சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததா தமிழ்?

135

நண்பரனின் முகநூல் பக்கத்தில் கீழ்க்கண்ட பதிவை பார்த்து அதிர்ந்து போனேன்.

“தமிழால் தமிழ்குடி சித்தநாதர்களால் சமைக்கபட்டதே சமஸ்கிருதம் ஆதாரம் -திருமந்திரம்” என்ற அவரின் அந்த சிறிய பதிவு திருமந்திரத்தின் மீது என்னுடைய ஆர்வத்தை தூண்டியது. படிக்கத் தொடங்கினேன். படித்தவற்றில் இருந்து சில விளக்கங்களைக் தந்து இருக்கிறேன்.

”நண்பர் பதிவின் ஊடாக ஆரியபார்ப்பனீயமும், தமிழும் ஒன்றோடு ஒன்று கலந்தது தான் என்று நிரூபிக்க முயலுக்கின்றார். அப்படி ஆரியமும், தமிழும் ஒன்றாய் கைக்கோர்த்து இருக்கின்றன என்று நிருபிப்பதன் மூலம் அவர் அடைய விரும்பும் நிலையாது? மத்திய பிஜேபி அரசு விரும்பும் சமஸ்கிருத திணிப்பையா விரும்புகிறார்? அதற்கு, அவரின் நோக்கத்துக்கு திருமூலரின் திருமத்திரம் தான் கிடைத்ததா? திருமந்திரத்தில் உள்ள பாயிரங்கள் எல்லாவற்றையும் திருமூலர் அவர்கள் எழுதியது இல்லை என்பதனை ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன். மீண்டும் விளக்குகிறேன். ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட திருமூலரின் பாடல்களில் எப்படி பிள்ளையார் வந்து இருக்க முடியும்? வரமுடியாது அல்லவா? அப்படி என்றால் அந்த திருமந்திரத்தில் உள்ள வினாயகர் பாடல் பிற்காலத்து பார்ப்பனர்களின் அல்லது பார்ப்பன அடிமைகளின் இடைச்சொருகல்கள் தான் என்று தானே கூறுகிறேன். அப்படி விளக்கிய பின்னும் திருமூலர் யார் என்று கேட்கின்றீர்கள். சரி கூறுகிறேன்….

திருமந்திரத்தில் திருமுலர் அவர்கள் எழுதாத பிறரால் திணிக்கப்பட்ட இடைச்சொருகல்களான விநாயகர் காப்பு, பாயிரத்தில் சில, தற்சிறப்புப் பாயிரத்தில் சில ஆகியவற்றை தவிர்த்து அவரின் 9 மந்திர தலைப்புகளில் உள்ள பாடல்களை படித்துப்பாருங்கள். திருமூலரின் அருமை உங்களுக்கு தெரியும்… ஆரிய பார்பனியத்துக்கும், தமிழுக்கும் இடையில் உள்ள போராட்டம் சங்கம் மருவிய 5ஆம் நூற்ராண்டில் தொடங்கி இன்று வரை தொடர்வது தெரியும்.

உதாரணத்துக்கு என்னால் பலவற்றை கொடுக்க முடியும்…

ஆறங்க மாய்வரு மாமறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய் தப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. – வேதச் சிறப்பு-திருமூலர் இயற்றிய திருமந்திரம், செய்யுள்:66

(ப . இ.) அறுவகைச் சமயங்களையும் ஆறங்கங்களாகக் கொண்டு திகழும் தமிழ் மாமறையினை ஓதியருளிய சிவபெருமானை மண்ணகத்தார் உய்யப் பெண்ணொரு கூறாகத் திகழும் அவன்தன் பேரருட் குணத்தைத் திருவடியுணர்வோடு ஓதியுணர்வார் இல்லை. இவ்வுண்மை தொன்மையது, நன்மையது, மென்மையது, அழியாவிழுமியது, முழுமையது என உணராது அயன்மொழி அங்கங்களையும் வேதங்களையும் அவையே பேறெனக் கொண்டு பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்குகின்றார்கள்.

தமிழ் மொழியினை விலக்கி வைத்துவிட்டு அயன்மொழியில் அதாவது, சமஸ்கிருதத்தில் அவையே பேறெனக் கொண்டு பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்குகின்றார்கள் என்று கடுமையாக திருமூலர் சமஸ்கிருத வேதங்களை சாட்டுவது அவர்களுக்கு புரியாவில்லையா?.

மேலும் கீழ் உள்ள பாடலை கவனிக்கவும்…

மூடம் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளின்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடொன்று இலனாகும் ஆதலால் பேர்த்துணர்ந்து
ஆடம்பர நூல்சிகை அறுத்தல் நன்றே.
திருமூலர் இயற்றிய திருமந்திரம், செய்யுள்:98

மூடப் பார்ப்பனர்களின் பூணூலை அறுத்தால் நன்மை விளையும் என்கிறார் இப்பாடலில் திருமூலர். பூணூலை அறுக்கச் சொல்கிறார் திருமூலர். செயலில் காட்டி விட்டார் பெரியார். ஆரிய பார்ப்பனிய எதிர்ப்பு என்பது எல்லா காலகட்டத்திலும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை. திருமூலரை தொடர்ந்து.., பெரியார் வரையில் வேறு வேறு வகைகளில் வேறு வேறு சித்தாந்தங்களில், வேறு வேறு சிந்தனைகளில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

இரு வேறு மொழிகளை அதுவும், எதிர் எதிரான மொழிகளை இணைக்க முயலுகிறார்கள். ஆரியப்பார்பனீய சமஸ்கிருதம் தமிழ் நாட்டுக்குள் வந்தேறிய ஒன்றாகும். அதனை எந்த வடிவில் தமிழ் மொழியுடன் நீங்கள் தமிழ் மொழியுடன் இணைத்தாலும் அது தமிழ் நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் செய்யும் தீங்கான செயல் தான் அன்றி வேறு இல்லை…..

கி.செந்தில் குமரன்