இங்கு தான் எல்லாமே ரிலே-ரேஸ் பாகம் 13

54

சிலவினாடி மவுனத்திற்கு பிறகு,,,

“சாரி தீனா உங்களை நாங்க சந்தேகப்பட்டுட்டோம். நாம் அவங்களுக்கு எதிராக நடத்தப்போகும் போராட்ட குழுவின் தலைவராக இருக்கும் தகுதியே உங்கள் ஒருவருக்குத்தான் இருக்கு எங்களை மன்னிச்சிடுங்க தலைவா” என்று ஏதேதோ உளறிக்கொட்டினான் குகன்.

ஆனால் தீனாவின் கவனமெல்லாம் அமைதியாக நின்ற திலீபனின் மீதே இருந்தது அதை திலீபனும் கவனித்தான். இருவரும் ஒருவர் மீது ஒருவருக்கிருந்த சந்தேகத்தை வெளிக்காட்டாமல் பற்றற்ற புன்னகையை உதிர்த்தனர்.

“என்ன திலீபன் அமைதியாக இருக்கீங்க?”

“ஏதோ மனக் குழப்பம். அதனால்தான் உங்களை பார்க்க வந்தோம். நீங்க தப்பா எடுத்துக்க வேண்டாம் சாரி ப்ளீஸ்”

“அதெல்லாம் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டேன் நண்பா. ஒரு நல்ல நோக்கத்துடன் போராட வந்திட்டா இப்படி பல பிரச்னை வரும். இதெல்லாம் பார்த்தால் நம் நோக்கம் நிறைவேறுமா?” தீனாவின் இந்த கேள்வி தீலிபனுக்கு ஏதோ உறுத்தலாக இருந்தது. ஆனாலும், “நீங்கள் சொல்வது சரிதான்” புன்னகையுடன் பதில் சொன்னான்.

”சரி தீனா, நாம நாளைக்கு மீட் பண்ணலாம்” என்று சொல்லிவிட்டு குகனும் திலீபனும் விடைபெற்றுக் கொண்டனர். மீண்டும் அலுவலகம் நோக்கி வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான் தீலிபன்.
.
மனதில் பல குழப்பங்கள், யாரை நம்புவது யாரை சந்தேகிப்பது என்ற குழப்பம் இருந்தாலும் சுஷ்மாவின் மீதிருந்த காதலால் அவளையோ அவளது அப்பாவையோ சந்தேகப்பட அவன் மனம் மறுத்தது.
.
சிக்னலில் வண்டியை நிறுத்தியவன் பச்சை விளக்குக்கு காத்திருந்தான்,

“டேய் முட்டாளே” என்ற குரல் கேட்டு திரும்பினான். அருகில் மனக்குரலானவன் பரிகாசப் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான்,,,

“காதல் கண்ணை மறைக்கிறதா? புத்தியை பெண்பித்து மழுங்க செய்கிறதா” என்று கேட்டு வெடிச்சிரிப்பு சிரித்தான் மனக்குரலானவன்.

திலீபனுக்கு கோபம் தலைக்கேறியது “உன் வேலையை பார்த்துகொண்டு போ, எனக்குத் தெரியும் என்ன செய்வதென்று, நீ என்னை திசை திருப்ப முயலாதே என்றான்”,,,

“நீயும் நானும் வேறில்லை என்பதை அறியாதவன் போல பேசுகிறாய் திலீபா. இதுவே நீ தெளிவில்லாமல் இருக்கிறாய் என்பதை காட்டுகிறது. உனக்கு நிதானம் தேவை” மனக்குரலானவன் பேசிக் கொண்டிருக்கும் போதே பச்சை விளக்கு ஒளிர்ந்ததும் வண்டியை கிளப்பினான். மனக்குரலானவனும் வண்டியில் தொற்றிக்கொண்டான்

“திலீபா என்னிடம் கோபம் கொள்ளாமல் என் கேள்விக்கு பதில் சொல்”

“என்ன உன் கேள்வி?”

