தோழர் நாறும்பூ நாதனுடன் ஒரு நேர்காணல் – பகுதி 1 – துவாரகா சுவாமிநாதன்

79

தோழர் நாறும்பூ நாதன் வங்கியில் வேலை செய்து வருகிறார். இருப்பது திருநெல்வேலியில் கனவில் உதிர்ந்த பூ, ஜமீலாவை எனக்கு அறிமுகபடுத்தியவன் என இரண்டு சிறுகதை தொகுப்புகள் வெளி வந்துள்ளன. அவ்வப்போது தினமணி நாளிதழில் கட்டுரை எழுதுவது உண்டு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர். சொந்த ஊர் கோவில்பட்டி.

அகம் இணைய இதழுக்காக திரு.துவாரகா சுவாமிநாதன் அவர்கள் அவரை நேர்காணல் செய்தார். அதன் முதல் பகுதி:

தமிழில் சிற்றிதழின் பங்கு பற்றி கூறுங்களேன்…

தமிழில் சிற்றிதழ்கள் வருவதும் போவதுமாகத்தான் உள்ளது. மணிக்கொடி வெளிவந்த காலமே நான்கு ஆண்டுகள் தான். ஆனால் அது ஏற்படுத்திய வளர்ச்சி மிகப் பெரியது. அதிலும் குறிப்பாக தஞ்சை எழுத்தாளர்களே அதிகமாக அந்த காலத்தில் மணிக்கொடியில் எழுதினார்கள். அது ஆரம்பிக்கும் போது “தாயின் மணிக்கொடி பாரீர்” என்ற வார்த்தைகளில் இருந்து “மணிக்கொடி” என்ற தலைப்பு எடுக்கப்பட்டு இருந்தது. தேசம் குறித்தும் தேசியம் குறித்தும் வைத்த பெயரே பிறகு சுருங்கி மணிக்கொடி என்றானது. சிறுகதையின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருந்துள்ளது. அடுத்து சி.சு.செல்லப்பா “எழுத்து” ஆரம்பித்து பலவற்றை இழந்து சிற்றிதழ் நடத்திய கதை எல்லோருக்கும் தெரியும். அது புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்த்து. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் பலப்பல சிற்றிதழ்கள் வந்தும் காணாமல் போயிற்று. இப்போது சிற்றிதழுமில்லாமல் பேரிதழுமல்லாமல் சில பத்திரிக்கைகள் வருகின்றன. தீரா நதி, காக்கை சிறகினிலே, காலச்சுவடு, உயிர் எழுத்து என பல இதழ்கள் சிற்றிதழுக்கான கூறுகளைக் கொண்டு வெளிவந்து கொண்டுள்ளன. இலக்கிய சாயலும் ஜனரஞ்சகமுமாக வெளிவந்து கொண்டுள்ளன. நிறைய சிற்றிதழ்கள் பெருமூச்சு விட்டுக் கொண்டுதான் வந்து கொண்டுள்ளன. சிற்றிதழ்களே தமிழின் வளத்தையும் இலக்கியத்தையும் வளர்க்கின்றன.

உங்கள் பகுதியில் நீங்கள் நடத்திய சிற்றிதழ்கள் ஏதேனும் உண்டா?

நான், நடிகர் சார்லி, நண்பன் வெள்ளதுரை ஆகியோர் சேர்ந்து “எண்ணங்கள்” என்றொரு பத்திரிக்கை நட்த்தினோம். மூன்று, நான்கு இதழ்களோடு நின்றுவிட்டது. நடிகர் சார்லி நன்றாக எழுதக் கூடியவன். அவனது நடிப்பும் எழுத்தும் முழுவீச்சில் வெளிப்படவில்லை என்பது வருத்தமளிக்கக் கூடியது. பிறகு நான், உதய்சங்கர், தமிழ்ச்செல்வன் எல்லோரும் சேர்ந்து “த்வனி” என்ற இதழ் கொண்டு வந்தோம். அதற்கு பிறகு புதுவிசையின் ஆசிரியர் குழுவில் இருந்தேன். கல்லூரி படிக்கும் போது நாங்கள் போடும் நாடகம் தான் முதல் பரிசை வென்று வரும். நாடகம், கதை, கவிதை என எல்லாம் எழுதினோம்.

