அகம் பாப்கார்ன் – ஹே ராம்-6

419
Hey-Ram-Movie-Review

”இசையில் தொடங்குதம்மா…” பாடலுடன் தொடங்குகிறது காட்சி. மதுவின் தள்ளாட்டத்தில் லால்வாணி அங்குமிங்கும் அலைய கடைசியில் ராமிடம் வந்து சேர்கிறான். அப்போது மைதிலி இரு தட்டில் இனிப்புகளுடன் வர அதிலிருந்து ஒன்றை எடுக்கையில் அது தவறி கீழே விழ அதை எடுத்து உண்ணப் போகும் லால்வாணியிடமிருந்து அதைப் பிடுங்கி தூர எறிகிறான் ராம். அப்போது லால்வாணி, “போச்சு… போனத பத்தி இனிமே கவலப்படக் கூடாது” என்கிறான். லால்வாணி தன் கடந்த கால நினைவுகளிலிருந்து மீண்டு புதியதொரு வாழ்க்கைக்கு தயாராகி வருவதாக நமக்கு புரிகிறது.

ravana vadhamஅப்போது அபயங்கர் கையில் ஒரு கோப்பையுடன் வந்து ராமிடம் தந்து குடிக்கச் சொல்கிறான். ராம் தான் குடிப்பதை நிறுத்தி விட்டதாகச் சொல்ல அபயங்கர் ”இது சோம பானம் .. குடி” என்று சொல்ல ராம் மைதிலியைப் பார்க்கிறான். மைதிலி கண்களாலேயே வேண்டாம் என்று சொல்ல அபயங்கர் அவனை வற்புறுத்திக் குடிக்கச் சொன்னதும் ராம் அந்த பானத்தை குடிக்கிறான். குடித்த அந்த நொடி முதல் ராம் தன்னிலை இழக்கிறான். He does and accepts many things under the influence of that drink. ராவண வதம் நிகழ்கிறது. அந்தச் சொக்கப்பனை ஜுவாலையின் ஒளியில் ராம் மைதிலியைப் பார்க்க அவனுள் காமத்தீ கனன்று எறிகிறது. ராம் மைதிலியை மெல்ல மெல்ல நெருங்குகிறான். அப்போது மீண்டும் ராமிற்கு hallucination ஏற்படுகிறது. ராம் கையால் கொல்லப்பட்டவர்கள் அவன் கண்ணுக்கு தெரிகின்றனர். ஒரு புள்ளியில் ராம் சுய நினைவுக்கு வரும் அந்த நொடியில் அபயங்கர் மகாராஜா ராமை மட்டும் பார்க்க விரும்புவதாகச் சொல்லி அழைத்துச் செல்கிறான். எரிந்துக் கொண்டிருக்கும் ராவண சொக்கப்பனை சரிகிறது.

மதுவின் பிடியில் கட்டுண்டு அபயங்கரை பின் தொடர்ந்துச் செல்கிறான். அவர்கள் ஒரு ரகசிய இடத்துக்குச் செல்ல அங்கு ராஜா அவர்களை வரவேற்று அழைத்துச் செல்கிறார். அந்த ரகசிய அறையில் ஹிட்லரின் படமும் இருக்கிறது, வீரசவர்க்காரின் படமும் இருக்கிறது. இவர்களுக்கு இடையே இருந்த அந்த கருத்து ரீதியான ஒற்றுமையை வரலாற்றை ஊன்றிப் படித்தால் தெரியும். இந்த இடத்தில் மகாராஜா பேசும் விஷயங்கள் காந்தி மீது அவர்கள் கொண்டிருந்த எதிர்மறையான கருத்தினை விளக்குவதாக இருக்கும். காந்தி ஏன் கொல்லப்பட வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவுப்படுத்துவார். முன்னர் அபயங்கர் பேசிய “அந்த பச்ச செடிக்கு தண்ணி ஊத்தி தண்ணி ஊத்தி மரமா ஆக்கி வெச்சிருக்கார்…” என்ற வார்த்தை இப்போது காட்சியாக விரிகிறது.

