முதல் கையெழுத்து

94

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்பும் முதல் நாள் முதல் கையெழுத்து என்றொரு கண்துடைப்பும் ஊடகங்கள் மட்டுமே மெச்ச நடந்தேறியிருக்கிறது. திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஊடக ஆதிக்க பண அதிகார பலங்களை காட்டி நிரூபித்து இருக்கின்றன அக்கட்சிகள்.

1)விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி!

கருணாநிதி அவர்களால் 1996ம் ஆண்டு தேர்தலில் வாக்குறுதியாக அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நிலமில்லா விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் உள்ளிட்ட கவர்ச்சிகர வாக்குறுதிகள் அக்கட்சிக்கு மைனாரிட்டி வெற்றியை தேடித்தந்தது. இரண்டு ஏக்கர் நிலம் பெற்ற விவசாயிகளை நீங்கள் யாராவது பார்த்தால் எனக்கும் கொஞ்சம் தகவல் கொடுங்கள்.

ஏற்கெனவே கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகள் பத்தாண்டுகளில் மீண்டும் கடளாளியாகவே வாழ்ந்து கொண்டு இருக்கும் சோகமான நிலையில் தான் தமிழகம் இருக்கிறது என்பதே மறைபொருள்.

கூட்டுறவு சங்கங்களில் கட்சி சார்ந்தவர்களே நிர்வாகம் செய்வதும் அவர்களுக்கு அவர்களே கடன் வழங்கி கொள்வதற்கு தான் என்பதை கூற கடமைபட்டுள்ளேன். 33 பைசா வட்டியில் கனரா, ஸ்டேட், ஐடிபிஐ உள்ளிட்ட தேசிய வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டியே கட்ட முடியாத நிலையில் இருக்கும் விவசாயிகள் 85 பைசாவிற்கும் கூடுதலாக வட்டி விகிதமுள்ள கூட்டுறவு சங்கங்களில் எப்படி கடன் வாங்கி எப்போது அதை தள்ளுபடி செய்வது?

2)100யூனிட் விலையில்லா மின்சாரம்!

2011ம் ஆண்டு மின்சார கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி மக்களின் நிதி சுமையை உயர்த்திவிட்டு புதிய மின்உற்பத்தி திட்டங்கள் எதுவும் இல்லாமல் தற்போது 100 யூனிட் இலவசமாக கொடுக்க மட்டும் மின் வாரியம் லாபத்தில் இயங்குகிறது போல.
அதாவது 100 ரூபாய் வந்துகொண்டிருந்த மின் கட்டணத்தை 200 உயர்த்தி ஐந்தாண்டுகள் வசூலித்து விட்டு இப்போது 30 ரூபாய் குறைக்கிறார்கள். முதல் 100 யூனிட்களுக்கு மின் வாரியம் வசூலிக்கும் கட்டணத்தில் ரூபாய் 2₹ மாநில அரசு மானியமாக மின் வாரியத்திற்கு வழங்குகிறது. மீதமுள்ள ரூபாய் 1₹ நம்மிடமிருந்து மின் வாரியம் வசூலிக்கிறது.

இந்த மின் கட்டண தளர்வில் மின் கட்டணத்தில்10% முதல் 15% வரை குறைகிறது.

3)விவசாயத்திற்கு 750 யூனிட் மின்சாரம் இலவசம்!

ஏற்கெனவே இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்ததே நீங்கள் தானே அம்மா. அதை மறந்து விட்ட மக்கள் உங்களுக்கே மீண்டும் வாக்களித்து இருப்பது தான் உச்சசோகம். மின் திருட்டின் வேரே இந்த இலவச மின்சாரம் தான். ஆலைகளும் கோழிப்பண்ணைகளும் இன்னும் பல நிறுவனங்களும் இலவச மின்சாரத்தில் இயங்கியதையும் அது போக மிச்சமீதி விவசாயிகளுக்கு பயன்பட்டதையும் யாரும் மறந்து இருக்கமாட்டார்கள். மின்சாரம் வழங்குவதை பகலில் கொடுங்கள். இரவில் வயலுக்கு தண்ணிகட்ட போய் மின்சாரம் பாய்ந்தும் பாம்பு தீண்டியும் உயிர் விட்ட விவசாயிகள் நிறைய. அப்புறம் காவேரி தண்ணீர் கேட்டு தற்கொலை செய்துகொள்ளக் கூட விவசாயிகள் இருக்க மாட்டார்கள்.

