நெபுலைஸ்சர் – அறிந்து கொள்ள வேண்டியவை!!

251

ஒரு நண்பர் குழந்தைகளுக்கு நெபுலைஸ்சர் பரிந்துரை பண்ணலாமா? என்று பதிவு போட்டுக் கேட்டு இருந்தார். அதைப் பற்றிய சில விவரங்கள்.

நெபுலைசர் என்றால் என்ன?

இது மருந்துகள் செலுத்தப் பயன் படும் ஒரு உபகரணம். அதாவது , திரவ குளுகோஸ் ஏற்றப் பயன்படும் குழாய் போல, மருந்தை ஆவி உருவில் செலுத்தப் பயன் படும் ஒரு உபகரணம்.

ஏன் இதைப் பயன் படுத்த வேண்டும்?

வயலுக்கு பாத்தி கட்டி நீர் செலுத்தும் போது பாதிக்கு மேற் பட்ட நீர் குறிப்பிட்ட நிலத்தை அடையும் முன் மண்ணில் உறிஞ்சி வீணாவதை தவிர்க்க, சொட்டு நீர் பாசனம் மூலம், செடிகளின் அருகில் தெளிப்பது எவ்வாறு நீரை மிச்சம் செய்கிறதோ அதே மாதிரி தான், இந்த உபகரணம் பயன் படுத்தப் படுகிறது. அதாவது மாத்திரை வடிவில் வாய் வழியாக உட் கொள்ளவும் போது, அது கரைந்து குடல் மூலம் உறியப் பட்டு, இரத்தத்தில் கலந்து, பாதிக்கப் பட்ட நுரையீரலை அடைந்து தேவைப் பட்ட பயன் ஏற்படுத்துவதற்கு வேண்டிய அளவு மற்றும் நேரத்தை விட , ஆவி மூலம் மருந்து சுவாசிக்கப் படும் போது நேரடியாக நுரையீரலை அடைந்து மூச்சுத் திணறல் மிக விரைவாக சரி செய்யப் படுகின்றது. இது குழந்தைகளுக்கு உடனடி ஆறுதலைத் தருகிறது.

பயன் படுத்தும் முறை:

இந்த கருவியை மின்சாரத்தில் இணைத்து விட்டு, இதில் உள்ள மூடியை திறந்து அதில் இதில் பயன்படுத்தப் படும் மருந்து ஊற்றி மூடி விட்டு இதில் இணைத்து உள்ள முகத்தில் வைக்கும் இணைப்பான் அணிந்து கொண்டு, மருந்து முடியும் வரை சுவாசிக்க வேண்டும். மாத்திரை விழுங்க அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த முறை நல்ல மாற்றாகும்.

இதன் அனு கூலங்கள்:

  1. மிகவும் விரைந்து செயல் படுவது
  2. வாய் வழியாக உட் கொள்ள முடியாத நிலையில் உள்ளவர்கள், அதாவது, குழந்தைகள் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப் படுபவர்கள்
  3. மிக குறைந்த அளவு மருந்து தேவைப் படுவதால், ஸ்டெராய்டு போன்ற மருந்துகளின் பக்க விளைவுகள் குறைவு
  4. கல்லீரல் மற்றும் சிறு நீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு வழக்கமான அளவில் மாத்திரை உட் கொள்ள முடியாத நிலையில்
  5. தீவிர தாக்குதலுக்கு உள்ள நபர்கள், மாத்திரைகள் , ஊசிகளுக்கு பக்க துணையாக

எனவே இதைப் பற்றிய தவறான எண்ணங்களை களைந்து விட்டு, மருத்துவர் கூறும் மருந்தை சரியான முறையில் எடுத்துக் கொள்வதே நல்லது.

Dr. M. ராதா – Consultant hepatologist and gastroenterologist