அஞ்சலையும் நானும்-3

24

ஐயிரு திங்கள் கருவில் சுமந்தாள்
தானுண்ணும் உணவினை எனக்கும் பகிர்ந்தாள்
இடுப்பெலும்பு நொறுங்க என்னை ஈன்றெடுத்தாள்
உதிரத்தை பாலாக்கி என் வாய்ப்புகட்டினாள்
கால்கொண்டு மாருதைத்ததை பாக்கியமாக கருதினாள்
தலைவாரி திருநீறிட்டு உச்சிமுகர்ந்து பள்ளிக்கு அனுப்பினாள்
என் மனப்பெண்ணை மறுத்து மணப்பெண்ணாய் வேறோர் பெண்ணை காட்டினாள்
அவள் பார்த்த மணப்பெண்ணை மறுதளித்தேன்
என் மனப்பெண்ணை மறக்க முடியாதென்றேன்
ஐயிரு திங்கள் சுமந்தேன் என்றாள்
உனக்கும் சேர்த்து உண்டேன் என்றாள்
தொந்தி சரிய நடந்தேன் என்றாள்
இடுபெலும்பு நொறுங்க உன்னை ஈன்றேன் என்றாள்
என்னுதிரத்தையே பாலாக்கி உனக்கு புகற்றினேன் என்றாள்
பாராட்டினேன் சீராட்டினேன் பள்ளிக்கு அனுப்பினேன் என்றெல்லாம் கூறினாள்
சற்றே செவி சாய்த்தேன், என் மனப்பெண்ணின் மரணத்திற்கும் காரணமானேன்
இறப்பின் செய்தியறிந்து ஆசுவாசப்பட்ட அவள் கண்களை கண்டப்பின்னும்
தேவதை எரியும் சிதையின் வெம்மையை உணர்ந்தப்பின்னும் தான் புரிந்தது
தன் உடல் தேவைக்காக ஒருவனோடு கூடினாள்
ஊரின் அவப்பேச்சுக்கு பயந்தே பெற்றெடுத்தாள்
மாரில் கட்டியும் புற்றும் உருவாகாதிருக்க பால் கொடுத்தாள்
உடல் வருத்தி பெற்ற கடமைக்காக பாராட்டினாள், சீராட்டினாள்
ஊர் மெச்சவே படிக்க வைத்தாள்
தனக்காகவும் ஊருக்காகவும் செய்தவைகளை எனக்கென செய்ததாய் கூறி
என் உயிரையும் உறக்கத்தையும் பறித்தவள் தானென்ற போதும்…
பெருவிரல் கட்டிய அவள் பாதம் தொட்டு வணங்குகிறேன்,
ஊன்கொடுத்து உயிர்கொடுத்த நன்றிக்காக…
எரியும் சிதையிலிருந்து விலகி செல்கிறேன்,
ஊனிருக்க உயிர் பறித்த பாவத்திற்காக..
சில்லமில் அஞ்சலை நிரப்பி புகைக்கிறேன்
உயிர் பிரிந்த உறவொன்று என்னுயிர் விட்டு அகலாதிருக்க.

லான்சோ வஸ்தோ