4)தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி!

இதுபற்றி பேசுவதற்கு முன்னதாக வாங்க ஒரு புள்ளி விவரக்கணக்கு பார்த்து விடலாம். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களில் 78 சதவீதத்தினர் தங்கள் மக்களை தனியார் பள்ளியில் படிக்க வைக்கின்றனர். இது ஒரு பக்கம் அவர்களின் செல்வசெழிப்பைக் காட்டினாலும் அரசு பள்ளியின் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மையை உணர்த்துகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளிகள் மொத்தம் சுமார் 40000. அதில் பயிலும் மாணவர்கள் நாற்பது இலட்சம். உலகெங்கும் ஆசிரியர் மாணவர்கள் விகிதம் 1:20 ஆனால் தமிழகத்தில் 1:80. நம் மாணவர்கள் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள் என்றணர முடிகிறதா?

இனி விஷயத்திற்கு வருவோம். கரும்பலகை, சொந்த கட்டிடங்கள், போதிய ஆசிரியர்கள், கழிப்பிட வசதி, விளையாட்டு மைதானம், கல்வி தரம், இது எதுவும் இல்லாத ஏதாவது ஒன்று இல்லாத பள்ளிகள் இன்றளவும் தமிழகத்தில் இருக்கின்றன.
அதை சீர் செய்யாமல் பொங்கலும் புளியோதரையும் தந்து மாணவர்களை சேர்க்க நினைப்பது எனக்கென்னவோ கொடுப்பதை வாங்கி கொண்டு கேள்வி கேட்காமல் ஓட்டு போட அடுத்த தலைமுறையை தயார்படுத்துவதாகவே தோன்றுகிறது.
CBSC முறையை அரசே கொண்டு வரலாம். அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்தலாம். இது எதையும் அரசு செய்யாது. முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு புல்லைக்கூட பிடுங்க முடியாது என்று அப்பட்டமாகவே புரிகிறதா?

5)நாளையிலிருந்து டாஸ்மாக் பகல் 12 மணிக்கு திறக்கப்படும்! (முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்)

கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடும் என்று நீங்கள் நம்புபவராக இருந்தால் இக்கட்டுரை உங்களுக்கு தான். மதுவிலக்கை முன்னெடுத்த எல்லா கட்சிகளும் மண்ணைக்கவ்விய நிலையில் மது நம்மக்களின் வாழ்வில் எவ்வளவு அத்தியாவசியம் என்பது தெளிவாகிறதா?

ஆம் 37% ஆண்களும் 8% பெண்களும் மதுவுக்கு அடிமை தமிழகத்தில். நிறமேற்றப்பட்ட ஸ்பிரிட் தான் மது என்று தமிழர்கள் நம்ப ஆரம்பித்து விட்டார்கள். தரமற்ற மதுவை காசாக்கும் டாஸ்மாக் ஆகட்டும் அதை அதிக விலைக்கு விற்கும் ஊழியர்களாகட்டும் கடை மூடி இருக்கும் நேரத்தில் விற்பனை இல்லை என்று உறுதியாக சொல்ல முடியுமா?

கதவை மூடினால் சன்னலை ஆண்டவன் திறப்பானோ இல்லையோ.. டாஸ்மாக்கில் கண்டிப்பாக திறப்பார்கள். தரமற்ற மதுவுக்கு அநியாய விலை வசூலிக்கும் தனியார் முதலைகளை தட்டிக்கேட்க முதுகெலும்பு இருக்கிறதா?

சச்சரவிற்கு உட்பட்ட கடைகளை மட்டும் மூடுவதாக இருந்தாலும் குறைந்தபட்சம் 2000 கடைகளை மூடி இருக்க வேண்டுமே?

மாநில வருமானத்தில் 45% தரும் டாஸ்மாக்கை வேறெந்த வருவாய்க்கான வழியும் காணாமல் மூடிவிடுவார்கள் என்று நம்பினால் சசிபெருமாள் ஆவி கூட உங்களை மன்னிக்காது…

ஆக, முதல் கையெழுத்து வெறும் பொய்யெழுத்து…

-முகமது உஸ்மான்