அம்மு

382

தென்னங்கீற்றில் விழுந்த மாலைநேர சூரியனின்,  செந்நிற ஒளி அம்முவின் முகத்தில் படர்ந்து பிரகாசித்தது. வீட்டின் பின்புறம் உள்ள சிறிய பூந்தோட்டத்தில் கொய்யா மரக்கிளையில் அமர்ந்து மாமா சேகரை நினைத்து தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள்.

சிரிப்பில் கொஞ்சம் வெட்கமும் , நிறைய காதலும் கலந்திருந்தது.
பாவாடை அணியும் வயதில் கயிறு கட்டி விட்டவன் எவனோ? தாலி கட்ட வந்தவன் அவனே இதமானவன். என்ற பாடல் பக்கத்து வீட்டில் பாடிக்கொண்டிருந்ததைக் கேட்ட அம்முவுக்கு தன் மாமன் சேகர்  சிறுவயதில் தனக்கு பாவாடை அணிந்து விட்டது ஞாபகம் வந்தது.

மகள் அம்முக்குட்டியைப் பார்க்க ஊரிலிருந்து அம்மா, சீதா வந்திருந்தாள். தோட்டத்தில் அம்மு தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்து ஏன்டா அம்மு?  இங்க தனியா என்ன பண்ற? கேட்டுக்கொண்டே அருகில் வந்தாள்அம்மா.

வாம்மா,  எப்போ வந்தே? நல்லா இருக்கியா? ஏம்மா இங்க வந்த? நாளைக்குத் தான் மாமா மெட்ராஸ்ல இருந்து வராங்களே.,  நாங்க நம்ம வீட்டுக்கு வருவோம்ல அப்புறம் நீ ஏம்மா அலையுற?
உன்ன பார்க்கனும் போல இருந்தது, என்ன பெத்தவளே அதான் ஓடியாந்தேன் .கண்கள் கலங்க கட்டியணைத்தாள் அம்மா.

அம்மு இயற்பெயர். அமுதா. அம்முவுக்கு தாய்மாமன் சேகருடன் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆயின

தாய் மாமா சேகர் தான் அவளை அம்மு என்று செல்லமாய் அழைத்தான் , பின்னாளில் எல்லோரும் அம்மு என்று அழைத்தனர்.சேகர் அக்கா மகள் அம்மு மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தான்.   சேகரின் ஒன்பதாவது வயதில் தான் அம்முக்குட்டி பிறந்தாள். அம்முவை பார்க்காமல் சேகரால் ஒருநாள் கூட இருக்க முடியாது. பள்ளிக்கூடம் முடிந்து சைக்கிள் எடுத்துக் கொண்டு,  மூன்று மைல் தூரமுள்ள அக்கா வீட்டுக்கு வந்து அம்முவைத் தூக்கிக் கொஞ்சி விட்டு திரும்புவான்.

தினமும் இவ்வளவு தூரம் தனியாகப் போய் வருவதை சேகரின் அம்மா அப்பா தடுத்தனர். பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் மட்டும் அக்கா வீட்டுக்குப் போக அனுமதி கொடுத்தனர்.

சேகர் படிக்கும் பள்ளியில் அம்முவையும் சேர்த்துவிட்டனர். அம்முவைப் பத்திரமாக பார்த்துக் கொண்டான்.அவள் ஆசைப்பட்டது எல்லாம் வாங்கித் தந்தான்.
ஏமாற்றித் தாவிச் செல்லும் சரட்டைத் தவளை,பழித்துத் தலையசைக்கும் ஓணான்,மனதை மயக்கும் பொண்வண்டு ,எனப் பால்யக் குறும்புகளுடன் சிறுவயதைக் கடந்தனர் அம்முவும் சேகரும்.
அன்றிலிருந்து இன்று வரை சேகரின் மடியில் அமர்ந்து  செல்லமாய் விளையாடுவது. அம்முவுக்குப் பிடித்தமான ஒன்று. அப்படியிருக்க , அம்முவின் பாவாடை ஈரத்தை வைத்துப் பெரியவளானதை முதலில் கண்டுக் கொண்டது சேகர்தான் .

