கபாலி – தலித் அரசியல் படமா?

477
Kabali-is-a-dalit-politics-flim

கபாலி

திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பா.ரஞ்சித் இயக்கத்தில் வந்திருக்கும் படம்.

இதுவரை எந்த தமிழ் படங்களும் சந்திக்காத அளவிற்கு சமுக ஊடகங்கள் மட்டுமில்லாமல் பொது ஊடகங்களின் விமர்சனத்திற்கும் ஆளாகியிருக்கும் முக்கிய படமென்றுச் சொல்லலாம்!

இந்த படம் தலித் அரசியல் பேசுவதாக ஒரு பக்கம் குற்றச்சாட்டு!  பேசினால் என்ன ? உங்களுக்கேன் கோபம் வருகிறது! போன்ற எதிர் வினையாற்றும் விமர்சனங்கள்!

முக்கிய நாளிதழ் தினமணி ரஞ்சித் கையில் இந்த படம் இயக்க கொடுத்ததே தவறு என்ற பாணியில் விமர்சனம்! துணிந்து படங்களுக்கு மார்க் போடும் வாத்தியார் ஆனந்தவிகடன் மக்கள் வாக்கெடுப்பு கோருகிறார்!

இந்த படம் அரசியல் பேசுகிறதென்பது ஒரு பக்கமென்றால் இந்த படத்தை வைத்து அரசியல் பேசுவது மறுபக்கம் தொடர்கிறது!

இந்த படம் நிச்சயமாக, ஒன்றை புரிய வைக்கிறது. ஒரு தலித் சினிமா படமெடுத்தாலும் எதிர்வினையாற்றுவோம் என்பது தான் அது.

இது சம்பந்தமான, பா.ரஞ்சித் உடனான ஒரு நேர் காணலை நியூஸ் 18 தமிழ் சேனல் நேற்று நடத்தியது. இந்த படத்தை பொறுத்தவரை இயக்குனர் தெளிவான சிந்தனையில் இருக்கிறார் என்பதை உணர முடிந்தது. சின்னகவுண்டர், தேவர்மகன் படங்கள் வந்த போது அந்த படங்களை கவுண்டர் படம், தேவர் படம் என்று சொல்லாதவர்கள் இதை மட்டும் ஏன், தலித் படம் என்று சொல்கிறார்கள்? என்ற நியாயமான வினாவை வைக்கிறார்.

மக்களின் இழி நிலையை உயர் சாதியினர் புரியும் விதமாகத்தான் காந்தி சட்டையை கழற்றியதும், சட்டையே போடாத சமூகம் கோட் போட்டு விதிமீறலாக அம்பேத்கர் கோட் போட்டதமாக ஆடையிலும் அரசியல் இருப்பதை வசனமாக வைத்த போது ஏன் இத்தனை பொங்குதலென்று தெரியவில்லை!

சின்னகவுண்டர் படத்தில் நாயகன் நடந்து வரும் போது தோள் துண்டை இடுப்பில் கட்டி பவ்வியமாக குனிந்து வணக்கம் சொல்லும் காட்சிகளில் தலித்துகளை இழிவு படுத்தியதாக அன்று யாரும் பொங்கல் வைக்கவில்லை!

எத்தனை படங்களில் அவர்கள் கேவலமாக சித்தரிக்கபட்டுள்ளார்கலென்று பட்டியல் போட்டால், பக்கங்கள் போதாது.

வட மாநிலத்தில் மாட்டு தோல் வைத்திருந்ததிற்காக நிர்வாணமாக்கி கட்டி போட்டு, தோள் உரித்தார்களே அப்போது ஏன் பொங்கவில்லை?

ரோஹித் வெமுலா மரணத்திற்கு உயர் சாதியினர் எத்தனை பேர் பொங்கினார்கள் ?

சமபந்தி போஜனமென்பதும் கூட அவர்களை தாழ்ந்தவகளாகவும், மற்றவர்களை உயர்ந்தவர்களாகவும் காட்டும் அரசியலில்லாமல் வேறென்ன ?

இந்த கோபங்கள் அடிமனசில் தங்கிய ஒரு இளைஞனின் படைப்பில் அந்த கோபம் வெளிப்படுவதில் எந்த தவறும் இருக்க முடியாது .

ரஞ்சித் இந்த நேர்காணலில் , ‘இனியும் அம்பேத்கர்கள் தலித் சமுகத்தில் பிறக்கக் கூடாது. மற்ற சமுகங்களில் பிறக்க வேண்டும் . அப்போதுதான் சாதியற்ற சமுகம் உருவாகும் ‘ என்று சொன்னது வலியான உண்மை.

ரஜினி அவர்களை பொறுத்தவரை, இந்த படத்தை ரசித்து செய்திருப்பதாகவே காண முடிகிறது. உச்ச நடிப்புகளை குறைத்து, இயல்பான நடிப்பை அவரால் தர முடிகிறது. அவர் ஒரு மாபெரும் கலைஞர் என்பதற்கு இந்த படம் அவருக்கு சட்சியாக அமையும்.

தன் மனைவி உயிரோடு தான் இருக்கிறார் என்ற தகவலை கேட்கும் நேரம் , அவர் முகத்தில் மெல்லிய புன்னகை விழிகளின் தவிப்பு இது வரை யாரும் பார்க்காதது!

யாரோ ஒரு பெண் தன்னை அப்பா என்று கூப்பிடும் போது காட்டும் பிரதிபலிப்பு, சிவாஜிக்கு பிறகு அடையாளம் காட்டுகிறது !

சண்டை காட்சிகளின் வேகம் ரஜினியை அப்படியே உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இறுதி காட்சியின் முடிவை ரஜினியே விரும்பி தான் வைக்கப்பட்டதாக இயக்குனர் சொல்கிறார்.

வயதான தோற்றம், கோட் சூட்டுடன் புது விதமான பரிமானம். ரஜினி, நல்ல முடிவெடுத்து இந்த படத்தை செய்திருக்கிறார். இனி இது போன்ற தேர்ந்த கதைகளையும், நல்ல வேடங்களையும் ஏற்று நடிக்க தயாராகிவிட்டதாகவே உணர முடிகிறது.

சினிமா வரலாற்றில் கபாலி ஒரு சிறந்த படம் தான். நல்ல படம் கொடுத்ததற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், இயக்குனர். பா.ரஞ்சித்திற்கும் பாராட்டுகள் !

-மு.முகமதுபாட்சா