வாழ்க்கை ஒரு சினிமா சினிமா!! பகுதி-6

149

என் நண்பன் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தோம். பாண்டவர் பூமி படத்தில் வந்த ,” தோழா தோழா.. கனவுத் தோழா..” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. என் நண்பனின் தந்தை வேறு ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் பாடல் முடியும் தருவாயில் பொதுவாக, “அப்போ ஹீரோவும், ஹீரோயினும் கடைசி வரைக்கும் நண்பர்களாவே இருப்பாங்களா?” என கேட்டார்.

உடனே நான், “இல்லைப்பா.. கல்யாணம் பண்ணிப்பாங்க..” என முகமெல்லாம் புன்னகையாக சொல்ல, அதற்கு அவர் ஒரு நக்கலான பார்வை ஒன்றை உதிர்த்துக்கொண்டே,

“நான் கூட தமிழ் சினிமா திருந்தியிருச்சோன்னு நினைச்சேன்..” என்று விட்டு கையிலிருந்த பான்பராக் பாக்கெட்டை பிரித்து வாயில் தட்டிக்கொண்டார்.

தமிழ் சினிமாவில் அதிகம் கற்பழிக்கப்பட்ட வார்த்தையில் ஆண் பெண் நட்பும் ஒன்று.   “நம்ம நட்புக்கு அடையாளமா நான் உன் குழந்தையை என் வயித்துல சுமக்குறேன் ராஜா..” என்கிற பகடி குமுதம் இதழில் ஒரு முறை வெளி வந்தது. அந்த அளவிற்கு தான் இங்கே தமிழ் சினிமாவில் இந்த விஷயம் கையாளப்படுகிறது.

உண்மையில் பள்ளிக் காலமாகட்டும், கல்லூரியாகட்டும் இரண்டிலுமே நம்மால் காதலுக்கும், நட்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை பிரித்தறிய முடிவதேயில்லை. பெண்கள் கூட இதில் கொஞ்சம் தெளிவாக இருந்தாலும், ஆண்களின் பாடுதான் மிகக்கடினமானது. ஒன்று மிக அதிகமாக புனிதப்படுத்தப்பட்டு அதனால் இறுதி வரை அதைப் பற்றிய விவாதங்களே இல்லாமல், தான் செய்வது சரியா, தவறா என்கிற பயத்தின் காரணமாகவே எதையும் வெளிக்காட்டாமல் மூடி மறைத்து ஒடுங்கிப் போவது அல்லது பெண்களுடனான இயல்பான ஒரு உரையாடலை கூட காதல் என்றும் அப்படி இயல்பாய் பேசும் பெண்ணை வழிபவள் என்றும் முடிவுகட்டி நட்பு என்கிற வார்த்தை சாத்தியமேயில்லை என்று எல்லோருக்கும் உரக்கச் சொல்லி இன்னும் இன்னும் வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்வது.

முந்தைய கட்டுரைகளில் பார்த்தது போல ஆண்-பெண் ஆகிய இருவர் எந்த வயதானாலும் உடல் ரீதியாக ஒருவரை ஒருவர் அணுகும் மேம்போக்கான அணுகுமுறை தான் தமிழ் சினிமாக்களில் தொடர்ந்து முன்னிறுத்தப்பட்டு வருகிறதே ஒழிய, வாழ்க்கை முழுக்க ஒருவருக்கொருவர் பரஸ்பர நட்போடு மட்டும், தன் இன்ப துன்பங்களை பகிர்ந்துக் கொண்டு அதற்கேற்ப எதிர்வினை புரிகிற ஒரு சக தோழனாக, தோழியாக மட்டும் வாழ்கிற மனிதர்களை பதிவு செய்வதேயில்லை. அப்படி பதிவு செய்த படங்களிலும் கூட ஏதேனும் ஒரு கதாபாத்திரம்,” ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் நடுவுல நட்பு மட்டுமே இருக்க சாத்தியமே இல்ல.. ஒன்னு அவங்க ரெண்டு பேரும் போதும் போதுங்கிற அளவுக்கு படுத்து எந்திரிச்சிருக்கனும்.. இல்லன்னா காதலை வெளிய சொல்லாமலே வாழ்ந்துக்கிட்டு இருக்கணும்..” என வசனம் பேசி அதுதான் நிதர்சனம் என்று ஸ்தாபிக்க வேறு செய்வார்கள்.

