மேனேஜ்மென்ட் தந்திரம் 1 – எருமைப்படை

209
அகம்

முற்காலத்தில் நம் நாட்டுடன் போர்புரிய வேண்டும் என்றாலே அண்டை நாடுகள் அனைத்தும் மிரள ஆரம்பிக்கும்… உள்நாட்டில் இந்த பிரச்சினை இல்லை, நேரம்காலம் இல்லாமல் அடித்துக்கொண்டு செத்தனர்… ஆனால் இமயத்திற்கும், சிந்துநதிக்கும் அப்பால் உள்ள எல்லைகளைக் கொண்ட அரசர்கள், படைகள் அனைத்தும் நம் பாரத அரசர்களைப் பார்த்து வியந்த, பயந்த விஷயம் ஒன்று உண்டு… நமது யானைப்படை…

எதிரிகளை முறியடிக்க வேண்டுமென்றால் ஒன்று அவர்களிடம் இல்லாத ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும், அல்லது எதிரிகளின் சிறந்த ஆயுதம் எதுவோ அதை அழிக்க வேண்டும்… நமது யானைப்படை இந்த இரண்டையுமே சிறப்பாகச் செய்தது…

 உலகையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என்ற அசாத்திய இலட்சியத்துடன் புறப்பட்ட மாவீரன் அலெக்ஸாண்டரே நம் யானைப்படையைப் பார்த்து மிரண்டு, செய்வதறியாது திகைத்து, தோற்று ஓடி, பின் நாடு திரும்பினான்… அப்பேற்பட்ட வலிமை பொருந்தியது நமது பாரதத்தின் யானைப்படை.  ஆனால் எதுவுமே நிரந்தரம் இல்லையல்லவா.. வல்லவனுக்கு வல்லவன் ஒருவன் வந்தான்… தனது அசாதாரண, சமயோசித சிந்தனையால் அந்நியர்கள் தகர்க்க முடியாத தூணாய் விளங்கிய யானைப்படையை முறியடித்து, அடுத்த ஆயிரம் வருடத்திற்கான அந்நியப் படையெடுப்பின் விதையை விதைத்து மாபெரும் வெற்றி பெற்றான் மங்கோலியாவின் மாமன்னன் டைமூர்…

அதற்கு முன் இப்படியொரு இராட்சத மிருகத்தை டைமூர் தன் வாழ்நாளில் பார்த்ததே இல்லை… எப்படிப்பட்ட வியூகம் அமைத்தாலும் பாரதத்தின் யானைப்படை அசரவில்லை… மாறாக டைமூரின் சப்பை மூக்கு வீரர்கள் யானைகளின் காலடியில் சின்னாபின்னமாகினர்… டைமூர் தளரவில்லை…. யோசித்தான் … தமக்குத் தெரிந்த வித்தைகள் எல்லாம் வீணாய்ப் போனதை உணர்ந்தான்… இதுவரை தான்

பின்பற்றிய இராஜதந்திரங்கள் அனைத்தையும் ஒரமாக வைத்துவிட்டு, யானையின் பலவீனம் என்னவென்று யோசித்தான்… பதில் கிடைத்தது…கூடவே அதை வெல்வது எப்படி என்ற பதிலும் கிடைத்தது… மறுநாள் காலை மீண்டும் போர்க்களம்.. புதிய உற்சாகத்துடன் டைமூர் கம்பீரமாக படையின் முகப்பில் நெஞ்சை நிமிர்த்தி நின்றான்… யானைப்படையை வழிநடத்திய பாரத தளபதிகள் அந்த காட்சியைக் கண்டு ஒருகணம் திகைத்தனர்.. தமக்கு முன் எதிரிப்படையில் முதல் வரிசையில் அணிவகுத்து நின்றது, வைக்கோல் மூட்டைகள் ஏற்றப்பட்ட எருமை மாட்டு வண்டிகள்.. ஆம், அன்று டைமூர் பயன்படுத்திய வியூகம் ‘எருமைப் படை’.

யானைகள் ஒன்றும் எருமையைக் கண்டு அஞ்சப்போவது இல்லை. மாறாக எருமைகள் தான் யானையைப் பார்த்தால் தெறித்து ஓடும். ஆனால் அன்று யானைப்படைத் தளபதிகள் திகைத்து நின்றதன் காரணம் வேறு. எருமைகள் யானையைக் கண்டு மிரளாமல் இருக்க மதுவை ஊற்றிக்கொடுத்திருந்தனர்… போர்முரசு கொட்டியதுதான் தாமதம், அத்தனை எருமைமாடுகளும் வைக்கோல் மூட்டைகள் நிரம்பிய வண்டிகளுடன் யானைப்படையை நோக்கி ஆக்ரோஷமாக, மூர்க்கத்துடன் முன்னேறின.. என்ன நடக்கிறது என இந்தியத் தளபதிகள் சுதாரிப்பதற்குள் டைமூரின் விள்வீரர்கள் வைக்கோல் மூட்டைகளை நோக்கி தீமூட்டிய அம்புகளை சரமாரியாக எய்தினர்… எருமைகள் யானையைக் கண்டு அஞ்சவில்லை. மாறாக மதுபோதையிலும், தீயின் உஷ்னத்திலும் தறிகெட்டு எதிரியின் படைக்குள்  ஊடுருவின…

