குழந்தை

84
மாலை ஆறு மணி சுமாருக்கு வருண் வீட்டுக்கு வந்தபோது, வர்ஷினி சோபாவில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள். அவள் எதிரே இருந்த மேஜையில் மருத்துவ அறிக்கை கோப்புக‌ள் இருந்தது. அதை பார்த்தபடியே,

“வரு.. கொஞ்சம் டீ தாயேன்” என்றுவிட்டு காலணிகளை கழற்றிவிட்டு உள்ரூமுக்குள் குளிக்க போனான்.

வர்ஷினி தேனீர் தயாரித்துவிட்டு, இரண்டு கோப்பையில் ஊற்றி எடுத்து வருவதற்கும், வருண் குளித்து முடித்து உடை மாற்றி ஹாலுக்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

இருவரும் ஆளுக்கொரு கோப்பை எடுத்துக்கொண்டார்கள். சூடான தேனீரின் ஆவி அவர்கள் முகங்களை மெல்ல வருடிச்சென்றது.

“எப்போ போன?” என்றான் வருண்.

“சாயந்திரமே பர்மிஷன் போட்டுட்டு போயிட்டு வந்துட்டேன் வருண்” என்றாள் வர்ஷினி.

“என்ன சொன்னாங்க டாக்டர்”

“காய்கறி, கீரை நிறைய சாப்பிட சொல்றாங்க.. மாத்திரையும் டானிக்கும் வாங்கி கொடுத்திருக்காங்க.. இப்போதானே ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சிருக்கு.. இன்னும் நாளாகும்.. கொஞ்சம் கொஞ்சமாத்தான் இம்ப்ரூவ்மென்ட் தெரியும்ன்னு சொல்றாங்க..”

“ம்ம்ம்”

“நான் வேலையை விட்டுடவா வருண்?”

“ஏன்?”

“வேலையை விட்டுட்டு முயற்சி பண்ண சொல்லி டாக்டர் இன்னிக்கு சொன்னாங்க.. அகால வேளையில கண் முழிக்க வேண்டி இருக்கு.. சரியான தூக்கம் இல்லை.. உடம்புல எப்பவும் ஒரு சோர்வு இருக்கு.. ஆபீசுக்கு காலை மாலைன்னு ரெண்டு மணி நேரம் ட்ராவல். குண்டும் குழியுமா இருக்குற ரோட்டுல போனா தூக்கி தூக்கி போடுது.. ஒரே பொல்யூஷன்.. இதெல்லாம் கூட எடுத்துக்குற மருந்து மாத்திரைகளை ஒண்ணுமில்லாம பண்ணிடுதோ என்னமோன்னு யோசனையா இருக்கு”

“வீடு லோன்ல போயிட்டு இருக்கு வரு.. மாசம் முப்பத்தி அஞ்சாயிரம் அதுக்கே போயிடுது.. நீயும் நானும் சேர்ந்து வேலை செய்யிறதுனால தான் இப்படி லோன் கட்ட முடியுது.. இப்போ நீ வேலையை விட்டுட்டா..”

“விட்டுட்டா என்ன வருண்? நீ தான் எண்பதாயிரம் சம்பாதிக்கிறல?”

“ஹேய்.. டாக்ஸ், பி.எஃப்ன்னு போயி கையில அறுபத்தி அஞ்சு  தாண்டீ நிக்கிது”

“சரி அது போறாதா ரெண்டு பேத்துக்கு..”

“எப்படி போறும்? நாம மட்டுமா இருக்கோம்? அப்பா ரிட்டையர்டு. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் காசு கொடுக்க வேண்டாமா?”

“அதுக்காக?”

