விழிப்பு

67

மாலைப் பொழுது சூரியனே இல்லாத நிர்மூலமாக செஞ்சாயத்தை மறைத்து கருமை நிறத்தை வாரி இறைத்திருந்தது வானம். நடைப்பயணத்தை பாதியிலேயே துண்டித்த லாரன்ஸ் தனது பேரன் சிவாவை அழைத்துக்கொண்டு சட்டென்று வீட்டை நோக்கி சென்றார். அங்கு இளைய பேரன் டேனியல் தாத்தாவைக் கண்ட மகிழ்ச்சியுடன் ஓடி வந்து ஒட்டிக்கொண்டான். மருமகள் தேவியும், மனைவி மேரியும் ஏதோவொரு தொலைக்காட்சியில் மாமியார், மருமகள் சண்டைக் காட்சியை ஒற்றுமையுடன் நோக்கிக்கொண்டிருன்தனர்.

மகன் ஜேம்ஸ் அலுவலகத்திலிருந்து வரும் வரைக்கும் தான் இந்த நாடகச் சட்டம் எல்லாம். பிறகு ஏதாவதொரு பழைய கிரிக்கெட் மேட்ச் ஓட ஆரம்பித்துவிடும். இதற்கிடையில் லாரன்ஸ் ஒரு பார்வையாளர் தான். தனக்கென்று தொலைக்காட்சி நேர ஒதுக்கீடு செய்யாத ஒரு நபர் உண்டென்றால் அது லாரன்ஸ் மட்டும் தான் . அவ்வபொழுது சிவாவும், டேனியலும் கூட போகோவைச் சுவைத்துப் பார்ப்பார்கள். லாரன்ஸ் இராணுவத்தில் பணி ஓய்வு பெற்றதிலிருந்து உபயோகமாகப் பொழுதைக் கழிக்க எண்ணியவர். அதனாலோ என்னவோ அவருக்கு இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி எல்லாம் தொல்லைக் காட்சிகளாகும்.

இருந்த ஒரு மகனின் காதல் திருமணத்தை அவன் விருப்பப்படியே வேற்று மதம் என்று பாராமல் திருமணம் நடத்தி வைத்து ஒவ்வொரு பேரக் குழந்தைக்கும் ஒரு மதப் பெயரைச் சூட்டி மருமகளின் எதார்த்த உள்ளுணர்வையும் புரிந்துகொண்ட மாமனிதராக அந்த வீட்டில் வலம் வரும் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி.

லாரன்ஸ் தான் என்றுமே ஜேம்ஸுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பவர். அதைத் தான் லாரன்ஸும் விரும்பியவர் தான் பணியாற்றிய பொழுதுகளில். தன் மகனும் தன்னைப் போல இராணுவ அதிகாரியாகி நாட்டுக்குச் சேவை செய்யவேண்டும் என்று முத்தாய்ப்பாக எண்ணிக்கொண்டிருந்த சமயம். ஆனால் படித்துக் கொண்டிருந்த சமயத்திலேயே ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் தேர்ச்சி செய்யப்பட்டான். அத்துடன் படிப்பு முடிந்த கையுடன் பட்டம் வாங்குவதற்கு முன்பே ரிஜிஸ்தர் ஆபிஸில் தேவியை திருமணம் செய்துகொண்டு வந்த தனது மகனை வழக்கமான அப்பாவைப் போலத் துரத்தி விடாமல் ஊரறிய ஒருமுறை திருமணம் செய்துவைத்த நவீன காலத் தந்தைக்கு தலையாய உதாரணமாக இருந்த அவரை தேவியும் அப்பாவென்றே அழைப்பாள்.

வீட்டிலுள்ள எல்லாருக்கும் சிவாவும், டேனியலும் தான் இரு கண்கள். சிவாவுக்கும் டேனியலுக்கும் அப்படித்தான், இருவரும் அம்மா அப்பாவைப் பிரிந்து கூட வருடக்கணக்கில் இருந்துவிடுவார்கள். ஆனால் தாத்தாவையும் பாட்டியையும் பிரிந்து ஒரு கணம் கூட இருக்க மாட்ட்டார்கள். இதற்குக் காரணம் இரவில் அவர்கள் சொல்லும் கதையும் பாட்டும் தான்.