சில மணி நேரத்தில் யானைகள் நிலையிழந்து,  தமது சொந்தப் படைக்குள்ளேயே சிதறியோடி, பெருநாசத்தை விளைவித்தது… விளைவு -முதன்முறையாக இந்திய எல்லை, அந்நியன் வசமானது….அன்று டைமூர் பயன்படுத்திய இராஜதந்திரம், அதாவது ‘Management Tricks’ இன்றும் உலகின் மிகச்சிறந்த, சூழ்நிலைக்கேற்ப, நுணுக்கமாக வகுக்கப்பட்ட (Strategy) வியூகமாகப் பார்க்கிறார்கள் வரலாற்றை ஆராய்பவர்கள்..

‘இறுதிச்சுற்று’ படம் பார்த்தவர்களுக்கு இன்னொரு சுவாரஸ்யமான வரலாறும் எளிதாக நினைவில் வரும்… எதிரியின் பலத்தை உடைத்து, நினைத்ததை சாதித்த மற்றொரு மங்கோலிய மாமன்னன் செங்கிஸ் கான்…  வரலாற்றுச் சம்பவங்கள் எப்பொழுதும் நமக்கு சிறப்பான பாடத்தைக் கற்றுக் கொடுத்துக்கொண்டே இருக்கும்.. மன்னராட்சி காலத்தில் கற்றுக்கொண்டது எதிரியை வீழ்த்துவது எப்படி என்று… அதன்பின் பல புரட்சிகள், ஆட்சி மாற்றங்கள், ஆட்சிமுறை மாற்றங்கள், பின் தொழிற்புரட்சி, தற்போது தகவல் புரட்சி எனக் காட்சிகள் மட்டும்தான் மாறுகின்றன…..  ஆனால் விஷயம் ஒன்று தான்…

மேலே சொன்ன இரண்டு மன்னர்களின் வரலாற்றிலும் அருமையான ஒரு மானேஜ்மென்ட் தந்திரம் உள்ளது. அதை நன்கு உணர்ந்தவர்களால் மட்டுமே இன்றைய தகவல் புரட்சி உலகில் தனித்து ஜொலிக்க முடியும்…

இன்று குடியாட்சி நிலையில் பெரும்பான்மையான மக்களின் அன்றாட நிகழ்வுகளை நிர்ணயிப்பது, அவர்களது பொருளாதார பயன்பாட்டை நிர்ணயிப்பது என….  சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் ஆட்சி செலுத்திக் கொண்டிருப்பது பிஸினஸ் மன்னர்களும், அவர்களின் தளபதிகளான, 80 சதவீத பொது மக்களை வழிநடத்தும் 20 சதவீத Strategical Managers எனப்படும்  மேலாண்மை முதலாளிகளும் தான்…

இன்றைய நிலையில் மகுடம் என்ற ஒன்று தேவையே இல்லை. நானே ராஜா, நானே மந்திரி தான்… ஆட்சி செய்ய ஒரு நாடும் (தொழில்),  அதன் மக்களும் (Target Audience) எங்கேயும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறார்கள்… நாம் பெயர் தெரியாத பிரஜையாக மட்டுமே தொடரப் போகிறோமா, அல்லது மாமன்னன் டைமூரைப் போல் மேலாண்மை முதலாளியாக எருமை மாட்டை வைத்து யானைகளை வீழ்த்தப் போகிறோமா என்பது நாம் வகுக்கும் வியூகத்தில் தான் உள்ளது….

 மேலாண்மையின் முதல் அடிப்படைத் தத்துவம் ஒன்று உண்டு… “பழைய தத்துவங்களை உடை… வழக்கமான பஞ்சாங்கங்களைத் தகர்த்து எறி…  புதிய திட்டங்களை உருவாக்கு… முதலில் எதிர்ப்பர்.. பின் இரசிப்பர்…”  என்பதுதான் அது…

அப்படிப்பட்ட புதிய மேலாண்மை முயற்சியில் ஈடுபட்டு, “அட, இப்படிக்கூட செயலாற்ற முடியுமா? ” என்று உலகத்தை அசத்திய ஒரு உண்மைச் சம்பவம் ஒன்று உண்டு… மேனேஜ்மென்ட் தந்திரத்தின் அடுத்த சுவாரஸ்யமான சம்பவம், கதை, களம்….

அடுத்த தொடரில்…

– கார்த்திக் K P