“எனக்கு பிடித்தமெல்லாம் போக கையில அறுபத்தி அஞ்சாயிரம் நிக்கிது வரு.. அதுல அப்பா அம்மா செலவுக்கு பணம் கொடுக்கணும்.. அவங்களுக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸும் இருக்கு.. அதுக்கெல்லாம் பணம் கட்டணும்.. இதெல்லாம் யோசிச்சு தான் இப்ப வீடு வேணாம்ன்னு அப்போவே சொன்னேன்.. “

“வருண். நீ சொன்ன தான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா, இப்ப சூழ் நிலை இப்படி இருக்கே. இப்ப என்ன பண்றதுன்னு தான் கேக்குறேன்”

“உடம்புங்குற கோயில் மாதிரி வரு.. அதை நாம போதறவா பாத்துக்கிட்டிருக்கணும்.. நான் மேற்கொண்டு ஒண்ணும் சொல்ல விரும்பலை வரு.. நம்ம குடும்ப சூழல் உனக்கு தெரியும்.. நீயே யோசிச்சு சொல்லு என்ன பண்ணலாம்ன்னு.. எனக்கு ஆபீஸ் கால் ஒண்ணு கனெக்ட் பண்ணனும்.. மீட்டிங் இருக்கு.. ” என்றுவிட்டு வருண் எழுந்து அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டான்.

அமைதியான அந்த வீட்டில், உள் அறையில் வருண் மடிக்கணிணியை சார்ஜரில் போட்டு உயிரூட்டும் சப்தம் கேட்டது.

வருண் என்ன சொல்ல வருகிறான் என்பது வர்ஷினிக்கு புரியாமலில்லை. அந்த அபார்ட்மென்ட் திருமணமான புதிதில் வாங்கியது. வீடு வாங்கி மூன்று வருடங்களாகிறது. வாங்கிய வீட்டுக்கடனுக்கு வட்டியாக மாதாமாதம் முப்பத்தி ஐந்தாயிரம் விழுங்கிவிடுகிறது. வீடு நன்றாகத்தான் இருக்கிறது.

வருண் சம்பளத்தில், அந்த வீடு பொருந்தாது தான்.. தேவையுமில்லை.. ஏனெனில் வருணின் அப்பா அம்மா இருக்கும் வீடு சொந்த வீடு தான். அந்த வீட்டிலேயே இருந்திருந்தால் இப்போது இந்த சுமை இல்லை. தனது சம்பளத்தையும் கணக்கில் கொண்டு தான் அந்த வீடு வாங்கப்பட்டது..

ஆனால் இந்த மூன்று வருடத்தில் வயிற்றில் ஏதும் தங்கவே இல்லை.. முதல் ஒரு வருடம் ஆசைக்காக குழந்தை வேண்டாம் என்று ஒத்திப்போட்டது. இப்போதானால், டாக்டர் பர்வதம்,  வீட்டிலிருந்து நன்றாக சமைத்து சாப்பிட்டு மருத்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் குழந்தை தங்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்கிறார். அதை செய்ய வேண்டுமானால், வேலையை விட வேண்டும். வேலையை விட்டால் சம்பளம் போகும். சம்பளம் போனால், எல்லா செலவும் வருண் சம்பாத்தியத்தில் ஒட்டாது. வருண் இதை திருமணமானவுடன் வீடு புக் செய்யும் போதே சொன்னான்தான்.

ஆனால் அவன் சொன்ன முதல் வரி, தான் அவளை அவளது கடந்த கால நினைவுகளை கிளறிவிட்டது.

கல்லூரி படிக்கையில் அவளுக்கொரு காதல் இருந்தது. இலக்கற்ற காதல். அப்படித்தான் துவங்கியது. திருமணத்தில் தான் முடிய வேண்டுமென்கிற இலக்கேதும் தேவைப்படாத‌ நிருணயித்துவிட்டிருக்காத காதல். வயதுக்கோளாறில் பூத்த வசீகர காந்தள் மலர். அவன் பெயர் அர்ஜுன். அவனுடன் முதலில் நட்பு உருவாகி, சினிமா பீச் என்று போய் வந்து அதிகமான நெருக்கம் பிற்பாடு கட்டில் வரை போய்விட்டது. எத்தனை முறை என்பது நினைவில் இல்லை. ஒவ்வொரு முறையும் உறைகள் பயன்படுத்த அவனை நிர்பந்தித்தியதெல்லாம் நினைவுக்கு வந்தது. மாத்திரைகள் எல்லாம் பயன்படுத்தியது இல்லை தான்.

