திமுகவில் நாற்காலி சண்டை

70

திமுகவை பொறுத்தவரை ஆளும்கட்சியாக இருக்கும் போது திமுக தலைவர் கருணாநிதி சட்டப் பேரவைக் குழு தலைவராக (முதல்வராக) தேர்வு செய்யப்படுவார். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேராசிரியர் க.அன்பழகனை தேர்வு செய்ய ஆதரவுக் கரம் நீட்டுவார். ஆனால், 2011-ஆம் ஆண்டில் சட்டப் பேரவைக் குழுத் தலைவராக ஸ்டாலினுக்கு இருவரும் ஆதரவு தெரிவித்து, வழிவிட்டனர். இதே நிலையையே இந்த முறையும் கருணாநிதி மேற்கொள்வார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதன்படி, ஸ்டாலினே எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்பார் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

இருப்பினும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி நிலவுகிறது. முந்தைய பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த துரைமுருகன் மீண்டும் பதவியை பெற்றுவிட நினைக்கிறார். இதே நேரத்தில், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி போன்ற முக்கிய தலைவர்களும் இந்த பதவியை பெற்றுவிட முடியுமா என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இருப்பினும், திமுக கொறடாவாக ஏற்கனவே சில முறை இருந்து வந்த ஓட்டன்சத்திரம் சக்கரபாணியே மீண்டும் தேர்வு பெற வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், துணைத் தலைவர் பதவி கிடைக்காத முன்னணித் தலைவர்கள் கொறடா பதவியையாவது பெற்றுவிட முனைப்புடன் இருப்பதால், இதற்கும் போட்டியே நிலவுகிறது. இதனால், இரு முக்கிய பதவிகளில் யார் பெறுவார்கள் என்பதில் பட்டிமன்றமே நடக்கிறது.

-அகம்