காற்றின் நிறம் சிவப்பு ரிலே-ரேஸ் தொடர்-19

65

மாலை சூரியன் சாயும் பொழுது எதிர் வரும் வாகனங்களுக்கு கை அசைத்தனர்
தீனாவும் குகனும் சாலையின் முனையிலும், சற்று தள்ளி, நிற்க முடியாமல் செல்வியும் அவளுக்கு துணையாக சுஷ்மாவும் நின்று கொண்டிருந்தாள்.
வாகனம் எதுவும் நிற்கவில்லை. சலித்துப்போன இரு ஆண்களும் பெண்களை பார்க்க சுஷ்மா அவர்களைப் பார்த்து புன்னகைத்து விட்டு அவள் முன்னால் வந்தாள்
“இப்போழுது நான் நிப்பாட்டுகிறேன் பார் “என்றாள்.

சற்று முறுகலான கோபத்துடன் குகன் தள்ளி நிற்க, சுஷ்மா சற்று ஸ்டைலாக ரோட்டில் வந்து நின்று கை அசைக்க ஆரம்பித்தாள். அடுத்த வண்டியே நின்றது, ஆனால் அது கோழிகள் ஏற்றி செல்லும் வண்டி. அதன் பின்புறம் கோழிகள் கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தனர். டிரைவர் எட்டி பார்த்தான். அவன் உதட்டில் சிறிது நீர் வழிந்து கொண்டிருந்தது.

அது அவன் வாயில் குதப்பி இருக்கும் வெற்றிலை பாக்கினாலா, அல்லது சுஷ்மாவை பார்த்து அசடு வழிந்ததா? என்று குகனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
டிரைவரை பார்த்து ஓடி வந்த தீனா கேட்டான் “அண்ணே ஊருக்குள்ள போற வரை நாங்க நாலு பேரும் வரலாமா ?

டிரைவர் சொன்னான், “ஆ போலாமே, இந்த ரெண்டு பொம்பளைங்களும் முன்னாடி ஏறிக்கிட்டும். நீங்க ரெண்டு பெரும் பின்னாடி ஏறிக்கோங்க. இறங்கும் போது எதாவது பார்த்துப் போட்டுக் கொடுங்க “

சரி என்று எல்லோரும் சம்மதித்தாலும் குகன் மட்டும் டிரைவரை முறைத்துக்கொண்டே வண்டியின் பின்புறம் ஏறினான். அங்கே கோழிகள் கூண்டுக்கு இடையில் இரண்டு பேரும் அமர்ந்தனர்.

முன்னால் டிரைவரின் சீட்டுக்கு பக்கத்தில் இருவர் உட்காரும் அளவுக்கு இடம் இருந்தது.  செல்வி முதலில் ஏற பின்னல் சுஷ்மா ஏறினாள். அதுவரை வேலை இல்லாமல் விடுப்பில் இருந்த அந்த இருக்கை கும்மென்று உப்பி ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்திருந்தது.

இருவர் அதன் மேல் உட்கார, வேலை வந்ததது போல சற்று அழுந்தி அவர்கள் உட்கார இடம் கொடுத்தது. வண்டி சீராக போய்க்கொண்டிருந்தது. செல்வி சாலையையே பார்த்துக்கொண்டிருந்தாள். இதே சாலையில் தான் ஒரு காலத்தில் தன் தாத்தாவோடு எத்தனை முறை மாட்டு வண்டியில் பயணம் செய்திருக்கிறாள். அப்பொழுதெல்லாம் இவ்வளவு பெரிய சாலை இல்லை சொல்லப்போனால் தார் ரோடே இல்லை மண் தரை, ஒத்தையடி பாதை, சுற்றிலும் வயல்வெளி, பச்சை பச்சையாக கண்ணுக்கு குளுமையாக எவ்வளவு இதமாக இருக்கும்?.

இப்பொழுதும் வயல் வெளிகள் கொஞ்சம் இருந்தாலும் எவ்வளவு குறைந்திருக்கிறது. இத்தனைக்கும் காரணம் மனிதன் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை எல்லாம் அழிக்க தொடங்கியது தானே, ஏன் இதே சாலையில் மாட்டு வண்டிகள் போய்க்கொண்டிருந்த போது பெரிய வண்டிகள் கிராமத்துக்குள் போய் வரத்தானே இந்த தார் சாலைகளை நம் தாத்தாமார்கள் அனுமதித்தனர். அப்பொழுதே இப்படி படிப்படியாக இந்த இயற்கை வளம் அழியும் என்று அந்த பாமரர்களுக்கு தெரியவில்லையே? இவ்வாறு நினைத்துக்கொண்டே கண் மூடி இருந்தாள்.

திடீரென ஏதோ சத்தத்துடன் வண்டி நிலை தடுமாறியது. அனைவரும் பயந்து போக, டிரைவர் மட்டும் வண்டியை விட்டு திடீரென ஓட ஆரம்பித்தான். எல்லோருக்கும் ஏதோ விபரீதம் என்று புரிந்தது. ஆனால் என்னவென்று புரியவில்லை, குகுனும் தீனாவும் வண்டியின் பின்புறம் இருந்து இறங்கி வந்து பார்த்த போது தான் புரிய ஆரம்பித்தது.
டிரைவர் வேண்டும் என்றே வண்டியை ஒரு பள்ளத்தில் இறக்கிவிட்டு ஓடி இருக்கிறான் என்று ..

