மனசாட்சிக்காக ஓட்டு

99

இன்றைய இரவுக்குள் கொடுத்தாகவேண்டும். அண்ணனே நேரிடையாக எல்லோரையும் விசாரிக்கறாராம்.

அந்த வீதியில் பரிதி மட்டும் கோபத்தோடு எதிர்த்தான். வலுக்கட்டாயமாக கொடுத்தீர்கள் என்றால் புகார் அனுப்பிடுவேன் என்றான். இது எதிர்தரப்புக்கும் தெரிய வர, அவன் வீட்டினரிடம் பேசிப் பார்த்தார்கள். அவர்கள் பயத்துடன் மறுத்துவிட்டனர்.

பரிதியை மிக நேர்த்தியாக வெளியனுப்பிய பிறகு, அந்த வீதியில் இரவில் பண பட்டுவாடாவை முடித்துவிட்டார்கள். எதிர் தரப்பும் இடைவெளிவிட்டு பணியை நிறைவு செய்துவிட்டார்கள்.

பரிதியை அடுத்த நாள் வீதியில் பார்த்த மக்கள், காணாத மாதிரி சென்றார்கள், தவிர்த்தார்கள். சுத்தமாகவே இவனுக்கு புரியவில்லை. தொடர்ச்சியான இந்த செயல்கள் சந்தேகத்தினை வரவழைத்தது.

அவர்கள் இவனை கவனிக்காத நேரத்தில், அவர்களிடம் நிலவிய மகிழ்ச்சியையும், இறுக்கம் குறைந்த நிலையையும் கண்டறிந்தான். மெல்ல தன் நட்புகளிடம் சற்று நினைவு தவறிய நிலையில் தெரிந்துகொண்டான். கோபம் தலைக்கேற, பற்களை மட்டும் நறநறத்தான். விரக்தியில் தலையில் அடித்துக்கொண்டான்.

இரண்டு நாட்களுக்கு வெளியூர் செல்வதாகவும், தேர்தல் முடிந்த பிறகு வருவதாக வீட்டில் தெரிவித்துவிட்டு கிளம்பிவிட்டான்.

இவன் இல்லாததை தெரிந்துகொண்டு நம்மிடம் பணத்தினை திணிக்க முயற்சிப்பார்களோ என்று வீட்டில் இன்னும் பயப்பட்டார்கள்.

சென்றவன் இரவில் கடும் அயர்ச்சியிடனும், சோகத்துடன் திரும்பினான். கூடுதலாக பதற்றமும்.

அவனின் அம்மா மெல்ல பேசிப் பார்த்தார்கள். சரியான, முறையான பதில் இல்லை. வழக்கத்திற்கு மாறாக அவன் இருப்பதை அறிந்து அமைதிகொண்டார்கள்.

இரவு 9 மணிக்கு பிறகு அலைபேசியில் யாரிடமோ பதற்றத்துடன், மிக மெல்ல பேசினான். கூனிக்கொண்டே வண்டியை எடுத்துக்கொண்டு சென்றான், வீட்டில் யாருக்கும் எதும் சொல்லாமலே.

வெற்றி பெறப்போகும் என்று எதிர்பார்க்கப்படும் கட்சியினரிடம் பேரம் பேசாமல் பணம் வாங்கும் செய்தி எதிர் தரப்புக்கும் தெரியவந்தது.

கொடுத்தவர் பேசினார். தம்பி, இதில் ஒன்றும் தப்பில்லை. எப்படியும் அண்ணன் சம்பாதிக்கத்தான் போகிறார். நான்கூட கணிசமாக வாங்கியிருக்கேன். ஆனால் அதற்காக கடுமையாக, அண்ணனிற்கு நேர்மையாக வேலை செய்கிறேன். நீயும் எதும் வீட்டிற்கு செய்துகொள் என்று முடித்தார்.

அவன் சென்ற பிறகு, ஏம்ப்பா உள்ள வரும்போது அந்த தம்பியிடமிருந்து மொபைலை வாங்கிட்டீங்கதானே ? நீங்க வீடியோ எடுத்திட்டீங்கதானே ?

