இங்கு தான் எல்லாமே

92

திலீபன் இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் லாவகமாகப் பயணிக்கப் பழகியிருந்தான்.

இப்பொழுதெல்லாம், மனக்குரலவன் தன் முன் வந்துப் பரிகாசிப்பதில்லை.

அப்பா தன்னைத் திட்டும் போது எங்குச் சென்று அமர்வானோ, அங்கே சென்று அமர்ந்தான். கையில் புத்தகத்துடன், அப்பா வாசிக்காமல் விட்டப் பக்கங்களைத் திரும்ப வாசித்தான்…..

“திலீபன் மாமா வந்திருக்கிறார்
கொஞ்சம் வரியாப்பா?”

அன்று விடுமுறை நாள் அசந்துத் தூங்கிய திலீபனை அம்மா எழுப்பினாள்.

தூக்கம் கண்களைச் சொருகியது. அதிகாலையில் மாமா வந்திருக்கிறார் என்றால் ஏதோ முக்கியமான விசயமாகத் தான் இருக்கும்.

போம்மா வரேன் என்றான்.

இரவு வெகுநேரம் விழித்திருந்து அந்தப் புத்தகத்தை வாசித்திருந்தான்.அது ஒவியர் வின்சென்ட் வான்கா வின் சுயசரிதம். பலமுறை புரட்டப்பட்டதால் நூலின் தாள்களில் அடிப்பகுதியிலும் நுனிப் பகுதியிலும் கசங்கிப் பழுப்பேறிப் போயிருந்தது.

பலமுறை அப்பாவை வான்காவின் புத்தகமும் கையுமாகப் பார்த்திருக்கிறான்.
“இன்னுமா இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கவில்லை? என்பது போலக் கடந்துப் போவான். இப்போது தான் அப்பாவால் பலமுறை வாசிக்கப்பட்டப் பக்கங்கள் என்று அறிந்தான். .

சூரியகாந்திப் பூக்களின் காதலன், உச்சி வெயில் என்றுப் பாராது பூக்களைப் பல கோணங்களில் ஓவியமாகத் தீட்டினார். வாழும் காலங்களில் வான்கா வரைந்த ஓவியங்களும், வான்காவும் யாராலும் அங்கீகரிக்கப்படவில்லை.

பழையப் பொருட்கள் அடைத்து வைக்கும் அறையில் அவருக்கும் அவர் ஓவியத்திற்கும் இடம் கிடைத்தது. வெப்பத்தின் காரணமாக செம்பட்டையாகி உதிர்ந்துப் போன தலைமயிர், வெளிரி வசீகரமிழந்த சிவந்தக் கண்கள், வறுமையின் கோரப் பிடியில் சிக்குண்டு வாடிப் போன முகம் , என வான்கா தன்னைத் தானே தீட்டிய ஓவியத்தை அட்டைப் படமாக வைத்திருந்தார்கள்.

வாங்க மாமா……..

வரேன் மாப்ள…..

(சில நலம் விசாரிப்புகளுக்கு பிறகு..)…மாமா வந்த விசயத்தைக் கூறினார்.

நம்ம தூரத்துச் சொந்தம் தான், ராணுவத்துல இருக்காரு, அவங்க அப்பா எனக்கு நெடுநாள் நண்பர் வேற, அவங்களோடப் பையனுக்கு வரன் தேடும் போது, நான் நம்ம நந்தினியைப் பற்றிச் சொன்னேன்.

அவங்களும் சம்மதம் சொல்லிட்டாங்க. அதான் உன்கிட்ட விசயத்தைச் சொல்லிட்டு ஜாதகம் வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்.

”நந்தினிக்கு இப்போ என்ன கல்யாணத்துக்கு அவசரம்?. கொஞ்சநாள் போகட்டுமே!” மாமாவுக்குப் பக்கத்தில் நின்றிருந்த அம்மாவைப் பார்த்தான்.

“கெட்டது நடந்த இடத்தில் ஒரு நல்லது நடக்கனும். அப்படி உங்க அம்மா தனியா இருப்பானு நீ நினைச்ச?

நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கோ. . . உங்க அம்மாவுக்குத் துணையா இருக்கும், உனக்கும் கல்யாணம் முடிச்ச மாதிரியும் இருக்கும்”

மாமா சொல்லி முடிப்பதற்குள்ளாக சுஷ்மா, திலீபனின் சிந்தனைக்குள் வந்துப் போனாள். நன்குப் பேசி பழகும் சுஷ்மாவிடம் தன் காதலை எவ்வாறு வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் தவித்த தருணங்கள் ஏராளம். திலீபனின் மனதில் சுஷ்மாவும், சுஷ்மாவின் மனதில் திலீபனும் மானசிகமாக நேசித்து வந்தார்களே தவிர. அவர்கள் வார்த்தைகளில் பரிமாறிக் கொல்லவில்லை.

மாப்ள என்ன செய்யறாரு மாமா????
சமையலறையிலிருந்து டீ டம்ளரை சேமிக்க வந்த நந்தினி கேட்டாள். . . மாமாவிடம்.. .

மாப்ள ராணுவத்துல வேலை பாக்குறாரு. …..
ஏன்???? நந்தினி, கைவசம் மாப்ள யாராவது இருக்காங்களா??  சொல்லும்மா…….உடனே பேசி முடிச்சுடலாம்” மாமாவின் வார்த்தையில் கேலி தென்பட்டது.

அவசரம் ஒன்னும் இல்ல மாமா…. அவங்கள வரச் சொல்றேன்! நிதானமா பேசி முடிவெடுத்தாப் போதும்! தன் காதலை நாசுக்காக வெளிப்படுத்தினாள்.

முடிவெடுக்கும் அதிகாரம் தன்னிடம் தன் குடும்பத்தினர் ஒப்படைத்திருகிறார்கள்.
ஆனாலும் நந்தினி எந்த முன்னறிவுப்பும் இல்லாமல் வெளிபடுத்தியது.
திலீபனுக்குக் குழப்பமாக இருந்தது. அம்மாவை பார்த்தான், எதிர்பார்த்தது தான்.
உனக்குத் தான் இது புதுச் செய்தி, தனக்கு சம்மதம் தான் என்பது போல தலையசைத்தாள் அம்மா.

திலீபன் எழுந்து தன் அறை நோக்கி நடந்தவனை,

” மாப்ள நந்தினி சொன்ன விசயம் என்னாச்சு ” ???

அதான் வந்து பேசச் சொல்லுங்க மாமா! என்று தன் அறைக்கு நடந்தான் திலீபன்.

ஒரு பெண், தன்னை விட வயதில் சிறியவள். நிதானமாக, தக்க சமயத்தில் தன் காரியத்தைச் செயல்படுத்தினாள்.

நமக்குத் தான் சுஷ்மாவிடம் காதலைச் சொல்வதற்கு ,எத்தனை பயம்,? எத்தனை தயக்கம், ? தன் மீது அவனுக்குக் கோபம் தான்.

தன் அறையில் மின் விசியின் காற்றில் படபடத்த வான்காவின் சுயசரிதப் புத்தகத்தை எடுத்து வாசித்து முடிக்க நினைத்தாலும். அவன் தொடவே பயந்தான்.
அது அவன் அறிவுக்கு, அனுபவத்திற்கு, முதிர்ந்ததாகவே இருந்தது.

ஆடைகளைக் களைத்து தன் முன் பிறந்த மேனியாக நிற்கும், ஒரு விலைமாதுவை ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார் வான்கா.

கை,கால், கண்,மூக்கைப் போல அவளது அந்தரங்கத்தையும் எந்த சலனமும் இன்றி கடந்துப் போன…. வான்காவிடம் கூலி வாங்க அந்த விலைமாதுவுக்கு மனம் ஒப்பவில்லை.

போகிற போக்கில் உங்கள் காது அழகாய் இருகின்றது வான்கா…….
என்று சொல்லி போனவளுக்கு…… அந்த விலைமாதுவிற்கு மறுநாள், ஒரு பார்சல் வந்தது.  அது?? ? ?வான்கா தன் காதுகளை வெட்டிப் பரிசு பொருளாய் அனுப்பியிருந்தார்.

வான்காவுடனான இந்தப் பயணம் கடினமாகத்தான் இருந்தது. அப்பா பயணித்திருக்கிறார் பலமுறை. ஒருவேளை வான்காவிடம் தன்னை தான் கண்டிருப்பாரோ??, அப்பா . .

வெள்ளைக் காகிதத்தில் அப்பா எழுதி வைத்திருந்ததைப் படித்தான் அதில்,,,

யாரும் காயம்படக் கூடாதென
கத்தியின் கூர் முனையை தன் பக்கமே வைத்திருக்கிறேன்.

என, , எழுதியிருந்தார் அப்பா…

கலை கூத்தாடி

இந்தத் தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்