என் நண்பன் போல யாரு மச்சான்?

377

ஒரு கேள்வியுடன் துவங்கலாம், உங்கள் வாழ்வில் முதல் தோழன்/தோழி பெயர் நினைவிருக்கிறதா? யோசித்து பார்த்து ஒன்றாம் வகுப்பில் உங்கள் அருகில் அமர்ந்திருந்தவரை நினைத்திருந்தால் அது தவறான பதில். பள்ளி செல்லும் முன்பாகவும் நண்பர்கள் இருக்க வாய்ப்புண்டு. அதற்கு முன்பு யாருடன் பழகினோம் என நினைவில் வைத்திருப்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான். ஆனால் அது நம் பெற்றோரின் நினைவில் இருக்கும். அதற்காக அவர்களிடம் “யார் என்னுடைய முதல் நண்பன்?” என கேட்க வேண்டாம். கேட்க வேண்டிய சரியான கேள்வி வேறு உள்ளது. “நான் முதன் முதலில் யாருடன் சண்டையிடாமல், அடம் பிடிக்காமல் எனது பொம்மைகளை பகிர்ந்துக் கொண்டேன்?” எனக் கேளுங்கள். அதற்கான பதில் உங்கள் உடன் பிறந்தவர்களாக இருக்கலாம், அக்கம் பக்கத்து வீட்டினில் உங்களுடன் வளர்ந்தவராய் இருக்கலாம்.

ஏன் இப்படி கேட்க சொல்கிறேன் என்றால் குழந்தைகளுக்கு அவர்களது பொம்மைகளும் விளையாட்டு சாமான்களும் தான் உலகம், அந்த உலகத்தினுள் சாமானியமாக யாரையும் அவர்கள் அனுமதிப்பதில்லை, யாரை முழுமனதுடன் முதலில் அனுமதிக்கிறார்களோ அவர்கள் தான் அவர்களின் முதல் தோழன்/தோழி. ஏனென்றால் நட்பின் அடிப்படையான ‘பகிர்தல்’ அங்குதானே துவங்குகிறது. அப்படிப்பட்ட முதல் தோழனை நாம் நினைவில் வைத்திருக்கிறோமா? அதிகம் வைத்திருப்பதில்லை. இந்த ஒரு கணம் அவர்களுடனான பசுமையான நினைவுகளை நினைத்து பாருங்கள்.

நட்புக்கான மதிப்பு சமுதாயத்தில் குறைந்துக் கொண்டே போகிறது என்பேன். ஒத்துக் கொள்ள முடிகிறதா? ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் இப்போதெல்லாம் நாம் பலரை பழகாமலேயே நண்பர்கள் என சொல்கிறோம். அதற்கு சிறப்பான உதாரணம் முகநூல் தான். அதில் உங்கள் நட்பு பட்டியலில் இருப்பவர்கள் அனைவருடனும் உங்களுக்கு பழக்கம் உண்டா? முன்பெல்லாம் ஒருவருடன் பழக ஆரம்பித்து, இருவருக்குள்ளும் அதிகபட்ச கருத்துகளில் ஒற்றுமை இருக்கையில் தான் அவரை நண்பர் என்போம். இப்போதெல்லாம் அப்படியா சொல்கிறோம்? ஒருவருடன் அறிமுகம் இருந்தாலே பெருமைக்காகவும், வேறு சில சுயநல காரணங்களுக்காகவும் நண்பர் என்று சொல்லி விடுகிறோம். தற்கால சூழ்நிலையில் பழகும் நண்பர்களை மூன்று வகைக்குள் அடக்கி விடலாம்.

