மஞ்சள் காமாலை B

357

“ஹாய் செந்தில், என்னடா விசா வந்துடுச்சா?? எப்ப கிளம்புறே?? ட்ரீட் எங்கே?”
“நீ வேற சும்மா இருடா.. நானே சோகத்தில இருக்கேன்,”
“ஏன்டா என்ன ஆச்சு?”
“மெடிக்கல் பிட்னஸ் இல்லைனு சொல்லிட்டாங்கடா..”
“ஏன் உடம்புக்கு என்ன ஆச்சு?”
“உடம்புக்கு ஓண்ணுமே ஆகலை. இது வரைக்கும் காய்ச்சல்னு கூட படுத்த்தில்லை. ஆனா உனக்கு மஞ்சள் காமலை வந்திருக்கு அதனால பாரின் போக பிட்னெஸ் சர்டிபிகேட் எல்லாம் கொடுக்க முடியாது சொல்லி அந்த டாக்டர் சொல்லுராருப்பா. எனக்கு ஓண்ணுக்கெல்லாம் வெள்ளையாத்தான் போகுது, கண்ணப் பாரு நல்லாத் தானே இருக்குது, எங்க ஊரு லேப்ல டெஸ்ட் எடுத்து பார்த்தேன். அவனும் அடிச்சி
சொல்லுறான், உனக்கு மஞ்சள் காமாலை இரத்ததில் இல்லை தம்பின்னு.”
“எதுக்கும் ஒரு பாதுகாப்பா இருக்கட்டும்னு நினைச்சு பக்கத்து ஊருல போயி ரெண்டு தடவை பச்சிலை மருந்து கூட ஊத்திட்டு வந்தாச்சுடா.. அப்பவும் மெடிக்கல் டெஸ்ட் எடுத்துட்டு வெளிநாடுக்கு அனுப்ப தகுதி இல்லைன்னு சொல்றாங்க.”
“சரி..இப்ப என்ன பண்ண போறே?”
“தெரியல… செம வெறுப்பா இருக்குடா, வாயேன் போய் ஒரு கட்டிங் போட்டுட்டு வரலாம்.
இது ஒரு சராசரியான நிகழ்வு.
இதில் உள்ள பிரச்சினை என்ன?
செந்தில் முற்றிலும் ஆரோக்கியமானவன், வெளிநாட்டு வேலைக்கு போகும் பொருட்டு மருத்துவ தகுதி பரிசோதனை எடுத்துள்ளான். அங்கு மருத்துவர் அவனுக்கு மஞ்சள் காமலை இருக்கிறது என்று சொல்கிறார்.
ஆனால் அவனுக்கு அதுமாதிரியான அறிகுறி எதுவும் தெரியவில்லை. உடலில் தொந்தரவு எதுவும் இல்லை.
அப்போது அவனுக்கு உண்மையில் நடந்தது என்ன?
மஞ்சள் காமாலை என்றால் என்ன?
ஏன், எவ்வாறு வருகிறது என்பதை பின்வரும் பத்திகளில் காணலாம்.
மஞ்சள் காமாலை என்பது காய்ச்சல் மாதிரி ஒரு நோய் அறிகுறி.
இது பல்வேறு காரணங்களால் வரலாம்.
மஞ்சள் காமலை வருவதற்கான காரணங்கள் :
1. கல்லீரலில் ஹெபடைடிஸ் வைரஸ் கிருமிகள் தாக்குதல்
2. மது பானம் அருந்துவதால் கல்லீரல் செல்கள் செயலிழப்பு
3. பித்தக் கற்கள், பித்த நீர் வரும் பாதையில் அடைப்பு ஏற்படுத்தல்
4. கல்லீரல் பித்த நீர்பை மற்றும் நாளம் குடல் புற்றுநோய் கட்டிகளால் ஏற்படும் பித்த நீர் அடைப்பு.
5. நாட்டு மருந்து. எலி மருந்து மற்றும் ஆங்கில மருந்துகள் சாப்பிடுவதால் கல்லீரல் செல்கள் செயலிழப்பு.
இதில் செந்திலுக்கு வந்த மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ் வைரஸ் கிருமிகளால் வந்தது.
மொத்தம் ஐந்துக்கும் மேற்பட்ட வைரஸ் கிருமிகள் இருக்கின்றன
ஹெபடைடிஸ் A , B , C , D ,E:
இதில் A & E உணவு மற்றும் நீரின் மூலம் பரவுபவை.
இந்த வைரஸ் மலத்தின் வழியாக வெளியேறி கைகளை சரியாக கழுவாமல், தண்ணீர் மற்றும் உணவு பொருட்கள் கையாளும் போது அந்த உணவின் வழியாக பரவுகிறது.
பெரும்பாலான ரோட்டோர உணவகங்கள், சாக்கடைகள் அருகில் இருப்பவற்றில் சாப்பிடும் போது இந்த நோய் தாக்குதல் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இதைப்பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை. வைத்தியம் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் நமது உடம்பு அதுவே எதிர்ப்பு சக்தியை உருவாக்கி கொண்டு இந்த வைரசை அழித்து விடும்.