இந்துக்கள் தழைக்க வேண்டுமென்றால் இந்த மகாத்மா சாக வேண்டும். இந்த இந்து தேசத்தின் மிக்கப்பெரிய சாபம் எதுவென்றால் அதனுடைய மிகப்பெரிய ஆபத்தான எதிரி யாரென்றால் ஒரு இந்துவே..தொடக்கம் முதலே அவர் அந்தப் பக்கமே (முஸ்லிம்கள்) பேசி வருகிறார். பிறப்பால் இந்துவாக இருந்தும் அவர் இந்துக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். “இதுவரை நாம் வல்லமை பொருந்திய கடவுள்களையும் அவர் தம் ஆயுதங்களையும் நாம் பூஜித்து வந்தோம். ஆனால் இப்போது இந்த கிழவர் அஹிம்சா என்னும் ஒரு புதிய மதத்தினை நம்மை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார். அந்த மதத்தின் கடவுளாகவும் தன்னையே நிறுவிக் கொண்டுள்ளார்.  அவர் கொலை செய்யப்பட வேண்டும். இது ஒரு பழி வாங்கும் செயலாக அல்ல. எதிர்ப்பைக் காட்டும் ஒரு குறியீடாக அமைய வேண்டும்.. ஒரு இந்துவால் என்ன செய்ய முடியும் என்பதை இந்த உலகிற்கும் நாட்டிற்கும் தெரிவிப்பதற்காக செய்திட வேண்டும்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் முன் பல பெயர்கள் எழுதப்பட்ட ஒரு குவளை நீட்டப்பட அதிலிருந்து ஒரு சீட்டினை எடுத்து “ஸ்ரீராம் அபயங்கர்” என்று சொல்ல அபயங்கர் கைகூப்பி வணங்குகிறான். அடுத்தச் சீட்டினில் “சாகேத் ராம்” என்று பெயர் வர அபயங்கர்  “ஆனால் அவன் திருமணமானவன்..” என்று சொல்ல ராம் அதற்கு “அதனால் என்ன?” என்று கேட்பான். அப்போது ராஜா மறைந்து அந்த இடத்தில் அபர்ணா தோன்றி “இன்று விஜயதசமி.. இந்த காரியத்தைச் செய்ய ஒரு ராம் தான் செய்ய வேண்டும் என்பது காளியின் விருப்பமாக இருக்கலாம்” என்று கூறுகிறாள். மகாராஜா ராமை பாராட்டி இருவரையும் அவர்களது ஆயுதங்களை தேர்ந்தெடுக்கச் சொல்கிறான்.

ராம் துப்பாக்கியை குறிப்பார்க்க காந்தி ராட்டையுடன் பாகிஸ்தான் தேசியக் கொடியின் பிண்ணனியில் அமர்ந்திருக்கிறார். அவரது பிம்பம் உடைந்து முதலில் சுவஸ்திக் (ஹிட்லர் உபயோகப்படுத்தியது) தோன்றி பின்னர் அதுவே தாமரையாக மலர்கிறது. அதை தொடர்ந்து அரசவையில் பெண்கள் நடனமாட ராமுடைய காமத்தின் கரை உடைகிறது. மைதிலியை படுக்கையறைக்கு தூக்கிச் சென்று உறவுக் கொள்கிறான். ராமும் மைதிலியும் படுக்கையிலிருந்து வீழ்ந்து மொகஞ்சதாரோ மேல் விழுவது போன்ற ஒரு காட்சி. அதாவது ராமுடைய கடைசி சந்தோசமான கட்டம் இது தான் இனிமேல் அவன் வாழ்க்கை சிதிலமடையப் போகிறது என்றும் சொல்லப்படுகிறது. அதே போல் மைதிலிக்கு பதிலாக ஒரு துப்பாக்கியுடன் உறவு கொள்வதாக காண்பிக்கப்படும். ராம் எந்த அளவு தான் எடுத்துக் கொண்ட பணியின் மீது காதல் கொண்டுள்ளான் என்பதைக் குறிக்கிறது. உறவு முடிந்ததும் ராம் தன் இடது கையால் பியானோ வாசித்துக் கொண்டிருக்கிறான். மீண்டும் அவனுக்கு அபர்ணா நினைவு வருகிறது. படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் மைதிலியை அவன் ஒரு முறை திரும்பிப் பார்க்கிறான். அது ஒரு வகையான அச்சமூட்டும் பார்வையாக இருக்கிறது. ஆண்மையின் உச்சத்தில் இருக்கிறான் ராம்.

மறு நாள் மகாராஜா முன்னிலையில் குதிரையில் விளையாடும் போலோ விளையாட்டை ராமும் அபயங்கரும் விளையாடுகின்றனர். அப்போது ஒரு கட்டத்தில் ராமுடைய குதிரை அபயங்கரின் குதிரையை இடித்துவிட அபயங்கர் நிலை தடுமாறி கீழே விழுகிறான். குதிரை அவன் மீது விழ வலி தாங்க முடியாமல் தவிக்கிறான். குதிரையை அப்புறப்படுத்துகின்றனர். அந்த அடிப்பட்ட குதிரை லாயத்தில் தரையில் கிடத்தப்பட்டிருக்கிறது. இனிமேல் இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று மருத்துவர் கூறுகிறார்.  “இந்த குதிரை ஒரு காலத்தில் எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. ஆனால் தற்போது அது தனக்கும் மற்றவர்க்கும் பாரமாகி விட்டது. அதனால் அதற்கு நிம்மதி அளிக்க வேண்டியது நம் கடமை அல்லவா ராம்?” என்று ராஜா கேட்க ராம் “ஆம்” என்பது போல தலையசைக்கிறான். ராஜா மற்ற குதிரைகளின் கண்களை கட்டச் சொல்லிவிட்டு அந்தக் குதிரையின் தலையிலேயே சுடுகிறார்.