  1. மெய் நண்பர்கள்
  2. பயன் தரும் நண்பர்கள்
  3. மகிழ்வூட்டும் நண்பர்கள்

ஒவ்வொரு வகையாக பார்க்கலாம். முதல் வகை நண்பர்கள் பெரும்பாலும் நமக்கு பள்ளி, கல்லூரிக் காலங்களில் அமைவார்கள். அவர்களுக்கும் நமக்கும் ஒத்த சிந்தனைகள் இருந்தாலும், இல்லாவிடினும் அவர்களை நமக்கு பிடிக்கும். அவர்களுக்கும் நம்மை பிடிக்கும். எந்த ஒரு காரணமோ, எதிர்பார்ப்போ இல்லாமல் அமையும் தோழமை. ஒரு அழகான உறவு. தினசரி எழும்பொழுதே மனம் அவர்களுடன் இருக்கப் போவதை குறித்தே சிந்திக்கும். அவர்களுக்காக எதையும் செய்யத் தயங்க மாட்டோம். அவரும் அப்படித்தான் இருப்பார். படிப்பு முடிந்த பின்னர் இது போன்ற நண்பர்கள் கிடைப்பதெல்லாம் அரிது.

இரண்டாவது வகை எதிர்பார்ப்புடன் பழகுவது. ஏதேனும் ஒரு விஷயத்திற்காக சார்ந்திருப்பது. உதாரணத்திற்கு அவன்(ள்) கணக்கு பாடம் சொல்லித் தருவான்(ள்) என்றோ, அவன் எப்பொழுது கேட்டாலும் கார் இரவல் தருவான் என்றோ, அவனிடம் பணப்புழக்கம் எப்பொழுதும் இருக்கும், ஆத்திர அவசரத்திற்கு பணம் கடனாக கிடைக்கும் என்றோ பழகுவது. இது போன்ற ஏதேனும் சில காரணங்களுக்காக செயற்கையாக நண்பர் என பெயரளவில் விருப்பமின்றி பழகுவது. இது போல் ஏதேனும் ஒரு காரணத்திற்காக நம்மை ஒருவர் சார்ந்திருப்பதும், நாம் ஒருவரை சார்ந்திருப்பதும் யதார்த்தமான ஒன்று. நன்றாக நினைவில் கொள்ளுங்கள். பழகியவர்களிடம் உதவி கேட்பதும், உதவி கேட்பதற்காக பழகுவதற்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு.

மூன்றாவது வகை மகிழ்வூட்டுபவர்கள். அவர்களது அருகாமை நமக்கு பிடித்திருக்கும். அவர்கள் பேச்சு மூலமோ, மற்றவர்களை கிண்டலடித்தோ, ஆடியோ, பாடியோ ஏதேனும் செய்து நம்மை மகிழ்ச்சியாக, உற்சாகமாக வைத்திருப்பார்கள். இவர்களுடன் பல விஷயங்களில் நாம் ஒத்துப் போகாவிட்டாலும், இவர்களது அருகாமையை மனம் விரும்பும். நம் மனம் கவலையுறுகையில், குழப்பமடைகையில், அழுத்தத்தில் இருக்கையில் இவர்களைத்தான் நாடும். இதுவும் ஒருவகை காரணத்திற்காக பழகுவது தான் என்றாலும் இரண்டாம் வகையில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்றால் இரண்டாம் வகை என்றாவது ஒரு நாள் கிடைக்கும் பலனுக்காக பழகுவது, மூன்றாம் வகையில் தினசரி எதிர்பார்ப்பு. அவ்வளவுதான் வித்தியாசம்.

மேலே குறிப்பிட்டுள்ள நண்பர்களை வகைப்படுத்தியது முழுக்க முழுக்க ஒத்த பாலின நண்பர்களை, அதாவது ஆண் – ஆண். பெண் – பெண் வகை நண்பர்களை. எதிர்பாலின நட்பை அதாவது ஆண்-பெண் நட்பை எப்பிரிவில் சேர்க்கலாம் என்றால் தாராளமாக மூன்றாம் வகையில் சேர்க்கலாம். ஒரு பெண் தன் தோழனுடனோ, ஒரு ஆண் தன் தோழியுடனோ இருக்கையில் கிடைக்கும் உற்சாகம் ஒத்த பாலின நட்பைக் காட்டிலும் பல மடங்கு அதிகமானது. அதனால் தான் மூன்றாம் வகை என்கிறேன்.

