ஏறும் மக்கள் தொகை, இறங்கும் மரத்தொகை

55

பேருந்து பயணங்களின் போது சாலையோர மரங்களை எண்ணி எண்களை படித்த காலமுண்டு. பச்சை வயல்களை கடக்கையில் கண் மூடி குளிர்காற்றை சுவாசித்ததுண்டு. வெயிலும் புழுதியும் தாளாமல் ஜன்னலடைக்க வேண்டி வருமென்று எண்ணிப் பார்த்ததில்லை.

மனிதன் ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறான். நாம் சுவாசிக்கத் தேவையான உயிர்வளியை மரங்கள் வெளியேற்றி கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்துக் கொள்கின்றன. இயற்கை சமநிலையை நிலைநாட்ட இந்த சுழற்சி இன்றியமையாதது.

இலைகள்சுற்றுச்சூழலில் உள்ள தூசியை ஈர்த்துக் கொள்வதால் மரங்கள் அதிகமாக உள்ள இடம் சுத்தப்படுத்தபடுகிறது.

ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டால் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பது நாம் அறிந்ததே. ஓரிடத்தில் ஓசோன் அதிகரிப்பதாலும் அவ்விடத்தின் வெப்பநிலை கூடவே செய்கிறது. மரங்கள் ஒசோனை உள்வாங்கும் தன்மை கொண்டவை. நிழல் தரும் மரம் குளுமை தரும்.

குளிர்பதனப் பெட்டி வெளியிடும் குளோரோ புளூரோ கார்பன் ஓசோன் படலத்தின் அடர்த்தியை குறைக்கவல்லது. இதனால் யாரும் குளிர்பதனப் பெட்டியை உபயோகிக்காமல் இருக்கப் போவதில்லை. அதை உபயோகித்துப் பழகி, நம் அன்றாட வாழ்விற்கு  இன்றியமையாத தேவையாக மாற்றிக் கொண்டுள்ளோம். பாதிப்பை உண்டாக்கும் நாமே அதை சரி செய்யவும் யோசிக்க வேண்டுமல்லவா? வீட்டிற்கு ஒரு குளிர்பதனப் பெட்டி வைத்திருப்பவர்கள் ஒரு மரத்தையாவது வளர்க்க வேண்டும்.

ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதற்கும் தேவையான ஆக்சிஜனை வழங்க சராசரியாக 61 மரங்கள் தேவைப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மக்கள்தொகை அதிகரிக்கும் போது அதற்கு ஈடு கொடுக்கும் விகிதத்தில் மரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தால் மட்டுமே அனைவருக்கும் தேவையான உயிர்வளி கிடைக்கும்.

காடுகளை அழித்து கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறோம். மரத்தை அழிக்கும் போது அதை சார்ந்து, அதை மூலக்கூறாகக் கொண்டு வாழும் தாவரங்களையும் பூச்சிகளையும் விலங்குகளையும் சேர்த்தே அழிக்கின்றோம்.

பிரபலங்கள் சொல்லும் செய்தியை விளம்பரப் படமாகவும் உண்மை நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்படும் படங்களை வெறும் ஆவணப் படங்களாகவும் பார்க்கும் மனோபாவம் மாற வேண்டும். சொல்லப்படும் செய்தி நமக்கானதென்ற புரிதல் வேண்டும்.

காசு கொடுத்து காற்றை வாங்கும் நாளும் வரலாம். உடுத்த உடை, உண்ண உணவு, இருக்க இடம் மட்டுமல்ல சுவாசிக்க சுத்தமான காற்றும் மனிதனுக்கு மிக அவசியமான தேவை. மரங்கள் வளர்ப்போம்.

-ப்ரதியுஷா ப்ரஜோத்