ஆட்டோகிராப் படம் ஒரு முழு காதல் படமாகத் தான் நமக்கு தெரியும். சேரன் – சினேஹா வருகிற காட்சிகளில் எல்லாம், “இதோ இவர்கள் இப்போது காதலிக்கத் தொடங்கிவிடுவார்கள்..” என்கிற மனநிலையோடு தான் படம் பார்த்துக் கொண்டிருப்போம். இயக்குனரே கூட அதைத்தான் முன்னிலைப்படுத்தும் படியாக காட்சிகளை அமைத்திருப்பார். சினேஹா கதாபாத்திரம் அவர்கள் உறவில் எப்போதும் தெளிவாகவே இருந்தாலும் கூட அதை எந்த இடத்திலும் நாம் உணர முடியாத அளவில்தான் காட்சிகள் இருக்கும். வெறும் நட்பாக மட்டுமே அந்த காட்சிகளை மீண்டும் ஒருமுறை பாருங்கள். எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா? குறிப்பாய் இறுதிக் காட்சிகளில் சினேஹா சேரனின் வாழ்க்கையில் வந்து போன மற்ற இரண்டு பெண்களை திருமண மண்டபத்தில் சந்திக்கும் காட்சியும், அவர்களோடு உரையாடுவதும் அவ்வளவு இயல்பாக, அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் படம் பார்க்கும் நமக்கு சினேஹா-வும் இன்னொரு காதலியாகத் தான் தெரிவார்.

ஆண்-பெண் நட்பு சாத்தியமா என்கிற கேள்வி எல்லா நூற்றாண்டிலும், எல்லா பருவத்திலும், எல்லா இடங்களிலும் நம்மை பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறது. என் வாழ்க்கையிலேயே நான் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் எனக்கு கிடைத்த எல்லா பெண் தோழிகளையுமே நான் காதலிப்பதாக அல்லது அவர்கள் என்னை காதலிப்பதாக நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள் அல்லது நானே சொல்லியிருக்கிறேன். இப்போது யோசித்துப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. ஒரே பேருந்தில் பதினைந்து நாட்கள் தொடர்ந்து ஒரே நேரத்தில் பயணம் செய்த நானும், இன்னொரு பெண்ணும் பற்றிய கதையை நண்பர்களிடம் சொல்லப்போக உடனே அவர்கள் எடுத்த முடிவு…

“மச்சி நீ ட்ரை பண்ணு.. கண்டிப்பா மடங்கிரும்.. ட்ரீட் வேணும்.”

பின்னர் எனக்கு வேறு ஒரு இடத்தில் வேலை கிடைத்து போய்விட அந்த பேருந்தும், பெண்ணும் என் வாழ்க்கையிலிருந்தே தூர போய் விட்டார்கள். வெறும் நட்பு மட்டுமே என்கிற அடிப்படையில் நான் அந்த பெண்ணை அணுகி பேசியிருந்தால் குறைந்தபட்சம் அந்த பெண்ணின் சிரிப்பாவது என் நினைவில் இருந்திருக்கும். அல்லது அவளது வாழ்வின் இன்ப துன்பங்களை காது கொடுத்து கேட்கும் பாக்கியமேனும் கிட்டியிருக்கும். காதல் என்று நண்பர்கள் முடிவு செய்ய அதன் பின்னரான பார்வைகளே மாறிவிட, அவளை உடல்ரீதியாக தொட முயற்சிப்பதும், அதன் காரணமாக கிடைத்த போதையை அனுபவிப்பதுமாக ஒன்றுமற்ற பாலைவெளியில் வெறும் வெப்பத்தை மட்டுமே வேண்டி நிற்கும் வீணன் ஆகிப்போனேன். இப்படி நாம் இழந்த அற்புதத் தருணங்கள் எத்தனை எத்தனை என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியுமா நம்மால்? அப்படி கற்பனை செய்ய முடிந்தால் காலம் நம்மை நோக்கி காறித் துப்புவதை நம் கண்களால் உணரலாம்.