உடனே “நட்பு முதல் காதல் வரை” என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். தோழமை என்பது காதலை தாண்டிய விஷயம். தோழமை தனியாக வாழும். தோழமை இல்லாமல் காதல் வாழ்வதில்லை. அதேபோல் நண்பர்களுக்கு காதலை போன்ற வயது வரம்பு, திருமணமாகமலிருத்தல் போன்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது. 55 வயது முதியவரும் 10 வயது சிறுமியும் நண்பர்களாய் இருக்க முடியும். நீங்கள் ஆணாக இருக்கும் பட்சத்தில் உங்களை விட மூத்த பெண்களுடன் நட்பாக பழகுவது உங்களுக்கு பல புரிதல்களை கற்றுத்தரும். சொல்லப்போனால் உங்கள் வீட்டுப் பெண்களின் உணர்வுகளை கூட புரிந்துக் கொள்ள சொல்லித் தரும்.

மிகவும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் சினேகம் என்பது பகிர்தல், எதை பகிர்வது என்றால் அனைத்தையும் தான். உங்களது சுகம், துக்கம், உற்சாகம், அழுகை, கொண்டாட்டம் எதுவாக இருந்தாலும் அதில் சமபங்கு உரிமை உடையவர்கள் தான் நண்பர்கள். மிகவும் உன்னதமான உறவாக பார்க்கப்படும் நட்பிலும் பிரச்சனை வராமல் இருப்பதில்லை. சுயநலம் மிகுந்த இச்சமுதாய்த்தில், துரோகம் என்பது மிக சாதாரணமாகி விட்ட நிலையில், நண்பர்கள் மட்டும் எந்த நிலையிலும் மாறாமல் இருப்பார்கள் என எப்படி நம்ப முடியும்? மற்ற உறவுக்ள் எப்படியோ, நண்பர்களை கடைசி வரை நண்பர்களாக நீடிக்க செய்ய ஒரு விஷயத்தை முன்னெச்சரிக்கையாக கடைபிடிக்கலாம்.

அது நண்பருக்கு நீங்கள் தரும் சுதந்திரம். அவரை நண்பராகவே நீடிக்க செய்வதையும், துரோகியாகவோ/எதிரியாகவோ மாற்றுவதையும் நீங்கள் அவருக்கு தரும் சுதந்திரமே தீர்மானிக்கும் காரணியாகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கூடுதலாகவோ, குறைவாகவோ அளிக்கப்படும் சுதந்திரமானது நண்பர்களை உங்களை விட்டு விலக்கிச் செல்லும் என்பதனை மட்டும் நீங்கள் மனதில் வைத்துக் கொண்டால் போதும்.

ஒருவருடன் புதிதாக, நட்பாக பழகுவது ஒன்றும் கடினமான செயல் இல்லை, அவருடன் இறுதி வரை பழகுவதுதான் முக்கியமானது. பணம், பதவி, உறவுகளை கடந்து முக்கிய சாதனையாக கருதப்படுவது, வாழ்வில் ஒரு நண்பரையாவது தொலைக்காமல் இறுதி வரை வைத்திருப்பது. அது முழுக்க முழுக்க நம் கைகளில் மட்டும் தான் இருக்கிறது. நட்பில் மட்டும் தான் சமநிலை கண்டிப்புடன் கடைபிடிக்க படுகிறது. இங்கு உங்களுக்கு விருப்பமானதை கொடுக்க வேண்டும், வேண்டாமென்பதை வாங்கி பகிர வேண்டும். உணர்வுகளை சொல்கிறேன்.

நல்ல நண்பர் என்பவர் நல்ல கவனிப்பாளர். பல நேரங்களில் நண்பர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது நமது நேரத்தைத்தான். அவர்களது சுக, துக்கங்களை காது கொடுத்து கேட்க வேண்டும். அது போதும், தூய்மையான அன்பினை பெற. அதற்கு போன தலைமுறை காலத்தை போல அருகாமையில் இருக்க வேண்டும் என்று கூட அவசியமில்லை. சீரான கால இடைவேளையில் தொலைபேசியிலோ இணையம் வயிலாகவோ உரையாடுவது கூட நட்பினை வாழ வைக்கும். சாய்வதற்கு ஒரு தோள், அதைத்தானே நட்பு எதிர்பார்க்கிறது…!

