கேரட் ஊறுகாய்

53

தேவையானவை:-

சிறு துண்டுகளாக நறுக்கிய கேரட் ——- ஒரு கப்
மிளகாய் தூள் ——————தேவையானஅளவு
ஊறுகாய் பொடி —————-1/4 டீஸ்பூன்
எலுமிச்சம் பழம் —————1
உப்பு தேவையான அளவு

தாளிக்க:-

எண்ணெய் ———————-4 டேபிள் ஸ்பூன்
கடுகு —————————-1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் ————–1/4 டீஸ்பூன்

செய்முறை:-

கேரட் துண்டுகளை 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து அரைவேக்காட்டில் வேக வைத்து, நீரை வடித்துக் கொள்ளவும்.

வேக வைத்தெடுத்த கேரட் துண்டுகள் நன்றாக ஆறியதும் ஒரு பௌலில் போட்டு அதில் மிளகாய் தூள் ,ஊறுகாய் பொடி ,உப்பு சேர்த்து எலுமிச்சம் பழம் பிழிந்து நன்றாக கலந்து வைக்கவும்.

அடுப்பில் தாளிக்கும் கரண்டியை வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை போட்டு பொரிந்ததும் அடுப்பை அணைத்து விட்டு பெருங்காயத்தை சேர்த்து முன்பே கலந்து வைத்துள்ள ஊறுகாய் கலவையில் சேர்த்து நன்றாக கலந்து சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.

சூப்பரான ருசியான இன்ஸ்டன்ட் கேரட் ஊறுகாய் சுவைக்க தயார்.

இந்த ஊறுகாய் சாம்பார் சாதம்,தயிர் சாதம் மற்றும் அனைத்து வகையான கலவை சாதங்களுடனும் சேர்த்து சாப்பிட மிக மிக ருசியாக இருக்கும்.

கேரட்டை வேகவைத்து இந்த ஊறுகாயை தயாரிப்பதால் அதிக நாட்கள் வைத்திருந்து சாப்பிட முடியாது. 2 (அ ) 3 நாட்கள் பிரிட்ஜில் வைத்திருந்து சாப்பிடலாம்.

புளிப்பு, உப்பு, காரம் அனைத்தையும் அவரவர் ருசிக்கேற்ப கூட்டியோ (அ) குறைத்தோ சேர்த்துக்கொள்ளலாம்

ஊறுகாய் பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்:

கடுகு ————————-1/2 கப்
வெந்தயம் ——————–1/4 கப்
மஞ்சள் தூள் —————–1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் ————-15

அடுப்பில் வாணலியை வைத்து நன்றாக சூடுபடுத்தி அடுப்பை அணைத்து விட்டு அதில் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் போட்டு அந்த சூட்டிலேயே வறுத்தெடுத்து நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக பொடித்து காற்று புகாத பாட்டிலில் போட்டு மூடி வைத்து கொள்ளவும்.

எல்லா இன்ஸ்டன்ட் ஊறுகாய் வகைகளுக்கும் இந்த பொடியை சிறிது சேர்த்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

குறிப்பு :- இன்ஸ்டன்ட் ஊறுகாய் வகைகளுக்கு வெறும் உப்பு,காரம் சேர்த்து செய்வதை விட இந்த ஊறுகாய் பொடியை சிறிது சேர்த்து செய்தால் சுவை கூடும்.

ஊறுகாய் பொடியிலும் காய்ந்த மிளகாய் சேர்த்திருப்பதால் ஊறுகாய்க்கு மிளகாய் தூள் சேர்க்கும் பொழுது கவனமாக இருக்கவும்.

-அகம்