பூத் சிலிப் வழங்கும் தேர்தல் ஆணையம்

36

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது.

234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 785 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 321 பேர் பெண்கள், 2 பேர் திருநங்கைகள்.

ஓட்டுப் பதிவுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. ஓட்டுப் பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் விவரம் கொண்ட சீட்டுகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் 9-ந்தேதி நிறைவு பெறும்.

இதைத் தொடர்ந்து ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கு இறுதி கட்ட பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஓட்டுப் பதிவை அமைதியாக நடத்த 30 ஆயிரம் துணை நிலை ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. துணை நிலை ராணுவ வீரர்கள் நேற்று முதல் தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கி விட்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள 65,616 ஓட்டுச்சாவடிகளில் 9630 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஓட்டுச்சாவடிகளில் துணைநிலை ராணுவ வீரர்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவார்கள்.

இந்த நிலையில் ஓட்டுப் பதிவுத் தினத்தன்று அதிக வாக்காளர்களை வரவழைக்கும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக வாக்காளர்களுக்கான பூத் சிலிப்பை தேர்தல் ஆணையமே வழங்க திட்டமிட்டுள்ளது.

நாளை (வியாழக்கிழமை) முதல் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி தேர்தல் பிரிவு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரியின் உத்தரவின்படி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் நாளை (5.5.2016) முதல் விநியோகிக்கப்படும். இந்த பூத் சிலிப்புகள் வாக்குச்சாவடி அலுவலரால் வீடு வீடாக சென்று வழங்கப்படும்.

வாக்காளர்கள் அதனை பெற்றுக் கொண்டு ஒப்புகையினை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பூத் சிலிப் வழங்குவதற்காக, அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரால் கால அட்டவணை தயாரிக்கப்பட்டு அதன்படி பூத் சிலிப் விநியோகிக்கப்படும்.

இந்தக் கால அட்டவணை அனைத்து அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு தெரிவிக்கப்படும். இந்தப் பணியினை அரசியல் கட்சிகளின் முகவர்கள் பார்வையிடலாம்.

இந்தப் பணியினை ஆய்வு செய்வதற்காக மேல்நிலை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பணி தொடர்பான புகார்களை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் ஆகியோர்களுக்கு அனுப்பலாம். அவர்கள் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான சேவை மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்படும்.

அகம்