கன்றும் கழுதையும்

50

ஓரிரு மாதங்களில், காட்டிலுள்ள படிக்கும் விலங்குக் குட்டிகளுக்கெல்லாம்  தேர்வு வைக்கப் போகிறார்கள் என அறிவிப்பு வந்தது. தேர்வு எழுதப் போகும், சிங்கக்குட்டிக்கும் யானைக்குட்டிக்கும் கன்றுக்குட்டிக்கும் ஆட்டுக்குட்டிக்கும் கழுதைக்குட்டிக்கும் பீதி பற்றிக் கொண்டதோ இல்லையோ, அதைப் பெற்ற சிங்கத்துக்கும் யானைக்கும் பசுக்கும் ஆட்டுக்கும் கழுதைக்கும், உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் ஆடத் தொடங்கி, இரவு முழுவதும் தூக்கமின்றி, அவற்றிற்கு கண்கள் எல்லாம் பிதுங்கிக் கொண்டன.

ஒவ்வொரு விலங்கிற்கும் தன் குட்டி தான் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என அவ்வளவு  ஆசை. ஆசை என்பதை விட பேராசை! எனவே, எல்லா விலங்குகளும் அதனதன் குட்டிகளைப் பரிட்சைக்கு தயார் செய்ய ஆரம்பித்தன.

ஒரு பசு, அதன் கன்றுக்குட்டி மூச்சு விடுவதிலிருந்து உச்சா போவது வரை அட்டவணைப் போடுகிறது. அட்டவணைப்படி  படிப்பே கண்ணாக இருந்து பசி தூக்கமில்லாமல் கன்று படித்துவிட்டால், உலகிலேயே தலைச் சிறந்த விலங்காக அது போற்றப்படுமென பசு தினமும் கனவு காண்கிறது. இதைப் பார்த்தவுடன் மற்ற விலங்குகளும் ஒவ்வொன்றாக, அதன் குட்டிகளுக்கு அட்டவணைப் போட்டு பரிட்சைக்கு தயார் செய்ய ஆரம்பிக்கின்றன.

அட்டவணைப்படி கன்றுக்குட்டி காலையில் ஆறு மணிக்கு எழுந்து சுவற்றைப் பார்த்து முட்டிக் கொண்டே படிக்க வேண்டும் என பசு தீர்மானிக்கிறது.  இப்படியாக, இடைவெளியே இல்லாமல், இரவு ஒன்பது மணி வரை படித்துவிட்டு, கன்று ‘டான்’ என்று ஒன்பது மணிக்கு தூங்கிவிட வேண்டும்.

கடிவாளம் மாட்டிய குதிரை நன்றாக படிக்கிறது என காற்றில் செய்தி பறந்து வந்தது. உடனே, கன்றுக்கும் கடிவாளம் வாங்கி பசு மாட்டியது. குதிரைக்கு தானே கடிவாளம் என கேள்வி எல்லாம் எழுப்பக் கூடாது. “வேறு விலங்குகளுக்கு கடிவாளம் போடக் கூடாது என்று எந்த மடையனாவது கூறியிருக்கிறானா என்ன? அப்படியே எவனாவது சொல்லியிருந்தாலும் அவன் மடையன் தான். என் குட்டி தலை சிறந்த விலங்காக போற்றப்பட வேண்டும். நான், அதன் நல்லதுக்கு தான் செய்கிறேன்” என தீர்மானித்து கொள்கிறது, பசு!

இந்த அட்டவணையிலும் ஒரு சிக்கல் கழுதை நண்பனால் வந்தது. கழுதை பசுவைச் சந்தித்த போது, “என் குட்டியெல்லாம் இரவு பதினொரு மணி வரை படித்துவிட்டு, காலையில் ஐந்து மணிக்கே எழுந்து பரிட்சைக்கு படிக்கிறது” எனப் பீத்தி கொண்டதும் பசுவிற்கு இன்னும் படபடப்பு அதிகமாகிவிட்டது.

“நம் கன்றுக்குட்டி எட்டு மணி நேரம் தூங்குகிறதே! இந்த கழுதையின் குட்டியோ ஐந்தே மணி நேரம் தான் தூங்குகிறதாமே?! அது நம் குட்டியை முந்திவிட்டால்…?!” என உடனே அட்டவணையை மாற்றி, கன்றுக்கு பக்கத்திலேயே இரவெல்லாம் அமர்ந்து படி படி என படிக்க வைக்கிறது!