ஜேம்ஸுக்கும் தேவிக்கும் எங்கு அதற்கெல்லாம் நேரம்?, ஜேம்ஸுக்கு வீட்டிற்கு வந்தாலும் அலுவலகச் சொச்சங்கள் சிறிது ஒட்டிக்கொண்டு இருக்கும் பைல்கள் எனும் பெயரில். தேவிக்கோ வீட்டு வேலைகளை முடிக்கவே நேரம் சரியாயிருக்கும். முழுதாக முப்பதைத் தாண்டாத இவர்கள் இருவரும் கொஞ்சிக்கொள்ளக் கூட நேரம் அவ்வளவாய் இருக்காது இந்த இயந்திர உலகத்தில். அதை மீட்டுத் தருவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் லாரன்ஸ் தனது அறையில் பேரக்குழந்தைகளை அழைத்து வைத்துச் சொல்லும் கதைகள் என்றால் அது மிகையாகாது.

ஒவ்வொரு இரவும் தன்னோடு பேரக்குழந்தைகளை தூங்க வைப்பதில் லாரன்ஸுக்கும் மேரிக்கும் பிரியமும் தான். குழந்தையின் மழலைப் பேச்சைக் கேட்க யாருக்குத்தான் விருப்பமிருக்காது. இருந்தாலும் லாரன்ஸுக்கு உள்ளூர ஒரு ஆசை, சிவாவை எப்படியாவது ஒரு இராணுவ வீரனாக்கிப் பார்க்கவேண்டுமென்று. அதற்காகத் தானோ என்னவோ தினமும் வீரதீரக் கதைகளைச் சொல்வதோடு நில்லாமல் தேசிய சம்பந்தப்பட்ட கதைகளையும் நீதிநெறி போதனைக் கதைகளையும் தெரிந்தெடுத்து கூறி மகிழ்வார். மாறாக இருவரும் தாத்தா கூறும் கதைகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து நன்மை தீமை குறித்து விளக்குவதுண்டு. அதிலும் சிவா படுச்சுட்டி, கதையில் அசாம்பாவித காட்சி வருகிறதென்றால் கதையையே மாற்றுங்கள் என்று தாத்தாவிடம் வம்பு செய்வான். அவரும் அவனிடம் இந்தக் கதை எதற்கு உருவாக்கப்பட்டதென்று காரணம் கூறி அந்தத் தீமையைச் செய்யாதிருக்க வேண்டும் என்று அன்புக் கட்டளை பிறப்பிப்பார்.

அப்படித்தான் அன்றைய இரவும் ஆரம்பித்தது. ஆளுக்கொரு கவளம், இட்லியை மசித்து ஊட்டிக் கொண்டிருந்தாள் தேவி. இரண்டையும் சாப்பிட வைப்பதற்குள் அவள் இருநூறு பேருக்கான இட்லியே அவித்துவிடுவாள்! ..ஆமாம், அவ்வளவு சிரத்தை அவர்களைச் சாப்பிட வைப்பதற்கு எடுத்துக்கொள்ளத் தான் வேண்டும் என்பது அவர்கள் தெருவே அறிந்த உண்மை. அவர்கள் தெருவிற்கே குழந்தைகள் கணக்கிற்கு சிவாவும், டேனியலும் தான் என்பதால் அனைவருக்கும் இருவரும் செல்லம்.

அதனால் தான் என்னவோ எல்லார் வீட்டிலும் கோகுலாஷ்டமி என்றால் இவர்களின் கால்தடம் தான் பதிந்திருக்கும். இருவரும் ஒருவழியாகச் சாப்பிட்டு விட்டு தாத்தாவின் அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அப்பொழுது கீழே ஓடும் கரப்பான் பூச்சியை அடிக்க டேனியல் பக்கத்திலிருந்த விளக்கமாரைக் கையில் எடுத்தான். எப்பொழுதோ அம்மா அடிக்கும் பொழுது பார்த்த ஞாபகம்தான் . உடனே சிவா, அதைத் தடுத்தவனாய் ”பூச்சியைக் கொள்ளுறது பாவம் ” என்று , கொஞ்சம் தமிழைக் கொஞ்சும் மொழி பேசிக் கொன்று விட்டு தம்பியை அழைத்துக் கொண்டு தாத்தாவின் அறையின் தாழ்ப்பாளை வழக்கம் போல கிளுக்கி விட்டு முதலாவதாக ஓடிப் போயி தாத்தா அருகில் அமர்ந்தான்.

