மறைந்த கலை பொக்கிஷம்

63

ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மறைந்தார்.

ஆம். திரையுலகின் தகவல் களஞ்சியம் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப் பட்டவர். என்னைப் போன்ற எழுத்தாளர்கள் திரையுலகு சம்பந்தமாக எழுதும் கட்டுரைகளுக்கு, அவரின் உதவி மிக முக்கிய பங்கை வகித்தது என்றால் மிகைக் கிடையாது.

அன்பான முறுவலோடு வரவேற்கும் குணம் கொண்டவர். தனது 88 வது வயதில் தனது உலக வாழ்வை, முதுமையின் வலியோடு முடித்துக் கொண்டார். அதுவும் அவர் பிறந்த நாளிலேயே!

1928 மார்ச் 21 தான் அவருடைய பிறந்த நாள்.

பள்ளி நாட்களிலேயே கலை ஆர்வம் மிக்கவராய் திகழ்ந்துள்ளார். நாடகங்களில் நடிப்பதும், வசனங்கள் எழுதுவதும் அவருக்கு பிடித்தமான ஒன்று. புகைப்படக் கலையில் மிகுந்த ஆர்வமாய் இருந்துள்ளார். அவரின் ஆர்வத்தைக் கண்ட NSK வின் ஒளிப்பதிவாளர் CJ.மோகன் அவர்கள் ஒளிப்பதிவின் நுட்பங்களை அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.

1954 ம் ஆண்டு பிலிம் சேம்பர் பத்திரிக்கையில் , படப்பிடிப்புகளைப் பற்றிய செய்தி சேகரிப்பாளராக தனது பணியைத் தொடங்கினார். அவர் எடுத்த அரியப் புகைப்டங்கள், அவரது கல்லூரித் தோழர் CT.தேவராசன் நடத்தி வந்த பிலிம் நியூஸ் பத்திரிக்கையில் வெளி வந்தது. அதன் வரவேற்பின் காரணங்களாலேயே பிலிம் நியூஸ் பத்திரிக்கையின் சர்குலேஷனும் உயர்ந்தது. பின் நாளில் அதே பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி புரிந்தார். அன்றிலிருந்தே அவரதுப் பெயர் பிலிம் நியூஸோடு ஒட்டிக் கொண்டது.

பின்னர், நடிகர் சங்கத்தின் பத்திரிக்கையான ”நடிகன் குரல்” பத்திரிகையின் போட்டோ – ஜர்னலிஸ்ட்டாக பணியாற்றினார். அந்த சமயத்தில் தான், அதன் ஆசிரியர் வித்வான் வே.லட்சுமணன் அவர்களுடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை தினமும் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது.

1958 ல் எம்.ஜி.ஆர்., நாடோடி மன்னன் படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது அலுவலக மேலாளராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள். அவரது மேஜையில் நாடோடி மன்னன் பட ஸ்டில்களைப் பார்த்த ஆனந்தன், “ஐயா பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா?” – என்று கேட்க. “பத்திரிகைகளில் ஸ்டில் வரவேண்டும், இதை யார் கொடுத்தால் என்ன நீங்களே கொடுங்களேன்” – எனக் கூறி ஸ்டில்களை அவரிடம் கொடுத்தார். அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளிலும் ஸ்டில்கள் வெளிவந்து நாடோடி மன்னன் படத்தின் எதிர்ப்பார்ப்பைக் கூட்டின.

எம்.ஜி.ஆர். உடனே அழைத்து பாராட்டினார். ‘ PRO என்ற புதிய தொழில் ஆரம்பமாவதற்கு காரணமானது இந்த சம்பவம்தான்’ என்று தனது பேட்டி ஒன்றில் ஆனந்தன் குறிப்பிடுகிறார்.

12 க்கும் மேலான பட்டங்கள், பல நூறு விருதுகளை வாங்கிக் குவித்த ஆனந்தன் அவர்கள் 9க்கும் மேற்பட்ட திரை சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.

2004 ல் தமிழக அரசின் உதவியோடு ‘சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு’ என்ற நூல் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். அவரது ஆவணச் சேகரங்களை அரசு தனது உடைமையாக்கிக் கொண்டது.

கமல்ஹாசனின் 200 வது படமான ஆளவந்தான் படத்திற்கு ஆல்பம் தயாரிக்கும் பணியையும் சிறப்பாக செய்தார்.

கலைஞர். கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா இவர்களின் நன்மதிப்பை பெற்றவர். அது மட்டுமில்லாமல் இன்று வரை திரைத்துறையில் உள்ள அத்தனை நபர்களையும் கவர்ந்த மனிதர் ஆனந்தன் ஒருவராகத் தான் இருக்கமுடியும்.

இவரது மகன்களில் மூத்தவர் டைமண்ட் பாபு பிரபல நடிகர்களின் செய்தித் தொடர்பாளராக இன்றும் பணிப் புரிகிறார். இரண்டாவது மகன் ஸ்டில் ரவியும் சினிமாத் துறையில் தான் பணிப்புரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலப் பொக்கிஷங்களை சேகரமாக்கிக் கொடுத்த கலைப்பொக்கிஷம் நேற்று நம்மை விட்டு பிரிந்தாலும், அவரது சேகரங்கள் இருக்கும் வரை அவரது நினைவுகளும் இருக்கும்.

முகமது பாட்சா