மருத்துவ காப்பீட்டு திட்டம்- ஒரு அலசல்

942

இப்போ எல்லாம் எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும், அரசாங்க மருத்துவமனையாக இருந்தாலும் கூட முதலில் கேட்கப்படும் கேள்வி, காப்பீடு அட்டை இருக்கின்றதா? இந்த கேள்விக்கு இல்லை என்று பதில் சொல்லுபவர்களை ஒரு மாதிரியாக பார்க்கும் நிலைமை இரண்டு இடத்திலும் வந்து விட்டது.
மேற்கத்திய நாடுகளில் இருந்து இங்கே வந்த இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் இந்தியாவில் இன்னும் முழுமையாக காலூன்ற முடியவில்லை. இன்னும் உள்நோயாளிகள் , அறுவைச் சிகிச்சை என்ற அளவில் மட்டுமே நிற்கின்றது.

வரவு செலவு பட்ஜெட் போட்டு செலவழிக்கும் ஒரு மத்தியத் தர குடும்பங்களில் சாதாரண காய்ச்சலுக்கு சிகிச்சைக்காக ,ஒரு தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக இருக்கும் பட்சத்தில் செலவு சில ஆயிரங்களை தாண்டி விடும். சம்பளத்தை முழுவதும் விழுங்கி விடும். அந்த நேரத்தில் இந்த மாதிரியான மருத்துவக் காப்பீட்டு திட்டம் பயன்படும்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்ற காப்பீட்டுத் திட்டங்கள் போன்று தான். ஆனால் இதுக்கென்று சில வரையறைகள் உள்ளது. எல்லாக் காப்பீட்டுத் திட்டமும் எல்லோருக்கும் பொருந்தாது. கூடுமானவரை தமக்கு பொருந்தக் கூடிய காப்பிட்டுத் திட்டத்தை உணர்ந்து கொள்வதற்காக ஒரு சிறிய அறிமுகமே இந்தக் கட்டுரை.

கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.

1.ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எடுக்கும் போது அது கூடுமானவரை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பயன்படுத்துமாறு இருக்க வேண்டும். அதாவது சிறியவர் முதல் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் ஓரே திட்டத்தில் உள்ளவாறு தேர்வு செய்தல் வேண்டும்.

2 முதலில் தேர்வு செய்யப்படும் திட்டம் மிகவும் அடிப்படை திட்டம் ஆக இருக்கலாம். தேவையற்ற வசதிகளை கொண்ட சிறப்பு திட்டங்கள் எதுவும் அவசியம் இல்லை.

3. பிரிமியத்தின் அளவை ரூபாயில் மற்ற கம்பெனிகளுடன் ஒப்பீடு செய்வதை விட கிடைக்கும் வசதிகளை ஓப்பீடு செய்வது நலம் பயக்கும்.

4. அதாவது பிரிமியம் விலை குறைந்தது என்று தேவையற்ற திட்டம் எடுப்பது விட கொஞ்சம் அதிகமானலும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவக் காப்பீடு திட்டம் பலன் தரும்.

5. உதாரணமாக 1-2 லட்சம் வரை மட்டுமே உள்ளடக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் விட கூட கொஞ்சம் ரூபாய் பிரிமியம் கட்டி 5 லட்சம் உள்ளடக்குவது நல்லது. ஏனெனில் ஏற்கனவே எடுத்த மருத்துவக் காப்பீடின் மேல் தொகுப்பு உயர்த்தப்படும் முன் திரும்ப ஒரு தடவை உடலில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று மருத்துவச் சான்றிதழ் வழங்க வேண்டும். மேலும் தற்பொழுது உள்ள வயதுக்கு ஏற்றவாறு பிரிமியம் தொகை வேறுபடும். இது கிட்டத்தட்ட ஒரு புது பாலிசி எடுப்பது போன்று தான். இந்த தேவையில்லாத இரட்டைச் செலவினங்களைக் குறைப்பதற்கு முதலிலே கொஞ்சம் அதிகபடியான தொகை வருமாறு திட்டத்தை தேர்வு செய்யலாம்.