கன்று சற்றே கண் அயர்ந்தாலும், ஊரிலுள்ள கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி, அந்த கன்று சீலிங்கில் தூக்கி மாட்டி சாகும் அளவிற்கு பசு நாக்கைப் புடுங்கும் கேள்விகளைக் கேட்கிறது; கொடூரமாக கடிந்து பேசுகிறது. இந்த அடக்குமுறை தாங்காமல் கன்று தினமும் அழுகிறது. ஒரு சில சமயங்களில் கோபம் வந்து பசுவையே முட்டக் கூட வருகிறது! பசுவிற்கு கவலையே இல்லை. அதைப் பொருத்தவரை, ‘அடுத்த மாதம் தேர்வு! அதில் முதல் விலங்கு நம் கன்றாக தான் இருக்க வேண்டும்!’. அவ்வளவே!

இந்த கதை போல தான், நாம் பல பெற்றோர்களை இப்போதுள்ள உலகில் காண முடிகிறது. பெற்றோர்கள் என்பதை விட, மதிப்பெண்களுக்கு பின்னால் ஓடுகிற விலங்குகள் போல, பெற்றோர்களை சமூகமும் பள்ளிகளும் மாற்றியுள்ளது. இது மிகவும் வேதனைக்குரிய சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.

காட்டிலுள்ள ஒவ்வொரு விலங்குகளுக்கும், ஒவ்வொரு தனித்திறமை உள்ளது போல தான், நம் குழந்தைகளும். சில குழந்தைகள் மயில்கள்  போல அழகாக நடனம் ஆடும்; குயில்கள் போல அழகாக பாடும்; மான்கள் போல துள்ளி குதித்து விளையாடும்; மீன்கள் போல தண்ணீரில் நீச்சல் அடிக்கும்; யானைகளைப் போல வேகமாய் ஓடும்; சிறுத்தை போல பாயும். இவ்வாறு, ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள திறமைகள், மிகவும் வித்தியாசப்படும். அதைக் கண்டறிவதற்கு முதல் படியே இந்த படிப்பறிவு. இந்த படிப்பறிவைச் சோதிப்பதற்கே தேர்வுகள். எனவே, தேர்வுகளை எதிர்கொண்டு நிச்சயம் அதைக் கடக்க வேண்டுய அவசியம் உண்டே தவிர, அதில் நூற்றுக்கு நூறு வாங்கியே ஆக வேண்டும் என்ற எந்த ஒரு கட்டாயமும் யாருக்கும் இல்லை. அவ்வாறு இருந்தால், அது நமக்கு நாமே மாட்டிக் கொண்ட பூட்டு தான்!

“ஐய்யய்யோ! என்ன இப்படி சொல்றீங்க?! தேர்வுல அதிக மதிப்பெண் வாங்கலைன்னா, விருப்பப்பட்டத படிச்சு வாழ்க்கைல உயர முடியுமா? லூசு மாதிரி பேசாதீங்க” என கூறும் பெற்றோரிடமோ ஆசிரியரிடமோ ஒரே ஒரு கேள்வி தான் முன்வைக்க வேண்டும்.

“உங்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு இடங்களில் உங்கள் பள்ளி தேர்வின் மதிப்பெண்கள் உங்களுடன் வந்தது?”

இதை ஆழமாக சிந்தித்தால், பல இடங்களில் நம் திறமை தான் வாழ்க்கையில் மதிப்பையும் கௌரவத்தையும் தந்துள்ளது என புரியும். இதை ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் யோசிக்க ஆரம்பித்து புரிந்து கொண்டால், அவர்கள் கீழுள்ள குழந்தைகள் வாழ்க்கை என்னும் தேர்வில் நூற்றுக்கு நூறு கண்டிப்பாக எடுத்துவிடும்.

ஒரு குழந்தை பெற்றோரிடமோ ஆசிரியரிடமோ எதிர்பார்ப்பது, மிகவும் சிம்பிளான விசயங்களைத் தான். ஆனால், இதை செய்வது மிக மிக கடினம்.

1) “படி! படி!” என்று நச்சரிக்கவோ படிப்பைப் பற்றி பீதியை உண்டாக்கவோ கூடாது.