“சுஷ்மாவின் அப்பாவுக்கு எப்படி உங்கள் அனைவரையும் பற்றியும் உங்கள் திட்டங்கள் பற்றியும் இவ்வளவு தெரிகிறது? ஏதோ உன்னுடைய திட்டத்துக்கு உதவி செய்வதாக சொன்னார். ஆனால் உங்கள் குழுவில் இருப்பதில் மிகத் திறமையான ஒருவனை ஆதாரமில்லாத பலி சுமத்தி உங்களை பிளவுப் படுத்த முயற்சிக்கிறார். அவர் சொன்னது உண்மையாக இருந்தாலும் அதில் இவருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்? எதிர் வீட்டில் இருப்பவருக்கு ஏன் இவ்வளவு ஒளிவு மறைவு? உன் அப்பா பற்றி சுஷ்மா சொன்னதெல்லாம் உண்மையா? அவர் எதிர் வீட்டுக்கு போவதை நீ ஒரு நாளாவது பார்த்திருக்கிறாயா?”

மனகுரலானவன் கேட்ட எந்த கேள்விக்கும் திலீபனிடம் தெளிவான பதில் இல்லை. ஆதலால் அமைதியாகவே இருந்தான். “சிந்தித்து செயல்படு திலீபா” என்று சொல்லி விட்டு மனகுரலானவன் மறைந்துவிட்டான்.

சுஷ்மாவின் அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் காபி ஷாப்பில் வண்டியை நிறுத்தினான்.

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீ ஷேர் ஆட்டோ பிடித்து போ” என்றான் குகனிடம். குகனும் சரியென்று விடை பெற்றுக்கொண்டான்.

சுஷ்மாவுக்கு போன் செய்தான். போனை எடுத்தவுடன் “என்ன சார் என்கொயரி முடிந்ததா?” என்றாள். அது அவனுக்கு வியப்பாக இருந்தது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு ”என்ன என்கொயரி? என்றான்.

“அது தான் தீனாவிடம் நடந்த என்குயரி” இப்போது அவளின் குரலில் ஏளனம் இருந்தது. அவளே தொடர்ந்தாள், “உங்களுக்கு உதவலாம் என்று நினைத்தால் நீங்கள் துரோகியிடமே சரணடைகிறீர்கள், ரொம்ப பிரம்மாதம்” என்றாள்.

திலீபனுக்கு கோபமும் குழப்பமும் அதிகமானது ஆனாலும் பொறுமையுடன் “இப்போ நாம் நேரில் சந்திக்கலாமா” என்றான்.

“ஹாஹாஹா வாய்ப்பே இல்லை, இப்போது ஆபீசில் பெர்மிசன் கிடைக்காது வேண்டுமானால் ஈவ்னிங் சந்திக்கலாம்”

“இல்லை கொஞ்சம் அவசரம், நீ இப்பவே வந்தால் நல்லாயிருக்கும்”

“என்ன அவசரமாக இருந்தாலும் இப்போ வரமுடியாது”

“எனக்காக வரமாட்டியா?” என்ற திலீபனின் வார்த்தையில் காதலும் உரிமையும் கலந்திருந்தது. அது சுஷ்மாவை ஏதோ செய்தது. சற்று மவுனத்துக்கு பிறகு “சரி உயர் அதிகாரியிடம் அனுமதி கேட்டுப் பார்க்கிறேன் பத்து நிமிடம் டைம் கொடுங்கள்” என்றாள்.

“சரி எப்படியும் அனுமதி வாங்கிட்டு பக்கத்தில் இருக்கும் காபி ஷாப் வந்திடு” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தான்.

அவன் சொன்ன, ”எனக்காக வரமாட்டியா” என்ற வார்த்தைக்கு சுஷ்மா கட்டுப்பட்டது அவனுக்குள் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியை தந்தது. அந்த உணர்வுடன் இவளை எப்படி சந்தேகப்படுவது? இவள் என்னவள், இவளுக்கும் என் மீது காதல் இருக்கிறது. அதனால் தான் என்னுடைய வார்த்தைக்கு கட்டுப்படுகிறாள். சரி வரட்டும் இவளின் அப்பா நமக்கு எதிராக வேலை செய்கிறாரா என்பதை தெரிந்துக் கொள்ள முடியாவிட்டாலும் இவளுக்கு என் மீது இருக்கும் காதலையாவது இன்று உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்று பலவாறு யோசித்துக் கொண்டே சுஷ்மாவின் வருகைக்காக காத்திருந்தான்.

-L.R. முத்துசாமி

இந்தத் தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்