்றாக கல்லூரியில் படித்தவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். ஒரே தாய் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

ராமிற்கு தொலைபேசி அழைப்பு வந்திருப்பதாக சிப்பந்தி சொல்ல ராம் அங்கிருந்து நகர்கிறார். ராம் கல்கத்தாவிலிருந்து அழைத்த தனது காதல் மனைவியிடம் கொஞ்சிப் பேசிக் கொண்டிருப்பதை அம்ஜத்தும் லால்வானியும் ஒட்டுக் கேட்க அதனை ராம் கண்டுக் கொள்ளும் போது அம்ஜத் ராமிடமிருந்து ஃபோனை பிடுங்கி இங்கு ராமிற்கு முதல் மனைவி இருப்பதாகவும் அவளை பணம் கொடுத்து அனுப்பி விட்டதாகவும் பொய் சொல்ல, அதனை லால்வானி தொடர, மீண்டும் அம்ஜத் ஃபோனை பிடுங்கி வைத்து விடுகிறார். ராம் கோபமாக இருவரையும் திட்ட இருவரும் வலுக்கட்டாயமாக ராமின் வாயில் மதுவை ஊற்றுகின்றனர். அதனை தொடர்ந்து அங்கு ராம் பியானோ இசைக்க “ராமர் ஆனாலும்… பாபர் ஆனாலும்” பாடல் கொண்டாட்டம் தொடங்குகிறது. இங்கு தான் படத்தில் பியானோ முதன் முறையாக காட்டப்படுகிறது. இதன் பின்னர் பியானோவின் ஊடாக ராமின் வாழ்க்கை பல இடங்களில் குறியீடாக காட்டப்படும்.

ஆகஸ்ட் 16, 1946. இந்திய வரலாற்றில் “Jinnah’s Direct Action Day” என்று குறிப்பிடப்பட்ட நாள். ஏராளமான இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் வெட்டிச் சாய்த்துக் கொண்ட நாள். பிரிட்டிஷ் சர்க்கார் இந்தியாவிற்கு சுதந்திரம் அளிப்பது குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்த காலகட்டம். பிரிட்டிஷாரிடம் இருந்து அதிகாரம் காங்கிரஸ் கைக்கு மாற்றப்பட்டால் பெருவாரியாக வாழும் இந்துக்களால் தங்களுக்கு ஆபத்து நேரலாம் என்று ஜின்னா கருதியதாகவும் அதன் பொருட்டு தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்த ஒரு போராட்டத்தை அன்று நடத்த முடிவு செய்ததாகவும் வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. இந்த போராட்டம் கலவரமாக மாறும் என்பதனை யூகித்த அப்போதைய முஸ்லிம் லீக் முதலமைச்சர் சுஹ்ராவாடி அன்று பொது விடுமுறை அறிவிக்கச் செய்தார். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாறியதற்கான ஆரம்ப விதை இங்கு தான் விதைக்கப்பட்டது.

capital watch co

இந்த காட்சியின் தொடக்கத்தில் “Capital Watch Company” என்று ஒரு பலகை காட்டப்படும். அதனை தொடர்ந்து சாலையெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். இதனை தலைநகரம் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தது என்றும் இயக்குனர் கமல்ஹாசன் சொல்கிறார். இதை நான் 2014ல் ஹேராம் பதிவுகள் எழுதிய போது நண்பர் PV Malai சுட்டிக் காட்டினார்.

ரயில் நிலையத்திலிருந்து வரும் ராம் வழியெங்கும் நடக்கும் போராட்டத்தை பார்த்தவாறே வருகிறார். அப்போது அவர் இந்து என்று தெரிந்து, அவருடைய கார் மறிக்கப்பட அப்போது ஒருவன் ராமை அடையாளம் கண்டு கொண்டு சலாம் சொல்கிறான். ராமும் அவனை அல்டாஃப் டெய்லர் என அடையாளம் கண்டு கொள்ள என்ன நடக்கிறது என்று கேட்க அவன் பதில் சொல்வதற்குள் காரின் கண்ணாடி மீது ஏதோ வீசப்படுகிறது. அல்டாஃப் வண்டியை நகரச் சொல்லிவிட்டு பின் கண்ணாடியில் முட்டையை எறிகிறான். ராம் டிரைவரிடம் என்னவென்று கேட்க “இன்று ஜின்னாவின் Direct Action Day” என்று கூற “ஏன் ஒரு போலீசை கூட காணவில்லை என்று ராம் கேட்க “போலீசார் நீண்ட விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்கிறான்.

