மயானத்தில் அனாதைகள்

258

ஒரு மணிக்கு வரேன்னு காலைல பத்து மணிக்கே  சொல்லிட்டு போனாங்க மணி நாலரை ஆவுது இன்னும் காணோம். பதினோரு மணிக்கே எல்லா ஏற்பாடும் செஞ்சுப்புட்டு உக்காந்திருக்கேன். அவங்களுக்காக காத்திருந்து பாத்துப்புட்டு ஆள காணோம்னு மூணு மணிக்குதான் வேண்டா வெறுப்பா சாப்பிட்டேன். சாப்பாடு இறங்காததுக்கு இன்னோரு காரணமும் இருக்கு.

இன்னிக்கு மாணிக்கம் சார பாத்துப்புட்டு அப்படியே கொஞ்சம் சாமான் சட்டிலாம் வாங்க டவுனுக்கு போனும்னு நினைச்சேன். ஒரு மணிக்கே அவங்க வந்திருந்தா ஆறரை மணிக்காவது கிளம்பிருக்கலாம். எப்ப வர போறாங்களோ. வரவங்க வேலைய குடுத்துட்டு அரை மணி நேரத்துல கிளம்பிடுவாங்க எனக்கு வேலைய முடிக்க குறைஞ்சது ஆறு ஏழு மணி நேரமாவது ஆகும்.

சும்மா உக்காந்திருக்கறதுதான் கஷ்டம். நாலு வருஷமா முயற்சி செஞ்சும் உதவிக்கு ஒரு ஆள் கிடைக்க மாட்டேனுது. அதெப்படி கிடைக்கும். ஆள் தேடுறது வெட்டியான் வேலைக்காச்சே. சுத்துப்பட்டி நாலு கிராமத்துக்கும் இதான் மயானம். நாலஞ்சு தலைமுறை தூங்கற எடம் இது.

பேரு மட்டும் பெரிய பேரு “சீம துரை” ஆனா ஊர் பெரிய தலைங்க மட்டும் சீம. . . சீமனு..  கூப்புடுவாங்க. பதினைஞ்சி வருஷமா வேற யாருக்கும் என்னய கூப்புடுற அவசியம் இது வரை வந்ததில்லை. ஏன்னா நான் இந்த மயான
த்துக்கு வந்து பதினஞ்சு வருஷம் ஆவுது.

அம்மா அப்பா யாருனு தெரியலை. வளத்த்தெல்லாம் விறகு கடை கிழவிதான். கிழவியும் என்னைய மாதிரி அநாதைதான். என்னைய எட்டாம் வகுப்பு வரை படிக்க வெச்சிது.

அதுக்கு மேல படிக்க வைக்க அதுக்கு வசதி இல்லை. நானும் அதோட வெறகு கடைய பாத்துக்க ஆரமிச்சேன். நல்ல கண்ணு ஐயாதான் இந்த மயானத்துல இருந்தாரு. அவரும் அநாதைதான். நான் தான் அவருக்கு வழக்கமா விறகு போடுவேன்.

ஒரு நாள் எந்த கஷ்டமும் குடுக்காம கிழவி போய் சேந்துடுச்சி. கிழவி சாம்பலாகுற வரை ஐயா கூடவே இருந்தேன். கிழவி போனதுக்கு அப்புறம் ஊருல இரண்டு மூணு அநாதை பிணத்துக்கு நான்தான் ஐயா உதவியோட காரியம் செஞ்சேன். தினம் வந்து போனதால எனக்கு தெரிஞ்சது ஊருக்குள்ள ஐயா மட்டும்தான்னு ஆகி போச்சு.

ஐயாவும் ஒரு நாள் போய்ச் சேர ஐயாவுக்கும் நான்தான் எல்லாம் செஞ்சேன். அதுக்கப்புறம் ஊர் பெரியவங்க கேட்டுக்கிட்டதால அப்படியே இங்கயே இருக்க வேண்டியதாப் போச்சு.

ஐயா போனத்துக்கப்புறம் ஊர்ல இப்ப என் கூட பேசுறது மாணிக்கம் சார் மட்டும்தான். ஊர் பெரிய தலைல ஒருத்தரு. வாத்தியாரா இருந்து ரிட்டயர்ட் ஆனவரு. வயசு எழுபது கிட்ட இருக்கும். அவருக்கு இரண்டு பசங்க. ஒரு பொண்ணு ஒரு பையன். பொண்ண வட நாட்டுல கட்டி குடுத்துருகாரு. பையன் அயல் நாட்டுல இருக்கறாரு.