அம்மு கவிஞர்கள் புகழ் பாடும் அளவிற்கு அழகில்லை என்றாலும்,  அகன்நெற்றியில் சுருள் சுருளாய் சுருண்டிருக்கும் முடி, பாவாடையை ஏற்றி இடுப்பில் சொருகி,வலது கையால் தாவணி முந்தானையை கையில் பிடித்து,  இடது கையால் மாராப்பைச் சரிசெய்து அவள் வயல் வரப்புகளில் நடக்கும் சமயம் யாராக இருந்தாலும் ஒருநிமிடம் ரசிக்கத் தோன்றும்.

பள்ளிப் படிப்பு முடித்துக் கல்லூரியில் சேர்ந்தாள் அம்மு.கல்லூரி முடித்து வேலைக்குப் போனான், சேகர். சென்னையில் கட்டிடப் பொறியாளர்.

மாதம் ஒருமுறை ஊருக்கு வருவான் சேகர் .ஊருக்கு வரும் சமயம் அம்முவும் வந்து விடுவாள். மாமனைப் பார்க்க

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தொலைபேசி அழைப்பு வேறு.
மாமா சாப்டிங்களா? மாமா தூங்குனிங்களா? அம்மா என்ன திட்டக்கிட்டே இருக்காங்க. உங்க அக்காவ என்னன்னு கேளு. என்று உரிமையாய் நீளும் , அந்தத் தொலைபேசி உரையாடல்.

வீட்டார் உட்பட ஊரார் வரை எல்லோரும்  நினைத்திருந்தனர். அம்முவும் சேகரும் ஒருவரை ஒருவர் விரும்புவதாக.

சென்னையில் வேலை நல்ல படிப்புடன் ஒரு பெண் வரன். வந்திருப்பதாகத் தரகர் வந்து சேகரின் வீட்டில் சொல்லிப்போன பின்பு,  அம்முவின் அம்மா சீதா. சேகர் ஊருக்கு வந்த சமயம்
ஏம்புள்ள சடங்காயி ஆறு வருசம் ஆகுது தம்பிக்குத் தான் கல்யாணம் பண்ணிக் கொடுக்கப்போறேனு ஊரு பூரா நா சொல்லிக்கிட்டுத் திறியுறேன் . நீங்க என்னடானா என் தம்பிக்கு வேற இடத்துல பொண்ணு பாக்குறிங்களா ???,,,,,

இல்லம்மா அம்முவைத் தான் சேகருக்குக் கட்டிக் கொடுக்கனும்னு எங்களுக்கும் ஆசை தான். ஆனா சேகர் தான் வேண்டாம்னு சொல்லிட்டான் என்று சீதாவின் அம்மா கவலையுடன் கூறினாள்

ஏன்டா தம்பி???????  அக்கா மக, அக்கா மகனு ,,பாசத்தைக் காட்டிப் புட்டு இப்போ ஏன்டா வேண்டாம்னு சொல்ற.? காசு பணத்துல உங்கள விட நாங்க கொறைஞ்சுப் போய்ட்டோமா. ?
ஆமா ,நீங்க மெட்ராஸ் போயி பெரிய என்ஜினியரு ஆயிட்டிங்க. அப்புறம்  அக்காவாது பாசமாவது அழுதுக் கொண்டே சேலைத் தலைப்பில் மூக்கைச் சிந்தினாள்.

அக்கா பைத்தியம் மாதிரி பேசாத. அம்முவ நான் தப்பான கண்ணோட்டத்துலப் பாக்கல. எனக்கு விவரம் தெறிஞ்சப் பிறகு பிறந்தப் பொண்ணு.
அவள் இன்னும் எனக்குக் குழந்தை தான். இந்த வருஷம் அம்முவுக்குப் படிப்பு முடியுது .அப்புறம் வேலைக்குப் போவா .அவளுக்கு அவளே நல்ல வாழ்க்கையைத் தேடிக்குவா புரியுதா?. இந்த விசயம் எல்லாம் அம்முவுக்குத் தெரிய வேண்டாம். போய் வேலையைப் பாரு . முடிவாகச் சொன்ன சேகரிடம் சொல்லிக் கொல்லாமல் வழி நொடுக்கிலும் அழுதுக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள், அம்முவின் அம்மா.

