அகம் பாப்கார்ன் – ஹே ராம்-4

506
Hey-Ram-Movie-Review
பதம் கொண்டு நடத்தும் வாழ்க்கை மாவுத்தன் அவனுமின்றி
கதம் கொண்டு துழைக்கும் வெய்ய அங்குசம் அதுவுமின்றி
மதம் கொண்ட வேழம் போல திரிகிறேன் பண்டு நான்கு
விதம் கொண்ட மறைகள் போற்றும் அரங்கமா நகருலாவே

ராம் கல்கத்தாவை விட்டு வெளியேற முடிவு செய்கிறான். தன் பொருட்களை வண்டியில் ஏற்றும் பொழுது அவன் அபர்ணாவுடன் வாசித்த பியானோவினை கயிறு கட்டி மேலிருந்து இறக்குவதைப் பார்க்கும் ராம் அங்கிருந்து வேகமாக வெளியேற முயற்சிக்கிறான். டாக்சி டிரைவரிடம் “Get me out of here” என்று சொல்ல அவனுடைய வண்டி நகர்ந்ததும் அந்த பியானோ மேலிருந்து விழுந்து நொறுங்குகிறது. அபர்ணா சிதைந்து இறந்து போனதற்கான ஒப்பீடு இது.

hey ram 12

வழியில் நேற்று பாகனில்லாமல் தவித்த யானை துதிக்கையில் அங்குசத்துடன் வீதியில் திரிவதைப் பார்க்க, அடுத்த காட்சி ஸ்ரீரங்கத்தில் ஒரு கோயில் யானையின் முன் தொடங்குகிறது. முற்றிலும் புதிய தோற்றத்தில் ராம் தன்னுடைய மாமா பாஷ்யம் அய்யங்கார் மற்றும் வசந்தா அக்கா ஆகியோருடன் பெண் பார்க்கச் செல்கிறான். பாஷ்யம் ராமிடம் அவனுடைய திருமணம் குறித்துப் பேச ராம் அதனை கவனிக்காது கோயிலில் காலில் சங்கிலி பூட்டப்பட்டிருக்கும் யானையினை பார்த்துக் கொண்டே வருகிறான். அதாவது அபர்ணாவின் மறைவுக்குப் பிறகு எதுவும் பிடிபடாத ராமிற்கு திருமணம் செய்து வைக்க பாஷ்யம் முடிவு செய்கிறார். ராம் திருமண பந்த்ததிற்குள் நுழைவதற்கான ஆரம்பக் குறியீடு.

hey ram 11ராம் மைதிலி திருமணம் நடந்தேறுகிறது. இதில் மைதிலியின் குடும்பத்தார் தீவிர காந்தி பக்தர்கள். திருமணம் முடிந்து எல்லாரும் உணவருந்திக் கொண்டிருக்கும் வேளையில் ராம் தன் உறவுக்காரர்களுடன் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருக்கிறான். அதில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை “World’s biggest political divorce” என்று குறிப்பிடுகிறான். அப்போது Radcliffe குறித்த பேச்சு வருகிறது. சிரங்கை வெட்டி போடுவது போல இரண்டு நாட்டையும் பிரித்து விட்டதாகச் சொல்கிறார்கள்.

ராம் மைதிலி முதலிரவு. மைதிலி அறையினுள் நுழையும் போது ராம் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறான். மைதிலி அது மகாத்மாவின் சுயசரிதை என்றும் சுவாரசியமாக இருக்கும் என்று சொல்ல ராம் அதற்கு எனக்கு இந்த சுயசரிதை எல்லாம் புடிக்காது.. இங்க வேற எந்த புஸ்தகமும் இல்ல என்று பதில் சொல்ல மைதிலி முகம் வாடுகிறது. மைதிலி தான் புடவை மாற்றிக் கொண்டு வருவதாக ஒரு அறைக்குள் செல்ல அவள் உள்ளே சென்று தாளிட்டதும் ஒரு பல்லி வந்து விழுகிறது. அது இங்கும் அங்கும் ஓட மைதிலி பயத்தில் அலறுகிறாள். அவள் அலறலைக் கேட்கும் ராமிற்கு அபர்ணாவின் ஓலம் நினைவுக்கு வர வேகமாக சென்று மைதிலியின் அறைக் கதவை ”அபர்ணா… அபர்ணா…” என்று கத்தியவாறு தட்ட கதவைத் திறந்து வெளியில் வரும் மைதிலி “அபர்ணா யாரு?” என்று கேட்கிறாள். அந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ராம் சட்டென்று அந்த அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டு குளியலறைக்கு சென்று தலையில் தண்ணீரை ஊற்றிக் கொள்கிறான். ஒருவரை தலைமுழுக தலையில் தண்ணீர் ஊற்றுவது வழக்கம். இங்கு ராம் அபர்ணாவின் நினைவுகளை தலைமுழுக நினைக்கிறான்.