 நீங்கள் நடித்த நாடகம் பற்றி கூறுங்களேன்

கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நாடகம் நடத்தியும் நடித்தும் உள்ளேன். தமிழ் நாட்டிலேயே வீதி நாடகத்தை அறிமுகப்படுத்தியது எங்கள் குழு தான். உதய்சங்கர், தமிழ்ச்செல்வன், சார்லி, கோணங்கி போன்றவர்களை வைத்து 1978ல் தொடங்கினோம். முருகபூபதி எல்லாம் அப்ப சின்ன பையன். கி.ரா வீட்டு முன்பு தான் முதலில் நாடகம் போட்டோம். அதை அவர் ஊக்கப்படுத்தினார். சே.இராமானுஜத்தின் “இசை நாற்காலியை முதலிலேயே மெளன நாடகமாக போட்டு பெயர் வாங்கினோம். எமர்ஜென்ஸி காலக்கட்டத்தில் இரண்டாயிரம் பேர் கூடியிருந்த சபையில் மெளன நாடகத்தை அறிமுகம் செய்தோம். 1989 ஜனவரி 1 “சப்தர் காஷ்மி” என்ற வீதி நாடக கலைஞனை அடித்துக் கொன்ற காலக் கட்டம் வரையில் நாடகம் போட்டோம். “ஹல்லா போல்” (உரக்கப் பேசு) என்ற நாடகத்தை வீதியில் நடித்துக் கொண்டிருந்த போது காங்கிரஸ்காரர்களால் டெல்லியில் அடித்துக் கொல்லப்பட்டவரின் மனைவி அவர் இறந்த மூன்றாம் நாளே அதே நாடகத்தை திரும்ப போட்டார். அப்போது தான் தெரிந்தது இந்தியா முழுக்க 25000க்கும் மேல் வீதி நாடகக் குழு இருந்தன. 15000 மேற்கு வங்காளம், 7000 கேரளா, 3000 திரிபுரா, மீதமுள்ள குழுக்கள் டெல்லியில். தமிழ் நாட்டில் அப்போது அவ்வளவாக எங்களைத் தவிர வீதி நாடகக் குழு ஆரம்பிக்கவில்லையென்றே நினைக்கிறேன். தேவதச்சன் எழுதிய “தலைவர் மரணம்” நாடகமாக போட்டுள்ளோம். அப்போதெல்லாம் பொதுக் கூட்டங்களில் கூட்டம் சேர்க்க எங்களை ஆண்டன் செகாவின் “பச்சோந்தி” நாடகத்தை போடச் சொல்லி விட்டு பிறகு அவர்கள் கூட்டத்தை தொடங்குவார்கள். இசை, உடல்மொழி, வசனம் என நாடகத்திற்கான கூறுகள் பலவாக இருந்தாலும் இன்றைய காலக் கட்டத்தில் சிலர் பிரமிப்பை உண்டு பண்ணுவதற்கு மட்டுமே நாடகம் போடுகிறார்கள். சொல்ல வந்த விசயத்தை மக்களுக்கு புரியும்படி கொண்டு போய் சேர்க்காமல் புரியாதபடி நாடகம் போடுவது தவறு.

தமிழில் புதிய ஊடகமாக வீரியம் பெற்றிருக்கும் முகநூல் பற்றி உங்கள் கருத்து?

முகநூலில் இப்போது நிறைய கவிஞர்கள் தான் இருக்கிறார்கள். எல்லோரும் சோடை போனவர்களாக நான் கருதவில்லை. நன்றாக எழுதும் சில கவிஞர்களும் முகநூலில் இருக்கிறார்கள். அதனால் தான் நிறைய பேர் எழுத வந்துவிட்டார்கள். அதுவொரு கரும்பலகை மாதிரி எழுதிவிட்டு அழித்துவிடலாம், அழித்துவிட்டு எழுதிக்கொள்ளலாம். முன்பெல்லாம் இரு இதழுக்கு எழுதி அனுப்பிவிட்டு காத்திருந்த காலம் போய், அது வராமலும் போகும் சில நேரம். ஆனால் இப்போது சுடச்சுட பதிவிட்டு லைக்கும் வாங்கி விடுகிறார்கள்.. எழுதப் பழகுவதற்கான களமாக முகநூல் அமைந்து விட்ட அதே நேரத்தில் ஒரு வகையான போதையை உண்டாக்கி விட்டது. அதில் வரும் லைக்கை வைத்து நாம் மிகப் பெரிய ஆளாக நினைத்துவிட முடியாது.  பெண்கள் நிறைய பேர் எழுத ஆரம்பித்துள்ளது சிறப்பு. சிலர் தனித்துவமாக எழுத ஆரம்பித்துள்ளது வரவேற்கத்தக்கதாக உள்ளது. குப்பைகளும் குட் மார்னிங், காலை, மாலை, இரவு வணக்கங்களும் குவிந்து விடுகின்றன. வலைப்பூ, மின்னிதழ் போன்றவைகளும் வளர்ந்து வருகின்றன.

