மரபு கவிதை

148

குமரிக் கண்டத்தில் தோன்றிய மனிதயினத்தின் முதல் வேரான நம்மினமாம் தமிழினத்தின் செம்மாந்த மொழி தமிழ்மொழி. நம் மொழியின் இலக்கணக் கட்டுக் கோப்புகள், இலக்கிய ஆளுமைகள், இன்னபிறச் செவ்வியல்களின் மூலமாக நந்தமிழ் காலத்தால் அழியாத இளமையுடன் இன்றும் சிறப்புற விளங்கி வருகிறது.

ஒரு மொழி செம்மொழியாவதற்கான தகுதிகளாக வகுக்கப்பட்ட அனைத்துத் தகுதிகளும் உடைய நம்மொழி காலத்தால் உலக மொழிகளுக்கெல்லாம் முற்பட்ட தொன்மையுடையது.

தமிழைப் போன்ற சிறப்புடைய பல தொன்மையான மொழிகள் பலவும் இன்று வழக்கில் இல்லாமல் அழிந்து விட்டன. காரணம், அம்மொழிகளைப் பயன்படுத்தும் மக்கள் குறைந்ததே.! ஒரு மொழியைப் பேசிக் கொண்டோ, எழுதிக் கொண்டோ இருப்பின் அம்மொழி வாழ்கிறது என்று பொருள்.

ஒரு மொழி வாழவேண்டுமாயின், அம்மொழியின் ஒலியும், ஒளியும் செம்மாந்திருத்தல் இன்றியமையாதது.

உலகின் பிற மொழிகளுக்கெல்லாம் இல்லாத தனிச்சிறப்பு நம் தமிழுக்குண்டு. அதுவே “பொருளிலக்கணம்.” பிற மொழிகளில் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணமுண்டு. ஆனால் தமிழிற்கு மட்டுமே பொருளுக்கும் இலக்கணம் இருக்கிறது. வாழ்வியலுக்கே இலக்கணம் வகுத்துச் செம்மையான வாழ்க்கைக்கு வேராக நிற்கிறது நம் தாய்மொழியாம் தமிழ் மொழி.

மரபு பாக்கள்.:

தன் எண்ணத்தை எழுத்தாக்கிய மனிதன் அதைப் பிறர் புரிந்து கொள்ள வேண்டி இலக்கியமாக்கினான். அந்த இலக்கியங்கள் அதை எழுதிய இனத்தின் வளர்ச்சி, பண்பாடு, காலம் போன்றவற்றைக் காட்டும் கண்ணாடியாக விளங்கின.

அந்தக் கண்ணாடி தூய்மையாக இருந்தால் தானே முகத்தைத் தெளிவாகக் காட்டும்.? அதில் (இ)ரசம் பூசப்பட்டால் தானே காட்டும் தன்மையைப் பெறும்.? அந்த (இ.)ரசம் தான் இலக்கணம்…அந்தத் தூய்மைதான் “பிறமொழிக் கலப்பின்மை.”

எழுத்து, சொல், பொருள் என்று தொல்காப்பியத்தின் வழி நின்று நம் பெருமையைப் பறை சாற்றும் நம் இலக்கியங்கள் தமிழின் பெருமையைத் தாழாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

எண்ணங்களை இலக்கியமாக்கிய நம் முன்னோர் அவற்றை இலக்கணம் பிழையாமல், கட்டுக் கோப்புடன், நால்வகைப் பாக்களாலும், பாவினங்களாலும் எழுதி வைத்தனர். அவை “மரபு பாக்கள்.” எனப்பெற்றன.

புதுக்கவிதை.:
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நா.பிச்சமூர்த்தி, பாரதியார் போன்றவர்களால் தொடங்கிய புதுக்கவிதை என்னும் உரைவீச்சு வானம்பாடி கவிஞர்களின் மூலம் வேகமாகப் பரவியது. அதன் எளிமை, கட்டுப்பாடுகள் இல்லாமை, எந்த மொழிச் சொல்லையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற சுதந்திரம் ஆகியவை அதன் வளர்ச்சியை அதிகப்படுத்தின.

இன்று தமிழன் எங்கெல்லாம் வாழ்கிறானோ அங்கெல்லாம் புதுக்கவிதை என்கிற உரைவீச்சும், ஜப்பானிய வடிவங்களான ஹைக்கூ, லிமரைக்கூ போன்றவை பல்கிப் பெருகி விட்டன. கவிஞர்களும் மிக அதிகமாக உருவாகினர்.