ஆச்சுண்ணே என்ற பதில் வந்தது. பரிதி வண்டி எடுக்கும்பொழுது அவர்களின் ஏளனப்பார்வையயும், மெல்ல உயர்ந்த பார்வையையும் பார்த்து வெட்கினான்.

உறங்கியும், உறங்காமலும் அதிகாலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பும் போது சொன்னான். எதிர்தரப்பு கட்சியினர் இன்றைக்கு வரலாம். அவர்கள் கொடுக்கும் பணத்தை எதும் சொல்லாமல் வாங்கிக்கொள்ளுங்கள்.

வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அவர்கள் மீள்வதற்குள் கிளம்பிவிட்டான்.

அடுத்த கிராமத்தில் ஒரு வீட்டீற்குள் சென்றான். வாங்கிய மொத்த தொகையயும் அந்த வீட்டு பெரியவரிடம் கொடுத்தான்.

மன்னிச்சிக்குங்க, என்னால உங்களுக்கு சிரமம்.

இல்ல தம்பி, எதிர்பாராம நடந்த விபத்திற்கு நீங்க என்ன செய்வீங்க ? அதிலும் பின்னிருந்து மோதியவன் செய்த தவறுதானே ?

இல்லீங்க, நானும் கவனிக்காமல் விட்டுவிட்டேன்.

பரவாயில்லீங்க தம்பி. நாங்க பின்னாடி இந்த பணத்தினை தந்துவிடுகிறோம்.

அதெல்லாம் வேண்டாங்க. இது கட்சிக்காரங்க கொடுத்தது தான். இன்னொரு கட்சியும் தருவாங்கன்னு நினைக்கிறேன். அதனையும் இன்று இரவு வந்து தருகிறேன்.

நாங்களும் ஓட்டுக்கு தரும் பணத்தினை வாங்கக்கூடாது என்றுதான் இருந்தோம். ஆனால், நகைக்கடைக்காரர்க்கு எங்கள் மேல் நம்பிக்கையில்லை. பேசி பார்த்தோம். அவர் ஒத்துக்கொள்ளவில்லை. வேறு வழியில்லை. நாங்களும் நேற்றே வாங்கிவிட்டோம்.

ம்ம்….. கிடைத்த மீதி பணம் எத்தனை ரூபாய்க்கு நல்ல நிலையில் இருக்குங்க ?

ஐந்தாயிரம் தேறும் போல அண்ணா. நீங்க கொடுத்தது, நாங்க வாங்கியது எல்லாவற்றையும் சேர்த்தால் நகையை வாங்கிவிடலாம் அண்ணா என்றார் அந்த வீட்டின் பெண்மணி.

தம்பி, கண்டிப்பாக கல்யாணத்திற்கு வந்துவிடுங்க. அப்புறம், ஓட்டையும் மறக்காமல் போட்டு விடுங்க. நாங்ககூட கல்யாணத்தை முடித்து மதியத்திற்குமேல ஓட்டு போட இருக்கோம். ஒருத்தர் பாக்கிவிடாம. கை நீட்டி வாங்கிட்டம்ல.

ம்ம் என்றான். எப்படியாவது இந்த பணத்தினை சேர்த்தி எங்க ஊருக்கு கட்டவிருக்கும் நூலக செலவிற்கு தரவேண்டும்.

சரிதான் தம்பி. நாங்களும் 3 மாதத்திற்குள்ளாக திருப்பி தந்திடறோம். மறுக்காமல் வாங்கிக்கொள்ளுங்கள் என்றார் பெரியவர்.

இவர்களுக்கு நேரதிராக,

எதிர், எதிர் கட்சி முகாம்களில் பட்டுவாடாவை முடித்துவிட்டு செலவு கணக்கினையும் பார்த்துவிட்டு, அதனை எந்தந்த வழிகளில் 3 மடங்களுக்கு மேல் எடுக்கமுடியும் என்று பேசிக்கொண்டிருந்தனர்.

சசிக்குமார் தங்கவேல்