வாக்காளர்களின் பணிவான கவனத்திற்கு…

41

தற்போது தமிழகத்தில் நடைபெற இருப்பது 15 வது சட்டமன்ற தேர்தல். 1967ல் தொடங்கிய திராவிட கட்சிகளின் ஆட்சி இன்று வரை தொடர்கிறது. ஜாதி, மதம், மொழி, இனத்தினை அடிப்படையாக கொண்டு இதுவரை செய்யப்பட்டு வந்த அரசியல் இந்த முறை பணத்தின் மூலம் வாக்குகளை வென்று விட கட்சி பேதமின்றி அனைவரும் முடிவு செய்து களமிறங்கியுள்ளனர். இன்று எல்லா கட்சியினரும் ஏற்றுக் கொண்ட அந்த வெற்றிச் சூத்திரம் திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுகவால் தொடங்கப்பட்டது.

பொதுவாக ஒரு வேட்பாளர் தேர்வு முறை என்பது அவருக்கு அந்த தொகுதியில் மக்களிடையே உள்ள செல்வாக்கினை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வந்த காலம் மாறி இன்று ஒருவர் அவர் போட்டியிடும் தொகுதிக்கு தேர்தல் செலவு செய்ய எந்த அளவுக்கு பணபலம் வாய்ந்தவராக இருக்கிறார் என்பதை கொண்டே அவருக்கு சீட் அளிக்கப்பட்டது. இது திமுகவில் நடைபெறும் அவலம். பொதுமக்களிடம் அடிப்படை அரசியல் அறிவை எதிர்பார்க்கும் ஊடகங்கள் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரிடமாவது அரசியல் அறிவை சோதித்துப் பார்க்க மைக் நீட்ட முனையுமா?

திமுகவில் போட்டியிடும் வேட்பாளர்களில் எத்தனை பேருக்கு நதிநீர் இணைப்பு குறித்தோ, ஈழத்தமிழர் பிரச்சினை குறித்தோ தெளிவாகத் தெரியும்? அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட ஒரு இயக்கம் இன்று கொள்கையினை புறந்தள்ளி பணபலத்தாலும் விளம்பரத்தாலும் தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்திருப்பது எத்தனை ஆபத்தானது?

திமுக இப்படி என்றால் அதிமுக குறித்து சொல்லவே தேவையில்லை. 1991 ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்து இன்று வரை மக்கள் நலனில் துளி கூட அக்கறை இல்லாத ஆட்சி இது. ஜனநாயகம் என்ற சொல்லே அவர்களுடைய அகராதியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர்களுடைய கட்சியினர் துதி பாடி மட்டுமே காலந்தள்ளி வருகின்றனர். சுயமரியாதை என்பதை சுத்தமாக மறந்துவிட்டனர். அம்மா என்ற பொதுச் சொல்லினை ஒரு வியாபார குறியீட்டு கட்டமைப்பினைக் கொண்டு தனிச் சொல்லாக்கிய பெருமை இந்த கட்சியினரையே சாரும்.

இதில் இவர்களுக்கு மாற்று என மார்தட்டிக் கொள்ளும் மக்கள் நலக் கூட்டணி அத்தனை தெளிவான செயல்பாடுகளுடன் இல்லை. திமுகவுக்கு குடும்ப அரசியல், அதிமுகவுக்கு மன்னார்குடி மாஃபியா என்றால் தேமுதிகவுக்கு மச்சான் அரசியல். ஒரு தலைவன் என்பவரிடம் மக்கள் எதிர்பார்க்கும் எந்தவொரு அடிப்படைக் குணங்களும் விஜயகாந்திடம் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம். பாமக, பாஜக, நாம் தமிழர் குறித்தெல்லாம் விவாதிப்பதற்கு ஒன்றுமே இல்லை. இந்த மூன்று பேரில் யாரிடம் ஆட்சி அதிகாரம் வந்தாலும் தமிழகம் வளர்ச்சியில் மீண்டும் ஒரு 20 வருடம் பின் தங்கி விடும் என்பது நிதர்சனமான உண்மை.

அண்டை மாநிலமான கேரளாவில் நடைபெறுவது போன்ற எளிமையான அரசியல் இவர்களைப் போன்றவர்களால் தமிழகத்தில் சாத்தியமற்று போய்விட்டது. கேரளாவில் தற்போதைய முதல்வரையும் சரி முன்னாள் முதல்வரையும் சரி ஒரு குடிமகன் எளிதில் சென்று சந்தித்துவிட முடியும். ஆனால் இங்கு நிலைமை வேறு. முதல்வரை கடவுளாக பாவிக்கப் பழக்கபடுத்தி விட்டனர். நம் உரிமைகளை கெஞ்சிக் கூத்தாடிப் பெற வேண்டிய அவலநிலை. ஒரு புறம் இலவசங்களால் உழைக்கும் வர்க்கத்தை உதவாது உட்கார வைத்து விட்டு மற்றொரு புறம் சாராயத்தினை கொண்டு ஒரு சந்ததியினை அழித்துக் கொண்டிருக்கிறோம். விவசாயிகளின் கடன் தள்ளுபடி எந்த விதத்திலும் அவர் தரம் உயர உதவப் போவதில்லை. மாறாக அந்தக் கடனை திரும்பச் செலுத்தும் வகையில் அவர் வாழ்வாதரத்தை பெருக்கினால் நாடு நிச்சயம் வளர்ச்சி பாதையில் செல்லும். இதில் மத்திய அரசும் பெரிதாக அக்கறை காட்டுவதாக தெரிவதில்லை. அவர்களுக்கு எங்கு வாக்கு வங்கி இருக்கிறதோ அங்கேயே முழு கவனமும் செலுத்துகின்றனர். தொழில் வளர்ச்சி என்று ஆலைகளை நிறுவிக் கொண்டே சென்றால் ஒரு கட்டத்தில் அரிசிக்கு பதிலாக ஆலைக் கழிவினை ஆகாரமாக உண்ண வேண்டிய நிலை வரலாம்.

நோட்டுக்கு விற்பது உங்கள் ஓட்டை அல்ல.. நாட்டை என்பதை நினைவில் கொண்டு உங்கள் தொகுதி வேட்பாளர்களின் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து வாக்களியுங்கள்.

வாழ்க ஜனநாயகம்!!!