2) எவ்வளவு மதிப்பெண்கள் இதுவரை எடுத்திருந்தாலும், “வெரி குட்! அடுத்த முறை இதைவிட நன்றாக உன்னால் செய்ய முடியும்” என தட்டிக் கொடுக்க வேண்டும்.

3) தன்னைப் பற்றி யாரோ ஒரு மூன்றாம் நபரிடம் தரக்குறைவாக பேசக் கூடாது.

4) முக்கியமாக ‘பக்கத்து வீட்டுக்காரன் கார் வாங்கிட்டான்! நீ மோர் கூட வாங்கல’ போன்ற கேவலமான ஒப்பிடுதல் கூடவே கூடாது.

5) தேர்வின் போது, “உன்னால் முடிந்தவரை எழுதிட்டு வா! ஒண்ணும் பிரச்னை இல்ல” என சொல்லி, ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை அள்ளித் தெளிக்கும் தோழனாக தோழியாக இருக்க வேண்டும்.

இவையெல்லாம் செய்வது, மிக கடினம் தான். ஆனால், செய்தால் பிள்ளைகளின் மனது ஆனந்த கூத்தாடும். பிள்ளைகளின் ஆனந்தத்திற்காக தானே எல்லாம்?! பெற்றவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டென்சனும் ஸ்ட்ரெஸும் குறையும்.

இதை இன்னும் ஏற்று கொள்ளாமல் இருந்தால், ஒவ்வொன்றாக பார்ப்போம். முதல் நச்சரிப்பு பாய்ண்ட்டிற்கு வருவோம். எந்த ஒரு விஷயத்தையும் அளவுக்கு அதிமாக ஒருவர் பேசிக் கொண்டிருந்தால், நமக்கு தெரியாமலே நமக்கு அதன் மேல் வெறுப்பு வர வாய்ப்புகள் அதிகம். எனவே, “படிப்பு! படிப்பு! படிக்கலைன்னா வாழ்க்கையே முடிஞ்சுச்சு” என்று சதா சர்வ காலமும் அதைப் பற்றி பேசினால் எப்படி இருக்கும்?

இரண்டாவது பாய்ண்ட்டினால், உங்களுடைய குழந்தைகளுக்கு ‘முயற்சி’ என்பதைப் புரிய வைக்கிறீர்கள். ஆபிரஹாம் லிங்கன் எட்டு தடவை எலெக்சனில் தோற்றார். யாராவது ஒருவர் வெளியில் இருப்பவர், “உனக்கெல்லாம் ஏன் இந்த பொழப்பு?” என கேட்கமலா இருந்திருப்பார்? ஆனால், ஒவ்வொரு முறையும் அதையே முயற்சித்து மாபெரும் வெற்றியுடன் அமெரிக்க ஜனாதிபதி ஆனார். அவரிடம் அந்த பக்குவம் இருந்தது. தானே முயற்சித்து எழும் தைரியம் இருந்தது. இதே லிங்கனுடன் இருந்தவர்களே, “உன்னால் முடியும்! அடுத்த முறை நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்!” என தைரியம் கொடுத்திருந்தால், எட்டு முறை தோற்றது நான்கு முறையாக கூட மாறியிருக்கலாம்.

உங்களுடைய பிள்ளைகளுக்கு லிங்கன் அவருடைய குழந்தையின் ஆசிரியருக்கு சொன்ன வரிகளைச் சொல்லுங்கள்: “அவனுக்கு வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெற வேண்டும் என கற்றுக் கொடுக்காதீர்கள்! எவ்வாறு நளினமாக தோற்பது என கற்றுக் கொடுங்கள்” என்று லிங்கன் கடிதத்தில் சொன்னாராம். சரி தானே?

அடுத்தது, மட்டம் தட்டி யாரோ ஒரு நபரிடம் பேசுவது. உங்களுடைய குழந்தையை நீங்களே மட்டம் தட்டினால், உலகமே பாராட்ட வேண்டுமென நீங்கள் ஆசைப்படுவது அபத்தம். முடிந்தவரை அவர்கள் முன் அவர்களைப் பற்றி பேச வேண்டாம். சொந்தக்காரர்கள் சொல்வதை ஒரு காதில் வாங்கி மறு காதில் வெளியே விட்டால், வீட்டில் நிம்மதியாக இருக்கலாம்.