6. ஒரு தடவை திட்டம் தேர்வு செய்யும் போது அதனை புதுப்பித்தல் உள்ளதிலேயே அதிகப்படியான ஆண்டுகள் வருமாறு பார்த்துக் கொள்ளவும். எடுத்துக்காட்டாக சராசரி இந்தியனின் வயது எழுபது ஆண்டுகள். அதனால் இதற்கு குறைவான புதுப்பித்தல் உள்ள பாலிசி நலம் பயக்காது. உயிருள்ளவரை காப்பீடு (life time)என்ற திட்டம் எல்லாவற்றிலும் சிறந்தது.

7. சில காப்பீட்டுத் திட்டத்தில் வழங்கப்படும் தொகைக்கு உச்ச வரம்பு உண்டு. அவை சில திட்டங்களில் மருத்துவமனையில் தங்கியிருக்கும் நாட்களைப் பொறுத்து கணக்கிடப்படும். ஒரு சாதாரண அறுவைச் சிகிச்சை ஏழு நாட்கள் வரை தங்க வேண்டி இருந்தால் ஒரு நாளைக்கு 5000×7 நாட்கள் =35000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும். ஆனால் அந்த அறுவைச் சிகிச்சையின் மொத்தச் செலவு 1.5 லட்சத்தை தாண்டியிருக்கும் . இந்த மாதிரி திட்டங்களை மட்டுமே நம்பி இறங்கக் கூடாது. இவை ஏற்கனவே ஒரு திட்டம் எடுக்கப்பட்டு இருந்தால் அதற்கு துணையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அதனால் ஒரு மருத்துவக் காப்பீடு திட்டம் தேர்ந்தெடுக்கும் முன் அதில் எவ்வாறு திரும்ப வழங்கப்படும் தொகை கணக்கிடப்படும் என்பதைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

8. மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பொறுத்த வரை 45 என்ற எண் ஓவ்வாது. அதாவது வயது 45 ஆண்டுகளுக்குப் பின் எடுக்கப்படும் பாலிசிகளுக்கு பல சிக்கல்கள் உண்டு. அதில் முக்கியமானது அதிகப்படியான பிரிமியம் செலுத்துதல் , கிட்டத்தட்ட 50 % வரை அதிகமாகச் செலுத்த நேரிடலாம். அதனால் எவ்வளவு வயது குறைவாக எடுக்கிறோமோ அந்த அளவிற்கு நடைமுறைகள் சுலபமாக இருக்கும். அதுவும் வயதான பெற்றோர்கள் சேர்ந்து எடுக்கும் போது நடைமுறைச் சிக்கல்கள் இன்னும் அதிகமாக இருக்கும். அதனால் கிட்டத்தட்ட பக்கத்தில் வரும் நிலையில் உள்ள திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.

9. மூத்த குடிமக்களுக்கு என்று தனியாக காப்பீட்டுத் திட்டம் உள்ளது. இவர்களுக்கு Co -Pay அதாவது மொத்தத் தொகையில் 10-20 % நாமும் சேர்ந்து செலுத்துமாறு திட்டங்கள் உள்ளன. அவைகளை தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக 5000 தொகை செலுத்த வேண்டி வந்தால் அதில் 48000 காப்பீடுக்கு தகுதி பெறும். இதில் பத்து சதவீதம் 4800 + 2000 நமது கையில் இருந்து கட்ட வேண்டி வரும். அதிலும் அவர்களுக்கு சர்க்கரை போன்ற நாள் பட்ட வியாதிகள் இருக்கும் போது இன்னும் நிறைய கட்டுப்பாடுகள் வரும். அதனால் தமது தகுதிக்கு ஏற்ப திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு பிரிமியம் கட்டி மருத்துவக் காப்பீடு எடுக்க வசதியில்லாதவர்கள் என்ன பண்ணுவது என்று கவலைப்பட வேண்டாம்.

ஆண்டு வருமானம் 72000 த்திற்கும் குறைவாக உள்ளவர்களுக்கும், அரசாங்க வேலையில் உள்ளவர்களுக்கும் அரசே காப்பீடு நிறுவனங்களில் பிரிமியம் கட்டி இலவசமாக காப்பீட்டுத் திட்டம் அட்டை வழங்குகிறது.

