இலக்கியா கவிதைகள்

178

பார்த்ததும் பிடித்தது உனக்கு

பாக்கு வெற்றிலை மாற்றி

பட்டுடுத்தி பரிசம் போட்டு

பந்தம் உறுதியானது நமக்கு

 

திருமணத்திற்கு முதல்நாள்

திக்குமுக்காடச் செய்துவிட்டாய்

காதலை வெளிப்படுத்திக்

காற்றில் மிதக்கவிட்டாய்

 

உன் தோழியும்

என் தோழனும்

உறைந்தே போனார்கள் அதிர்ச்சியில்

நாகரிகமாய் அவர்கள் நகர

நாணத்தில் சிவந்துவிட்டேன் நான்

 

திருமண மேடையில்

திருப்பூட்டும் வேளையில்

காதருகே வந்து மீண்டும்

காதலைச் சொன்னாய்

 

அடுத்தடுத்து என்னை

அதிசயிக்க வைத்தாய்

காதலித்துக் கைபிடிக்கவில்லை

கைபிடித்துக் காதலிக்கிறேன்

 

கனவிலும் நினைவிலும்

கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்

கணவனைத் தான் கேட்டேன்

கணவானை தந்து விட்டாய்

  • இலக்கியா கருப்பையா