நட்பு குறித்து தமிழில் பல திரைப்படங்கள் வந்துவிட்டன. இருந்தாலும் என்னை சிந்திக்க வைத்த ஒரு படத்தின் காட்சியை குறித்து பேச விரும்புகிறேன். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ என ஒரு திரைப்படம், அதில் காதலியை மறந்திருக்கும் நாயகன், நண்பன் சொல்கிறான் எனும் ஒரே காரணத்திற்காக, அவனை பொறுத்தமட்டில் யாரென்றே தெரியாத ஒரு பெண்ணிற்கு தாலி கட்டுவான். அதைப் பார்க்கையில் எனக்குள் ஒரு கேள்வி தோன்றியது. என்னவென்றால் உங்கள் நண்பர்களில் யார் சொன்னால் இது போன்றாதொரு காரியத்தை நீங்கள் செய்வீர்கள்? அதே போல் நீங்கள் சொன்னால் யார் அதை யோசிக்காமல் செய்வார்? உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். அப்படி ஒருவர் இருந்தால் அவர் உங்களுடைய மிகப்பெரிய சொத்து. பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படியெல்லாம் பட்டியல் போட்டு, பரிட்சை வைத்து பார்த்து நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என சொல்வதாய் குழப்பிக் கொள்ள வேண்டாம். இது போன்ற நண்பர்களை கவனமாய் பார்த்து கொள்வது ஒரு பக்கம் இருக்கட்டும், நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது தான் மிக முக்கியமானது. அது குறித்து ஒரு கதை. பலர் ஏற்கனவே கேட்டிருக்க வாய்ப்புண்டு. சுருக்கமாக பார்ப்போம்.

ஒரு குளிர்பதன தொழிற்சாலையில் பணிபுரிபவர், தவறுதலாக கிளம்பும் நேரத்தில் குளிர்பதன கிடங்கினுள் மாட்டிக் கொள்கிறார். அவர் உள்ளிருப்பது தெரியாமல் வெளிப்பக்கம் சாத்திவிட்டு அனைவரும் கிளம்பி விடுகிறார்கள். நேரம் ஆக ஆக, குளிர் அதிகரிக்கிறது. உள்ளிருப்பவருக்கு உடல் சில்லிட்டு விறைக்க துவங்குகிறது. மூச்சு விடுவதே சிரமமாகிறது. இறக்க போகிறோம் என அவர் மொத்த நம்பிக்கையையும் இழக்கும் தறுவாயில் கதவு திறக்கப்படுகிறது. அந்த தொழிற்சாலை வாயிற்காவலர் உள்ளே வந்து அவரை தூக்கிக் கொண்டு வெளியே சென்று காப்பாற்றுகிறார். “நான் உள்ளே இருந்ததை எப்படி கண்டுபிடித்தீர்கள்?” என்ற கேள்விக்கு அவர் “தினசரி நீங்கள் மட்டும் தான் காலையில் வருகையிலும், மாலையில் செல்கையிலும் என்னைப் பார்த்து என் வணக்கத்திற்கு சிரித்த முகமாய் பதில் வணக்கம் சொல்வீர்கள். அதனாலேயே தினமும் குறித்த நேரத்திற்கு உங்களை என் மனம் எதிர்பார்க்கும், இன்று காலை உள்ளே வந்த நீங்கள் வெளியே செல்லவில்லை, அதனால் தான் உங்களை தேடி கண்டு பிடித்தேன்” என்கிறார்.

இக்கதையில் அவரை காப்பாற்றியது எது? தினசரி அவர் தந்த அந்த சினேகமான புன்னகை. இது தான் மிக முக்கியமானது. உயிர் சினேகிதர்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதே சமயம் பார்க்கும் அனைவரிடமும் சிக்கனம் பாராமல் சினேகத்தை பரப்புங்கள். அதற்கு பெரிதாய் மெனக்கெடத் தேவையில்லை. ஒரு சினேகமான புன்னகை, போதும். வாழ்க்கை அழகாகும்.

என்றும் நட்புடன்

கதிரவன்