இது வரவேற்கக் கூடியதே. ஆயினும் நம் மொழியின் சிறப்பை, அதன் வாழ்நாளைக் காப்பது “மரபு வழிக் கவிதைகளே.!”

புதுக்கவிதைகளில் புகுத்தப்படும் பிற மொழிக் கலப்பால் தமிழின் தனித்தன்மை சிதைந்து, பின்வருகின்ற தலைமுறையினர் அக்கலப்புச் சொற்களைத் தமிழென்று எண்ணிக் கொள்ளும் அவலம் நேர்ந்து விடும். ஏற்கனவே ஆங்கில மற்றும் அயலக வேட்கையில் தமிழைப் புறக்கணித்து விட்டு, முழுக்க முழுக்க வேற்றுமொழி வாயிலாகப் படித்துவிட்டு அயல்நாடு செல்வோர் பலர்.

கவிஞனின் பணி.:

இப்படியாகத் தமிழன் தன் அடையாளத்தை இழந்துவரும் வேளையில், கவிஞனின் முக்கிய கடமையாக மொழியுணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற அரிய பணி உள்ளது.

அப்பணியைச் செய்ய வேண்டுமாயின் அவனுக்குத் தாய்மொழி(தமிழ்.) அறிவும், உணர்வும் இருப்பது இன்றியமையாதது.

ஏன் மரபு வேண்டும்.?

மரபை விலக்கி விட்டுப், பிறமொழிச் சொற்களைத் தங்கள் கவிதைகளில் கலந்து மொழியின் அழிவுக்குத் துணையாவோர் எவ்வாறு தன் தாய்மொழியைக் காக்கும் கடமையைச் செய்வராவார்.?

இலக்கணத்தைப் பெரும் தொல்லையாகக் கருதிப் புதுக்கவிதைக்குச் செல்லும் பலரும், ஒற்றுப் பிழைகளுடன் பொருட்பிழை, ஒருமை பன்மை பிழை, தன்மை முன்னிலை படர்க்கை பிழை இப்படியாகப் பிழையாகவே தங்கள் கவிதையில் சொற்களை அமைக்கிறார்கள். மேலும், ரகர, றகர வேறுபாடு, ழகர, லகர,ளகர வேறுபாடு, ணகர,னகர,நகர வேறுபாடு இவற்றை அறியாமல் எழுதிப் பிழை செய்கிறார்கள். அதனை அவர்கள்அறியாமல் செய்கிறார்கள்…ஆனால் பின்வரும் தலைமுறை அவை எல்லாமே சரியானவை என்று தொடரும் போது அது நம்மொழியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் அல்லவா.?

மரபைக் காப்போம் :

எனவே நாம் நம் தமிழைக் காக்க வேண்டுமானால் முதலில் பேச்சிலும், எழுத்திலும் பிறமொழிக் கலப்பால் ஏற்படும் தீமைகளை விளக்கிச் சொல்ல வேண்டும்.
கவிஞர்கள் முடிந்தவரை முயன்று தமிழிலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்து பாக்கள் எழுத முயலல் வேண்டும். குறைந்த அளவு பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தாமல் எழுதுதல் நன்மை பயக்கும்.

மரபறிந்த புலவர்களும், பாவலர்களும் ஏளனத்திற்கு அஞ்சாமல் தமிழின் யாப்புச் சிறப்பை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

இறுதியாக, புதுக்கவிதை என்பது தனித்தனியான மலரைப் போன்றது. ஒன்றை எடுத்தால் அந்த ஒன்று மட்டுமே கைக்கு வரும்.

மரபுகவிதை என்பது யாப்பெனும் நாரெடுத்து, அளந்து,சீர்படுத்தி, எதுகை மோனை போன்றவற்றால் அழகுறத் தொடுக்கப்பெற்ற மாலை போன்றது. ஒரு மலரை எடுத்தால் முழு மாலையே கைக்கு வரும். அதனால் தான் நாம் இன்னும் சங்கப் பாடல்களை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பக்தி இலக்கியங்கள் போன்றவற்றை மனனமாக நினைவில் கொள்ள முடிகிறது.

வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்.!!

பாவலர். ம.வரதராசன்