hey ram2அந்த குளியலறையில் அபர்ணா, அல்டாஃப், மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்டவன், அந்த கத்திக்குத்து பட்டு இறந்த தாத்தா மற்றும் அந்த குழந்தை என அனைவரும் ராமின் கண்ணிற்கு தெரிவார்கள். ராம் உடல் நடுங்கத் தொடங்க அங்கு மற்றொரு காட்சி அரங்கேறும். அனைவரும் மறைந்து போக அந்த இடத்தில் ரத்தச் சகதியில் பல்லி ஒன்று ரத்தத்தை நக்கும். தரையில் நடப்பதும் ரத்தச் சகதியில் வழுக்கியவாறு ரத்தத்தை நக்குவதும் பல்லியின் இயல்புக்கு மாறான விஷயம். அந்த பல்லி தான் ராம். தன்னுடைய இயல்புக்கு மாறாக கலைகளை செய்து அந்த வேதனை நினைவுகளிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறான். இந்த காட்சியில் கமலின் நடிப்பு வேற ஒரு கட்டத்தை எட்டியிருக்கும்.

hey ram 414 ஆகஸ்ட் 1947… பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற தினம். சரியாக அபர்ணா இறந்து ஒரு வருடம் கழித்து ராம் கல்கத்தாவில் இருக்கிறான். அபர்ணாவுடன கடைசியாக இருந்த இடத்திற்கு செல்கிறான். அபர்ணாவின் நினைவுகளூடே மேலே அவர்கள் இருந்த வீட்டின் கதவில் சாய உள்ளிருந்து ஒருவர் கதவைத் திறந்து கொண்டு நாயர் ஒருவர் வருகிறார். இதில் இவர்கள் இருவரிடையே நடக்கும் உரையாடலை காண்போம். மிக முக்கியமான உரையாடல் இது. ராம் தன்னைத் தேடி தான் இங்கு வந்தேன் என்று சொல்லாமல் சொல்வான்.

நாயர் : ஞானும் மெட்ரஸ் பிரசிடென்சியாக்கும்… இங்க வந்து ஆறு மாசம் ஆச்சு.. முன்னால யாரிருந்தது எனக்கு தெரியாது. இப்பல்லாம் புதிய ஆளுகளாக்கும்… பழைய ஆளுகளெல்லாம் போயாச்சு… ம்… பேர் என்ன சொன்னது?

ராம்  : சாகேத் ராம்

நாயர் : கடேசியா எப்ப பாத்தது அவரை?

ராம்  : யார?

நாயர் : சாகேத் ராம…

ராம்  : சாகேத் ராம்… (சற்று யோசித்து விட்டு) ஒரு வருஷம் இருக்கும் Exactly one year

நாயர் : தப்பா நெனைக்கெண்டாம்.. ஒரு வருஷம் முன்னால இங்க riotல நிறைய பேரு செத்ததாக சொல்றாரு…உங்க ஃப்ரெண்ட் சாகேத் ராமும் அந்த கூட்டத்துல போயிருக்கலாம். I’m sorry…

ராம்  : No it’s alright. அப்ப அவன தேடி பிரயோஜனம் இல்ல இல்லியா?

நாயர் : தேடறதுல தப்பில்ல.. உங்களுக்கும் சாகேத் ராமனுக்கும் என்ன ஒறவு?

ராம்  : சரீரத்துக்கும் ஆத்மாவுக்கும் இருக்கற ஒறவு… ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்..

ராம் நாயரிடம் உள்ளே மாட்டப்பட்டிருக்கும் காளி படத்தை சுட்டிக் காட்டி அது வேண்டுமெனவும் அதற்கு பணம் தருவதாகவும் கூறுகிறான். ராம் மீண்டும் அபர்ணாவின் நினைவுகளுடன் கல்கத்தாவில் திரிகிறான்.

இரவு ஆளரவமற்ற தெருவில் ராம் நடந்து வர மீண்டும் அவனால் கொலையுண்டவர்கள் அவன் கண்ணில் தென்படுகிறார்கள். அதில் அந்த கண் பார்வையற்ற பெண் குழந்தை ராமிடம் தான் எப்படி இறந்தேன் என சொல்லட்டுமா என கேட்க ராமிற்கு குமட்டிக் கொண்டு வருகிறது. அப்போது அந்த வழியாக ஒரு கண்டன ஊர்வலம் கடக்கும் போது ராம் அதில் சிக்கிக் கொள்கிறான். அந்த கூட்டம் சுஹ்ராவாதியை வெளியே வரச் சொல்லுங்கள் என்று கத்த சட்டென்று ஒரு ஜன்னல் திறக்க காந்தி வெளிப்படுகிறார். இதுவரை திரைப்படத்தில் காந்தியைக் குறித்து பேசிவந்தாலும் அப்போது தான் காந்தி முதல்முறையாக திரையில் தோன்றுவார்.

