ஜானி – உயிர் கொடுத்த இசை

288

தமிழ் சினிமாவில் கதையோடு இசையும் ஒன்றென கலந்து வருவது மிக மிக அரிதாகவே இருக்கும். திறமையான இசையமைப்பாளராகவே இருந்தாலும் இயக்குனிரின் திறமை இருந்தால் தான் கதைக்கு ஏற்ற இசையை பெற்று காலத்திற்கும் மறக்கவியலாத நல்லதொரு வெற்றி பெற்றிட முடியும். இளையராஜா எத்தனை படங்களில் பணி புரிந்து இருந்தாலும் சில இயக்குனர்கள் தான் அவரிடம் இருந்து மிகச்சிறந்த இசையை பெற்று எக்காலமும் இசை வெள்ளத்தில் நம்மை நீந்த செய்கின்றனர். பாலுமகேந்திரா, கமல்ஹாசன், பாரதிராஜா என்ற வரிசையிலே தவிர்க்கவே முடியாதவர் இயக்குனர் மகேந்திரன்.

இயக்குனர் மகேந்திரன் அவர்களின் படங்களிலேயே ஜனரஞ்சகமான கலைப் படம் என்றால் அது ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த ஜானி திரைப்படம் தான். ஏன் கலைப் படம் என்று கேட்டால் இசையை மிக அதிகமாக கொண்டாட கூடிய படமாக இருந்ததால் தான்.

படத்தின் கதை வேறு தளத்தில் இருந்தாலும் முக்கிய கதாபாத்திரங்களை இசை ஆர்வமிக்கவராக அமைத்து படத்தின் கதைக்கான சூழலோடு இசையையும் அழகாக கோர்த்து பின்னனி இசையிலும் புதுவிதமான முயற்சிகளை பெற்று அனைத்து பாடல்களையும் எந்நாளும் கொண்டாடிடும் வகையில் தந்தமையால் இப்படம் ஜனரஞ்சகமான கலை படமாகிறது.

இந்த படத்தில் ரஜினிக்கும் ஸ்ரீதேவிக்கும் நடிப்பில் மிகப்பெரிய போட்டியே நடந்திருக்கும் அந்தளவுக்கு ஒவ்வொரு காட்சியிலும் அட்டகாசப்படுத்தி இருப்பார்கள். அதிலும் ஸ்ரீதேவி பாடகியாக இருப்பார் அவரின் காதலன் ரஜினியோ தொழில்முறை திருடனாக இருந்தாலும் இசை ஆர்வமிக்கவராக வருவார். அதை படத்தின் முதல் காட்சியிலேயே இயக்குனர் பதிவு செய்து இருப்பார். வயல் வெளியில் நடவு வேலையில் ஈடுபட்டு இருக்கும் பெண்கள் நாட்டுபுற பாடலை பாடிக்கொண்டு இருப்பார்கள் அங்கு வரும் ரஜினி அந்தப் பாடலை ரசித்துக் கொண்டே ஒரு சிறிய டேப் ரிக்கார்டரில் பதிவு செய்வார். எந்த இசைக் கச்சேரி என்றாலும் அதை பதிவு செய்வார் அந்தளவுக்கு தீவிர இசை விரும்பியாக இருப்பார்.

johnny2இங்கு தான் இயக்குனரின் சாமர்த்தியம் வெளிப்படும் இதே மற்றவர்களின் படங்களில் இதே சூழலை கொண்டு இளையராஜா அவர்களிடம் டைட்டில் சாங் பெற்று இருப்பார்கள். ஆனால் மகேந்திரன் அவர்கள் வேறு எந்த பிண்ணனி இசையும் இல்லாமல் அந்த பெண்களின் குரலை மட்டுமே முன்னிறுத்தி பாடலை பெற்று இருப்பார்.ஸ்ரீதேவிக்கும் முதல் காட்சியிலேயே அர்ச்சனா என்ற பாடகியாக அதற்கு தகுந்த அறிமுகமாக ம்யூசிக் அகாடமியில் பல ரசிகர்கள் முன் “ஒரு இனிய மனது இசையை அழைத்து செல்லும் இன்பம் புது வெள்ளம் ” என்று அருமையான பாடல் காட்சியோடு நம்மையும் இசை மழையில் நனைந்திட தயாராகுங்கள் என்று சொல்லாமல் காட்சியால் புரியவைத்து விடுவார் இயக்குனர். அந்த பாடல் காட்சி அற்புதமான இசையாலும் அசோக் குமார் அவர்களின் இயல்பான ஒளிப்பதிவிலும் ரஜினி ஸ்ரீதேவியின் நேர்மையான முகபாவனைகளிலும் நம்மை மெய்மறக்க செய்து மனதை இதமாக வருடிவிடும். இன்றும் பல இசை தொலைக்காட்சிகளில் இந்த பாடல் இல்லாத நாளை காண இயலாது.