நான்காவதாக, ஒப்பிடுதல். உங்கள் முன் பெரிய பாறாங்கல்லை வைக்கிறோம். கையில் தீக்குச்சியைத் தருகிறோம். உருட்டுங்கள் என்றால் என்ன சொல்வீர்கள்? கெக்கே புக்கே என்று சிரிப்பீர்கள். அல்லது “தீக்குச்சிய வச்சிட்டு எப்படி? கடாப்பாரை குடுங்க!” என்று கேட்பீர்கள். இதைப் போல தான், சில குழந்தைகள் தீக்குச்சியாக இருக்கும், அதனால் முடிந்தவரை சின்ன சின்ன கற்களை உருட்டும். சில குழந்தைகள் கடப்பாரையாக இருக்கும், அதனால் பெரிய பாறாங்கல்லையே உருட்டும். தீக்குச்சியை கடப்பாரையுடனோ, கன்றுக் குட்டியை கழுதைக் குட்டியுடனோ ஒப்பிடுவது முட்டாள்தனம்.

ஐந்தாவது, மிக முக்கியமாக தேர்வின் போது குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொள்ளுதல். ஏற்கனவே, உங்களிடம் வெளிக்காட்டவில்லை என்றாலும், அவர்களுக்கு தேர்வின் பதட்டம் இருக்கத்தான் செய்யும். அதில், உங்களுடைய பதட்டத்தையும் பீதியையும் வேறு கலக்க வேண்டுமா என்ன?

எவ்வளவுக்கெவ்வளவு குழந்தைகள் பதற்றப்படுகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு  தேர்வில் மிக மோசமான மதிப்பெண்கள் எடுக்கிறார்கள் என்பது தான் உண்மை. முடிந்தால் அவர்களுடைய பதட்டத்தைக் கட்டுப்படுத்த, ஸ்டெப்ஸ் (STEPS – Strategies to Tackle Exam Pressure and Stress) முறையைக் கையாளுங்கள்.

ஸ்டெப்ஸ்படி ஆழ்ந்த மூச்சு பதட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. அது மட்டுமில்லாமல் பாசிட்டிவ் விஷுவலைசேசன், பதட்டத்தை மிகவும் குறைக்கும். அதாவது, தேர்வை முடிக்காமலேயே தேர்வை முடித்தது போல நினைத்துக் கொள்வது. தேர்வை முடித்த பின் வரும் சந்தோஷம் அப்போது வந்து, பதட்டமோ டென்சனோ பறந்தே போய்விடும். இது இரண்டையும் கண்ணை மூடி செய்ய, உங்கள் குழந்தைகளுக்கு கற்று தரலாம்.

தேர்வின் போது ஆசிரியர்களை விட பெற்றோர்கள் ஐந்து மடங்கு அதிகம் குழந்தைகளின் மேல் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். அது பாசிட்டிவான பாதிப்பாக இருக்க வேண்டுமா? இல்லை நெகட்டிவாக இருக்க வேண்டுமா? என்பது உங்கள் கையில் தான் உள்ளது.

இதற்கு மேலும், “என் பிள்ளை நூத்துக்கு இருநூறு கூட வாங்கனும் பாஸூ!” என அறிவாளித்தனமாக பேசுபவர்கள் இருக்கலாம். “பூனை எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயும்” என்பது போல, படிப்பும் வாங்கும் அறுபது சதவிகிதம்  மதிப்பெண்களும் அவரவர் ஜெனட்டிக்ஸைப் பொறுத்தது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதிலும் அறிவியல் பற்றிய அறிவு  என்பது கண்டிப்பாக மரபணு சார்ந்தது. அதைத் தான் நம் தேசத்தில் பல குழந்தைகள் படிக்கிறார்கள் என்பதும் நாம் அறிந்ததே! நீங்கள் நாற்பது வாங்கி இருந்தால், உங்கள் குழந்தைகளிடம் அறுபதுக்கு ஆசைப்படுங்கள்; நூறுக்கு பேராசைப்படாதீர்கள்.

மகிழ்ச்சியாக சாப்பிடும் உணவு எல்லாம் ஆரோக்கியமாகும். மகிழ்ச்சியாக எழுதும் தேர்வுகள் எல்லாம் வெற்றியையே தரும்!

வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்!

ஆர்.எல்.பிரியதர்ஷினி