ஏம்மா ஒரு மாதிரியா இருக்க?? மாமா வீட்டுக்குப் போய்ட்டு வந்ததுல இருந்தே  உன் நடவடிக்கையே சரியில்லையே .

என்ன நடந்தது??  சந்தேகமாய் அம்மாவைப் பார்த்து அம்மு கேட்டாள்.

என்னத்த சொல்றது உம் மாமனுக்கு கல்யாணமாம் .பொண்ணு மெட்ராஸ்ல வேலைப் பார்க்குதாம்.

நல்ல விசயம் தானே இதுக்கு எதுக்குக் கண் கலங்குற நீ??
புரியாதவளாய் அம்மு கேட்டாள்.

அடிப்பாவி நீ மாமாவ விரும்பல?? மாமாவே கல்யாணம் பண்ணிக்கனும் நினைக்கல??

இல்லம்மா அப்படி எதும் எண்ணம் எனக்கு  இல்லம்மா.
உன்னோட தம்பி அப்படிப்பட்ட ஆள் இல்லம்மா.

மாமா உங்கள விரும்புறேன் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்
வாங்கனு நான் கேட்டா? மாமா என் மேல வச்சிருக்க பாசத்த, அன்பை நான் கொச்சைப் படுத்துற மாதிரி ஆகாதா ?

நான் வளர்த்தாக் கூட என் பொண்ண இப்படி வளத்துருக்க மாட்டேன் என் தம்பி என் பொண்ணுக்கிட்ட எவ்வளவு உண்மையாகவும் , நேர்மையாகவும், நடந்துருக்கான். இவன் தான் நம்ம பொண்ணுக்குக் கணவனா வரனும். மனதில் நினைத்துக் கொண்டாள்.

அன்று இரவு அம்முவுக்குப் போன். மாமாதான் என்பது அவளுக்குத் தெரியும் .தயங்கித் தயங்கிப் போனை எடுத்தாள்.

அம்மு நான் காலையில மெட்ராஸ் கிளம்புறேன்.

என்னை பார்க்க வரலையா மாமா???.

இல்ல அம்மு நான் அவசரமா போகனும்.

சேகர் போனை வைத்தது,  அம்முவின் மனதில் முள் குத்தியதைப் போல இருந்தது.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை போன் பண்ணுவதையும் நிறுத்திக் கொண்டான். அப்படியே போன் பண்ணிணாலும் முன்புப் போல பேசுவதையும் தவிர்த்தான்.

இந்தப் பேசாத நாட்களில் அம்முவுக்கு மாமா மீது கோபமும்,  பாசமும் அதிகமானது.

இரண்டொரு மாதங்களுக்குப் பிறகு சீதா தன் உறவினர் சகிதம் வந்து சேகருக்கும் அம்முவுக்கும்  திருமணம் பேசி முடித்தாள். பெரும் போராட்டத்துக்கு பிறகு நிம்மதி பெருமூச்சு விட்டாள்  சீதா..
அப்பாடா நான் நினைத்தது போலவே என் தம்பிக்கு என் மகளை கல்யாணம் பண்ணி வச்சாச்சு இனி ஒரு கவலையுமில்லை.என நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் சீதா

முதலிரவு அன்று இருவரும் ஒருவார்த்தைக் கூட பேசிக் கொள்ளாமல் வெவ்வேறு திசையில் திரும்பிப் படுத்து தூங்கிப் போனார்கள்சேகரும் அம்முவும்

அதுவரை சென்னையைப் பார்த்ததே இல்லை அம்மு  வயல்வெளி, குளக்கரை, ஒத்தயடிப்பாதை, ஆலமர ஊஞ்சல், வேப்பமர நிழல் என்று அம்மு வாழ்ந்து ரசித்த அழகில் துளிக்கூட சென்னையில் இல்லை.

