அறிவாளி ஆகணும்னா என்ன பண்ணனும்?

109

அறிவாளி ஆகணும்னா என்ன பண்ணனும் ? தப்பு பண்ணனும் !

என்ன இப்பிடி சொல்றீங்க? அப்பிடினு நீங்க கேட்டா, ஆமா நான் அப்பிடித்தான் சொல்லுவேன். ஏன்னா தெரியாம செய்யுற தப்புகளால நாம கத்துக்க முடியுற விஷயம் நிறைய…. ஆமாங்க இந்த வயசுல நமக்கு இருக்குற ஆர்வத்த நாம யூஸ் பண்ணிக்கணும்… அப்பத்தான் நாம அறிவாளியா இந்த சமூகத்துல அடையாளப் படுத்தப்படுவோம்.

பிறக்கும் போது ஒண்ணுமே தெரியாமதான் பிறந்தோம். அதுக்கப்பறம் தப்பு தப்பா தவழ்ந்து, தப்பு தப்பா நடந்து, தப்பு தப்பா ஓடி விழுந்து இன்னைக்கு நல்லா  நடந்து ஓட முடியுதுல்ல ! அது போலதான் .

தப்புல இருந்துதான் நல்லது வந்துச்சு… இன்னைக்கு நாம உபயோகப்படுத்துற எந்த ஒரு பொருளும் எடுத்ததுமே சரியா பண்ணதால நமக்கு கிடைக்கல. ஒவ்வொரு நிலையிலயும் தப்பா பண்ணி அப்புறம் அதுல  இருந்த தப்புகளை சரி செஞ்சதால கிடைச்சதுதான் அதெல்லாம்.

சாப்பாட எடுத்துக்குவோம், இன்னைக்கு நாம சாப்புடுற சாப்பாடு பதார்த்தங்கள் எல்லாமே சோதனை முயற்சியா செய்யப்பட்டு தப்பு தப்பா ஆரம்பிச்சு, தப்பா போகும்னே தெரிஞ்சு இன்னைக்கு நாம சாப்புடுற அளவுக்கு உருமாறியிருக்கு. இன்னும் ஆயிரமாயிரம் உணவுகள் இப்படி கண்டுபிடிக்கப் பட்டுகிட்டேதான் இருக்கு.

ஏதாவது பண்ணனும்னு ஆசைப்பட்டு  தவறா செஞ்ச ஒரு காரியத்தாலதான் தாமஸ் ஆல்வா எடிசன் இவ்ளோ பெரிய கண்டுபிடிப்பாளரா விஞ்ஞானியா ஆனாரு…

டேய் சும்மா ஒரு இடத்துல உக்கார மாட்டியா ? எதுக்கு அந்த பையனோட சேருற? வெளியில போயி வெளையாடாத! கண்ட புக்கை எதுக்கு படிக்கிற? ஒழுங்கா ஸ்கூல் புக்கை மட்டும் படி ! இப்பிடி வீட்லயும்

எக்ஸாம் வருது பீ டி  பீரியட் வேணாம் படிங்க!, என்ன என்கிட்டயே கொஸ்டீன் கேக்குற சொன்னத மட்டும் கேளு! இப்பிடி ஸ்கூல்லயும் சொல்றப்போ என்ன பண்ணுவீங்க ?

அவுங்க சொன்னதை மட்டுமே கேட்டுட்டு போறதுல ஒண்ணும் பிரச்சனை கிடையாது. ஆனா அதுனால நீங்க என்ன இழக்கப் போறீங்கனு தெரியுமா? கற்றுக்கொள்ளுதல்! அதைத்தான் இழக்கப் போறீங்க!

இதுல முக்கியமா நாம இன்னொன்னு பாக்கணும். அது என்னன்னா கேள்வி கேக்குறது! யாரைக் கேக்குறது ? யாரை வேணும்னாலும் கேக்கலாம் ஆனா எதுக்காக கேக்கனும்னு யோசிச்சு கேக்கணும். அப்பிடி கேள்வி கேக்குறது மூலமா ஏதாவது கத்துக்க முடியுமா? உண்மைய தெரிஞ்சிக்க முடியுமா? அப்பிடின்னு யோசிச்சு கேக்கணும்

உலகம் சதுரமானதுன்னு சொன்னப்ப ஏத்துக்காம “அது எப்பிடி”ன்னு? கேள்வி கேட்டதாலதான் இன்னைக்கு உலகம் உருண்டைனு தெரிஞ்சிக்கிட்டோம்…. “ஏன் அடிமையா இருக்கணும்?”னு கேள்வி கேட்டதால்தான் நமக்கு சுதந்திரம் கிடைச்சது…வீட்ல அம்மா சமையல் செய்யும்போது கவனிச்சு “எப்பிடி மூடிவச்ச தட்டு மேல எழும்புது?”ன்னு கேள்வி கேட்டனாலதான் ரைட் சகோதரர்கள் ஏரோப்ளேன் கண்டுபிடிச்சாங்க.  இன்னும் இந்த உலகத்துல  அறிவியல் கண்டுபிடிப்புகள், புரட்சிகள் , மாற்றம்னு எல்லாமே கேள்வி கேட்டதாலதான்…

இருட்டுல வெளிய போகாத பேய் பிடிக்கும்னு சொன்னா? ஏன் போக கூடாது? பேய்னா என்ன?னு கேள்வி கேளுங்க. அவங்களுக்கு தெரியலேன்னா வேற யார்கிட்டயாவது கேளுங்க. ஒவ்வொருத்தரும் ஒண்ணு ஒண்ணு சொல்லி கடைசியில  பேய்  இல்லேங்குற பதில் உங்களுக்கு கிடைக்கும். நீங்களும் கேள்வி கேளுங்க , மத்தவங்க கேள்வி கேக்கும்போதும் கவனிங்க.

ஆனா ஒரு விஷயத்த நல்லா புரிஞ்சிக்கணும் கேள்வி கேக்குறது வேற, எதிர்த்து பேசுறது வேற சரியா?

எந்தத் துறை சார்ந்து பேசுறாங்களோ அத சார்ந்து கேள்வி கேளுங்க!  உங்களுக்கு எதுல ஆர்வமோ அத சார்ந்து கேள்வி கேளுங்க!

கேள்வி கேக்க கேக்க நிறைய விஷயம் கிடைக்கும் , அறிவு வளரும் !

“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு.

விளக்கம்:

மணலிலே தோண்டும் கிணற்றில், தோண்டிய அளவுக்கே நீர் ஊறும்; மாந்தருக்கும் அவரவர் முயன்று கற்றதன் அளவுக்கே அறிவும் ஊறிச் சுரக்கும்.

அப்பிடின்னு திருவள்ளுவர் சொல்லியிருக்காரு. அது உண்மையும் கூட !

அதனால நிறைய படிங்க, பாடப்புத்தகம் மட்டுமில்லாம மத்த புத்தகங்களையும் படிங்க, வீட்ல உள்ள தாத்தா பாட்டிகிட்ட அவங்க அனுபவங்கள கேளுங்க… வீட்ல உக்காந்து விளையாடாம வெளிய மைதானத்துல மத்த பசங்களோட சேர்ந்து விளையாடுங்க. நிறைய தெரிஞ்சுக்கோங்க! உங்களுக்கு தெரிஞ்சதை மத்தவங்களுக்கும் சொல்லுங்க!

ஏன்னா அறிவாளிங்க பாடப்புத்தகத்துக்கு வெளிய இருந்துதான் உருவாகுறாங்க !

”மிர்ச்சி” அருண்