பாடல் காட்சிகளை பல படங்களில் திணிக்க வேண்டிய கட்டாயத்தில் தேவையற்ற காட்சிகளின் இடையே சொருகப்படும் அபத்தத்தை இன்றுவரை பல தமிழ் திரைப்படங்களில் காண்கிறோம். அதிலும் குறிப்பாக ஜனரஞ்சக சினிமா என்று வரும் படங்களில் தான் இயக்குனர்கள் செய்வதறியாது ஐந்து பாடல்களை திணித்தே ஆக வேண்டுமென்ற நிலையில் இருப்பார்கள். ஹீரோ ஆரம்ப பாடல் , காதல் வந்தவுடன் பாடல் , இடைவேளை முடிந்தவுடன் பாடல் (இது தான் சகிக்கவே முடியாதது பரபரப்போடு வந்து அமரும் போது துளி கூட சம்மந்தம் இல்லாமல் பல நல்ல படங்களில் கூட இந்த நேரத்தில் பாடலை சொருகுவார்கள்) இப்படி

ஐந்து பாடலுக்கான நேரங்களை முடிவு செய்துவிட்டே திரைக்கதை அமைத்தது போல இருக்கும். அதுவே மகேந்திரன் அவர்கள் இந்த படத்தில் பாடல்களுக்கு முன் தந்திருக்கும் சூழ்நிலைகள் மிக சரியாக ஒத்துப்போகும். அதனால் தான் படத்தோடு காணும் போது துளியும் சலனமின்றி நம்மால் அதனை ஒன்றி ரசிக்க முடிகிறது.

johnny3நாயகன் போலீஸிடமிருந்து தப்பிக்கிறான் அப்போது உண்மையான குற்றவாளியிடம் சண்டை போட்டு உடலில் காயத்துடன் தவிக்கும் போது, மலைவாசி பெண்கள் காப்பாற்றி மருந்திடுகிறார்கள். அதிலொரு அழகி இவனை விரும்புகிறாள் அதை இவனிடம் சொல்ல வேண்டும். அவனும் மனக்காயம், வேதனை என்று இருக்கிறான்.

அவன் சூழ்நிலைக்கு மனதை ஏதோவொன்று இதமாக்கினால் போதும், இந்த சூழ்நிலையில் தான் வருகிறது “ஆசைய காத்துல தூது விட்டு” என்ற பாடல் அவளுக்கும் தன் காதலை சொல்லியாகிவிட்டது.

அவனுக்கும் ஒரு இசையினால் மனம் சற்று இளப்பாறியது. இந்த பாடல் கிட்டதட்ட முப்பத்தைந்து வருடங்கள் கழித்து இன்றும் பலருக்கு விருப்பமான பாடலாக இருக்கிறதென்றால் அதற்கு முழு முதற்காரணம் இளையராஜாவின் இசையும் சைலஜா அவர்களின் குரலும் கங்கை அமரனின் வரிகளும் தான். இந்த படத்தின் ஜந்து பாடல்களில் நான்கு கங்கை அமரன் தான் எழுதினார். 2013ல் இளையராஜா “குண்டல்லோ கோதாரி” என்ற தெலுங்கு படத்தில் இந்த முழுப்பாடலின் மெட்டை அப்படியே உபயோகப்படுத்தி இருப்பார்.

அதற்கு முன்னும் 1993ல் மற்றொரு தெலுங்கு படத்தில் இப்பாடல் இடம்பெற்று இருக்கும். சமீபத்தில் வெளியான ஷமிதாப் படத்தின் ஸ்டீரியோ ஃபோனிக் சன்னாட்டா என்ற பாடல் இப்பாடலின் மெட்டே என்பது பலரும் அறிந்ததே. இந்த பாடலின் வெற்றி எந்தளவுக்கு இருக்கிறது என்பதற்காக தான் இதையெல்லாம் கூறுகிறேன். இந்த பாடல் வந்த காலம் முதல் இன்று வரை இளைஞர்களுக்கு இப்பாடல் மிக  சுவாரசியமானதாக இருப்பதை அறிவோம்.

johnny4கவிஞர் கண்ணதாசன் வரிகளுக்கு இளையராஜாவின் இசையில் எனக்கு மிக மிக பிடித்த ஜென்சியின் குரலில் மகேந்திரன் அவர்களின் அட்டகாச படமாக்குதலில் உருவான பாடலாக இப்படத்தில் அமைந்தது “என் வானிலே ஒரே வெண்ணிலா” என்ற பாடல் வழக்கம் போல இந்த பாடலின் சூழலும் மிக அருமையாக இருக்கும்.

மிக பிரபலமான பாடகி தனக்கொருவனுக்காக மட்டும் பாடுகிறாள் என்பதை எண்ணி ரஜினி இந்த பாடல் முழுக்க ஸ்ரீ தேவியை அழகாக ரசித்து கொண்டு இருப்பார். அப்போது அவர் அணிந்திருக்கும் டீ சர்டில் “Music the life giver” என்ற வாசகம் மின்னும்.