மூன்றாவது அடுக்குமாடியில் வீடு.  சேகர் பணிமுடித்து திரும்பும் வரை தனியாக இருக்க முடியாமல். அம்மாவுக்குப் போன் பண்ணிப் பேசிக்கொண்டிருப்பாள்.அப்போதுதான் தெரியவந்தது சீதாவுக்கு அம்மு சேகருடன் சந்தோசமாக வாழவில்லை என்று

ஏன்டி அம்மு என்னடி ஆச்சி உங்களுக்கு?  கல்யாணம் ஆகி இத்தனை நாள் ஆச்சு இன்னும் தாம்பத்தியம்  நடக்கலையா.? அய்யோ!!  என் தம்பிக்கு உன்னைப் பிடிக்கலையா? அம்முவைப் பார்த்து கேட்டாள் அம்மா சீதா

ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்தாள் அம்மு. . அன்று இரவு மாமாவிடம் அதைப்பற்றிப் பேச வேண்டுமென நினைத்தாள்

விளக்கு அணைத்து வெகுநேரமாகியது. அம்முவுக்கு உறக்கம் வரவில்லை. சேகர் அப்போது தான் உறங்க முயற்சித்தான். .

“மாமா? மாமா ?உங்களைத்தான், .

என்ன அம்மு?

என்னை உங்களுக்குப் பிடிக்குமா?

இது என்ன கேள்வி?

சொல்லுங்க மாமா.

ரொம்பப் பிடிக்கும் அம்மு!

அந்தப்  பிடிக்குமா இல்லை மாமா. அந்…..த பிடிக்குமா!!!,,

சேகருக்குப் புறிஞ்சது.அம்மு உன்னோடத்  தலையனைக்கு அடில பாரு. .

மாமா தலையணைக்கு அடியில என்ன வச்சுருப்பாரு ? அந்த இடுக்கில் கைவத்துத் தேடினவளுக்குக் கிடைத்தது கொலுசு . .

என்ன மாமா இது கொலுசா?

ரொம்பச் சின்னதா இருக்க மாதிரி இருக்கு? , .

ஆமா சின்ன வயசுல உனக்குக் கால கடிக்கிதுனு நீ கழட்டி எங்கிட்டக் கொடுத்த. இந்தக் கொலுசு போட்டு நீ நடக்கும் போது வரும் சத்தம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  உன்கிட்ட நான் சொல்ல நினைத்த செய்தியெல்லாம் இந்தக் கொலுசுக்கிட்ட சொல்லிருக்கேன் கேட்டுக்கோ,.. என்றான் சேகர்.

அம்மு கொலுசை அசைத்தாள். அது சினுங்கியது. மறுபடியும் அசைத்தாள்.
அது அவளுக்கு மாமா சேகருடனான பால்ய பந்தத்தை நினைவுப்படுத்தியது.
அவள் அந்த நினைவுகளை அனுபவித்தப்படி கொலுசை மேலும் கீழும் வேகமாக அசைத்தாள்.

அவளுக்கு அந்தக் கொலுசு உணர்த்தியது சேகரின் காதலை..

அம்மு படுக்கையில் சேகரின் அருகில் வந்து சேகரை கட்டியணைத்து அவன் நெஞ்சில் தலைவைத்தாள். மாமனின் இதயத்துடிப்பு நாதமாய் அம்மு உயிரினுள் ஊடுருவியது. உச்சந்தலை வருடி நெற்றிப் பொட்டில் முத்தமிட்டான்,  சேகர். .

அந்த ஒற்றை முத்தத்தில் கொஞ்சம் காமம் நிறைய காதல்  இருந்ததை உணர்ந்தாள் அம்மு. இருவரும் உடைகளைக் களைத்து.
அவனை அவள் உடுத்த,அவளை அவன் உடுத்த. வெட்கத்தில் இரவு கண்களை இறுக மூடிக்கொண்டது.  கட்டில் தொட்டிலாய் தாலாட்டியது இருவரையும்.

