நீதிமன்ற சவுக்கடியில் மத்திய அரசு

68

சூரியனின் தேசம், ஆர்கிட் மலர்களின் பூங்கா என்று பெருமையுடன் அழைக்கப்படும் அருணாச்சல பிரதேசத்தின் அரசியல் குழப்பங்கள், இன்று உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பால் மீண்டும் சகஜ நிலைமைக்கு திரும்புகிறது.

அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதும், பின்னர் அது நீக்கப்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றதும் செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

நபாம் துகி தலைமையிலான காங்கிரஸ் அரசு கலைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியது.

ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா, முன்கூட்டியே சட்டமன்றத்தை கூட்டியதும், அதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைத்ததும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைத்த ஆளுநரின் முடிவுகள் அனைத்தையும் செல்லாது என்று அறிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், 2015ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும் தங்களின் தீர்ப்பில் உத்தரவிட்டனர்.

வரலாற்று முக்கியத்துவமிக்க உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், தற்போது அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள கலிக்கோ புல் தலைமையிலான மத்திய அரசின் ஆதரவு பெற்ற அரசு செல்லாததாகிவிட்டது !.

2015ஆம் ஆண்டு டிசம்பர் 15க்கு முந்தைய நிலை தொடர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருப்பதால், நபாம் துகி தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசே ஆட்சியை தொடரும் வாய்ப்பு வழங்கபட்டுள்ளது.

நடந்தது என்ன ?

அருணாச்சல பிரதேச முதல்வராக இருந்த நபம் துகிக்கு எதிராக கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 14 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் சில எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் 60 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் கட்சி பலம் இழந்ததாக கவர்னரால் அறிவிக்கப் பட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 47 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இந்த களேபரங்களுக்குப் பின்னர் 26 எம்.எல்.ஏ.க்கள்தான் முதல்வர் நபம் துகியை ஆதரித்தனர். அதே நேரத்தில் பாஜக ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பலம் 34 ஆனது. இதனால் அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அறிவித்து குடியரசு தலைவரின் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் உச்சநீதிமன்றத்திடம் சரமாரியாக கண்டனங்களை வாங்கி கட்டிக் கொண்டது மத்திய அரசு. இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு புதிய அரசு ஒன்றை அமைத்து ஜனாதிபதி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டால் உச்சநீதிமன்றத்தின் கண்டனங்களில் இருந்து தப்பித்து விடலாம் என்று முடிவு செய்தது.

உச்சநீதிமன்றம் அதிரடியாக தலையிட்டு, அருணாச்சலப் பிரதேசத்தில் தற்போதைய நிலைமையே நீடிக்க வேண்டும். 14 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று மறு உத்தரவிட்டது.

இதனால் மத்திய அரசின் முயற்சிக்கு மீண்டும் முட்டுக்கட்டை விழுந்தது. பின்னர், புதிய அரசு அமைக்கும் நடவடிக்கைக்குப் பிறப்பித்த தடையை விலக்கிக் கொண்டது ! இது காங்கிரசுக்கு ஒரு பின்னடைவாக பார்க்கபட்டது.

இதையடுத்து அங்கு புதிய அரசு அமைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பான வழக்குகள் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்சிற்கு மாற்றியது. விசாரணை நடத்திய பெஞ்ச், கடந்த பிப்ரவரி 22-ம் தேதி இதன் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்த நிலையில் தான் இந்த சிறப்புமிக்க தீர்ப்பு வெளி வந்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை ரத்து செய்ய கவர்னர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் கூறி இருப்பதால், கவர்னரின் வரையறை நிலைபடுத்தப் பட்டுள்ளது. மாநில அரசின் அதிகாரம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.!

உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள நபம் துகி, ” வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பால் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. தலைவர்கள், மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை சட்டவிரோதமாக நீக்க முயற்சித்தனர். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, நீதியை நிலை நாட்டி விட்டது ” என்று கூறியுள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு ஜனநாயகம் என்றால் என்ன ? என்று புரிய வைத்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த தீர்ப்புக்கு பிறகாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பிரதமர் மோடி மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் . மேலும், இதன் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசையும் செயல்பட பாஜக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

-முகமது பாட்சா