இதெல்லாம் வருணிற்கு தெரியாது. மணமான இந்த மூன்று வருடங்களில் அவன் கேட்கவும் இல்லை. ஆதலால் சொல்லவும் இல்லை. அதைத்தான் “உடம்புங்குறது கோயில் மாதிரி” என்று சொல்லிவிட்டு போனானோ என்று தோன்றிய அதே வேளையில், இருக்காது என்றும் தோன்றியது. அதற்கு காரணங்களும் இருந்தன‌. வருண் தினமும் உடற்பயிற்சி செய்பவன். அவனது உடல் வில்லாய் வளைவதை அனேகம் முறை பார்த்தாகிவிட்டது. மருத்துவ சோதனையில் கூட அவனிடம் ஏதும் குறை இல்லை என்றுதான் வந்தது. மணமான புதிதில் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் ஏன் இல்லை என்று கேட்டு இரண்டொரு முறை கடிந்து கொண்டதாக கூட நினைவிருந்தது. அதற்குமேல், அதை அவன் தொடர்ந்து வலிந்து அவள் மேல் புகுத்த முயற்சிக்கவில்லை. தொடர்ந்து குறையாக சொல்லவில்லை. உடற்பயிற்சி செய்யாததைத்தான் அப்படி சொல்லியிருகக்கூடும் என்று இப்போதும் ஆணித்தரமாக தோன்றியது.

ஆனால், மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறதே.

அர்ஜுனுடன் ஒவ்வொருமுறையும் படுக்கையை பகிர்ந்துகொண்ட போதும் உறை பயன்படுத்தியிருப்பதாலேயே அதனால் உடல் அளவிலும் , மனதளவிலும் இந்த மந்தம் உருவாகியிருக்கலாம் என்று நாளைய அறிவியல் அறிவிக்காது என்று என்ன நிச்சயம்? ஐன்ஸ்டைன் வரை தானே நியூட்டன் செல்லுபடி ஆகிறான்? நியூட்டனின் ஈர்ப்பு விதி ஐன்ஸ்டைனுடன் காலாவதி ஆகிவிடுகிறதே. நாளை இன்னுமொரு ஜோசஃபால் ஐன்ஸ்டைன் காலாவதி ஆகிவிடமாட்டான் என்று என்ன நிச்சயம்? முந்நூறு ஆண்டுகள் முன்புவரை விளக்கு தானே ஒளி தந்தது. அப்போதைய நிலவரப்படி, மின்சாரம் என்பது கற்பனைக்கும் எட்டாத ஒன்றாகத்தானே இருந்திருக்க வேண்டும்? அது நாள்வரை, செங்கிஸ்கானும், சேர சோழ பாண்டியர்களும், மொகலாயர்களும், ஆங்கிலேயர்களும், ஃப்ரஞ்சு , டச்சு, போர்ச்சுகீசியர்களும் நிலத்துக்காக சண்டை போட்டது, சரித்திரத்தின் பக்கங்களில் எடிசனின் வரவை தாமதப்படுத்தத்தானே உதவியது? அதுபோல் அர்ஜுனுடனான உறவு, ஒருவேளை இந்த மந்தத்தை, இப்போதுவரை தாமதமாக்கிவிட்டதாகத்தானே அர்த்தமாகிறது?

இப்போது டாக்டர் பர்வதம் சொல்லும் ஆரோக்கிய உடலை அடைய தேவையானவைகளை திருமணத்திற்கு முன்பான கால கட்டங்களில் செய்திருந்தால், இப்போது இந்த சூழல் இல்லை என்பதை மட்டும் அறிவியலால் நிராகரித்துவிட முடியுமா? திருமணத்திற்கு முன்பே இந்த முயற்சிகளை கைகொண்டிட ஏகத்தும் காலம் வசமாக இருந்ததே. அப்போதே இதை செய்திருந்தால் இப்போது இந்த தவிப்பு, அவஸ்தை இல்லை என்பதை யாரால் மறுக்க முடியும்? உண்மையிலேயே உடலை கோயிலாக வைத்திருந்து, வருண் சொல்வது போல் தேகப்பயிற்சியெல்லாம் செய்து, கண்டகண்ட பீட்ஸாக்களுக்கு பதிலாய், கீரை, வெள்ளரிக்காய், நெல்லிக்காய் என்று உண்டிருந்தால், இப்போது இந்த சூழல் இல்லை என்பதை தர்க்க ரீதியாக நவீன உலகின் கோட்பாடுகளால் எப்படி நிராகரிக்க முடியும்?