டேனியலுக்கு பாட்டி தான் பிடிக்கும் என்பதற்காகவே. பாட்டியின் அருகில் சென்று மடியில் படுத்துக்கொண்டு கையை வீசி சிவாவை அடித்து விளையாண்டுகொண்டு இருந்தான். மெல்ல தொண்டையை சரி செய்த லாரன்ஸ், “பசங்களா இன்னைக்கு நம்ம புதையல் கதையைப் பத்தி பாக்கப்போறோம். ரெடியா இருங்க” என்றவராய் தனது அலமாரியிலிருந்து ஒரு பழைய சிறுவர் கதைகள் புத்தகத்தை எடுத்தார் .

”ஐ ஜாலி” என்றவனாய் சிவா ஆரவாரம் செய்தான். ஆனால் டேனியலுக்கு அப்படியில்லை ஏனென்றால் புதையல் என்ற வார்த்தையை அவன் கேட்பதே இது தான் முதல் முறை. புத்தகத்தை எடுக்கும் பொழுது தவறுதலாக சில காகிதங்களும் மெத்தையில் சிதறிக்கிடந்தது . அதை சிவா எடுத்து ஒவ்வொன்றாக பார்த்தான் ஒன்றும் விளங்கவேயில்லை. சரியென்று அப்படியே கையில் இறுக்கிப் பிடித்துக் கொண்டான். லாரன்ஸ் கதையைப் படிக்கும் முன்பாக தனது மூக்குக் கண்ணாடியை டிராயரில் இருந்து எடுத்து மூக்கின் நுனியில் ஓட்டிவைத்தார் போல மெல்லச் சொருகி வைத்தார். பிறகு கதையை ஆரம்பித்து, அதுவும் சுவாரசியமாகச் சென்று கொண்டிருந்த நேரம்.

“மண்ணிற்குள் இருந்த பெட்டியை குப்பன் தூக்கி எடுத்துப் பார்த்தான். தூக்கி வாரிப் போட்டது . அதில் வைரமும் வைடூரியமும் நிறைந்திருந்தன “என்று கதைக்குள் அவர்களை லாரன்ஸ் இழுத்துச் சென்று கொண்டிருதார் .உடனே சிவா குறுக்கிட்டு , “அது எப்டி தாத்தா மண்ணுக்குள்ள பெட்டி இருக்கும்?” என்றவனாய் லாரன்ஸை உற்று நோக்கினான் . சிவா இப்படி கேள்வி கேட்பதென்பது லாரன்ஸுக்கு புதிதல்ல, இருந்தாலும் இதை அவர் அலட்சியம் செய்யமாட்டார் .

டேனியலுக்கு இப்படி குறுக்கிடத் தெரியாது . இன்றும் அவன் அதையே பின்பற்றினான். ஏனெனில் பாதியிலேயே அவன் தூங்கி விடுவதே வாடிக்கை. அவனுக்கு வரும் சந்தேகத்தை நீதி நெறி மூலம் தெளிவாக விளக்க வேண்டும் என்று லாரன்ஸ் நினைப்பதாலோ என்னவோ அவன் சந்தேகத்தில் கூர்மையை உபயோகிப்பார். பிறகு ஆரம்பித்த லாரன்ஸ் “மண்ணுக்குள்ள பாதுகாப்புக்கு புதைக்கிறது வழக்கம் “ என்றார். மீண்டும் அவன் “அப்போ மண்ணுக்குள்ள புதைக்கிறதெல்லாம் நல்லதா தாத்தா ?” என்றவனாய் இரு கன்னத்தில் கைவைத்துக் கொண்டான்.