தமுஎகசவில்?

1979லிருந்து அதிலிருக்கிறேன். முதலில் கோவில்பட்டியில் கிளை செயலாளராக ஆரம்பித்து, மாநில குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறேன். பெண்ணிய கருத்துக்கு ஆதரவாக பேசுவது, மக்களை ஒன்றுபோல் பார்ப்பது என்று குறிக்கோளாக கொண்டுதான் இதில் இயங்கி வருகிறோம். கிட்டத்தட்ட தமிழ் நாட்டில் எல்லா மாவட்டத்திலும் தமுஎகச கிளை பரப்பியுள்ளது. முப்பதாயிரம் உறுப்பினர்களை கொண்டது. கே. முத்தையா, டி. செல்வராஜ் இன்னும் பலர் சேர்ந்து ஜீவா ஆரம்பித்த கலை இலக்கிய பெருமன்றத்திலிருந்து பிரிந்து தமுஎச என ஆரம்பிக்கிறார்கள். செம்மலர் என்ற இலக்கிய பத்திரிக்கை நடத்தி வருகிறது. சாகித்ய அகாடமி விருது பெற்ற பல எழுத்தாளர்களை தமுஎகச உருவாக்கியுள்ளது.

முகநூலில் திருநெல்வேலியின் வரலாற்று பதிவுகளை எழுத தோன்றியது பற்றி

நிறைய பேர் கவிதையும், கட்டுரையும் எழுதி வரும் பொழுது நான் கொஞ்சம் சுவாரஸ்யமாக வரலாற்று பதிவுகளை போட முடிவெடுத்தேன். முதலாக திருநெல்வேலியில், 1916ல் ஆரம்பித்த மரியா கேன்டீன் பற்றிய செய்திகளை பதிவாக போட்டேன். அது அதிக வரவேற்பை தந்தது. கல்லூரி காலங்களில் நல்லது கெட்டதை தீர்மானித்த இடமாக மரியா கேன்டீன் இருந்தது. அந்த இடத்தை சுத்தமாக இடித்து தள்ளிவிட்டு வேறு கட்டிடம் கட்டி விட்டார்கள். இன்றைக்கும் அந்த இடம் மரியா கேன்டீன் பேருந்து நிறுத்தமாக மட்டுமே உள்ளது. 40 வயதை தாண்டியவர்களுக்கு கல்லூரி நினைவாக இன்னும் இருப்பது அது தான். வெள்ளைக்காரன் டென்னிஸ் விளையாடி விட்டு டீ சாப்பிட ஆரம்பித்தது தான் மரியா கேன்டீன். இன்று அது இல்லை. இப்படியாக திருநெல்வேலியில் முக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிலைகள், பள்ளிகள், சர்ச் என நெல்லையின் நினைவுப் பதிவுகளாக போட்டு அதையே “கண் முன்னே விரியும் கடல்” என்ற புத்தகமாகவும் போட்டேன். தஞ்சையில் பிறந்த கோகிலா என்ற பிரமாணப் பெண்னை சதி என்ற உடன் கட்டை ஏறுதல் நிகழ்விலிருந்து காப்பாற்றிய லிட்டிடென் என்ற கிறிஸ்துவர் அவளை திருநெல்வேலிக்கு கொண்டு சென்று Living together ஆக வாழ்கிறார்கள். கோகிலா என்ற அந்த பெண் 1816 ல் கிளாரிண்டாவாக மாறி திருநெல்வேலியின் முதல் தேவாலயத்தை கட்டுகிறாள். அங்கு ஒரு கிணறும் தோண்டி, கீழ்சாதியும் அதில் குளிக்கும் விதமாக அமைக்கிறாள். அந்த கிணற்றுக்கு இன்னும் பெயர் “பாப்பாத்தி” கிணறு தான்.