இந்த வண்டி மட்டுமில்லை பின்னல் வரும் எந்த வண்டியும், முன்னால் வர முடியாதபடி அந்த வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் நல்லவேளையாக இந்த விபத்தின் மூலம் எந்த காயமும் யாருக்கும் ஏற்படவில்லை. அது அந்த டிரைவர் தன்னை காத்துக்கொள்வதற்காகக் கூட எந்த காயமும் வராமல் வண்டி மட்டும் நிலை சாயும்படி நிறுத்தி இருக்கிறான். அந்த வகையில் அவன் சிறந்த ஓட்டுனன் தான் என்று நினைத்துக்கொண்டான் தீனா.

முன்னால் இருந்த செல்வியையும் சுஷ்மாவையும் தீனாவும் குகனும் கை கொடுத்து மெதுவாக இறக்கி விட்டனர்.

வெளியே வந்த செல்வி கேட்டாள்,  “என்ன நடந்தது ? தான் ஊகித்ததை தீனா அவர்களிடம் அவன் சொன்னான். சொல்லப்போனால் உண்மையும் அது தான் என்று எல்லாருக்கும் புரிந்தது. அப்பொழுது போன் ரிங் சத்தம் கேட்க அதை குகன் எடுத்து பார்த்து பேச ஆரம்பித்தான். அது “திலீபனின் கால்” தான்.

திலீபன் போனில் கேட்டான்.  “டேய் எங்கடா இருக்கீங்க. சீக்கிரம் வாங்கடா உங்களுக்காக எவ்வளவு நேரம் வெய்ட் பண்றது? ஜட்ஜ் அய்யாவை எல்லாம் இதுக்கு மேல காத்திருக்க சொல்ல முடியாதுடா, இப்போ எங்கே இருக்கீங்க? குகன் அங்கு நடந்த நிகழ்வுகளை சொல்ல ஆரம்பித்தான்.

அதற்கு தீலீபன் “டேய் இதுவும் அந்த நாதறிக் கும்பல் வேலையா தாண்டா இருக்கும். அந்த டிரைவரும் அவுங்க ஆளா தான் இருப்பான். எதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருங்க. சரி நீங்க இப்போ எங்கே எந்த இடத்தில இருக்கீங்கன்னு சொல்ல முடியுமா ?
குகன் சில அடையாளங்களை சொல்லி அவர்கள் இருக்கும் இடத்தை அவனுக்கு சொன்னான்.

டேய் அங்கேயே இருங்கடா. அந்த இடம் எனக்கு தெரிந்தவரையில் இங்கே பக்கத்துல அஞ்சு கிலோ மீட்டர் தான். நான் ஜட்ஜ்கிட்டே கேட்டு எதாவது வண்டி கிடைக்குமான்னு பார்க்கிறேன். எப்படியும் நீங்க சொல்றப்படி பார்த்தால் பின்னல் எந்த வண்டி வந்தாலும் கூட இந்த விபத்து நடந்த இடத்தை தாண்டி வர முடியாது. அதனால எதிர் திசையில் இருந்து நானே வரேன். சொல்லி விட்டு போனை கட் பண்ணினான் குகன்.

தீலீபன் சொன்னதை மற்ற மூவருக்கும் விளக்கினான். தீலீபன் வந்து சேர்வதற்குள் எதுவும் அசம்பாவிதம் நடக்காம இருக்கணுமே செல்வி மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். சரியாக 55 நிமிடம் கழித்து திலீபன் வந்தான். அவன் வந்தது ஒரு” டூ வீலர்“.

குகன் கேட்டான் திலீபனிடம் “இந்த வண்டியில எப்படிடா நாங்க நாலு பேரும் வர்றது?.

“முதல்ல நீயும் செல்வியும் வாங்க. உங்களை கொண்டு விட்டுட்டு வந்து இவங்கள கூட்டிட்டு போலாம். இந்த வண்டி தாண்டா அவசரத்துக்கு கிடைச்சது”. சரி என்று எல்லோரும் சம்மதித்தனர்.

திலீபன் வண்டியை ஓட்ட, குகன் வண்டியின் நடுவிலும், செல்வி பின்னாலும் உட்கார வண்டி நகர தொடங்கியது. தீனாவும் சுஷ்மாவும் காத்திருக்கத் தொடங்கினர்.

சரியாக 55 நிமிடம் கழித்து தீலீபன் வந்தான். அவன் வந்ததும் தீனாவும் சுஷ்மாவும் வண்டியில் ஏறினர். ஒரு பெரிய எதிர்பார்ப்புடன் அந்த பயணம் தொடங்கியது. எவ்வளவு வேகமாக செல்ல முடியுமோ அவ்வளவு வேகமா வண்டியை ஓட்டினான் தீலீபன்.
வண்டியை நிறுத்தும் பொழுது தான் கவனித்தான். அங்கே காவல்துறை என்ற சிகப்பு நிற எழுத்தில் எழுதப்பட்ட வாகனம் ஒன்று நின்றுகொண்டிருந்தது.

