ஆனந்தி ராமகிருஷ்ணன் கவிதைகள்

74

இனி என்ன?

நிம்மதியின்றி அலைகிறது
வானத்தில் பறவையை
பிரிந்த இறகுகள்….!

தத்தி தத்தி பேசுகிறது
தன்நிலை மறந்த
மௌனத்தின் மென் நேசங்கள்….!

எப்போதும்
காணக்கிடைக்கின்றன
செதுங்கிய தடங்களில் எல்லாம்
சில ஞாபகங்கள்….!

பிரதிபலிப்புகள் இன்றியே
காட்சிக்குள் அடங்குகிறது
பார்வைகளற்ற தடங்கள்…..!

மனதை நெளிக்கும்
கேள்விகள் பலமுறை
பதிலொலிப்பின்றியே
துடிக்கிறது…..!

இலக்கின்றி வெறிக்கும்
எண்ணங்கள் மட்டும்
மிக சுலபமாய்
விற்று தீர்த்து விடுகிறது….!
அன்பெனப்படுவது யாதெனில்….

கண்களுக்கு புலப்படாக்
காட்சி ஒன்றினுள்
காணப்புகும் பரிபூரணத்துவத்தை
தனதாக்கிக் கொண்டிருக்கிறாய்…

அனுமானிக்கும் தவிப்புகளையும்
அரிதாக்கி விடுகிறாய்…..

காலம் செய்த
நேசத்தின் மாயங்களில்
மிகையும், குறையும்
நிலையில்லா இருத்தலின் இடைவெளிகளே…

ஏதும் அற்றோ,
குவிந்து கிடக்கும்
எண்ணங்களோ,
மௌனமான தவங்களின்
பரிமாறல்களே…

நீ கற்பனையாகவும்
காதல் களமாகவும்
கவனமாகவும்
ஆவணமாகவும்
ஆணவமாகவும்
கையாளப்படுகிறாய்
என்னில்….

உன் மௌன தீர்மானத்தில்
தப்பி பிழைக்க காத்திருக்கும்
ஒற்றை சொல்லில் தான்
இன்னும் ஒட்டியிருக்கிறது – என் உயிர்த்துளி
என்பதை மட்டும்
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை….

*****
இன்னும் மீதமிருக்கிறோம்

செயலற்று இயங்குகிறேன்
பாதாளத்தின் ஆழத்தில்
சில கணம்
வானத்து விண்மீன்களில்
சிலகணம்
இதம் தரும் தென்றலோடு
சில கணம்
இம்சிக்கும் சித்திரையின்
வெம்மையோடு சில கணம்…
என் எண்ணங்கள் எதிர்
தாக்குதல் இன்றியே
சமாதானக் கொடியை
நீட்டி நிற்கிறது
சமாதானமின்மைக்கு….
எனக்குள் நானே எதிரியாய்
பிடிப்பு குறையாமலிருக்க,
பிடித்ததைப்
புரட்டிப் போட எண்ணப்படுகிறேன்
புலப்படவில்லை
முடிவற்றுப்போனதா? – என்
ஆரம்பமே முடிவாய் திருத்தமற்று.
என் திருத்தமோ, குழப்பமுற்று.
மரணித்தது
வீழ்ந்தோம் நானும்
என் எழுதுகோலும் இனி
மீண்டெழ எண்ணமில்லை
இருவருக்கும்.
நாங்கள் இன்னும் மீதமிருக்கிறோம்….