சாப்பாட்டு ராமிகள்

151

ஒழுங்கீனமற்ற உணவுப் பழக்கம் (Eating disorder)

யாராவது என்னிடம் உங்களுக்கு பிடித்தமான விஷயம் எது என்று கேட்டால் வகை வகையாய் உண்ணுவது என்று தான் பதில் சொல்லுவேன். வாய்க்கு ருசியா சாப்பிட முடியவில்லை என்றால் அதென்ன வாழ்க்கை என்று எதிர்கேள்வி கேட்பேன். அப்படியானால் நான் ஒரு சரியான சாப்பாட்டு ராமியாக (சாப்பாட்டு ராமனுக்கான எதிர்ப்பால்) இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள் தானே? அதை கடைசியாய் பார்த்துக் கொள்வோம்.

சிலருக்கு ஒரு பழக்கம் உண்டு. எதைப் பார்த்தாலும் ஐயோ நான் டயட்டில் இருக்கிறேன். இதையெல்லாம் சாப்பிட மாட்டேன் என்று பதறுவார்கள். எந்த உணவை எடுத்துக்கொண்டாலும் இது வாயு, இது கொலஸ்ட்டிரால், இது பித்தம் என்று ஏதாவது குறை சொல்வார்கள். இரண்டு வேளை பட்டினிக் கிடந்து ஒரு வேளை காய்கறி மட்டுமே உண்கிறேன் என்று பெருமையாய் பேசுபவர்களும் உண்டு. சரியான உடல் எடையோடு இருந்தாலும் அதை நம்ப மறுத்து தான் இன்னமும் இளைக்க வேண்டும் என்று புலம்பிக் கொண்டே இருப்பார்கள்.

இன்று சினிமாவைப் பார்த்து தாங்களும் அதில் வரும் கதாநாயகிப் போல் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் பலபேர். இதற்கு அவர்களை மட்டுமே குறை சொல்லியும் பிரயோஜனம் இல்லை. பெண்கள் இப்படி இருந்தால் தான் அழகு என்ற மாயத்தோற்றத்தை பெண்கள் மத்தியிலும் ஆண்கள் மத்தியிலும் வளர்ந்து வரும் விளம்பர ஊடகங்கள் பரப்பி விட்டார்கள். பெண் அழகாய் இருக்க வேண்டுமென்றால் அதற்கான தகுதிகளில் ஒன்றாய் இந்த மெலிந்த உடல்களையும் கைக்காட்டி விட்டனர். அழகு அழகு என்று பெண்களும் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பலியாகி விடுகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் சில பெற்றோர்களே தங்கள் பெண்ணை “குண்டு” என்று கூறி பட்டினி கிடக்க வைத்து அவள் ஆரோக்கியத்தை கெடுத்து விடுகின்றனர்.

இப்படி பட்டினி கிடந்து உடல் இளைத்து தங்களை அழகாக காட்டவேண்டும் என்று நினைக்கும் பலரும் மிகப்பெரிய ஆபத்துகளில் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் தங்கள் ஆரோக்கியத்தை இழக்கிறார்கள், பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு தவறிப்போகிறது. அல்சர் வந்து குடல் பாதிக்கப்பட்டு வயிற்றுவலியால் அவதியுறுகின்றனர். பின் நிலைமை மேலும் சிக்கலாகி, பல உறுப்புகளும் பாதிக்கப்பட்டு, எலும்புகள் பலவீனமடைந்து மிக இளம் வயதிலேயே உயிரையும் இழக்க நேரிடுகிறது. மாடலிங் செய்வதற்காக ஸீரோ சைஸ் வேண்டுமென்று உடலை வருத்தி இருபதுகளிலேயே உயிரை விட்ட லூசல் ரமோஸ் (Luisel Ramos), இசபெல்லா கேரோ (Isabelle Caro), ஹெய்டி (Heidi Guenther)யின் கதைகள் உலகறிந்தவை அல்லவா.

