இரோம் ஷர்மிளா – இளகிய இரும்புப் பெண்மணி

96

இரோம் சானு ஷர்மிளா

இரோம் சி நந்தா என்பவருக்கும், இரோம் ஒங்பி சக்தி என்பவருக்கும் 1972ம் ஆண்டு மார்ச் 14ம் தேதியன்று பிறந்தவர் தான் இரோம் சானு ஷர்மிளா. மணிப்பூரின் இரும்பு பெண்மணி என அழைக்கப்படுபவர். கிட்டத்தட்ட 500 வாரங்களுக்கும் அதிகமாக உண்ணாவிரம் இருந்தவர். இது தான் உலகின் நீண்ட உண்ணாவிரத போராட்டமென சாதனைப் படைத்து இருக்கிறது.

2000ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி இம்பால் பள்ளத்தாக்கில் மலோம் என்ற சிற்றூர் ஒன்றில் பேருந்து நிறுத்தத்தில் நின்று இருந்த 10குடிமக்கள் மீது, இந்திய ஆயுதப்படையின் துணைப்படையான அசாம் ரைபிள்ஸ் படை கண்மூடித்தனமான
தாக்குதலை நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில் தேசிய சிறார் வீரதீர விருது பெற்றவரும், வயதான பெண்களும் இறந்தனர்.

இதை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார் இரோம் சானு ஷர்மிளா. போராட்டத்தின் மூன்றாம் நாள் தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை கைது செய்ய பிரச்சனை பெரியதாகியது. தற்கொலைக்கு முயன்ற குற்றத்திற்கு ஒராண்டு சிறை தண்டனை பெற்றார். (தற்கொலைக்கு முயல்பவர்களை ஓராண்டு மட்டுமே சிறை வைக்க முடியும். அதனால் ஓராண்டு சிறை வாசத்திற்கு பின்பு விடுதலை செய்யப்பட்டு கைது செய்யப்படுவார் இரோம் ஷர்மிளா)

தாக்குதல் நடத்திய துணைப்படைக்கு இந்திய ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வழங்கி காப்பாற்றியது. இச்சட்டத்தின் மூலம் சந்தேகத்திற்கு உரிய எந்த நபர்களையும் விசாரணையின்றி சுட முடியும். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் கூட முறையிட முடியாது. இச்சட்டத்தை எதிர்த்து தான் கடந்த 16 ஆண்டுகளாக இரோம் ஷர்மிளா உண்ணாவிரதம் மேற்க்கொண்டார்.

கடந்த மாதம் ஜூலை 26 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இரோம் ஷர்மிளா, “தான் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட போவதாகவும், விரைவில் திருமணம் செய்துக் கொள்வேன் எனவும் உறுதி கொடுக்க” 10000 ரூபாய் சொந்த ஜாமினில் நீதிமன்றம் அவரை விடுவித்தது.

ஆகஸ்ட் 9ம் தேதி உண்ணாவிரத்தை முடிப்பேன் என அறிவித்து இருந்தார். அதன்படி இன்று தேன் அருந்தி உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டார். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த இரோம் ஷர்மிளா, “மணிப்பூர் மாநிலத்திற்காக பாடுபட போவதாகவும், 16 ஆண்டுகளாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதால் உண்ணாவிரத்தை கைவிட்டதாகவும், முதல்வர் ஆவதே தன் லட்சியமெனவும்” தெரிவித்தார்.

இந்நிலையில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி, இரோம் சானு ஷர்மிளாவை முதல்வர் வேட்பாளராக்கி வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க போவதாகவும், மணிப்பூர் அல்லாத ஒருவரை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் பரபரப்பாக பேச்சு அடிப்படுகிறது.

மணிப்பூரை தனி நாடாக கோரும் அமைப்பு (A.S.U.K) இரோம் சானு ஷர்மிளா அரசியலில் ஈடுபடுவதற்கும், மணிப்பூர் அல்லாத ஒருவரை திருமணம் செய்துக் கொள்ளவும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

  • ராஜி