ராம் ராஜாவுடன் அபயங்கரைக் காண மருத்துவமனை வருகின்றனர். அங்கே லால்வாணி இருப்பதைக் கண்ட ராஜா “ நீ இன்னும் புறப்படவில்லையா?” என்று கேட்க ராஜாவையும் ராமையும் பார்த்துச் சொல்லிவிட்டு விடைபெற இருந்ததாக லால்வாணி சொல்கிறான். லால்வாணிக்கு சங்லியில் ஒரு நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்திருப்பதாக ராஜா ராமிடம் கூறுகிறார். லால்வாணி நன்றி தெரிவிக்க ராஜா தான் சென்று அபயங்கரைப் பார்த்து விட்டு வருவதாகச் சொல்லி உள்ளே செல்கிறார். லால்வாணி ராமை கட்டித் தழுவி விடை பெறுகிறான். மைதிலி அழுதுக் கொண்டிருப்பதைப் பார்க்கும் ராம் அவளை சமாதானம் செய்கிறான். அப்போது மைதிலி “ I think.. no… I know I love you” என்று சொல்ல ராமும் அவ்வாறே நினைப்பதாகச் சொல்கிறான். தன்னுடைய ரத்தக் கறை படிந்த கடந்த காலத்தை அவளிடம் சொன்னால் ஒருவேளை அவன் மன நிம்மதி அடையலாம் என்று நினைக்கிறான். தன் விரலில் அபர்ணாவின் நினைவாக அவன் மோதிரமாக அணிந்திருந்த அவளுடைய மெட்டியினை மைதிலியின் விரலில் மாட்டுகிறான். அவர்கள் இருவரும் அன்பில் குழைந்து நெகிழும் தருணத்தில் ராஜா அபயங்கர் ராமை பார்க்க விரும்புவதாகச் சொல்கிறார். மைதிலி அபயங்கருக்கு என்னவாயிற்று என கேட்க “Quadriplegia” அதாவது கழுத்துக்கு கீழே உடம்பில் எந்த செயல்பாடும் இருக்காது. பேசலாம்.. பார்க்கலாம் அவ்வளவு தான் என்று ராம் விளக்குகிறான்.

ராம் அபயங்கர் கிடத்தப்பட்டிருக்கும் அறைக்குள் செல்கிறான். அபயங்கர் ஒரு சவம் போல கிடத்தப் பட்டிருக்கிறான். ராம் அவனிடம் சென்று “ரொம்ப வலிக்குதா?” என கேட்டதும் தன்னையுமறியாமல் அபயங்கர் சிறு நீர் கழிக்கிறான். ”கொஞ்சம் கொஞ்சமா சரியாகிடும்னு சொல்லியிருக்கா” என்றதும் “ நமக்குள்ள எதுக்கு பொய்” “ உடம்பு ஒரு உபாதை அதை நான் இழந்துட்டேன்.. இனி எஞ்சி இருக்கறது பரிசுத்தமான என் ஆத்மா. அதையும் உனக்கு குடுத்துடறேன். இனி நீ தான் என் உடல் பொருள்” என்று சொல்கிறான். இனி ராம் தான் தன்னுடைய ஆத்மா என்றும் தான் ஏற்றுக் கொண்டப் பொறுப்பினை ராம் தான் செய்து முடிக்க வேண்டும் எனவும் அபயங்கர் கூறுகிறான். அதற்கு ராமிடம் தனக்கு இனி எந்த பந்த பாசமும் கிடையாது என்று தன் தலை மேல் வைத்து சத்தியம் செய்யச் சொல்கிறான்.  அங்கே வலது புறம் மேஜையின் மேல் உள்ள ஒரு பார்சலை வைத்து தன் நெஞ்சின் மீது வைத்துத் திறக்கச் சொல்கிறான். அந்த பார்சல் வைக்கப்பட்ட இடத்தில் அனுமன் நெஞ்சை கிழித்து ராமனை காண்பிப்பது போல இருக்கிறது. அது போல அபயங்கருக்கு காந்தியைக் கொலை செய்யும் எண்ணம் மட்டுமே இருக்கிறது என்பதை இங்கே இயக்குனர் சொல்கிறார். ராம் அந்த பார்சலைக் கிழிக்க அதனுள் அபயங்கர் காந்தியைக் கொல்ல தேர்ந்தெடுத்த கைத்துப்பாக்கி இருக்கிறது. காந்தி எப்போது கொல்லப்பட வேண்டும் என்பதை மகாராஜா தீர்மானித்து உனக்கு தந்தி மூலம் தெரிவிப்பார். வந்தே மாதரம்… என்று சொல்லக் காட்சி நிகழ்காலத்திற்கு வருகிறது.