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவேண்டுமென்று நினைத்து அதனை மிகச்சரியாக கடைபிடிப்பவர்கள் தங்களை காத்துக் கொள்கின்றனர். மாறாக தன் உடல் குறித்த கவலையில் உடலுக்கு தேவையான உயிர்ச்சத்துக்களை கூட எடுத்துக்கொள்ளாமல் பட்டினி கிடப்பவர்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்கின்றனர்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை அதிகமாக உண்பவர்களை கேலி செய்வார்கள். உடல் எடைக் குறித்து அதிக அக்கறைக் கொண்டவர்களாக தங்களை பிறர் முன்புக் காட்டிகொள்வார்கள். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் உண்டு. பார்ட்டி என்று வந்துவிட்டால் முதலில் நாசூக்காகத் தான் ஆரம்பிப்பார். தனக்கு அதிகமாக எதுவும் தேவையில்லை என்று மறுத்து விடுவார். பின்பு மற்றவர்கள் உண்ண உண்ண, அதில் கொஞ்சம் கொடேன் சுவை பார்க்கிறேன் என்று அத்தனை பதார்த்தங்களையும் ஒரு பிடி பிடிக்க ஆரம்பித்து விடுவார். இறுதியில் எஞ்சிய உணவுகளும் அவர் வாய்க்குள்ளயே போகும். அத்தனையும் உண்டு விட்டு பின்பு உடல் எடை கூடி விடுமென்று ஓரமாக போய் வாந்தி எடுத்துக் கொண்டிருப்பார். பின்பொரு நாள் அவரை சந்தித்தபொழுது எந்நேரமும் உடல் எடை பற்றியும் அதிகமான உணவுப் பழக்கத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். உளவியல் ரீதியாக அவருக்கு இருக்கும் பலவீனங்கங்களைப் பற்றி கூறி, பிடித்திருந்தால் சாப்பிடு, தேவையில்லாமல் சாப்பிட்டு, பின்பு உடல் எடைக்கூடி விடுமென்று அவற்றை வெளியேற்ற நினைப்பது நாளடைவில் மனநோயாக மாறிவிடும் வாய்ப்புள்ளது என்று எச்சரித்துவிட்டு வந்தேன்.

அளவுக்கதிகமாக உண்டுவிட்டு பின்பு அதை நினைத்து வருந்துபவர்கள் தங்கள் எடைக் கூடி விடுமென்று பதறி விடுகிறார்கள். இதனாலேயே உண்டவை அத்தனையையும் வெளியேற்றும் எண்ணத்தோடு வாந்தி எடுத்தும், பேதி மாத்திரைகளை விழுங்கியும் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கின்றனர். எடையை குறைகின்றேன் பேர்வழி என்று மிதமிஞ்சிய உடற்பயிற்சியினை செய்கின்றனர். இதனால் இவர்களுக்கு இரைப்பை பிரச்சனைகள், வியர்வை, பதற்றம் மூலம் கடுமையான நீரேற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடலில் உள்ள நீர்சத்துகளின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இவர்கள் தங்களை தாங்களே அதிகம் வருத்திக் கொள்வதால் இதயநோயும் வருகிறது.

இப்படி உண்ணாமல் பட்டினி கிடப்பவர்கள், உண்டு விட்டு வருந்துபவர்கள் ஒரு வகையினர் என்றால் எந்நேரமும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதையாவது உண்டுக் கொண்டே இருப்பது இன்னொரு வகை. இவர்களுக்கு வாய் ஓயாமல் அசைப்போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதுவும் சிறிது நேரம் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை என்றால் கைகால் தளர்ந்து போனதைப் போல் உணர ஆரம்பித்து விடுவார்கள். பொதுவாக இவர்களில் ஒரு வகையினர் யார் என்ன சொல்லியும் கவலைப்பட மாட்டார்கள். தங்கள் மனமே தங்களை கட்டுப்படுத்தும் சாதனம் என்று சொல்லித் திரிவார்கள்.

இவர்களில் மற்றொரு வகையினருக்கோ ஒரு வகையான தாழ்வு மனப்பான்மை அதிகமிருக்கும். இதனால் உடல் எடையை குறைக்க எண்ணி முதலில் பட்டினி கிடப்பார்கள். இதனால் மேலும் உடல் நலம் சீர்கெட்டு மேலும் உடல் எடை கூடியவர்களாகிறார்கள். பின்னர் தங்களை தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அதிதீவிரமாக உண்ண ஆரம்பித்து விடுகிறார்கள். பொதுவாக இத்தகைய பழக்கம் இருப்பவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமிருக்கும். இந்த தாழ்வு மனப்பான்மை அவர்களுக்குள் ஒரு குற்றவுணர்ச்சியை உருவாக்கி, வெளித் தொடர்புகளில் இருந்து அவர்களை தனிமைப்படுத்தி விடுகிறது. தனிமைக்குள் தங்களை தங்களே புதைத்துக் கொள்கிறார்கள். தனிமையை துரத்த மேலும் மேலும் உண்ணும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்கின்றனர்.

இந்த ஒழுங்கீனமற்ற உணவுப் பழக்கம் எதனால் வருகிறது?

இதற்கான சரியான காரணங்கள் தெரியாவிட்டாலும் பொதுவாக இது மனநிலை, உயிரியல் மற்றும் சுற்றம் சார்ந்த ஒரு பழக்கமாக கருதப்படுகிறது.

உயிரியல் சார்ந்த காரணமாக சொல்வதானால் ஒழுங்கற்ற ஹார்மோன் பிரச்சனைகளாலோ இல்லை அவரது மரபியல் சார்ந்தோ இந்த பழக்கம் அவர்களுக்கு தொற்றிக் கொள்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு கூட சிலநேர காரணியாக இருக்கலாம்.

