வாக்கு எண்ணும் இடங்கள்-சென்னை

41

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் அமைதியாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

ஓட்டுப்பதிவு முடிந்த பின்னர் ஓட்டு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு நள்ளிரவு கொண்டு செல்லப்பட்டன. சென்னையில் 3 இடங்களில் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.

அங்குள்ள பாதுகாப்பு அறையில் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறைக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராணி மேரி கல்லூரியில் ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 தொகுதிகளின் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இந்த தொகுதிகளின் ஓட்டு பெட்டிகள் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதைப் போலவே லயோலா கல்லூரி மையத்தில் பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

நள்ளிரவு அனைத்து ஓட்டு பெட்டிகளும் இந்த மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு அறைக்குள் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

மற்றொரு மையமான அண்ணா பல்கலைக்கழகத்தில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மைலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளின் வாக்கு பெட்டிகளும் போலீஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணக்கூடிய 3 மையங்களிலும் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெப் கேமரா மூலமும் தேர்தல் ஆணையம் இதனை கண்காணிக்கிறது.

ஓட்டு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில் ஒவ்வொரு மேஜைக்கும் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்படுகிறது. கண்காணிப்பு கேமராக்களை இணைத்து கட்டுப்பாட்டு அறை செயல்படும்.

வாக்கு எண்ணும் பணி நாளை மறுநாள் (19-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த பணியில் 1552 ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். வாக்கு எண்ணும் இடத்திற்கு வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்போன் பயன்படுத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 100 மீட்டர் தாண்டிதான் கட்சி தொண்டர்கள் நிற்க அனுமதிக்கப்படுகிறது.

அகம்