அம்முவுக்கு அந்த பந்தம் புதிதாகவும் பிடித்ததாகவும் இருந்தது. பரபரப்பான அந்தச் சென்னை வாழ்க்கையில் மனைவிக்காக வெகுநேரம் செலவிட்டான்.  இருவரும் இனிக்க இனிக்கக் காதல் செய்தனர். அம்முவின் உணர்வுகளை அவன் மதித்தான்.

மாதவிடாய் நேரத்தில் வயிற்று வலியால் துடித்த அவளுக்கு எங்கிருந்தோ வண்ணமிகு பொண்வண்டு பிடித்து வந்துக் கொடுத்தான்.
பொண்வண்டைப் பார்த்தால் அவள் தன்னை மறந்து துள்ளிக் குதிப்பாள் என்பதை அவள் சிறுவயது முதலே  அவன் அறிந்திருந்தான்.

காதல் கூடலினால் . நாட்கள் பம்பரமாய்ச் சுழன்று மாதங்களைக் கடந்தது.  அம்முவின் அம்மா, அப்பா, ஊரிலிருந்து வந்திருந்தனர்.  வரும் பொங்கலுக்கு ஊருக்கு அலைத்துப்போக

இங்கு வேலை இன்னும் முடியல. நான் இப்போ கட்டிக்கிட்டு இருக்குற கட்டிடம் பொங்கல் அன்று திறப்புவிழா நடத்தனும் ,இன்னும் வேலை இரண்டு நாள் தான் பாக்கி முடிச்சிட்டுப் பொங்கலுக்கு ஊருக்கு போற வேலைக்காரங்களுக்கு சம்பளம் பட்டுவாடா பண்ணணும்.
நீங்க அம்முவை அலைச்சிட்டு போங்க நான் பொங்கல் முன்னாடி போகி அன்னைக்கு வந்துருவேன். என்று கூறினான் சேகர்.

மாமா நான் தனியா போகனுமா.? இரண்டு நாள் எப்படி பார்க்காம இருகிறது?அம்மு கொஞ்சினாள். நீ வச்சிருக்க கொலுசுக்கிட்ட சொல்லு  நான் வந்து கேட்டுக்கிறேன். இந்தா உனக்குப் பிடித்த பொண்வண்டு கலர் புடவை. நான் வரும்போது நீ இந்த புடவையைத்தான் கட்டிக்கனும் சரியா.?

ம்ம்ம்ம் சரி மாமா. உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும். பொங்கலுக்கு நீ ஊருக்கு வரும் போது சொல்றேன் மாமா அப்பறம் !!!!! என்று வார்த்தையை இழுத்தாள் அம்மு. .

அப்புறம் என்ன??

ரெண்டு நாளைக்குத் தாங்குற மாதிரி ஒரு முத்தம் கொடு.
…………………

அம்முவை அழைத்துக் கொண்டு விடைப் போனார்கள்
உதட்டில் சிறு காயத்துடன் கையசைத்தான் சேகர்.

படுக்கை முள்ளாய்க் குத்தியது அம்முவுக்கு. மாமா தந்தக் கொலுசுடன் பேசினாள்.
ஓய் மாமா ,  எப்படா வருவே? சீக்கிரம் வா உன் பொண்டாட்டி தனியா தவிக்கிறா…………

மாமா நான் உனக்கு ஒரு விசயம் சொல்றேனு சொன்னேன்ல?  அது நீ…….. நீங்க அப்பா ஆக போறிங்க. வெட்கத்தில் தலையனையில் முகம் பதித்தாள் அம்மு. விடியலில் நடக்கப்போகும் கொடூரம் தெரியாமல்

வீட்டு வாசலில் ஏதோ கூச்சல் கேட்டு கண்விழித்தாள் அம்மு.