சுற்றுப்புறம் சார்ந்த பிரச்சனையாக இதைப் பார்த்தோமானால் சமூகத்தினரை தங்கள்பால் ஈர்க்கும் ஒரு முயற்சியாக ஆரம்பித்து பின்பு இந்த பழக்கத்தில் மூழ்கிப் போகலாம். அதிலும் பாலே, ஜிம்னாஸ்டிக், நீச்சல் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்கள் எடைக் குறைந்தவர்களாக இருத்தல் அவசியம். மேலும் மாடலிங் துறையில் இருப்பவர்கள் மெல்லிய இடைக் கொண்டவர்களாக, எடை இழந்து இருக்க வேண்டுமெங்கிறது இந்த சமூகம். இதன் காரணமாகவே முறையாக உணவெடுத்துக் கொள்ளாமல் உயிரை விட்டவர்கள் பலர்.

இவை எல்லாவற்றையும் விட மனநிலை சார்ந்த பிரச்சனைகள் ஏராளம். சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், பாலியல் துன்புறுத்தல், கலாச்சார வேறுபாடு, பிறரால் உதாசீனப்படுத்துதல், துன்புறுத்துதலுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளானவர்களென இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த சமூகத்திலிருந்து விலகி இருக்க நினைப்பவர்கள் தனிமையை தேர்ந்தெடுத்துக் கொண்டு, உண்டு கழிக்கும் பழக்கத்தை துணையாக்கிக் கொள்கிறார்கள்.

ஒருவர் ஒழுங்கீனமற்ற உணவுப் பழக்க வழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று எப்படி கண்டறிவது?

• பார்வைக்கு மிக மெலிந்தவராக தோன்றினாலும் உணவுக் கட்டுப்பாட்டினை        கடைப்பிடிப்பது .
• அடிக்கடி உடல் எடையில் ஏற்ற இறக்கங்களை காண்பது
• கொழுப்புகள் மற்றும் கலோரி அதிகமான உணவினை கண்டால் விசித்திர முறையில்    பதறுதல்
• உணவுகளை மறைத்து வைத்து தனியாக உண்ணுதல்
• சிறிதளவு உணவினையும் நீண்ட நேரம் வைத்து உண்ணுதல்
• உணவினை பற்றியே யோசித்தும் பேசியும் கொண்டிருத்தல்
• மன அழுத்தம் அல்லது மந்தமான நிலை
• கொண்டாட்டங்கள், உறவினர் நண்பர்களிடமிருந்து தனித்திருத்தல்
• திடீரென விரதமிருப்பது, திடீரென அதிகமாய் உண்டுகளிப்பது

இப்படி ஏதேனும் ஒரு செயலோ இல்லை பலதும் கலந்த குணாதிசயம் கொண்டவராக அவர் இருந்தால் அவர் பெரும்பாலும் இந்த ஒழுங்கீனமற்ற உணவுப் பழக்க வழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என கருதலாம்.

இந்த குறைபாடுக்கான சிகிச்சை தான் என்ன?

இந்த குறைபாட்டிற்கான சிகிச்சை முறை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். காரணம் சிகிச்சைக்கு முன் குறைபாட்டின் தீவிரத்தன்மை, அதில் இருக்கும் சிக்கல்கள், மனநிலை மற்றும் தொழில்முறை சிகிச்சைக்கான அவசியம் எல்லாம் பொருத்து தான் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். ஊட்டச்சத்து நிபுணர், மனநிலை மருத்துவர்கள் ஆலோசனைகள் பெற்று சிகிச்சை அளித்தல் நலம். இதில் மனநல சிகிச்சை மிகவும் அவசியம். குடும்பத்தினர், நண்பர்கள் ஒத்துழைப்பும் முக்கியம். அவருடைய தனிமையை போக்கி, மகிழ்வான ஒரு மனநிலைக்கு முதலில் கொண்டு வருதல் வேண்டும். தான் எத்தகைய ஆபத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர்களுக்கு புரிய வைத்தல் அவசியம். பின்னர் அவர்களின் தேவைகேற்ப பசியை தூண்டும் மருந்தோ இல்லை பசியை கட்டுப்படுத்தும் மருந்தோ அளிக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும் இந்த ஒழுங்கீனமற்ற உணவுப் பழக்க வழக்கத்திற்கான வேர் என்னவென்று அறிந்து அதற்கேற்ற வகையில் சிகிச்சை அளித்தல் மிக மிக அவசியம்.

இறுதியாக சொல்கிறேன் என்றேனல்லவா. இந்த உணவினை பற்றிய என் கருத்து என்னவென்றால் எத்தகைய உணவு நம் உடலுக்கு ஒத்துக் கொள்ளும், எது ஒவ்வாது என்று அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். நாம் விரும்பும் உணவுகளை வாய்ப்பு கிடைக்கும் பொழுது சுவைத்துப் பார்ப்பதில் தவறில்லை. அதே நேரம் எந்த நேரமும் உண்டு கொண்டே இருத்தலோ இல்லை உண்ணாமலே இருத்தலோ மிகமிக தவறு என்பேன்.

மீண்டும் சந்திக்கலாம்.

-காயத்ரிதேவி