“அப்படின்னு இல்ல கண்ணு, தேவையில்லாததையும் புதைப்பாங்க, உபயோகப்படாததுன்னு கூட வச்சுக்கலாம் “ என்றுவிட்டு திரும்ப கதைக்குள் சிவாவை இழுத்துச்சென்று சங்கமித்தார். அப்பொழுது கதைக்குள் சிவாவும் வர ஆரம்பித்தான். ஏனென்றால் தாத்தா கூட்டிக்கொண்டு சென்ற புதையல் தீவு அப்படி தான். அடர்ந்த மலைக்குள், யாருமில்லா வனத்துக்குள், காட்டுக் குதிரைகளின் கனைப்புச் சத்தங்கள், குரங்கின் கீச்சல்கள் மற்றும் இல்லாமல் ஆற்று வெள்ளத்தின் ஆர்ப்பரிக்கும் சத்தத்திலும் அந்த சிலிர்ப்பிலும் தாத்தா சிவாவைக் கொஞ்சம் நனைய வைத்தார். அவ்வபொழுது மரம் அசையும் விதத்தையும் இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டு ஆடிக்காட்டினார். இருந்தும் சிவாவிற்கு கதையில் முழுக்கவனம் வரவில்லை .

லாரன்ஸின் வருணனையை நிறுத்தியவனாய்க் கேட்டான் , ”தாத்தா தேவையிருக்கதை புதைச்சா திரும்ப எடுத்துக்கலாமா ?” என்று கேட்டுவிட்டு கையைப் பார்த்தான். இப்பொழுது அவன் மனது விடை அறியும் ஆவலில் தவித்துக் கொண்டிருந்தது.

லாரன்ஸுக்கு பேரன் எதைக்குறித்துக் கேட்கிறான் என்று குழப்பம் இருந்தாலும்,”ம்ம் எடுத்துக்கலாம் கண்ணு , ஆனால் பத்திரமா வைக்கணும் “ என்று அவனைப் பார்த்துக் கண்களை உருட்டி சொல்லிக்கொண்டிருந்தார்.

சிவா குறுக்கிட்டு, “அப்போ கண்ணையும் வைக்கலாமா” ? என்று கேட்டுவிட்டு மூடிய கைகளை விடுவித்தான். அவன் கைக்குள் வைத்திருந்த காகிதம் ஈரத்தில் நனைந்திருந்தது. அதைப் பிடித்ததில் சிவாவிற்கும் கைகள் மரத்திருக்க வேண்டும் அதனால் தான் அதை விடுவித்தான்.

“கண்ணா ?? என்ன சொல்ற சிவா “ என்றவாறு லாரன்ஸ் அந்தக் காகிதத்தைப் பிரித்துப் பார்த்தார் .அதில் “டொனேட் யுவர் ஐஸ் , டோன்ட் பரீடு “ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்ததோடு கண்களை மண்ணில் புதைப்பது போல படம் அச்சிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த லாரன்ஸ் மனதில் ஏதோவொரு கவன ஈர்ப்பு வந்தவராய், சிவாவின் சந்தேகத்திற்கு இது தான் காரணம் என்பதை உணர்ந்தார்.

மீண்டும் அதற்குள் தாமதிக்காமல், ”கண்ணைப் புதைக்கலாமா ? தாத்தா சொல்லுங்க “ என்றவனாய் அந்தக் காகிதத்தையும் அவரையும் உற்று நோக்கினான். “இல்லப்பா இல்ல கண்ணை புதைக்கக் கூடாது. அத அடுத்தவங்களுக்கு குடுத்து உதவலாம். அதைத் தான் இந்தக் காகிதத்துல சொல்லிருக்காங்க “ என்றவாறாக அதைக் காட்டி விளக்கினார்.

“எப்படி தாத்தா அப்டிக் குடுக்கலாம் ? ஏன் அப்டிக் குடுக்கச் சொல்றங்க ? எதுக்கு இந்த பேப்பர்? என்றவனிடம் கொஞ்சம் கொஞ்சமாக விளக்கினார். கண் தானம் என்ற வார்த்தையே சிவாவின் காதுகளில் முதன் முதலாக விழுந்தது தான் தாமதம், உடனே “நீங்க கண்தானம் பண்ணியாச்சா தாத்தா “ என்று சொல்லிவிட்டு அந்தக் காகிதத்தை வாங்கிப்பார்த்தான்.

விழித்துகொண்ட லாரன்ஸ் “நாளைக்கு பண்ணப் போறேன், போறப்போ உன்னையும் கூட்டிட்டு போயிக் காமிக்குறேன் “ என்று சொல்லிவிட்டு மீண்டும் சிவாவை புதையல் தீவிற்கு அழைத்துச் சென்றார் .

செல்வக்குமார் சங்கரநாரயணன்