இன்னொரு கோணத்தில், அர்ஜுனுடன் படுக்கையில் உறவு வைத்துக்கொண்டது, ஒரு வேளை இந்த பிறழ்வுக்கு காரணமாக அமைந்தால், அதற்கான‌ தண்டனையை, வருணுக்கு தருவது போலாகிவிடாதா? ஒரு பெண்ணை தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ளும் கடமையை தட்டிக்கழிக்கும் அர்ஜுன் போன்ற ஆணுக்கு சுகத்தையும், அந்த கடமையை திருமணம் என்கிற பெயரில் ஏற்றுக்கொண்ட வருணுக்கு மருத்துவ செலவுகள் , வீட்டுக்கடன் என்று சுமைகளையும் அள்ளித்தந்ததாக அர்த்தமாகிவிடாதா? வருண் ஒன்றும் குருட்டாம்போக்கில் செயல்படுபவன் அல்ல. எந்த முடிவுகளையும் யோசித்து எடுப்பவன் தான். அவனை தேவையில்லாமல் இந்த செலவுக்குள் இழுத்தது போலாகிவிட்டது.

வருணுக்கு அந்த கஷ்டம் வரக்கூடாதெனில், வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும். வேலையை தொடர்ந்து செய்தால், உணவுக்கு அலுவலக கேண்டீனைத்தான் நம்பியிருக்க வேண்டி இருக்கும். தரமான வீட்டுச்சாப்பாடு கிடைக்காது. நாளொன்றுக்கு இரண்டு மணி நேர பயணத்தை தவிர்க்க முடியாமல் போகும். எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் அளவு அதிகமாகலாம். அது குழந்தை பிறப்பை மேலும் தள்ளிப்போடலாம்.

யோசிக்க யோசிக்க தலையெல்லாம் சுற்றியது வர்ஷினிக்கு. தயாரித்து வைத்த கோப்பை தேனீர் ஆறி காய்ந்து ஆடை கொண்டு மூடிக்கிடந்தது. இரண்டொரு ஈக்கள் கோப்பையின் வாயில் அமர்ந்து தங்கள் தலை தெரிகிறதா என எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தன‌.

பெற்றோர் நிச்சயித்த கல்யாணம் தான் என்றாலும் திருமணத்திற்கு பிறகு வருண் மட்டும் தான் வாழ்க்கையாக இருந்திருக்கிறது. அவனிடம் இது அத்தனை மன சஞ்சலங்களையும் பகிராமல் இருப்பது எதையோ அவனிடமிருந்து மறைப்பது போன்ற தோற்றம் தந்தது. அந்த நினைப்பே, தனக்குத்தானே போலியாக இருக்க முயல்வது போன்ற ஒரு தோற்றம் தந்தது.

வர்ஷினி எழுந்தாள். உள் அறை கதவை திறந்தாள். உள்ளே வருண் மடிக்கணிணியை பார்த்தவாறு அமர்ந்திருந்தவன், வர்ஷினி எட்டிப்பார்ப்பதை உணர்ந்து திரும்பி, வர்ஷினியை உள்ளே வரும்படி சைகை செய்தான். வர்ஷினி உள்ளே சென்று அவனருகில் அமர்ந்தாள்.

“மீட்டிங் முடிஞ்சதா வருண்?” என்றாள்.

“முஞ்சதுடீ.. க்ளையன்ட் வரலை..அதனால சீக்கிரமே முடிஞ்சது” என்றான் வருண்.

“உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் வருண்”

“சொல்லேன்”

வர்ஷினி அர்ஜுனுடனான பழக்கம், படுக்கைவரை சென்ற உறவு, எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் மனனம் செய்த வாய்ப்பாட்டை சொல்வது போல் சொல்லிமுடித்தாள்.