எவ்வளவு உயிர்ப்பான வாசகம் நினைத்தாலே சந்தோஷத்தில் மூழ்கடிக்கிறது. இந்த படத்தின் மற்ற பாடல்களின் வகையில் இருந்து சற்று விலகி நின்று அசத்தியது “சென்யோரீட்டா ஐ லவ் யூ” என்ற பாடலே. பாடலின் ஆரம்பம் இளையராஜா புதுவிதமான ஒலியை கொண்டு அமர்க்களபடுத்தி இருப்பார். படத்தின் முடிவே அர்ச்சனா பாடும் நிகழ்ச்சிக்கு ஜானி வருவானே அங்கே அவனை பிடித்துவிடலாம் என்பது தான். இப்படியெல்லாம் காட்சியை இறுதியில் வைப்பதெல்லாம் இயக்குனர் மகேந்திரனின் தைரியம் தான். ஜானகியின் குரலில் “காற்றில் எந்தன் கீதம்” பாடல் படத்தினுடைய ஜீவனாக அமைந்திருக்கும். இன்றும் அந்த பாடலின் வெற்றியை நாம் உணரலாம்.

அதே போல படம் முழுக்க பின்னணி இசையில் பல வழமைகளை உடைத்தது போலவே இருக்கும். உதாரணமாக புதுப்பேட்டை இறுதி சண்டைக்காட்சி, ஆரண்ய காண்டம் சண்டைக்காட்சி , மங்காத்தா இடைவேளைக்கு பிறகு வரும் சண்டைக்காட்சி இப்போ வந்த ஜிகர்தண்டா சண்டை காட்சிகள். இந்த குறிப்பிட்ட காட்சிகளின் போது வரும் இசை அதுவரை தமிழ் சினிமாவில் அத்தகைய காட்சிகளில் இப்படி ரகளையாக கண்டு இருக்க மாட்டோம். இதே போல அப்பொழுது இளையராஜா அவர்கள் இந்த படத்தில் இரண்டு ரஜினிகளும் சண்டையிடும் காட்சியில் ரகளையான  இசை அமைத்திருப்பார். பரபரப்பான துரத்தல் காட்சிகளிலும் மிக வித்தியாசமான இசையை தந்திருப்பார். இரண்டு ரஜினிகளும் முதல் முறை சந்தித்து கொள்ளும் இடைவேளை காட்சி மிக பிரமாதமாக இருக்கும்.

இரண்டு நபருக்குமான வேறுபாடுகளை ரஜினி அருமையாக தந்திருப்பார் அப்போதும் பின்னணி இசை சிறப்பாக இருக்கும். இப்படி படம் முழுக்கவே கதையோடு இசை ராஜ்ஜியம் நடத்தப்பட்டு இருக்கும்.

ரஜினி – ஸ்ரீதேவி இடம் பெரும் அனைத்து காட்சிகளிலும் பின்னனியில் இசையொரு அங்கமாகவே நம்மை கவனிக்க வைத்து கொண்டே இருக்கும். குறிப்பாக ரஜினியிடம் ஸ்ரீதேவி தன் காதலை தெரிவிக்கும் மனப்பான்மையில் பேசிக் கொண்டு இருப்பார் அதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலையில் ரஜினி விலகிக்கொண்டே பேசுவார், பேச்சின் முடிவில் உணர்வுபூர்வமான காதல் கைகூடிவிடும். இந்த காட்சி கிட்டத்தட்ட ஆறு நிமிடங்களுக்கு இருக்கும். இருவருரின் நடிப்பும் உச்சமாய் இருக்கும். அதிலும் ரஜினியின் யதார்த்தமான அழுகையும் ஸ்ரீதேவியின் சிணுங்கலான கோபமும் ஆஹா அத்தனை பிரமாதமாக இருக்கும் இதை மொத்தமும் அழகாக ரசிக்க பின்னனியில் அற்புதமான இசை ஒலித்துக்கொண்டே இருக்கும் கிட்டத்தட்ட ஜானி படத்தின் தீம் ம்யூஸிக் அந்த இசை தான்.

2000 முதல் தற்போது வரையில் உள்ள தமிழ் சினிமா இசையில் 7ஜி ரெய்னபோ காலனி படத்தின் இசைப் பெருமையின்றி விவாதித்திட முடியாது. அந்த படத்தின் ஆல்பத்தில் walking through rainbow என்ற தீம் மிக அற்புதமாக மனதை வருடும் இசையாக இருக்கும். அந்த இசையின் மூலமே ஜானி படத்தில் வரும் இசை தான். மேலே குறிப்பிட்ட காதல் காட்சியில் வரும் இசையை கொஞ்சம் மாற்றியது போலவே இருக்கும். இயக்குனர் மகேந்திரன் – இளையராஜா இணையில் வந்த பெரும்பாலான படங்கள் இசையின் முக்கியத்துவத்தோடு தான் இருக்கும். நிச்சயம் ஜானி திரைப்படத்தின் இசை அழிவின்றி இன்னும் பல தலைமுறை வாழும்.

Music the life giver

  • கருணாநிதி அர்ஜித்