hey ram 6காந்தியைக் கண்டதும் கூட்டம் அமைதியாக, காந்தி கூட்டத்தை பார்த்து “சுஹராவர்தி இங்கு தான் இருக்கிறார்.. தயவு செய்து கவனமாக அவர் சொல்வதை கேளுங்கள் என்று சொல்கிறார். அதை தொடர்ந்து சுஹராவர்தி பேச ராம் அவனை நோக்கி “சென்ற வருடம் நடந்த படுகொலைகளுக்கு நீங்கள் பொறுப்பேற்கிறீர்களா? சராசரி குடிமகன் கூட கொலைகாரனாக மாறியதற்கு நீங்கள் பொறுப்பேற்கிறீர்களா?” என்று கோபமாக கேட்க கூட்டமும் ராமுடன் சேர்ந்துக் கொண்டு கத்த சுஹ்ராவர்தி “ஆம் அதற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன்” என்று சொன்னவுடன் கூட்டத்தில் உள்ள அனைவரும் அதை அருமை என்று சொல்லி மகாத்மா காந்தி ஜிந்தாபாத் என்று சொன்னவுடன் ராம் தன்னைச் சுற்றியிருப்பவர்களை கேவலமாகப் பார்த்தபடி அங்கிருந்து நகர்கிறான்.

hey ram 8அப்போது ஒரு குரல் “குமட்டிக்கிட்டு வருதுல்ல..” என சொல்ல ராம் அந்த குரல் வரும் திசை நோக்கி பார்க்க “மிஸ்டர் சாகேத் ராம்” என்றவாறு அபயங்கர் இருட்டிலிருந்து வெளிப்படுகிறான். ராம் “ அபயங்கர்..?” என கேட்க ஆம் என்று சொல்லிவிட்டு தப்பிக்க முயற்சி செய்ததற்காக மட்டும் பத்து மாதம் ஜெயிலில் இருந்துவிட்டு வந்ததாக அபயங்கர் சொல்கிறான். ராமைப் பார்த்து “சுஹ்ராவர்தி வசனம் கேட்டேல்ல… அப்படிப்பட்ட ஒரு பாம்பு தோள் மேல கையப் போட்டுக்கிட்டு நிக்கறாரே.. எப்படிப்பட்ட மஹாத்மா இந்த காந்தி?” தொடர்ந்து…

“ ஜனன்களுக்கு ஞாபக சக்தியே கிடையாது.. உனக்கும் எனக்கும் மட்டும் தான் அந்த வியாதி. இந்த மந்தை பிரக்ஞை இல்லாத இந்த ஆட்டு மந்தை.. ஆட்டுப்பால் குடிக்கிற இந்த தாத்தா பின்னால போயிக்கிட்டிருக்கு. தாத்த பக்ரீத் கொண்டாட போயிக்கிட்டிருக்காருன்னு தெரியாது இந்த மட மந்தைக்கு. பிரஜைகள் நாட்டு நடத்தை நாடகம் பாக்குறாங்க. இந்த நாடகம் பார்க்க விமர்சகர்களுக்கு அனுமதி கிடையாது” என்று பேசிக் கொண்டே நடக்க..

அப்போது எதிரில் ஒருவன் குடித்து விட்டு கையில் தேசியக் கொடியுடன் “ஹிந்து முஸ்லிம் பாய் பாய்” என்று சொல்லி அபயங்கரை கட்டிக் கொள்ள அபயங்கர் அவனிடம் இருந்து கொடியை வாங்கிக் கொண்டு “ஹிந்து முஸ்லிம்?” அதற்கு அவன் பாய் பாய் எனச் சொல்ல “இங்கிலாந்து ஜெர்மன்? சீனா ஜப்பான்? ஆடும் அதை வெட்டுபவனும்? என கேட்க அதற்கு அவன் “பாய்… பாய்” என்று கூற அபயங்கர் அவனைப் பார்த்து “அப்போ பெண்கள்? யார் உன் மனைவியாக இருப்பார்கள்? என்று கேட்டவுடன் அவன் கையிலிருந்து கொடியைப் பிடுங்கிக் கொண்டுச் செல்கிறான். பின்னணியில் இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவின் புகழ்பெற்ற “Tryst with destiny” உரை தொடங்குகிறது. ராமும் அபயங்கரும் நடந்து மறைகின்றனர்.

-பாலாஜி பாலசுப்பிரமணியன்