ஏழெட்டு மாசத்துக்கு முன்னாடி அவரு வீட்டம்மா இறந்து போனப்ப இங்க வந்தாரு. அவரு பையனுக்கு அங்க ஏதோ பிரச்சனை அம்மா செத்ததுக்கு கூட வர முடியலைனு இவருதான் காரியம் செஞ்சாரு. சின்ன வயசுலயே கல்யாணம் செஞ்சவங்க அம்பதறுவது வருஷம் சேந்து வாழ்ந்துருக்காங்க. இவரால அவங்க பிரிவ தாங்க முடியலை. ஒரு ஆம்பள அப்படி அழுது அன்னிக்கு தான் பாத்தேன்.

எழவுக்கு வந்த சொந்த பந்தம்லாம் போன பிறகு ஒரு நாள் இங்க வந்தாரு. இங்கதான் அவ ஆத்மா சுத்துது. கொஞ்ச நேரம் இங்க உக்காந்துட்டு போறேனு சொல்லிட்டு உக்காந்துட்டு காத்த பாத்து பேசிட்டு இருந்தாரு. அதுக்கப்பறம் அடிக்கடி வருவாரு.

குழந்தைங்களும் பெரியவங்களும் ஒண்ணுதான். குழந்தைங்க உலகத்த கத்துக்க யார்க்கிட்டயாவது கேள்வி கேட்டுக்கிட்டே இருக்க ஆள் தேடுறாங்க. பெரியவங்க தான் கத்துக்கிட்டதெல்லாம் யார்க்கிட்டயாவது சொல்லிகிட்டே இருக்க ஒரு ஆள் தேடுறாங்க. ஆனா இரண்டு பேருக்கும் இப்ப ஆள் கிடைக்க மாட்டேங்குதுனு சொன்னாரு. நிஜம்தான்

இரண்டு பேருக்குமான அந்த சந்தோஷம் தாத்தா பேரன் உறவில் மட்டுமே கிடைக்கும். இப்பலாம் பிழைப்பையும் படிப்பையும் காரணம் காட்டி பிள்ளைங்க  தாத்தாவையும் பேரன் பேத்தியையும் பிரிச்சிடுறாங்க. யார் யார்க்கிட்டயோ மணிக்கணக்கா பேசுற பிள்ளைங்கலால பெத்தவங்களுக்கு அரை மணி நேரம் பேச ஒதுக்க முடியலைனு சொல்லிப் புலம்பினாரு.

அவரு பேச்ச பெத்த புள்ளைகளே கேட்கல ஊருக்குள்ள மத்தவங்களா கேட்கப் போறாங்க. அதுக்கப்புறம் வரும் போதெல்லாம் நிறைய விஷயங்கள்  சொல்லுவாரு. பெரும்பாலும் புரியாது. எனக்கு புரிஞ்சதெல்லாம் அவரோட சந்தோஷமே அவரு சொல்றதை எல்லாம் நான் கேட்கறது மட்டும் தான்ங்கறது. எல்லாரும் இருந்தும் பேச ஆள் இல்லாம அவரும் என்னைப்போல் ஒரு அநாதைதான். அதனால அவர் என்ன பேசுனாலும் எவ்வளவு பேசுனாலும் வாயை மூடிக்கிட்டு காதை தொறந்து வெச்சி கேட்டுட்டே இருப்பேன்.

மாணிக்கம் சார கடந்த ஒரு வாரமா காணோம். உடம்பு எதும் சரியில்லையா. ஒரு வாரமா பேரன் பேத்தி நியாவகமா மனசு அதிகமா ஏங்கி போய் கிடக்குன்னு சொல்லிட்டே இருந்தாரு. அதனால ஊருக்கேதும் போயிருக்காரான்னும் தெரியலை.

காலைல வந்தவங்க பெரிய சாவுனு மட்டும் சொல்லிட்டு போயிட்டாங்க. யாரு எவருனு தெரியலை. மாணிக்கம் சார போய் பாக்கனும்னு மனசு கடந்து அடிச்சிக்க இதுவும் ஒரு காரணம். தூரத்துல தப்பு சத்த்த்தோட செகண்டி சத்தமும் கேட்குது. மாணிக்கம் சாரா மட்டும் இருந்துடக் கூடாதுனு மனசு முதல் தடவயா கடவுள வேண்டுது. . .

க.முத்துக்குமார்