அரக்கர்களின் காதலன் – ஓவியர் செபின் சைமனுடன் ஒரு நேர்காணல்

170

செபின் சைமன், மும்பையைச் சேர்ந்த ஓவியர். தன்னுடைய ஓவியங்களை பொழுதுப்போக்கிற்காக வெளியிடுவதற்காக Inkology எனும் பக்கத்தை தொடங்கினாலும் இன்று தனக்கான ஊக்கத்தை அது பெரிதும் தருவதாக கூறுகிறார். இந்த பக்கத்தில் அவர் வெளியிடும் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாது அவர்கள் மனதில் உறுதியான நம்பிக்கையையும் விதைக்கிறது.

எல்லா கலைஞனுக்கும் தன்னுடைய படைப்பினால் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதை இந்த Inkology மூலம் செய்து வருவதில் தனக்கு பெருமகிழ்ச்சி என்கிறார். தன்னுடைய ஓவியங்கள் எளிமையாக அதிகம் நுட்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனும் போது மகிழ்ச்சியே.

ஓவியம் இல்லாத நேரங்களில் தன்னுடைய நேரத்தை பயணங்களிலும் புதிய மனிதர்களை சந்திப்பது, ஓவியப் பட்டறைகள் நடத்துவது, தெருக்கூத்தில் பங்கு பெறுவது என தனக்கு தெரியாத விஷயங்களை கற்றுக் கொள்ளச் செலவிடுகிறார்.

அகம் இணைய இதழுக்காக அவர் மின்னஞ்சல் மூலம் அளித்த பிரத்யேக பேட்டி:

உங்களுள் உள்ள ஓவியன் எப்போது கண்டறியப்பட்டான்?

சரியாக சொல்ல முடியாது. சிறு வயதில் இருந்தே எனக்கு ஓவியத்தின் மீது ஈடுபாடு இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். நான் வளர வளர என்னுள் இருந்த ஓவியனும் வளர்ந்து என்னை கைப்பிடித்து ஓவியக் கல்லூரிக்கு கூட்டிச் சென்று விட்டான்.

எல்லாவற்றிற்கும் ஒரு உந்து சக்தி இருக்கும்… உங்களை உந்தியது எது அல்லது யார்?

யார்? பெரிய ஓவியர்கள் முதல் என் நண்பர்கள் மற்றும் நான் சந்திக்கும் நபர்கள் என என்னை இவர்கள் எல்லோரும் தான் அடுத்த கட்டத்திற்கு உந்தித் தள்ளுகின்றனர். இதோ பேசிக் கொண்டிருக்கும் உங்களிடம் கூட நான் ஏதாவது கற்றுக் கொள்ளக் கூடும்.

எது? சில நேரங்களில் நினைவுகள், சில நேரங்களில் இசை, சில நேரங்களில் என் வளர்ப்பு பிராணிகளாக கூட இருக்கலாம்.

நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் கற்றுக் கொள்ள ஏராளம் உண்டு. என் ஓவியங்களில் அதை நான் பிரதிபலிக்க முயல்கிறேன்.

சரி இப்போது உங்கள் ஓவியங்களில் தென்படும் அரக்கர்கள் (Monsters) இதென்ன புது உத்தி?

train monster mumbaiMonster Series புதிதாக இப்போது தொடங்கியிருக்கிறேன். நான் பார்க்கும் ஏதோ ஒரு இடம் அல்லது ஒரு சூழலில் ஒரு Monster இருந்தால் எப்படி இருக்கும் என்ற சின்ன கற்பனையின் வெளிப்பாடு தான் அது. இரண்டாவது Monsterகளை வரைவதில் சிரம்ம் குறைவு. உங்கள் விருப்பத்திற்கேற்ப எத்தனை கண் கால் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கான புத்தகங்களில் உங்கள் ஓவியங்கள் நிறைய வருவதுண்டு.. அது எப்படி நடந்தது?