இது ஆந்திராவில் ஆரோக்கிய ஸ்ரீ என்னும் பெயரில் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தில் 2009 ல் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் ஆரம்பித்து தற்பொழுது முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் செயலாக்கப்படுக்கின்றது.

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 2014 (New Health Insurance Scheme, 2014) என்பது, தமிழ்நாடு அரசின் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் மருத்துவ நலனுக்காகத் தமிழக அரசால் 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் .

இத்திட்டம் 1-07-2014 முதல் நடைமுறையானது. இத்திட்டத்தை, இந்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான யுனைட்டட் இந்தியா இன்சூரன்சு நிறுவனம், தமிழ்நாடு அரசின் முகவராக இருந்து செயல்படுத்துகிறது. யுனைடெட் இந்தியா இன்சூரன்சு நிறுவனம் மற்றும் பயனாளிகளுக்கிடையே மூன்றாம் நபர் நிர்வாகியாக (Third Party Administrator) எம்டி. இந்தியா ஹெல்த் கேர் நிறுவனம் (MD India Health Care Services Pvt., Ltd.,) இருந்து செயல்படும்

இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள், ஆசியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் அவர்தம் கணவர்/மனைவி மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவர்.

அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிகபட்ச வரம்பாக ரூபாய் இரண்டு இலட்சம் வரை, அரசு ஒப்புதல் பெற்ற மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தாமல் மருத்துவம் பெறலாம்.

இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அவை குறிப்பிட்ட நோய்களுக்கு உள் நோயாளியாக தங்கி வைத்தியம் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். வெளி நோயாளியாக செய்யப்படும் எந்த ஒரு பரிசோதனை மருந்து மாத்திரைகள் செலவுகளை நேர் செய்யாது.

என்னுடைய அனுபவங்கள்:

1. இரவு 9 மணி அளவில் ஒரு தனியார் மருத்துவமனை அவசரச் சிகிக்சை பிரிவில் இருந்து போன் வந்தது. மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருந்து எனக்காக பரிந்துரைக்கப்பட்ட நோயாளி ஒருவர் பார்ப்பதற்கு காத்துக் கொண்டு இருக்கிறார். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும் உடனே வந்து பார்க்குமாறு பணி மருத்துவர் வேண்டுகோள் விடுத்தார். வீட்டுக்கு செல்லும் தருவாயில் அவரை சென்று பார்க்கும் போது தான் அவரது நிலைமை தெரிய வந்தது. இரத்த இரத்தமாக வாந்தி எடுத்து உடம்பில் இரத்தம் மிக குறைந்த அளவில் உடனடியாக தீவிரச் சிகிச்சையின் மூலம் மட்டுமே அவரது உயிரைக் காப்பாற்ற முடியும். இதற்கு உள்நோயாளியாக அனுமதிக்க வேண்டும். அவரது மருமகள் மட்டுமே உடன் இருந்தார். கையில் ரூபாய் 5000 மட்டுமே உள்ளது. மற்றபடி எதுவும் செலவு பண்ண இயலாது. இப்போதைக்கு ஏதாவது செய்து அவர காப்பாற்றுங்கள் என்று கதறும் போது என்ன செய்வது என்று தெரியவில்லை. சரி உங்களுக்கு தமிழக அரசு வழங்கிய காப்பீடு அட்டை உள்ளதா என்று கேட்டதுக்கு வீட்டில் இருக்கிறது என்று பதில் வந்தது. சரி என்று அவசர அவசரமாக காப்பீட்டுத் திட்ட அலுவலர் தொடர்பு கொண்டு எமெர்ஜென்சி நம்பர் அனுமதி வாங்கி அவருக்கு எண்டோஸ்கோபி மூலம் இரத்தப் போக்கு கட்டுப்படுத்தி, மூன்று பாட்டில்கள் இரத்தம் ஏற்றி ஐந்து நாட்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது.