என்னாச்சி மாமா வந்துட்டாரா? எல்லாம் அழுகிற சத்தம் கேட்குது. அவசரமாய் வாசல் ஓடிவந்தாள். அம்மு.

ஏன் ஏல்லாரும் அழறிங்க???

“என்னாச்சி” என்ற அம்முவைப் பக்கத்து வீட்டுப் பாட்டி கட்டிப்பிடித்து கதறினாள்.

“நேத்து உன்னோட புருசன் தலையில கட்டிடம் இடிச்சி விழுந்துட்டாம்”. ”உன் புருசன அந்த கடவுள் இவ்வளவு சீக்கிரமாகவா கொண்டுப் போகனும்?” . . . . பாட்டி துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நெஞ்சில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டு அழுதாள்.

”மாமா” என்று அடி நெஞ்சில் சத்தமிட்டு தரையில் சாய்ந்தாள் அம்மு.

சிலர் ஓடிவந்து அம்முவைத் தூக்கினார்கள். செயலற்றுக் கிடந்தவள், கால்களுக்கிடையில்  அதிர்ச்சியின் காரணமாக கருக் கலைந்து உதிரம் வலிந்தோடியிருந்தைப் பார்த்தப் பின் ஊரார் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டனர். (இந்தச் சின்ன வயசுல இந்தப் பொண்ணுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா? என்று.)

சேகரின் சடலம் அப்போது தான் வந்தது. நடு வாசலில் குளிர்ச் சாதனப்பெட்டியில் வைத்திருந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி தலை நசுங்கிப் போயிருந்ததால், சேகரின் முகத்தை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தண்ணீரை முகத்தில்  தெளித்து அம்முவை  எழுப்பினார்கள். கரு கலைந்ததால், மிகவும் சோர்ந்து போயிருந்த அம்மு எழுந்தாள்.

”இங்க என்ன சத்தம்”???

”ஏன்? இங்க எல்லாம் அழுகுறிங்க. சீக்கிரம் போங்க. மாமா வர நேரமாச்சி” என்ற
அம்முவை ஊரே வேடிக்கைப் பார்த்தது.

“அம்மா, மாமாக்கு சுடுதண்ணீர் போடு, மாமா வந்ததும் குளிப்பாரு”.

தனக்குத் தானே பேசிக்கொண்டாள். சிரிப்பு, வெட்கம், சந்தோசம், அழுகை எல்லாமும் மாறி மாறி வந்த அம்முவின் முகத்தைப்  பாவத்துடன் பார்த்தனர் ஊர்க்காரர்கள்.

மாமா வர நேரமாகி விட்டது. புதுப் புடவையை உடம்பில் சுற்றிக் கொண்டு வாசலில்  மாமா வருகைக்காக காத்திருந்தாள்.  நான்கு பேர் சுமக்க, சேகரின் சடலம் சுடுகாடு நோக்கிப் போவதை அறியாமல்.

”மாமா இன்னைக்கு வரேனு சொல்லிருக்காரு”. ”மாமா வந்ததும் நீங்க அப்பா ஆகப் போறிங்கனு சொல்லனும்”….. மாமா எடுத்து கொடுத்த கந்தலாகி கிழிந்துப் போன பொன்வண்டுக் கலர் புடவையை உடுத்தி இரண்டு வருடங்களுக்கு மேலாக இன்னும் காத்திருக்கிறாள் அம்மு.

சில நாட்களுக்கு பிறகு அம்முவைக் காணவில்லை. எல்லா இடத்திலும் தேடினார்கள்.

கையில் கொலுசுடன். கந்தலாய்க் கிழிந்த பொன்வண்டு கலர் புடவைக் கட்டி.
மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை, சென்னைத் தெருக்களில் நீங்கள் காண நேர்ந்தால், அது வேறு யாருமில்லை

”மாமா சேகரை தேடி வந்த அம்மு” என்கின்ற அமுதாவாக இருக்கலாம்!!!!!!……….

-கலை கூத்தாடி