உங்களது வருங்கால வரலாற்று ஆய்வு பற்றி

நான் தற்போது நூறாண்டுகளை கடந்த பள்ளிகளின் வரலாற்றை பற்றி எழுத திட்டமிட்டுள்ளேன். அப்படி தரவுகள் திரட்டும் போது நெல்லையில் ஒரு பள்ளியில் படிப்பவர்கள் அப்பா பேருக்கு பதில் அம்மா பெயரையே கொடுத்துள்ளது தெரிய வந்த்து. விசாரித்தால் தேவதாசியமைப்பு இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளி அது 1972 வரை நிலவுடைமைச் சமுகத்திற் எச்சமிருந்துள்ளது. 1925ல் ஆரம்பித்த அப்பள்ளியில் தேவதாசி அமைப்பின் கீழ்பிறந்த அப்பா யார் என்று தெரியாத குழந்தைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட பள்ளியிது. தற்போது அவைகள் மாறிவிட்டன. மேலும் ஜான் டக்கர் தங்கையான சாரான் டக்கர் தனது 300 பவுன் நகைகளை அனுப்பி கட்டிய பெண்களுக்கான பள்ளி 125 ஆண்டு கால வரலாறுடையது. அதுபோல் வ.உ.சி, பாரதி, புதுமைப்பித்தன் படித்த பள்ளிகளை பற்றியும் எழுத திட்டம் வைத்துள்ளேன்.

ஒரு படைப்பை படைப்பாளி எங்கிருந்து பெறுகிறான்?

அவனைச் சுற்றி நடக்கக் கூடிய சூழலை அவதானித்து அதற்கு கலைத் தன்மையை ஏற்றிச் சொல்பவனே நல்ல படைப்பாளி. அதை அப்படியே சொல்வது படைப்பாகாது. சில நேரம் புனைவாக கூட சிலவற்றை இலைமறையாக சொல்ல வேண்டும். படைப்பாளிக்கு பாறையில் இருக்கும் சிற்பத்தை உருவாக்க அதன் வேண்டாத பகுதிளை நீக்கத் தெரிய வேண்டும். சமூகத்திற்கு எதை கொடுக்க வேண்டுமென்று தெரிந்து கொடுக்க வேண்டும். கு.ப.ரா பெண்கள் படக்கூடிய அவஸ்தைகளை மிக நாசூக்காக சொல்லியிருப்பார். விரசமாக எழுதிவிடக் கூடாது. அது அறமற்ற செயலாகிவிடும்.

புனைவுக் கதைகளைப் பற்றி

புனைவுக் கதைகளும் வேண்டும். ஆரம்ப காலத்தில் சுதந்திரப் போராட்ட வரலாறுகளை எழுதி முடித்துவிட்ட பிறகு எதை எழுத வேண்டுமென்று தெரியாமல் ஒரு இடைவெளி விழுந்து அப்போது புனைவு தேவைப்பட்டது. தற்போது அந்த இடத்தை தொலைக்காட்சி தொடர்கள் பிடித்துவிட்டன. அதனால் இப்போது அப்புனைவு தான் அதிகமாக படிக்கப்படுகின்றன. பெரிய புனைவு நாவலை ஒரு ஆயிரம் பேர் படித்துவிட்டால் போதும். ஒட்டுமொத்த சமூகமும் படித்து விட முடியாது. புனைவு இலக்கியத்திற்கான தேவை இருக்கிறது.

உங்களது கதைகள் பெரும்பாலும் பெண்ணியம் சார்ந்தே அமைந்துள்ளதே? உங்களை பெண்ணியவாதியாக முன்னிறுத்த விரும்புகிறீர்களா?

ஒரு ஆண் பெண் சார்ந்த கதைகள் எழுதும் போது நிறைய பேர் படிக்கிறார்கள். எனக்கு நிறைய பாட்டியின் தாக்கம் கொண்டு வளர்ந்த அனுபவமுள்ளது. அதனால் தான் ஆச்சி பற்றிய நிறைய கதைகள் அமைந்துவிட்டது. அவர்களிடம் கேட்ட கதைகள் நிறைய உண்டு. அது இயல்பாக பெண்ணியம் சார்ந்த கதையாக வந்துவிட்டது. எனது அப்பாவின் அப்பாதனத்தால் எதிர் நிலை பண்பாக நான் அம்மா பிள்ளையாக மாறியதும் காரணமாக இருக்கலாம்.

(இந்த நேர்காணலின் தொடர்ச்சி ஜூலை 15 ஆம் தேதி வெளிவரும்)