அப்படியே நோயின் வீரியமும் குறைந்து விடும்.
ஆனால் ஹெபடைடிஸ் B, C ,D அவ்வாறு கிடையாது.
ஒரு தடவை அந்த வைரஸ் கிருமி உடம்புக்குள் வந்து விட்டால் நோய் பாதிக்கப்பட்டவர் சாகிற வரை கிருமி உடம்பில் இருக்கும்.
இந்த வைரஸ் கிருமி கல்லீரல் செல்களில் உள்ளே போய் அமர்ந்து கொள்ளும்.
இந்த வைரஸ் கிருமி பரவும் வழிமுறைகள்:
1. பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமாக
2. குழந்தைப் பேறின் போது, அம்மாவிடமிருந்து குழந்தைக்கு
3. உடம்பில் இரத்தம் ஏற்றுவதின் மூலமாக.
4. மருந்து ஊசிகள், பச்சை குத்திக் கொள்வது, காது குத்திக் கொள்வது போன்ற செயல்களின் மூலம்.
ஏறக்குறைய எய்ட்ஸ் உண்டாக்கும் HIV வைரசும் இதே வழிமுறைகளில் தான் பரவுகிறது .
ஆனால் மக்களிடையே எய்ட்ஸ்க்கு உள்ள விழிப்புணர்வு ஹெபடைடிஸ் B க்கு இல்லை என்பது வருத்ததிற்குரியது.
மேலும் எய்ட்ஸ் நோய்க்கு இது வரை தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை, ஆனால் ஹெபடைடிஸ் B க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது செந்திலின் பிரச்சினைக்கு வருவோம்.
அவனுக்கு பரிசோதனையில் ஹெபடைடிஸ் B வந்துள்ளது என்று தெரிய வந்தது. ஆனால் இரத்த டெஸ்டில் தெரியவில்லை, ஏன்?
ஏனென்றால் இந்த கிருமி உடம்பில் வளர்கிற மட்டத்தில் கல்லீரலில் உள்ள செல்களில் அமைதியாக இருக்கும். எப்போது நமது உடம்பின் இந்த கிருமிக்கான எதிர்ப்பு சக்தி உருவாகிறதோ அப்போது இந்த கிருமி அழிக்கப்படும் ஆனால் அவ்வாறு நிகழாத தருணத்தில், பாதிப்பு ஏற்படுத்திய கல்லீரல் செல்களும் அழியும் போது மட்டுமே உடம்பில் பித்த நீர் அதிகரித்து மஞ்சள் காமாலையாக வெளியில் தெரியும்.
ஆக மஞ்சள் காமாலை பாதிப்பு இல்லாத சமயத்திலும் கிருமி இருக்கும், ஆனால் புற பாதிப்பு இருக்காது. தேகத்தில் கோளாறும் பெரிதாகப் புலப்படாது.
செந்திலுக்கு ஏன் வெளிநாடு மருத்துவ தகுதி கிடைக்கவில்லை?
ஏனெனில் இவரின் இரத்ததில் உள்ள கிருமி மூலம் மற்றவருக்கு நோயை பரப்பும் வாய்ப்புகள் அதிகம். எனவே வேலைக்கான HBs Ag என்னும் மருத்துவப் பரிசோதனையில் இவர் தகுதி இழக்கிறார். இவருக்கு அடுத்த படியாக என்ன செய்ய வேண்டும்?
இவரின் குடும்பத்தாருக்கு ஹெபடைடிஸ் B கிருமி பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்ய வேண்டும்.
இல்லையெனில் நோய்த் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.
இவருக்கு திருமணம் செய்யலாமா?
தாரளமாக, ஆனால் திருமணத்திற்கு முன்பு அந்த மணப்பெண்க்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
திருமணம் ஆனவர் எனில் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?
மனைவிக்கு தடுப்பு ஊசி போடா விட்டால் அவருக்கும், அதன் மூலம் குழந்தைகளுக்கும் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் கர்ப்பமான உடனே மருத்துவரிடம் சென்று மருந்துகள் உட்கொண்டால் குழந்தைக்கு கிருமி பரவாமல் தடுக்க முடியும்.
செந்தில் மேற்கொண்டு பின்பற்ற வேண்டியவை:
1. கண்டிப்பாக மது அருந்துதல் கூடாது
2. நாட்டு மருந்து, பச்சிலை போன்றவை உட்கொள்ளுதல் கூடாது.
3. ரேசர் பிளேடு போன்ற பொருட்களை அடுத்தவரிடம் பகிர்தல் கூடாது.
4. மருத்துவர் குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்டிப்பாக மருத்துவப் பரிசோதனை செய்து மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.
அலட்சியமாக இருந்தால் நாளடைவில் கல்லீரலில் புற்றுநோய் விளைவிக்கும் அபாயமும் உண்டு.
விழிப்புணர்வுடன் இருப்போம். வரும் முன் காப்போம்.