அது முழுக்க அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். ஒரு முறை to Duckbill பதிப்பகத்திற்கு அவர்களுடைய Hole book series ல் வரைய விருப்பம் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினேன். ஆனால் அதற்கு பதிலாக அவர்களுடைய வேறொரு புத்தகத்திற்கு வரையும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய பாணிக்கு பொருத்தமாக இருந்ததால் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள அதனைத் தொடர்ந்து Hole book series, HarperCollins publications உடன் சில புத்தகங்கள் மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றினேன்.

Inkology யில் வெளிவரும் மேற்கோள்கள் மற்றவைகளை காட்டிலும் தனித்துவமாக இருக்கிறதே… எப்படி?

update2 6thaugஅப்படியா?  உங்கள் பாராட்டுக்கு நன்றி. ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கே அந்த ரகசியம் தெரியாது. ஒருவேளை அதன் எளிமை ஒரு காரணமாக இருக்கலாம். இதை இப்படி சொல்ல வேண்டும் என்ற திட்டம் எல்லாம் நான் வகுத்து செய்வதில்லை. மனதில் தோன்றுவதை அப்படியே ஓவியமாக கொண்டு வருகிறேன். அதுவும் காரணமாக இருக்கலாம்.

பெரும்பாலான மேற்கோள்கள் உறவுமுறைகளைப் பற்றியே இருக்கிறதே… ஏன்?

அப்படி எல்லாம் எதையும் திட்டமிட்டு செய்வது இல்லை. இரண்டாவது இது போல வகைப்படுத்துவதிலும் எனக்கு விருப்பமில்லை. அப்போது என் மனதில் தோன்றும் எண்ணம், சூழல் மற்றும் என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து தான் இது நடக்கிறது.

உங்கள் Monsterகள் பார்த்தவுடனே வியப்பையும் சிரிப்பையும் ஒருசேர கொண்டு வருகிறது. எப்படி?

மிகவும் எளிமை. குழந்தைத்தனமன கற்பனை தான் அது. அதை அப்படியே வெளிக்கொண்டு வருவதால் உங்களுக்கு பிடித்து விடுகிறது.

அது என்ன உங்கள் கண்ணுக்கு மட்டும் monster தெரிகிறது?

mumbai 2முதலில் சொன்னது போல monster தொடர் சாதாரணமாக தான் தொடங்கினேன். முன்பெல்லாம் பேப்பரில் வரைந்துக் கொண்டிருந்தேன். பின்னர் படிப்படியாக அதை பலவித சோதனைகளுக்கு உட்படுத்தி பின்னர் இப்போது நீங்கள் பார்க்கும் வடிவில் இருக்கிறது. முழுக்க என்னுடைய கற்பனையே. இந்த இடத்தில் அது இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிப்பேன். அவ்வளவு தான்.

உங்கள் தொழிலுக்கும் உணர்வுக்குமான சமநிலை எப்படி சாத்தியமாகிறது?

கஷ்டம் தான். நேரமின்மையால் நண்பர்கள், குடும்பம் ஆகியவற்றிற்கு நம்மால் நேரம் செலவிட முடியாது போகும். தொடக்கத்தில் அது கஷ்டமாக இருந்தது பின்னர் அதுவே பழகிப் போய்விட்டது. ஆனால் என்னவாக இருந்தாலும் Inkologyக்கு மட்டும் எப்படியாவது நேரம் ஒதுக்கி விடுகிறேன்.

உங்களைப் போன்று வளர்ந்து வரும் ஓவியர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ம்ம்… உங்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை செய்யுங்கள். யார் என்ன சொன்னாலும் சரி. நான் வரையத் தொடங்கிய போது எவ்வளவு விமர்சனங்கள்.  உன் ஓவியம் எடுபடாது… நீ நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது போன்ற கருத்துக்கள். ஆனால் இது எதுவும் என்னை பாதிக்கவில்லை. என் மனதில் தோன்றியதை மட்டுமே இன்றும் இந்த நிமிடமும் செய்து வருகிறேன். நம்மை பிடிக்காதவர்களுக்காக நமக்கு பிடித்ததை ஏன் செய்யக் கூடாது.

நேசிப்பதை செய்யுங்கள்… நேசிப்பதை நம்புங்கள்.

நன்றி

பேட்டி : நிஹாரிகா உன்னத்