அங்கீகாரம் இழந்த கட்சிகள்

71

தே.மு.தி.க. 104 தொகுதியிலும் போட்டியிட்டு அனைத்திலும் டெபாசிட் இழந்தது. 2.4 சதவீதம் ஓட்டுகளே கிடைத்தது.

ம.தி.மு.க.வுக்கு 0.9 சதவீதமும், விடுதலை சிறுத்தை, இந்திய கம்யூனிஸ்டுக்கு தலா 0.8 சதவீதமும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு 0.7 சதவீதமும் கிடைத்தன.

இதனால் இந்த கட்சிகள் மாநில அங்கீகாரத்தை இழக்கின்றன. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் பரிசீலித்து வருகிறது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும் என்று தெரிகிறது.

2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகியவை மட்டுமே தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற்று இருந்தன.

கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா ஆகிய மாநிலத்தில் பெற்ற பலம் காரணமாக மார்க்சிஸ்டு தேசிய அங்கீகாரத்தை தக்க வைத்தது.

தற்போது தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததால் தேசிய கட்சி என்ற அங்கீகாரத்துடன் இருக்குமா? இல்லையா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழக்கும் போது அந்த கட்சியின் சின்னமும் முடக்கப்படலாம்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனிடம் இது பற்றி கேட்டபோது, கேரளா, மேற்குவங்காளம், திரிபுராவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சிறப்பாகவே இருக்கிறது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மாகி தொகுதியில் எங்கள் ஆதரவு சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். இதனால் தேசிய கட்சி அங்கீகாரத்தை இழக்க மாட்டோம் என்றார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 2011 சட்டமன்ற தேர்தலில் 12 இடங்களில் போட்டியிட்டு 10 தொகுதியில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோற்றது.

இதில் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே மாநில அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள இயலும். தமிழகத்தில் ஏற்பட்ட இந்த தோல்வியால் மார்க்சிஸ்ட கம்யூனிஸ்டு தலைமை மிகுந்த அதிர்ச்சியை அடைந்துள்ளது.

அகம்