ராம் தன்னுடைய அப்பர்ட்மென்டை வந்தடைந்த உடன் அபர்ணாவை விளையாட்டாக பயமுறுத்த அவள் கையில் துப்பாக்கியுடன் நிற்க ராம் அவளை சமாதானப் படுத்துகிறான். பின்னர் அபர்ணா ராமின் தந்தையிடமிருந்து தந்தி வந்திருப்பதாக சொல்ல ராம் என்னவென்று கேட்கிறான். ராமிற்கு மன்னார்குடியில் பெண் பார்த்து வைத்திருப்பதாகவும் உடனே கிளம்பி சென்னை வரச் சொல்லியிருக்கிறார்கள் என்று கூறுகிறாள். ராம் அபர்ணாவிடம் அவனுக்கு வேறு எதுவும் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று கூறுகிறான்.

kamal rani piano

மெல்லிய பியானோ இசையுடன் தொடங்குகிறது “நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பாடல்..” படத்தில் பியானோவின் இரண்டாவது குறிப்பு இது. இதில் இடது புற நோட்ஸ்களை அபர்ணாவும் வலப்புற நோட்ஸ்களை ராமும் வாசிப்பார்கள். இருவரின் அன்னியோன்யம் அந்த காட்சியின் மூலமாக சொல்லப்பட்டிருக்கும். பாடலின் முடிவில் ராம் அபர்ணாவிற்கு நஃபீசா தருவித்து தந்த தாலியினை அணிவிக்க அபர்ணா அதற்கு மாற்றாக தன் மெட்டியினை ராம் விரலில் மோதிரமாக அணிவிக்கிறாள். இந்த மெட்டியும் படத்தில் இன்னொரு காட்சியில் இடம்பெறும். ராம் தனக்கு பசிக்கிறதென சொல்லி மார்கெட்டிற்கு சென்று ஏதேனும் வாங்கி வரலாம் எனக் கூற அபர்ணா தனக்கு பயமாக இருக்கிறதென கூறி வர மறுக்கிறாள். மேலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்கிறதென கூற ராம் அதற்கு ஹிந்து கடைகள் அனைத்தும் திறந்து தான் இருக்கிறதென கூறுகிறான்.

ஆகஸ்ட் 14 அன்று வங்காள காங்கிரஸ் தலைவர் கிரண் ஷங்கர் ராய் ஜின்னாவின் இந்த போரட்டாத்திற்கு எதிராக அனைத்து இந்து வியாபாரிகளும் தங்கள் கடையை திறந்து வைக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறார். ராம் பைக்கில் செல்லும் போது கடைவீதியில் ஒரு சீக்கிய பெண்ணை பலர் துரத்திக் கொண்டு வர அவளை காப்பாற்றி வீடு சேர்க்கிறான். அந்த வீட்டில் இருந்து கல்கத்தாவின் உயர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு பேச அவர் தன்னால் இந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியாதெனவும் வேண்டுமானால் நீ காங்கிரஸ் அலுவலகம் எங்கே இருக்கிறது? என்று கண்டுபிடித்து மகாத்மாவிடம் பேசிப் பார் என்று சொல்வதற்குள் ராம் ஃபோனை வைத்து விடுகிறான்.

மிகுந்த கோபத்தில் வீடு திரும்பும் ராம் ஏதோ சத்தம் கேட்டு தன் வீட்டுக்கு ஓடி வர அங்கே இருவர் அவன் வீட்டு கதவை திறக்க முயன்று கொண்டிருக்க அதை பார்த்து ஆவேசத்துடன் பாயும் ராமை தலையிலே தாக்கி பியானோ மீது கட்டிப் போட்டு விடுகின்றனர். ராம் அல்டாஃபை பார்த்து திட்ட ராம் குரல் கேட்டு அபர்ணா உள்ளிருந்து குரலெழுப்ப ஒரு ஓநாயைப் போல அல்டாஃப் அபர்ணா இருக்கும் அறைக்குள் குதிக்கிறான். அபர்ணா கொடூரமாக கற்பழிக்கப்படும் போது அவளின் அவலக் குரல் ராமின் இயலாமை அனைத்தும் நம்மை பதைபதைக்கச் செய்துவிடும்.

kamal piano

தன் முகத்தினால் ராம் அந்த பியானோவில் முட்டிக் கொள்வான். நால்வரில் மூவர் அபர்ணா இருக்கும் அறைக்குள் சென்று அவளை வன்புணர மீதமிருக்கும் ஒருவனை ராம் தாக்கி மேலிருந்து கீழே தள்ள அவன் சாலையில் செல்லும் போலீஸ் வாகனத்தின் மீது விழுவான். போலீசின் விசில் சத்தம் கேட்டு அல்டாஃப் மற்றும் அவனுடன் வந்த மூவரும் ஓட ராம் வெறித்தனமாக அவர்களை நோக்கி சுட அல்டாஃப் தப்பித்து விடுவான். ராம் செய்வதறியாது அபர்ணா இருக்கும் அறைக்குள் சென்று பார்க்கையில் கழுத்து அறுபட்டு ரத்தம் பீய்ச்சியபடி அபர்ணா அவன் கண் முன்னே இறந்து போவாள்.

kamal shouts

இந்து மதத்தின் 4 வாழ்க்கை நிலைகளான பிரம்மச்சர்யம், கிரகஸ்தம் வனபிரஸ்தம், சந்நியாசம் நிலைகளில் முதல் இரண்டு நிலைகளை ராம் கடந்து விடுகிறான். தன் கண் முன்னே கொல்லப்பட்ட தன் மனைவியினை காப்பாற்ற முடியாத தன் இயலாமை மீது கடுங்கோபம் கொண்டு வெறி கொண்டு கத்துகிறான் ராம். வனப்பிரஸ்த நிலையில் கையில் துப்பாக்கியுடன் வேட்டையாடப் புறப்படுகிறான்.

(தொடரும்)

  • பாலாஜி பாலசுப்ரமணியன்