கோவலன் மதுரைக்குள் வந்தபோது வாராய் என்று அசைந்து அசைந்து சொன்ன அந்த மீன்கொடியை அது நினைவுப் படுத்தியது. வண்டியை நிறுத்தி மூவரும் உள்ளே சென்றனர். அங்கே கண்ட காட்சி அதிர்ச்சியில் உறைய வைத்தது.

செல்வியை கட்டி வைத்திருக்க குகன் ஒரு ஓரத்தில் மயங்கிய நிலையில் கிடந்தான்.
என்ன நடந்தது? என்று யோசிக்கும் முன்பு தீலீபன் தலையில் “நங்” என்று எதோ தாக்க அப்படியே மயங்கும் நிலைக்கு சென்றான். மற்ற இருவரையும் ஒன்றும் செய்யாமல் மேலும் நான்கு பேர் வந்து அவர்களை பிடித்து சென்றனர்.

சரியாக மயங்கியும் மயங்காமல் இருந்த தீலீபன் கண்களில் பறந்த பூச்சியை விரட்டி, தன் கண்களால் அந்த அறையை பார்க்க முயற்சித்தான்.

அங்கே……

ஒரு போலீஸ் அதிகாரி இவனை பார்த்து முன்னால் நடந்து வந்தார். வந்த அந்த போலீஸ் அதிகாரி அவனை தூக்கி நிறுத்தி, “என்னடா பார்க்கிற…. ஏண்டா, சின்ன பசங்களா சேர்ந்து எவ்வளவு பெரிய வேலையை பார்க்க பார்த்திருக்கீங்க.”

அவனை அப்படியே கீழே தள்ளிவிட்டார். அவரே தொடர்ந்தார்.  “உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? உங்க செல்வி செத்து போய்ட்டா” !!

அவன் மழங்கிய விழிகளுடன் அந்த அதிகாரியை பார்க்க, “டேய் இதை நான் சொல்லல, ஊர் பெருசுங்க இரண்டு பேர் வந்து சாட்சி சொல்லி இருக்காங்க. என்ன புரியலையா?  ஒரு பொணத்தைப் பார்த்து அந்த ஊர்க்கார பெருசுங்க ரெங்கசாமியும் சுப்புவும் தான். ஹா ஹா அந்த இரண்டு பேரும் தான். அந்த ஊர் முக்கியமான பெருசுங்க தான். இதை சாக்கா வைச்சு நாங்க இப்போ செல்வியை கொல்லப் போறோம். ஊரைப் பொறுத்தவரை உங்க செல்வி ஏற்கனவே செத்து போயாச்சு. இப்போ நாங்க செல்வியை கொன்னா யாருக்கும் தெரியப் போறதில்லை. ஹா ஹா ..

அவன் மிரட்சியுடன் அந்த அதிகாரியை பார்த்துக்கொண்டே இருந்தான். அவன் கண்களுக்கு காக்கிசட்டை எல்லாம் பணத்தால் தைத்த சட்டையை போல் தெரிந்தது.
சுற்றி பார்த்தான், அந்த அறை அவன் ஒரு மணி நேரத்திற்கு முன் வந்தது போல் இல்லை. சுற்றிலும் ஏராளமான அடியாட்கள். கைகளில் ஏகப்பட்ட ஆயுதங்கள்.
அவன் கண்கள் சுற்றி எதையோ தேட ஆரம்பித்தன.

சுற்றும் கண்களில் செல்வி தனியாக கட்டப்பட்டு நிற்பதையும் மற்ற மூவரும் ஆளுக்கு ஒரு திசையில் அங்கங்கே அவரவர் பலத்துக்கு ஏற்ப சரிந்து கிடந்ததையும் பார்த்தும் இன்னும் எதையோ தேடிய அவன் கண்களை கண்டு கொண்ட அந்த அதிகாரி…..

என்னடா தேடுற.. ஹ ஹா ஹா நீதியையா ??அதான்பா நீதிபதியையா ???
அங்கே பாரு “ என்று குனிந்து கைகளை மாடிப்படியை நோக்கி நீட்டினார்.

அங்கே கண்ட காட்சி அடிப்பட்ட போது வந்த அதிர்ச்சியையும் மயக்கத்தையும் விட அது அதிகமாக இருந்ததை உணரவைத்தது. அங்கே நீதிபதி மாடிப்படியில்இ றங்கிக்கொண்டிருக்க அவரை சுற்றி அந்த அரைகுறை ஆடை அழகிகள் அவர் மேல் சாய்ந்தும் சாயாமலும் வந்து கொண்டிருந்தனர்.

அந்த நீதிபதியின் ஒரு கையில் மதுக்கோப்பையும், இன்னொரு கை அந்த அழகிகளில் ஒருத்தி மேல் கிடந்தது.

இப்பொழுது அடிக்காமலே மயங்கி விழுந்தான் தீலீபன் .

-ராம்போகுமார்