எதுவுமே பேசாமல், மெளனமாக வர்ஷினி சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தவன், முடிவில்,

“ஐ லவ் யூ வரு” என்றான்.

“எதுக்கு வருண்? உன் வாழ்க்கையை கொஞ்சமா காம்ப்ளிகேட் பண்ணினதுக்கா?” என்றாள் வர்ஷினி.

“இல்லை.. உண்மையை சொன்னதுக்கு.. அதன் மூலமா என் மேல உன் காதலை சொன்னதுக்கு.. என் மேல உன் நம்பிக்கையை சொன்னதுக்கு.. அதன் மூலமா என்னை ஆம்பளையா மதிக்கிறேன்னு சொன்னதுக்கு.. அதன் மூலமா என்னை சரியா மதிப்பிட்டிருக்கன்னு சொன்னதுக்கு.. உண்மையை மறைச்சு நம்ம உறவை அசிங்கப்படுத்தாம, வெளிப்படையா சொன்னதுக்கு.. நீ இதை கல்யாணத்தப்போவே சொல்லிருந்தா கூட நான் உன்னை கல்யாணம் பண்ணியிருப்பேன் தான் வரு.. நீ என் வாழ்க்கையை காம்ப்ளிகேட் பண்ணினதா நினைக்காத.. உடற்பயிற்சி செஞ்சி உடம்பை பாத்துக்குற நல்லா சமைக்க தெரிஞ்ச, அழகான படிச்ச பொண்ணு ஒருத்திகிட்ட நானும் ஒருமுறை காதலை சொல்லியிருக்கேன் தான்.. உன்னை கல்யாணம் பண்றதுக்கு ஆறு மாசம் முன்னாடி…  ஆனா அவ, தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ண பையன், அதீதமாக சிகரெட்னால‌ நுரையீரல் புற்று நோய்ல செத்துட்டான்..இப்போ இரண்டு குழந்தையோட அவ வாழ்ந்துட்டு இருக்கா..  நமக்கு பொறுத்தமா இருக்கிறவங்க கூட நமக்கு எப்போதுமே வாழ்க்கை அமைஞ்சிட‌றதில்லை வரு…  அது நடந்துட்டா பல பிரச்சனைகள் வராதோ என்னமோ…   நீ என் வாழ்க்கையில வரலைன்னா, வேற ஒருத்தி என் வாழ்க்கையை நீ நினைக்கிறதை விட அதிகமா காம்ப்ளிக்கேட் பண்ணிருக்கலாம் வரு”

“ம்ம்ம்.. நான் வேலைக்கு போறேன் வருண்.. அதுதான் சரிரின்னு எனக்கு தோணுது வருண்” என்றாள் வர்ஷினி.

“வேணாம் செல்லம்.. வேலையை விட்டுடு.. இந்த வீட்டை வாங்கினப்போ இருந்த விலையை விட இப்போ நிலத்தோட விலை ஜாஸ்தி ஆகி இருக்கும்.. அதுனால, நாம லோனுக்கு கட்டின வட்டியை எப்படியும் திரும்ப எடுத்திடலாம்.. சோ இப்பவே இதை விக்க ஏற்பாடு பண்றேன்.. நீ எங்க அப்பா அம்மாவோட தங்கு.. அம்மா நல்லா சமைப்பாங்க.. கீரையை வச்சி ஸ்வீட்டே பண்ணுவாங்க.. அம்மா கையால சாப்பிடு.. வீட்டுல ரெஸ்ட் எடு.. ஜிம்முக்கு போ.. உடம்பை பாத்துக்க.. நான் சம்பாதிக்கிறேன்..  சரியோ தப்போ, இந்த சூழ் நிலைக்கு வந்துட்டோம்.. இங்கிருந்து எப்படி கரை சேர்றதுன்னு பாப்போம்” என்றான் வருண்.

இமைகளை நனைக்கும் கண்ணீருடன் வர்ஷினி, வருணின் தோள்மீது சாய்ந்துகொண்டு,

“ஐ லவ் யூ வருண்” என்றாள்.

  – ஸ்ரீராம்