2. 28 ஆண்டுகள் வயதுடைய ஒரு இளம் தாய், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மஞ்சள் காமாலை முத்திய நிலையில் அழைத்து வந்தனர். அவரின் பழைய தகவல்களைப் பார்க்கும் போது இவருக்கு பிறவியிலேயே கல்லீரல் பாதிப்பு இருந்து வந்திருக்கிறது. அதற்கான மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டு எடுத்துக் கொண்டிருக்கிறார். இடையே உடல்நிலை சரியாகவும் மருத்துவம் கைவிட்டு இணையதளத்தில் பரிந்துரை செய்யப்பட்ட சில மூலிகைகள் உணவுப் பொருட்களை எடுக்கவும் திரும்ப பாதிப்பு அதிகமாகி விட்டது. மேலும் இந்த தடவை ஆங்கில மருந்துகளை நாடாமல் நாட்டு மருந்துகள் எடுத்துக் கொள்ளவும் பாதிப்பு திரும்ப சரி செய்ய முடியாத அளவிற்கு அதிகமாகி விட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்து விட்டார். அவரது கணவர் சாப்ட்வேர் என்ஜீனியர், இடையில் உடல் நிலை நன்றாக இருந்த போது எதற்கும் இருக்கட்டும் என்று மருத்துவக் காப்பீடு திட்டம் எடுத்து வைத்து இருந்திருக்கிறார். அவர் என்னிடத்தில் வைத்த ஓரே வேண்டுகோள், இந்த பிரச்சினை நீங்கள் பார்த்த பிறகு உள்ளது மட்டுமே காப்பீட்டுத் திட்டத்தில் எழுதித் தர வேண்டும். பழைய ரிப்போர்ட்டில் உள்ள அந்த பிறவிக் கோளாறு பற்றி அவர்களாக கேட்டால் தவிர நீங்களாக சொல்ல வேண்டாம். எனக்கு இந்த பாலிசி மூலம் 20 லட்சம் ரூபாய் வரை வரும். அதை எனது இரண்டு பெண் குழந்தைகள் பெயரில் டிபாசிட் போட்டு விடுவேன். அவங்க அம்மா அவங்களுக்கு கொடுத்த பரிசு என்று பிற்காலத்தில் அவர்களிடம் சொல்லுவேன் என்று கேட்கும் போது மறுப்பு சொல்ல தோன்றவில்லை. இறப்புச் சான்றிதழ் வழங்கும் போது தற்போதய நிலை மட்டுமே குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கி அந்த காப்பீட்டுத் தொகை அந்த தாயை இழந்த பெண் குழந்தைகளுக்கு கிடைக்க ஆவண செய்த போது ஒரு சின்ன மன நிறைவு கிடைத்தது.

3. 45 வயது நபர் சுமார் இரண்டு நாட்களாக மது மட்டுமே அருந்தி தாங்க முடியாத வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வலி நிவாரணி மற்றும் மயக்க ஊசி வரை போட்டும் வலி நிற்கவில்லை. எண்டோஸ்கோபி செய்து பார்த்தால் உள்ளே கணையத்திலிருந்து இரத்தம் கசிந்து கொண்டு இருக்கின்றது. அதைக் கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகள் கொடுத்தாலும் நிற்கவில்லை. தீவிர இரத்தப் போக்கு காரணமாக ஆக்சிஜன் அளவு குறைந்து மூளை பாதிப்பு ஏற்பட்டு சுவாசத் திணறலால் இறந்து விட்டார். இவருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கும் போது நோய்க்கான காரணம் மது அருந்துதலின் விளைவு என்று அறியப்படும் போது காப்பீடு நிறுவனம் இவருக்கான காப்பீட்டுத் தொகையை வழங்க மறுத்துவிட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் செலவு. உடனடியாக கட்டுவதற்கு அவர்களது உறவினர்களிடம் எதுவும் இல்லை. அப்புறமாக நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் உதவி பெற்று பணம் கட்டி விட்டுச் சென்றனர். நோய் மது அருந்துதலின் விளைவு என்று அறியப்படும் போது எந்தவிதமான இழப்பீட்டுத் தொகை பெற இயலாது

இது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் மட்டுமே. அனைவருக்கும் இது மிகவும் முக்கியமான ஒன்று. நன்றே செய்வோம். நன்றும் இன்றே செய்வோம்.

-Dr. இராதா M.D.,D.M