கேங்க்ஸ் ஆப் வாசெபூர் படத்தில் டெபனட் என்றொரு கதாபாத்திரம் உண்டு. வழக்கம்போல அவனும் சஞ்சய் தத் மற்றும் சல்மான் கான் விசிறி தான். அவன் ஒரு பெண்ணை புணர்ந்துவிட்டு எழுந்து ஆடைகளை அணிந்துகொண்டிருக்கையில் படுக்கையில் இருக்கும் பெண் கேட்பாள்,

” நாம ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள்னு தான் நினைச்சிருந்தேன்.. நீ ஏன் இப்படி செஞ்ச?”

அவன் அதற்கு,” ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவுல நட்பு மட்டும் இருக்க சாத்தியமேயில்ல..” -என்று அதற்கு முந்தைய நாள் அவன் பார்த்த படத்தில் இடம் பெற்ற வசனத்தை அவளிடம் அதே பாவனையில் சொல்வான். படம் முழுக்க ஏகப்பட்ட விஷயங்கள் இப்படி சினிமாவை மையப்படுத்தி இருக்கும். அதில் நான் மறக்கமுடியாத காட்சி இது. ஏனெனில் ஒரு குழப்பத்தை மிக எளிதாக நம்முள் விதைக்க இதைப் போன்ற காட்சிகள் எந்தவொரு பெரிய பிரயத்தனமும் செய்வதேயில்லை. உள்ளிழுக்கும் மூச்சுக்காற்று நம் கண்களுக்கு தெரிகிறதா என்ன? அப்படியே தான் இந்த விவாதங்களும். நமக்குள் மட்டுமே நிகழும் இந்த ஆண் பெண் உறவுகள் பற்றிய பார்வையை சினிமாவில் இடம் பெறும் இப்படியான காட்சிகள் எந்தவொரு முன் யோசனையும் இன்றி உள்ளே ஆழப் பதிந்து போய் ஏதேனும் ஒரு தருணத்தில் அது வெளிப்படவே செய்கிறது.

இப்போதைய சமூக வலைதலங்களிலேயே கூட ஒரு ஆணின் பதிவில் வந்து இயல்பாக பின்னூட்டம் இட்டோ அல்லது உட்பேழையில் வந்து பொதுவான விஷயங்களை பேசி நட்பைக் கோரும் பெண்களையே கூட எப்படி மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எதிரெதிரே அமர்ந்து கண்களை நோக்கி பேசும் கள்ளம் கபடமற்ற இரண்டு உயிரினங்களையே எளிதாக காதல் என்றும் காமம் என்றும் கலந்து பேசும் சமூகத்தில் இந்த வலைத்தளங்கள் மூலம் ஏற்படும் நட்பை வேறெப்படி பார்க்கத் தூண்டும்?

ஒரு நாய் மனிதனை கடித்தால் அது செய்தியில்லை. ஒரு நாயை மனிதன் கடித்தால் தான் செய்தி என்பார்கள். அப்படித்தான் இங்கே ஆண் பெண் நட்பும், காதலும் பார்க்கப்படுகிறது. உண்மையில் ஆண்-பெண் இருவர் நட்பாக மட்டுமே இருக்கிறார்கள் என்பது ஒரு செய்தியே இல்லை. அதில் சுவாரஸ்யமே இல்லை என்பது தான் இங்கே மூன்றாவது கண்களின் பார்வையாக இருக்கிறது. இந்த பார்வை மாற அந்த மூன்றாவது கண் ஒரு நட்பில் விழவேண்டும். ஆண் பெண் நட்பின் அருஞ்சுகத்தை அறிய வேண்டும். அதை பதிவு செய்யும் ஒரு நேர்மையான தைரியம் வேண்டும்.

எங்கே உங்கள் ஆண் நட்பை அல்லது பெண் தோழியை இந்த இடத்தில் நினைவுகொள்ளுங்கள். சினிமாவைத் தாண்டிய ஒரு பதில் உங்களுக்கு கிடைக்கும்.

-பால கணேசன்

இந்தத் தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்